புகழ்
எப்போது தேயும்? எப்போது வளரும்?
------------------------
மனிதனாகப்
பிறந்தால் புகழோடு வாழவேண்டும். அந்தப் புகழ் வளரவேண்டும். வளர்கின்ற புகழை, நீடுபுகழ், மங்காத
புகழ், மாயாப் பெரும்புகழ், பெரும்புகழ் என்றெல்லாம் இலக்கியங்கள் கூறும்.
உயிருக்கு
ஊதியமாக வருவது புகழ் ஒன்றே ஆகும். அது, இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்னாது வழங்குவதால் உண்டாவது.
"ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு".
என்றார் திருவள்ளுவ நாயனார்.
ஈதலால் புகழ்
உண்டாகுமாறு வாழ்தல் வேண்டும். அதைத் தவிர, நிலைபெற்ற இந்த உயிருக்கு ஊதியமாகப் பிறவிகள் தோறும் வருவது வேறு ஒன்றும்
இல்லை.
"உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ்"
என்பதும் நாயனார் அருள்வாக்கே.
பாராட்டுவார்
பாராட்டப்படுவன எல்லாம், இரப்பவர்க்கு
ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து உதவுவார் மீது நிற்கும் புகழையே.
அளவு கடந்த காம
இச்சை கொண்டு, அதற்காகவே உழல்பவருக்குப்
புகழ் இம்மையிலும் இல்லை, மறுமையிலும்
இன்பம் உண்டாகாது. இதைப் பின்வரும் நிகழ்வால் அறிந்துகொள்ளலாம்.
"எண் இன்றி
முக்கோடி வாழ்நாள் உடையவனும்" "அருந்தவம் உடைமையின், அளவு இல் ஆற்றலில் பொருந்தியவனும்"
"முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் (சிவபெருமான்) முன் நாள்,
எக்கோடியாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த
புய வலியும்" உடையவனும் ஆகிய இராவணன் தனது பெருமை குலைந்து சிறுமைப்பட்டது அவன் கொண்டிருந்த
எல்லையற்ற காம உணர்வால்.
இராவணன் செய்த
அரிய தவம், அளப்பரிய ஆற்றல், ஆராலும் வெல்ல அரிதான வீரம், கொண்டிருந்த அளப்பரிய செல்வம், புகழ், அதிகாரம் அனைத்தும் அழிய நேர்ந்தது, அவன் அளவுக்கு எல்லையற்ற காம உணர்வைக் கொண்டிருந்த, அவன் நங்கையாகிய சூரப்பணகையால்.
இராவணனின் காம
உணர்வும், சூர்ப்பணகையின் காம
உணர்வும் அரக்கர் குலமே வேரோடு அழியக் காரணமாய் நின்றது.
சூர்ப்பணகை
கொண்டிருந்த பொருந்தாக் காமத்தால், அவள்
கொண்டிருந்த கற்பு தேய்ந்தது. அவளது கற்பு எப்படித் தேய்ந்தது என்பதை உலகுக்கு
அறிவுறுத்த கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் ஒரு அற்புதமான உவமையைக்
காட்டினார்.
கடல் நீரும், வானமும் அளவில் குறைந்தவை என்று எண்ணும்படியாக, தனது மனத்திலே பதித்த காம உணர்ச்சியில் முழுகி, அது பின்னும் அளவில்லாது பெருக, இல்லை என்று வந்து தன்னைப் புகழ்ந்து யாசித்து நின்றவரிடம் இரக்கம் கொண்டு, தன்னிடத்தில் உள்ள ஒரு சிறு பொருளையாவது கொடுக்காதவனாய், தன்னிடம் உள்ள பொருளைக் காத்து நிற்கின்ற கருமியின்
புகழானது நாளடைவில் தேய்ந்து அழிவதைப் போல, தேய்ந்த கற்பினை உடையவள் ஆனாள் சூர்ப்பணகை என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.
"நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள,
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான், பொருள்
காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்"
என்பது கம்பராமாயணத்தில் வரும் பாடல்.
இதன் பொருள் ---
நீத்தமும் வானமும் குறுக --- கடல் நீரும்
ஆகாயமும்
குறைந்தவையாய்த்
தோன்றும்படி;
நெஞ்சிடைக் கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப
மீக்கொள --- மனத்திலே தொடர்ச்சியாகக் கொண்ட
அன்பு வெள்ளம்
அறிவிலே மூழ்கும்படி மிகுதியாக;
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என --- இரப்போர் தன்னைப் புகழவும் அவர்களிடத்து இரக்கத்தோடு ஒரு சிறிதும்
கொடுக்காதவனாய்த்
தன் செல்வத்தைக்
காத்து நின்றவன் புகழைப் போல;
தேயும் கற்பினாள் --- குறைந்து அழியும் கற்பினை
உடையவளாம் (சூர்ப்பணகை).
ஈகையின்
சிறப்பைத் திருக்குறளில் சிறப்புறக் காட்டினார் நாயனார். எல்லாச் சமயங்களும்
ஈகையைப் போற்றுகின்றன. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் "ஈகையை" ஒரு
திருநாளாகவே கொண்டாடுவர்.
ஈகை என்பது பொருளாகத்தான்
இருக்கவேண்டும் என்பது இல்லை. சமைத்த உணவாகவும் இருக்கலாம். உள்ளத்தால் காட்டும்
பரிவாகவும் இருக்கலாம். சொல்லால் காட்டும் பரிவாகவும் இருக்கலாம்.
மனம், வாக்கு, காயம் என்னும்
முக்கரணங்களாலும் செய்யப்பட வேண்டியது ஈகை என்னும் அறச் செயல்.
"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை,
யாவர்க்கும் ஆம் உண்ணம்போது ஒரு கைப்படி "யாவர்க்கும்
ஆம் பிறர்க்கு இன்னுரை தானே"
என்று நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த திருமூல நாயனார்
திருமந்திரமாக அருளிச் செய்தார்.
இறைவனுக்குக்
கூடை கூடையாக, வண்டி வண்டியாக மலர் மாலைகள் வேண்டாம்.
ஒரு பச்சிலை போதும், ஒரு
வில்வ பத்திரம் போதும், ஒரு
துளசி பத்திரம் போதும். (பத்திரம் - இலை, தளிர்)
பாலைப் பொழிந்து
தருகின்ற பசுவுக்குப் பெரிதாக எதையும் தரவில்லையானாலும் பரவாயில்லை. பசிக்காக
அலைந்து திரிந்து சுவரொட்டியை அது சுரண்டும்படி விட்டுவிடாமல், ஒரு பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும்.
அம்மா, பசிக்கின்றது என்று வந்தவருக்கு, நமது இறையடியார்கள் எல்லாம் அன்னதானம் செய்து, உபசரித்து வழிபட்டார்கள். காரணம், பிறவியின் பயன் அது ஒன்று தான்.
"மண்ணினில்
பிறந்தார் பெரும்பயன், மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் நல் விழாப் பொலிவு கண்டு ஆர்தல்" என்பது, திருமயிலையில் திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய நிகழ்வினைக்
குறிக்கும் பெரியபுராணப் பாடல் வரிகள். இதனைக் காட்டித்தான், திருக்கோயில்களில் பகல் வேளை உணவுத் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.
நாம் உண்பதற்காகச்
சமைத்து வைத்துள்ள உணவில் ஒரு கைப்பிடியைக் கொடுத்து உதவலாம். அதுவே பேருதவியாக
இருக்கும்.
"நித்தம் பிடிசோறு
கொண்டு இட்டு, உண்டு இரு, இருவினையோம் இறந்தால் ஒருபிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிதாநப் பெருமான்.
இதற்கும் மேலாக, ஒன்று. நம்மை விட உயர்ந்தவர்களிடத்திலும், நம்மை ஒத்தவர்களிடத்திலும் பல் எல்லாம் தெரியக் காட்டிப்
பேசுவதைப் பொ வேண்டாம். நம்மை விடத் தாழ்ந்தவர்களிடத்தில் அன்பாக ஒரு சொல்லைச்
சொன்னாலே போதும். அதுவே பெரிய அறமாகும்.
"கீழோர்
ஆயினும் தாழ உரை" என்பது கொன்றைவேந்தன். இனிய சொல்லைத் தாழ்ந்தவர் இடத்திலும்
காட்டுவது மனிதநேயம். அந்த மனிதநேயத்தில் இறைவன் மகிழ்வான்.
சைவம் என்பது
இந்த அன்பைத் தான் குறிக்கின்றது. இதன்படி வாழ்ந்து காட்டியவர் திருஞானசம்பந்தப்
பெருமான்.
திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களுக்கு இடையில்
திருமருகல் என்று ஒரு திருத்தலம் உள்ளது.
திருமருகல் திருக்கோயில் புறத்தே ஒரு
மடம் உண்டு. அந்த மடத்தில் ஒரு நாள் ஒரு வணிகன் ஒரு கன்னியோடு வந்தான். அன்று இரவு
அவன் துயிலும்போது பாம்பு தீண்டி இறந்தான். அருகில் இருந்த கன்னிப் பெண் அவனைத்
தீண்டாமலே கதறலானாள். அவள் கதறலைக் கேட்டு, மனிதநேயம் மிக்க மாந்திரிகரில் சிலர்
மனம் பொறாமல் ஓடி வந்தனர். அவர்கள் மணி, மந்திரம், மருந்து ஆகியவற்றைக் கையாண்டு
பார்த்தார்கள். விடம் நீங்கப் பெறவில்லை.
கன்னியானவள், "வணிகர் குலமணியே, அன்னையையும் அத்தனையும் பிரிந்தேன்.
உன்னையே அடைவாகக் கொண்டு உடன் வந்தேன். நீயோ பாம்பு தீண்டி இறந்துபட்டாய். இனி
நான் என் செய்வேன், எப்படி உயிரோடு
வாழ்வேன்" என்று புலம்பினாள். அதற்கு மேல் என் செய்வாள். திக்கு அற்றவர்க்கு
தெய்வமே துணை. அவள் திருக்கோயிலை நோக்கியவாறு, "ஆண்டவனே, இந்த ஏழையைக் காவாயோ. பால்கடலில் எழுந்த
நஞ்சை உண்டாய். தேவர்களைக் காத்தாய். அயன் திருமாலுக்கும் அறிய பரம்பொருளே! மன்மதனை
எரித்து நீறாக்கினாய். அவன் மனைவி இரதி வேண்ட, அவனுக்கு உயிரை நல்கினாய். மார்க்கண்டருக்காக
இயமனை உதைத்து அருளினாய். ஏழைக்கு அருள மாட்டாயா? கருணைக் கடலே! திருமருகல் பெருமானே!"
என்று வேண்டி, அழுது அழுது புலம்புகின்றாள்.
அந்தப் புலம்பல் ஓசை, திருக்கோயில் வழிபாட்டுக்குச் சென்று கொண்டிருந்த, திருஞானசம்பந்தப்
பெருமான் திருச்செவியில் சார்ந்தது. கருணைக் கடலாகிய காழிவள்ளலார், அந்தக் கன்னியின் துயர் தீர்க்கத்
திருவுள்ளம் கொண்டார். அவளைப் பார்த்து, "நீ
சிறிதும் அஞ்சாதே, அம்மா, நிகழ்ந்ததைச் சொல்" என்றார். அவள், பிள்ளையாரை வணங்கிக் கூறினாள். "அடிகளே!, என் தகப்பன் வைப்பூருக்குத் தலைவன். அவன்
தாமன் என்னும் பெயருடையவன். அவனுக்கு மகள்கள் எழுவர். இவன் அவனுடைய மருமகன். மூத்த
மகளை இவனுக்கு மணமுடித்துத் தர என் தந்தை உறுதி சொல்லி, பின் வேறு ஒருவரிடம் பொருள்
பெற்றுக்கொண்டு, உறுதி தவறினான்.
இரண்டாவது மகளை இவனுக்கே தருவதாகச் சொல்லி, அவளையும் அயலானுக்கே கொடுத்தான்.
இவ்வாறு ஏமாற்றி ஏமாற்றி, மற்ற நான்கு
மகள்களையும் அயலாருக்கே மணம் முடித்தான். இவன் நிலை கண்ட நான், இவனோடு, தாய் தந்தையருக்குத் தெரியாமல் வந்தேன்.
இவனோ பாம்பு தீண்டி மாண்டான். நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது போல என் நிலைமை.
சுற்றத்தார் என வந்து தோன்றி, என் துயரமெல்லாம்
நீங்க அருள் செய்தீர்" என்று கூறினாள்.
திருஞானசம்பந்தப் பெருமான், திருமருகல் பெருமானை நோக்கி, "சடையாய்
எனுமால்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். மேல் நிகழ்ந்தது
என்ன. தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்கால் காண்போம்...
"பொங்குவிடம்
தீர்ந்து, எழுந்து நின்றான், சூழ்ந்த
பொருஇல்திருத்
தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப,
அங்கையினை
உச்சியின்மேல் குவித்துக் கொண்டுஅங்கு
அருட்காழிப்
பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கைஅவள்
தனை, நயந்த நம்பி யோடு
நானிலத்தில்
இன்புற்று வாழும் வண்ணம்,
மங்குல்தவழ்
சோலைமலி புகலி வேந்தர்
மணம்புணரும்
பெருவாழ்வு வகுத்து விட்டார்".
திருஞானசம்பந்தர்
கவுணிடின்ய கோத்திரம் என்று இப்போது வழங்கப்படுகின்ற கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த
அந்தணர். இறந்தவனும், அவனுக்காக அழுபவளும்
அந்தணர்கள் அல்லர். திருக்கோயிலுக்குச் செல்பவர், தீட்டு என்றும் பாராமல், பிணம் கிடந்த இடத்துக்கு
வந்து,
அழுபவளுக்கு
ஆறுதலாகப் பேசி,
பின்ப
இறைவனை வேண்டித் திருப்பதிகம் பாடி, இறந்தவனை எழுப்புவித்து, அவர்களுக்கு அங்கேயே திருமணத்தையும்
முடித்து வைத்த பெருங்கருணையை என்னென்பது? எவ்வாறு புகழ்வது? இதுதான் உண்மையான
இறைவழிபாடு. "நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தி, சுற்றி வந்து, மொண மொண என்று மந்திரம்
சொல்வது" மட்டுமல்ல.
அன்புக்கு சாதி இல்லை. இனம் இல்லை. மொழி இல்லை.
மதம் இல்லை.
மனித நேயம் காப்போம், மங்காத புகழோடு வாழ்வோம்.
இது சமயக் கருத்து அல்ல. வாழ்வியல் உண்மை.
No comments:
Post a Comment