கடவுள் எங்கே??????





"உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே".

இது அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளிய "கந்தர் அனுபூதி"யில் இறுதியாக வரும் பாடல்.

இந்தப் பாடலைப் பின்வருமாறு அன்னுவயப்படுத்திப் பொருள் காணவேண்டும்.

உருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
அருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
உளதாய் வருவாய், அருள்வாய் குகனே!
இலதாய் வருவாய், அருள்வாய் குகனே!
மருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
மலராய் வருவாய், அருள்வாய் குகனே!
மணியாய் வருவாய், அருள்வாய் குகனே!
ஒளியாய் வருவாய், அருள்வாய் குகனே!
கருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
உயிராய் வருவாய், அருள்வாய் குகனே!
கதியாய் வருவாய், அருள்வாய் குகனே!
விதியாய் வருவாய், அருள்வாய் குகனே!
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!

கண்ணால் காணக் கூடியதாய், கையால் பிடிபடக் கூடியதாய் உள்ள பொருள் "உருவம்" என்றும், கண்ணுக்குப் புலப்படாத பொருள் "அருவம்" என்றும் சொல்லப்படும்.

பனிக்கட்டிக்கு உருவம் உள்ளது. அது உருகும்போதும் உருவம் உள்ளது. அது ஆவியாகும்போதும் உருவம் உள்ளது. அதற்கு மேல் அது கண்ணுக்குப் புலப்படாது போகின்றது. அந்த ஆவியே மீண்டும் தண்மை நிலையை அடையும்போது, மீண்டும் தண்ணீராகவும், பனிக்கட்டியாகவும் உருவம் பெறுகின்றது.

நமது சூழலில் உள்ள ஐம்பூதப் பொருள்களுள் கல்லும் மண்ணும் திண்மையான உருவத்தைப் பெற்றுள்ளன.

தண்ணீர் இருப்பது கண்ணுக்கும், கைக்கும் புலப்பட்டாலும், போவதால், அதனுடைய உருவம் இன்னது என்று வரையறுக்க முடிவதில்லை. அது எந்த இடத்தில் உள்ளதோ, அதன் வடிவத்தை அது பெறுகின்றது. எனவே, அது உருவமும், அருவமும் கலந்த, அருவருவம் ஆகின்றது.

தீயானது தண்ணீரைப் போலக் கண்ணால் காணப்பட்டாலும், கையால் தீண்டப்படுவதாக இருந்தாலும், அதன் உருவம் நிலையற்றதாய் உள்ளது. அது அருவுருவம் ஆகின்றது.

காற்று, வீசும்போது அதன் இருப்பநிலை தெரிகின்றது. ஆனால், அதனைக் காண முடிவதில்லை. கைக்கும் அகப்படுவது இல்லை. எனவே, அது அருவம் ஆகின்றது.

வானம் ஐம்புலனுக்கும் எட்டாத நுண்பொருள். ஆகையால் அதுவும் அருவம் ஆகின்றது.

இந்த வானவெளியை விட நுட்பமானதா, வெளிக்குள் வெளி கடந்த நிலையில் உள்ளது பரம்பொருள். அது எல்லாவற்றையும் கடந்தது. எனவே, எல்லாவற்றையும் கடந்து உள்ளி (உள்ளுதல் - நினைத்தல்) அறிவால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடிய பொருள் "கடவுள்" எனப்பட்டது.

அது அருவம், உருவம், அருவுருவம் ஆகிய பேதங்களுக்கு அப்பால்பட்டது. உரு என்றோ, அரு என்றோ, உருவரு என்றோ பகுத்துக் கூற, ஆன்ம அறிவுக்கு ஆற்றல் இல்லை. ஆன்ம அறிவின் கற்பனை அனைத்தையும் கடந்து நிற்பது என்பதால் "கற்பனை கடந்த சோதி" எனப்பட்டது.

எனவே, நமது கண்ணுக்கு உருவமாகவும், கருத்துக்கு அருவமாகவும் உள்ள அனுபவப் பொருள் இறைவன் ஆகும்.

எனவே, "உருவாய் அருவாய்" என்றார்.

உருவத்துக்கு ஒரு குறி, ஒரு பெயர், குணம் உண்டு.
அருவத்துக்கு குணம், குறி, பெயர் ஏதும் இல்லை.

எல்லாவற்றையும் கடந்த அந்தப் பரம்பொருள், உண்டு என்பவருக்கு உள்ள பொருள் ஆகவும், இல்லை என்பவருக்கு இல்லாத பொருளாகவும் விளங்குவதால், "உளதாய் இலதாய்" என்றார். உண்டு என்று உணரும்போது ஒரு அனுபவ இன்பம். இல்லை என்று மறுக்கும்போது ஒரு அனுபவ இன்பம்.

"மருவுதல்" என்பதன் பொருள் "சேர்தல்" ஆகும். மலரில் உள்ள தாதுவின் மணம் நமது மூக்குக்கு வந்து பொருந்துவதால், "மரு" எனப்பட்டது. மலர் என்னும் உருவப் பொருளாகவும், அதன் மணம் என்னும் அருவப் பொருளாகவும் உள்ளவன் இறைவன். மணமில்லாத மலரை யாரும் விரும்புவது இல்லை.

மலரில் மணமாக உள்ள இறைவனே, மணியில் ஒளியாக இருக்கின்றான். ஒளியில்லாத மணியை யாரும் விரும்புவது இல்லை.

எனவே, நமது அனுபவத்துக்கு இடமாக உள்ள பொருள்களில் எல்லாம் நீக்கம் அற நிறைந்து நிற்கும் பொருளாக, அவற்றை இயக்கியும், அவற்றை இயக்கும் பொருட்டுத் தானும் இயங்கியும், ஆன்ம அனுபவத்துக்கு இடமாக உள்ளது பரம்பொருள்.

வண்டி ஓடுகின்றது. அது ஓடுவதற்கு இடமாக உள்ள பாதை அசையாமல் உள்ளது. பாதையும் அசைந்தால் எப்படி இருக்கும்? சக்கரம் சுழல்கின்றது. அச்சாணி அசையாமல் உள்ளது. அச்சாணியும் அசைந்தால் என்ன ஆகும்? தாளில் எழுதுகின்றோம். அது அசையாமல் உள்ளது. எழுதுகின்றவரின் கையும் எழுதுகோலும் அசைகின்றது. தாளும், எழுதுகின்ற கோலும் ஒருசேர அசைந்தால் உன்ன ஆகும்? அசையாமல் உள்ளது இயக்க ஆற்றல். (POTENTIAL ENERG). அசைகின்ற பொருள் இயங்கு ஆற்றல் (KINEITIC ENERGY)

எனவே, அவன் எந்த எந்தப் பொருளில் எவ்வாறு உள்ளான் என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டு போனால், அது முடிவில்லாமல் நீளும்.

எனவே, "மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்" என்றார்.
"பண்ணில் ஓசை, பழத்தில் இன்சுவை, கண்ணினுள் மணி" என்றார் அப்பர் பெருமான்.

ஆன்மாக்களுக்குக் கருவைத் தந்து, அதனுள் உயிரைப் பொருத்துபவனும் இறைவன். கத்தரிக்காய் விற்பவரை, ", கத்தரிக்காய்" என்று அழைப்பதைப் போல, கருவைப் பொருத்துபவனை, "கருவாய்" என்றும், அதனுள் உயிர்க்கு உயிராக இருந்து இயக்குபவனை "உயிராய்" என்றும் கூறினார்.

அப்படிப் பிறக்கும் உயிர்கள், தமது வினையின் பயனாகச் சென்று அடையும் நிலைகளைக் "கதி" என்றனர். அவைகளின் வினைப் பயனை, "விதி" என்றனர்.

இப்படி எல்லாம் விளங்குகின்ற ஒரு பரம்பொருளை, உருவ வடிவில் "குகன்" என்றார். இதை எல்லாம் உணர்த்துவதற்கு ஒரு வடிவத்தை அது கொள்வதால், உணர்த்தும் வடிவத்தை "குரு" என்றார். குரு வடிவம் என்பது ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்யவும் முடியாது.

நமக்கு ஒரு பொருளை உணர்த்தவேண்டுமானால், அருவ நிலையில், குரல் மூலமாக ஒருவர் தெளிவுபடுத்த வேண்டும். இது "நாதம்" என்னும் ஒலி நிலை ஆகும். அல்லது, ஏதாவது ஒரு வடிவில் வந்து (தாயாகவோ, தந்தையாகவோ, மனைவியாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மகளாகவோ, குருவாகவோ, நண்பனாகவோ, அதிகாரியாகவோ, எதிரியாகவோ, பகையாகவோ,ஏதோ ஒரு வடிவில் வந்து) உணர்த்தவேண்டும். இது "விந்து" என்னும் ஒளி வடிவமாகும்.

ஆக, கடவுள் என்பது உள்ள பொருளா, இல்லாத பொருளா என்பது அறிவு நிலைக்கு எட்டாத ஒன்று. உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே".

என்பது திருமந்திரம்.

நான் காணும்படிதான் உணர்த்த வேண்டும் என்று அடம் பிடித்தால் அது முடியாது. காட்டுவான் என்று நம்புகின்ற ஒருவன் பின் சென்று, அவன் காட்டிய வழியில் உணர்ந்திட வேண்டும். எல்லை என்ற விதண்டை வாதம் பயன் தராது.

புறத்து உள்ளது உருவ நிலை. அகத்து உள்ளது அருவ நிலை. புறத்தில் உள்ளதை அகத்திலும் காணலாம். புறத்தில் இல்லாததை அகத்தில் காண இயலாது.

புத்தர் என்னும் சொல்லுக்கு "விழிப்புப் பெற்றவர்" "ஒளி நிலையினர்" என்பது பொருள். உயிர்கள் படும் துன்பத்தையும், நிலையாமையையும் கண்டவர், தெளிவு வேண்டி, அரசபோகத்தைத் துறந்து தவநிலைக்குச் சென்றார். அதன் மூலம் துக்க நிவாரணத்துக்கு வழியைக் கண்டார். அதுவே அவரது நோக்கமாக இருந்தது. பின்னாளில் அவரது கொள்கைகளைச் சொன்னார். பிற கருத்துக்களை மறுப்பது அவரது நோக்கமாக இல்லை. அவர் காலத்து இருந்த வேதாகமங்களையோ, மற்ற வழிபாட்டு நிலைகளையோ அவர் வெறுக்கவில்லை. மறுத்துரைக்கவும் இல்லை.

உருவ வழிபாட்டை மறுத்த தயானந்த சரசுவதி அவர்கள் வேதங்களில் சொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட செய்திகளை மறுத்தார். அவரது கருத்துக்கு உரிய சாத்திர ரீதியான ஆதாரத்தையும் காட்டினார். பின்னாளில் அவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மறுத்தவர்களும், மறுப்பவர்களும் அன்றும் இன்றும் உண்டு.

கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை வேதத்தில் விதிக்கப்பட்ட சடங்காகக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, அதை மறுத்துக் கூறியவர், வேதம் உணர்ந்த வங்காள வேதியரான ராஜாரம் மோகன்ராய் அவர்கள்.

கடவுள் மறுப்பு என்று வரும்போது, அதை உறுதியாக நம்புபவர்கள் வெறுப்புக் கொள்ளுதல் தேவையில்லைதான். ஆனால், காழ்ப்பு உணர்ச்சியோடு செய்யும்போது தான், அந்த வெறுப்பானது வேறு வடிவம் கொள்ளுகின்றது.

கடவுள் இல்லை என்று மறுத்தவர்களில் பலர், பின்னாளில் தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, கையறு நிலைக்கு ஆளாகி, கடவுளை உறுதியாகத் தேடியவர்களும் உண்டு. அதிகாரச் செருக்குக் காரணமாகவோ, செல்வச் செருக்குக் காரணமாகவோ, இளமை மற்றும் அழகு மிடுக்குக் காரணமாகவோ அல்லது, மாறுபாடாகப் பேசுவதே தனது இயல்பாகக் கொண்டோ, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை இகழ்ந்துரைப்பதையே வாடிக்கையாகயோ வைத்திருந்தவர்களில் பலரும், தமது செருக்குக்குப் பங்கம் நேர்ந்தபோது, கடவுளையும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் நாடித் தேடி வந்தது உண்டு.

கடவுள் எங்கே இருக்கின்றார் என்றால், "நோவுளார் வாயுளான்" என்றார் திருஞானசம்பந்தர்.

சிறு குழந்தையானது தனது விருப்பம்போல், தாய் தந்தை சொல்லையும் மறுத்து ஆடிக் கொண்டு இருக்கின்றது. வேண்டாம் என்றால் கேட்பது இல்லை. தாயையும் தந்தையையும் மறந்து, தனது விருப்பம்போல் ஆட்க் கொண்டு இருந்து குழந்தை, ஒரு துன்பம் நேர்ந்தபோது, தாயையும், தந்தையையும் தேடி அழைத்து ஓடி வருகின்றது.

நோவு --- வலி, துன்பம். நோய், வலுவின்மை.

வாழ்வில் உடல் வலி உண்டாகும். உடல் துன்பமும் மனத்துன்பமும் உண்டாகும். வாழ்க்கையில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, மணவாழ்வில் தோல்வி என்று தோல்விகளால் மனம் துவளும்போது எல்லாம், நம்மை அறியாமல் இறைவனை வாயால் அழைத்துப் பதறுகின்றோம். நோய் வரும். தள்ளாமை வரும். இவைகளால் உடலும் உள்ளமும் துன்புறும்போது, மருத்துவத்தையோ அல்லது பிற வழிமுறைகளையோ மேற்கொள்ளுகின்றோம். துன்பம் தாங்கமுடியவில்லை. தீர வழி தெரியவில்லை என்னும்போது, இயல்பாகவே, கடவுளை நாடுகின்றோம். எந்தக் கடவுளை வழிபட்டால், எந்தக் கோயிலுக்குச் சென்று, எந்தப் பரிகாரத்தைச் செய்தால் தீரும் என்று பரிபவப்படுகின்றோம். கடவுளை அப்போது வாயார அழைக்கின்றோம். கடந்த கால நிலைகளை எண்ணி வருந்துகின்றோம். வாயார அழைப்பது இல்லை என்றாலும், மனதாரவாவது நினைக்கின்றோம். அப்போது கடவுளை எண்ணுகின்றோம்.

அப்படிப்பட்டவர்கள் வாயிலும், மனத்திலும் இறைவன் இருக்கின்றான் என்கின்றார் திருஞானசம்பந்தர். தேவாரப் பாடலைக் காண்போம்...

"நுண்ணியான், மிகப்பெரியான்,
         நோவுளார் வாய்உளான்,
தண்ணியான், வெய்யான், நம்
         தலைமேலான், மனத்துஉளான்,
திண்ணியான், செங்காட்டங்
         குடியான் செஞ்சடை மதியக்
கண்ணியான், கண்ணுதலான்,
         கணபதீச் சரத்தானே".

இதன் பொழிப்புரை ---

     திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியன யாவற்றினும் மிக நுண்ணியன். பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது முடி மீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

அதிகார நிலை, செல்வ நிலை, மற்றும் சமூக நிலை காரணமாகச் செருக்குக் கொண்டு, என்னை ஏளனமாகப் பார்த்த பலர், தமது செருக்குப் பங்கம் உண்டான போது, என்னை நாடி வந்து, தேவார, திருவாசக, திருப்புகழ்ப் பாடல் கருத்துக்களைக் கேட்டு அமைதி பெற்று, கடவுள் நம்பிக்கையில் தோய்ந்தவர்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை கொண்டு இருந்த போதும், தமது செருக்கால் தாளாத துன்பத்துக்கு ஆளாகி, தமது முன்னை நிலையில் இருந்து மாறுபட்டு, கடவுளாவது, மண்ணாங்கட்டியாவது, ஒன்றும் இல்லை என்று சொன்னவர்களும் சிலர் உண்டு.

இல்லை என்பதும், உண்டு என்பதும் அவரவர் நம்பிக்கை. பிணக்குக் கொண்டு, அன்பை மறந்து, வன்பு கொண்டு தாழ்நிலையை அடைவது அவசியமற்றது.














1 comment:

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...