திருப் பந்தணை நல்லூர் --- 0861. கும்பமும் நிகர்த்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கும்பமும் நிகர்த்த (திருப்பந்தணை நல்லூர்)

முருகா!
தேவரீரது திருவடிகளை வழிபட்டு உய்ய அருள்.


தந்தன தனத்த தந்தன தனத்த
     தந்தன தனத்த ...... தனதான


கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
     கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார்

குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட
     கொந்தள கம்வைத்த ...... மடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
     மங்கிந ரகத்தில் ...... மெலியாமல்

வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை
     வந்தனை செய்புத்தி ...... தருவாயே

பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி
     பண்டுள தவத்தி ...... லருள்சேயே

பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
     பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே

சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த
     சங்கரர் தமக்கு ...... மிறையோனே

சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற
     சஞ்சல மறுத்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கும்பமும் நிகர்த்த கொங்கையை வளர்த்த,
     கொஞ்சு கிளி ஒத்த ...... மொழி மானார்,

குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட
     கொந்து அளகம் வைத்த ...... மடவார்பால்,

வம்புகள் விளைத்து, நண்புகள் கொடுத்து,
     மங்கி, நரகத்தில் ...... மெலியாமல்,

வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை
     வந்தனை செய் புத்தி ...... தருவாயே.

பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி,
     பண்டு உள தவத்தில் ...... அருள்சேயே!

பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த
     பந்தணை நகர்க்குள் ...... உறைவோனே!

சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த
     சங்கரர் தமக்கும் ...... இறையோனே!

சங்கு அணி கரத்தர், உம்பர் பயம் உற்ற
     சஞ்சலம் அறுத்த ...... பெருமாளே. 

பதவுரை

         பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே --- (சிவபெருமான் திருமுடியில் பொருந்தி) செறிந்து பரந்துள்ள கங்கை நதியும், அவரது இடப்பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற வல்லமை உள்ள உமாதேவியும் முன்னைத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே!

      பைம் புயல் உடுத்த --- பசுமையான மேகங்கள் படிந்துள்ளதும்,

     தண்டலை மிகுத்த --- சோலைகள் நிறைந்துள்ளதுமான

     பந்தணை நகர்க்குள் உறைவோனே --- திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!

      சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே --- வெண்ணாவல் மரத்தடியில் வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவரே!

      சங்கு அணி கரத்தர் --- பாஞ்சசன்னியம் என்னும் சங்கைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள திருமாலும்,

     உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே --- தேவர்களும் கொண்டிருந்த அச்சத்தினால், அவர்க்கு உண்டான துன்பத்தைப் போக்கிய பெருமையில் மிக்கவரே!

      கும்பமும் நிகர்த்த கொங்கையை வளர்த்த --- குடத்தை நிகர்த்த கொங்கைகள் வளர்ந்துள்ளவர்களும்,

     கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் ---
கொஞ்சுமொழி பேசுகின்ற கிளியைப் போன்ற பேச்சினை உடையவர்களும் ஆகிய விலைமாதர்கள்,

      குங்கும பணிக்குள் --- குங்குமக் கலவையால் ஆன ஒப்பனையுடன்,

     வண்புழுகு விட்ட --- வளப்பம் உள்ள புனுகை விட்டு வாரிவிடப்பட்டு,

     கொந்து அளகம் வைத்த மடவார்பால் --- பூங்கொத்துக்களை அணிந்துள்ள கூந்தலை உடைய அவர்களிடத்தில்,

      வம்புகள் விளைத்து --- வீணான செயல்களில் ஈடுபட்டு,

     நண்புகள் கொடுத்து மங்கி --- அவர்களோடு நட்புப் பூண்டு இருந்ததன் விளைவாக அறிவும், பொருளும், உடலும் மங்கி,

     நரகத்தில் மெலியாமல் --- இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தில் மெலிவு அடையாமல்,

      வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய் புத்தி தருவாயே --- வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த தேரீரது திருவடிகளை வழிபடுகின்ற புத்தியைக் கொடுத்து அருள்வாயாக.


பதவுரை

    சிவபெருமான் திருமுடியில் பொருந்தி, செறிந்து பரந்துள்ள கங்கை நதியும், அவரது இடப்பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற வல்லமை உள்ள உமாதேவியும் முன்னைத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே!

         பசுமையான மேகங்கள் படிந்துள்ளதும், சோலைகள் நிறைந்துள்ளதுமான திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!

         வெண்ணாவல் மரத்தடியில் வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவரே!

         பாஞ்சசன்னியம் என்னும் சங்கைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள திருமாலும், தேவர்களும் கொண்டிருந்த அச்சத்தினால், அவர்க்கு உண்டான துன்பத்தைப் போக்கிய பெருமையில் மிக்கவரே!

         குடத்தை நிகர்த்த கொங்கைகள் வளர்ந்துள்ளவர்களும், கொஞ்சுமொழி பேசுகின்ற கிளியைப் போன்ற பேச்சினை உடையவர்களும் ஆகிய விலைமாதர்கள்.

         குங்குமக் கலவையால் ஆன ஒப்பனையுடன், வளப்பம் உள்ள புனுகை விட்டு வாரிவிடப்பட்டு, பூங்கொத்துக்களை அணிந்துள்ள கூந்தலை உடைய அவர்களிடத்தில் வீணான செயல்களில் ஈடுபட்டு, அவர்களோடு நட்புப் பூண்டு இருந்ததன் விளைவாக அறிவும், பொருளும், உடலும் மங்கி, இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தில் மெலிவு அடையாமல் வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த தேரீரது திருவடிகளை வழிபடுகின்ற புத்தியைக் கொடுத்து அருள்வாயாக.


விரிவுரை

வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய் புத்தி தருவாயே ---

நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர், அவருக்கு ஒரு மாதுளங் கனியைத் தந்தனர். மாம்பழம் என்று பலரும் கூறுகின்றனர். "மாது ளங்கனியை ஒருநாள் பகிர்ந்த உமை அருள்பாலா" என்றே அருணகிரிநாதப் பெருமான் பாடி உள்ளார். அந்த மாதளங்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.

விநாயகமூர்த்தியும், முருகப் பெருமானும், தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.

முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால், சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.

உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேல் திசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.

இந்த வரலாற்றின் உட்பொருள்

(1)   கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தந்து இருக்கலாம்.

(2)   காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்த சிவபெருமான், மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம்.
    
(3)   எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.

(4)   உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும்    அறிவார்.

ஆகவே, சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு என்பதும், ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது என்றும், மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன என்றும் தெளிதல் வேண்டும்.

இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகத்தவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.

இது எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.

அந்த பரம்பொருளின் திருவடிகளை வழிபட்டால் உய்தி பெறலாம் என்பதை அறியாது, அற்ப இன்பத்திற்காக, விலைமாதர் பின்சென்று, அவர்க்கு ஏவல் செய்து, அரிதில் முயன்று பெற்ற பொருள்களை எல்லாம் அவர்க்குத் தந்து துன்பத்தில் துவளக் கூடாது.  எனவே, முருகப்பெருமான் திருவடிகளை வழிபடும் பேற்றைத் தனக்கு அருளுமாறு அடிகளார் வேண்டுகின்றார்.


பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே ---
  
பம்பு - பரந்துள்ள, நெறிந்துள்ள, விரைந்து ஓடுகின்ற.

நதி - கங்கை. இங்கு கங்காதேவியைக் குறித்தது.

     முருகப் பெருமான், சிவபரம்பொருளின் நெற்றிக்கண்ணில் தீப்பொறியாக வந்து, கங்கையிடம் சிறிது நேரம் இருந்ததால், அவர் கங்கையின் மைந்தன் என்று போற்றப் பெறுகின்றார்.

                                              ---  "தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் -  தந்து,

திருமுகங்கள் ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,  -  விரிபுவனம்

எங்கும் பரக்க, இமையோர் கண்டு அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால்  - அங்கண்

எடுத்து அமைத்து, வாயுவைக் "கொண்டு ஏகுதி"என்று, எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு

பூதத் தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று

அன்னவளும் கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப,  திருவுருவாய் - முன்னர்

அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

 கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே"!            --- கந்தர் கலிவெண்பா.

வெண்மையான ஒளி விளங்குகின்ற, அழகிய கயிலை மலையில், தொடுக்கப் பெற்ற அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற மூன்று திருக் கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபெருமான், அவ்விடத்து ஒருநாள்  கொடிய அசுரர்கள் செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டு, ஆறு திருமுகங்களை உடையவராய், செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின் நின்றும், ஒரே சமயத்தில் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்த, அத்தீப் பொறிகள் விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ,  அவற்றைத் தேவர்கள் கண்டு பயப்படவும், அதனை அறிந்து பொங்கிய அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக் கரத்தால் உடனே அவ்விடத்தினின்றும் எடுத்து, அவற்றின் வேகத்தை அடக்கி, வாயுதேவனை நோக்கி,  'நீ இவற்றை எடுத்துச் செல்வாயாக' என்று சிவபெருமான் அவனிடம் கொடுத்து அருள, வாயுதேவனும் அவற்றைப் பெற்று மெல்லக் கொண்டு சென்று, தன்னால் இயலாமல், தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி தேவனை நோக்கி,  'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய் உள்ள அக்கினித் தேவனே, நீ இப்பொறிகளை எடுத்துச் செல்வாயாக' என்று கூறி அவனிடம் கொடுக்க, அக்கினி தேவனும் அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்று, குளிர்ந்த கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க, அந்த கங்கா தேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை அற்றவளாய், தனது தலைமீது தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுக்க, அவ்விடத்து அத்தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற, முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலை அக்குழந்தைகள் பருகி, அழுது விளையாடி இருக்க, மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒருசேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி, கந்தன் என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க, அவ் அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்தவர் முருகப் பெருமான்.

சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே ---

திருவானைக்கா என்ற திருத்தலத்தில் சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளி இருக்கின்றார். நமது தேசம் நாவலந்தீவு. நாவலந்தீவில் நாவலின்கீழ் இருக்கின்றார் என்பது மிகவும் சிறந்தது.

வெண்நாவலின் மேவிய எம் அழகா   ---  திருஞானசம்பந்தர்.

உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்!
தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே!
இருள் அறுத்து நின்று, ழுஈசன்ழு என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.       --- அப்பர்.

மறைகள் ஆயின நான்கும்
         மற்றுஉள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத்து இறையும்
         தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
         காஉடை ஆதியை நாளும்
இறைவன் என்றுஅடி சேர்வார்
         எம்மையும் ஆள்உடை யாரே.            ---  சுந்தரர்.

இவ்வாறு மூவரும் இசைத் தமிழால் பாட, அத்தமிழ் மணக்கும் திருத்தலம் திருவானைக்கா.

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
         வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
         நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
         அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
         பரவிநின் றேத்தினர் பான்மையினால். ---  பெரியபுராணம்.


சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே ---

"தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த பெருமாளே" என்று அருணகிரிநாதப் பெருமான் பிறிதொரு திருப்புகழில் போற்றி உள்ளார்.


பந்தணை நகர்க்குள் உறைவோனே ---

"திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்" என்று வழங்குகிறது.

கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் --- பசுபதீசர்.
இறைவியார் --- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம்  --- சூரியதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.

இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு.  உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப் பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.

காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துரை

முருகா! தேவரீரது திருவடிகளை வழிபட்டு உய்ய அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...