அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மலைக் கனத்தென
(திருத்துருத்தி)
முருகா!
திருவடிப் பேற்றை அருள்வாய்.
தனத்
தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக்
கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென
வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ......அலைமோத
மயிற்
குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு
மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி
விலைக்
கெனத்தன மாயிர மாயிர
முலைக் களப்பினு மாசைபொ தாதென
வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்
வெடுக்
கெடுத்தும காபிணி மேலிட
முடக் கிவெட்கும தாமத வீணனை
மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே
அலைக்
கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும்
அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா
அடைக்
கலப்பொரு ளாமென நாயெனை
அழைத் துமுத்திய தாமநு பூதியெ
னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே
சிலைக்
கைமுப்புர நீறெழ வேதிரு
வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்
சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா
திருக்
கடப்பலர் சூடிய வார்குழல்
குறத் திகற்புட னேவிளை யாடியொர்
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மலைக்
கனத்து என மார்பினிலே இரு
முலைக் கனத்து உறவே, இடை நூல் என
வளைத்து உகுப்ப, மை ஆர்குழல் தோளொடும்...... அலைமோத,
மயில்
குலத்தவர் ஆம் என, நீள்கலை
நெகிழ்த்துவித்து, இரு வார் விழி வேல்கொடு
மயக்கி, நத்தினர் மேல் மறு பாடும் ...... அ விழி
ஏவி
விலைக்கு
எனத் தனம் ஆயிரம் ஆயிரம்
முலைக்கு அளப்பினும், ஆசை பொதாது என,
வெறுப்பர், குத்திர காரியர், வேசையர்,......மயல்மேலாய்
வெடுக்கு
எடுத்து, மகாபிணி மேலிட,
முடக்கி வெட்கும் அ தாமத வீணனை,
மினல் பொலிப் பதமோடு உறவே அருள்......
புரிவாயே.
அலைக்கு
அடுத்த சுரார் பதி கோ என,
விடப் பணச் சிரம் ஆயிர சேடனும்,
அதிர்த்திடக் கதிர் வேல்விடு சேவக! ......
மயில்வீரா!
அடைக்கலப்
பொருள் ஆம் என நாயெனை
அழைத்து, முத்தி அதுஆம் அநுபூதி, என்
அருள் திருப்புகழ் ஓதுக, வேல்மயில்.....அருள்வோனே!
சிலைக்
கை முப்புரம் நீறு எழவே, திரு
உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர்
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் ...... அருள்பாலா!
திருக்
கடப்ப அலர் சூடிய வார்குழல்
குறத்தி கற்புடனே விளையாடியொர்
திருத்துருத்தியில் வாழ் முருகா! சுரர்
...... பெருமாளே.
பதவுரை
அலைக்கு அடுத்த
அசுரார் பதி கோ என --- கடலில் போய் ஒளிந்த அசுரர் தலைவனாகிய சூரபதுமன் "ஓகோ"
என அஞ்சி அலறவும்,
விடப் பணச் சிரம் ஆயிரம் சேடனும்
அதிர்த்திட --- விடம் கொண்ட படத்தை உடைய தலைகளை ஆயிரம் கொண்ட ஆதிசேடனும்
அதிர்ச்சி கொள்ளவும்,
கதிர் வேல் விடு சேவக --- ஒளி
பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரம் வல்லமை மிக்கவரே!
மயில் வீரா --- மயிலை வாகனமாகி உடைய
வீரரே!
அடைக்கலப் பொருள்
ஆம் என
--- அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருள் எனத் திருவுள்ளத்தில் கருதி,
நாயெனை அழைத்து --- அடி நாயேனை
அழைத்து,
முத்தி அது ஆம் அநுபூதியெ அருள் ---
பாச நீக்கத்தைத் தருகின்ற அனுபவ ஞானத்தை எனக்கு அருள் புரிய
திருப்புகழ் ஓதுக --- (பத்தர்கள்
அற்புதம் என ஓதும்) திருப்புகழை நாள்தோறும் பாடி வழிபடுக என்று அருள் புரிந்து,
வேல் மயில் அருள்வோனே --- எனதுஉடம்பில்
வேலையும் மயிலையும் இலச்சினையாகப் பொறித்து அருள் புரிந்தவரே!
சிலைக் கை --- (மேரு மலையாகிய)
வில்லைத் திருக்கையில் தாங்கி,
முப்புரம் நீறு எழவே ---
முப்புரங்களும் பொடியாகுமாறு,
திரு உ(ள்)ளத்தில் அற்பம் எனா நினை
தேசிகர் சிறக்க --- சற்றே திருவுள்ளம் பற்றிய பரமகுருவாகிய சிவபெருமான் பெருமை
கொள்ள,
முத்தமிழால் ஒரு பா அகம் அருள் பாலா --- ஞானமுத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற (தேவாரப் பாடல்களைத்
திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே!
திரு கடப்ப அலர்
சூடிய வார்குழல் குறத்தி கற்புடனே விளையாடி --- அழகிய கடப்ப
மலர்மாலையைத் தமது நீண்ட கூந்தலில் சூடி உள்ள கற்பு உள்ள குறமகளாகிய
வள்ளிநாயகியாருடன் திருவிளையாடல் புரிந்து,
ஒர் திருத்துருத்தியில் வாழ் முருகா ---
ஒப்பற்ற திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள மிருகப் பெருமானே!
சுரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையில் மிக்கவரே!
மலைக் கனத்து என
மார்பினிலே இருமுலைக் கனத்து உறவே --- மார்பினில் மலையைப் போல கனத்து
விளங்கும் இருமுலைகளின் சுமையால்,
இடை நூல் என வளைத்து உகுப்ப --- இடையானது
நூலைப் போல வளைந்து போகவும்,
மைஆர் குழல்
தோளொடும் அலைமோத --- கருநிறக் கூந்தல் தோள்களில் புரளவும்,
மயில் குலத்தவர் ஆம் என --- மயில்
கூட்டத்தவர் போல ஒயிலாக நின்று,
நீள்கலை நெகிழ்த்துவித்து --- நீண்ட
ஆடையை வேண்டுமென்றே தளர்த்தி,
இரு வார்விழி வேல்
கொடு மயக்கி
--- நீண்ட வேலினைப் போன்ற இருகண்களால் மயக்கி,
நத்தினர் மேல் மறு பாடும் அவ்விழி ஏவி
--- விரும்பி வந்தவர் மேல் குற்றத்தைக் கூறும்படியான பார்வையினைச் செலுத்தி,
விலைக்கு எனத் தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு
அளப்பினும் --- முலைகள் தரும் இன்பத்திற்கு விலையாக ஆயிரம் ஆயிரமாகப் பொருளைக்
அளந்து அளந்து கொடுத்தாலும்,
ஆசை --- மேன்மேலும் ஆசை கொண்டு,
பொதாது என வெறுப்பர் --- போதாது
என்று வெறுப்பைக் காட்டுபவர்களும்,
குத்திர காரியர் --- வஞ்சகச் செயலினை
உடையவரும் ஆகிய
வேசையர் மயல் மேலாய் --- விலைமாதர்
மேல் மயல் கொண்டு (இருந்து, பின்னர், அதன் விளைவாக)
வெடுக்கு எடுத்து --- கடுமையோடு கூடி,
மகா பிணி மேலிட --- பெருநோய்கள்
மேலிடவும்,
முடக்கி --- அவற்றால் உடம்பு முடங்கி,
வெட்கும் அ(த்)தாமத வீணனை --- பெரும் செருக்கு
கொண்டு அலைந்து, (இப்போது) வெட்கி நிற்கும் வீணன் ஆகிய அடியேன்,
மி(ன்)னல் பொல் இப் பதமோடு உறவே அருள்
புரிவாயே --- மின்னல் போல் ஒளி வீசும்
தேவரீரது திருவடிகளில் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக.
பொழிப்புரை
கடலில் போய் ஒளிந்த அசுரர் தலைவனாகிய
சூரபதுமன் "ஓகோ" என அஞ்சி அலறவும், விடம் கொண்ட படத்தை உடைய தலைகளை ஆயிரம்
கொண்ட ஆதிசேடனும் அதிர்ச்சி கொள்ளவும், ஒளி
பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரம் வல்லமை மிக்கவரே!
மயிலை வாகனமாகி உடைய வீரரே!
அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருள் எனத்
திருவுள்ளத்தில் கருதி, அடி நாயேனை அழைத்து, பாச நீக்கத்தைத் தருகின்ற அனுபவ ஞானத்தை
எனக்கு அருள் புரிய (பத்தர்கள்
அற்புதம் என ஓதும்) திருப்புகழை நாள்தோறும் பாடி வழிபடுக என்று அருள் புரிந்து, எனதுஉடம்பில் வேலையும் மயிலையும்
இலச்சினையாகப் பொறித்து அருள் புரிந்தவரே!
மேரு மலையாகிய வில்லைத் திருக்கையில் தாங்கி, முப்புரங்களும்
பொடியாகுமாறு, சற்றே திருவுள்ளம்
பற்றிய பரமகுருவாகிய சிவபெருமான் பெருமை கொள்ள,
ஞானமுத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற (தேவாரப் பாடல்களைத்
திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே!
அழகிய கடப்ப மலர்மாலையைத் தமது நீண்ட
கூந்தலில் சூடி உள்ள, கற்பு உள்ள
குறமகளாகிய வள்ளிநாயகியாருடன் திருவிளையாடல் புரிந்து, ஒப்பற்ற திருத்துருத்தி என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள மிருகப் பெருமானே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
மார்பினில் மலையைப் போல கனத்து
விளங்கும் இருமுலைகளின் சுமையால்,
இடையானது
நூலைப் போல வளைந்து போகவும்,
கருநிறக்
கூந்தல் தோள்களில் புரளவும், மயில்
கூட்டத்தவர் போல ஒயிலாக நின்று,
நீண்ட
ஆடையை வேண்டுமென்றே தளர்த்தி, நீண்ட வேலினைப் போன்ற
இருகண்களால் மயக்கி, விரும்பி வந்தவர்
மேல் குற்றத்தைக் கூறும்படியான பார்வையினைச் செலுத்தி, முலைகள் தரும் இன்பத்திற்கு விலையாக
ஆயிரம் ஆயிரமாகப் பொருளைக் அளந்து அளந்து கொடுத்தாலும், மேன்மேலும் ஆசை கொண்டு, போதாது
என்று வெறுப்பைக் காட்டுபவர்களும்,
வஞ்சகச் செயலினை உடையவரும் ஆகிய விலைமாதர் மேல் மயல் கொண்டு இருந்து, பின்னர், அதன் விளைவாகக் கடுமையோடு கூடிய பெருநோய்கள் மேலிடவும், அவற்றால் உடம்பு முடங்கி, முன்னர்பெரும்
செருக்கு கொண்டு இருந்து அலைந்து, இப்போது வெட்கி நிற்கும் வீணன் ஆகிய அடியேன், மின்னல் போல் ஒளி வீசும் தேவரீரது
திருவடிகளில் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக.
விரிவுரை
இத் திருப்புகழ்ப் பாடலின்
முற்பகுதியில் அடிகளார், விலைமாதர்களின்
தன்மையை எடுத்து உரைத்து, அவர்களின் சகவாசத்தால் உண்டாகும் கேட்டினையும்
காட்டி அறிவுறுத்துகின்றார்.
மாதர்மேல் வைத்த சிந்தையை மாற்றி, இறைவன் திருவடியில் சிந்தையைச் செலுத்தவேண்டும்.
மாதரை,
அவர்
தரும் சிற்றின்பத்திற்காகப் புகழ்ந்து பாடி, அவர் இட்ட ஏவலைச் செய்து
வாழ்ந்து மடிவதை விட, இறைவனையும் அவனடியார்களையும் புகழ்ந்து பாடி, வழிபட்டு, அறை
திருப்பணியிலும், அடியார்கள் பணியிலும் நின்று ஈடேறவேண்டும்.
அருள் கருதாது பொருளையே கருதி வாழும்
விலைமாதர்களையும், பயன் கருதியே பழகுகின்ற மனிதர்களையும் எவ்வளவு புகழ்ந்து
போற்றினாலும் முடிவில் பயனற்றதாகவே முடியும். ஆயின், இறைவனது பொருள்சேர்
புகழைப் பாடி வழிபட்டால் நிறைநலம் பெறலாம். திருப்பகழ் என்பதை, இறைவனது
பொருள்சேர் புகழ் என்றும் கொள்ளலாம். அதுவே பொருத்தமானதாக இருக்கும் என்றும் கருத
இடமுண்டு.
வேனில்வேள்
மலர்க்கணைக்கும்
வெண்ணகைச் செவ்வாய்க் கரிய
பானலார்
கண்ணியர்க்கும்
பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்
எலாம் நின்று உருகப்
புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்
உளான் காணாய்! நீ
மாளா வாழ்கின்றாயே. --- திருவாசகம்.
அற்புதத்
தெய்வம் இதனின்மற்று உண்டே!
அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்
பதத்துள் வைத்து உள்ளம்அள் ஊறும்
தொண்டருக்கு எண்திசைக் கனகம்
பற்பதக்
குவையும் பைம்பொன் மாளிகையும்
பவள வாயவர் பணை முலையும்
கற்பகப்
பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. ---
திருவிசைப்பா.
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
தயாவை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவருக்கு
அமருலகு அளிக்கும் நின் பெருமை,
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்
பிழைத்தவை பொறுத்து அருள்
செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே. --- திருவிசைப்பா.
தொழும்பினரை உடையவர்கள் ஆள்வது உறு
கடன் என்னும் தொல்லை மாற்றம்,
செழும்பவள இதழ்மடவார் திறத்து அழுந்தும்
எனது உளத்தைத் திருப்பி, தன் சீர்க்
கொழும்புகழின் இனிது அழுத்திப் புதுக்கி அருள்
தணிகை
வரைக் குமரன் பாதம்
தழும்பு படப் பலகாலும் சாற்றுவது அல்-
லால்
பிறர் சீர் சாற்றாது என் நா. --- தணிகைப்
புராணம்.
பெண்அருங் கலமே, அமுதமே என, பெண்
பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன் தரல் அறிந்து, நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
சைலனே கைலைநா யகனே. ---
சோணசைல மாலை.
உயங்குநூல்
இடைப்பூங் கோதையர் அல்குல்
ஒளிமணிப் பாம்புதீண் டுதலால்
மயங்குவேன்
தனக்கு, உன் பதமருந்து உதவி
மயக்கம்என்று ஒழித்துஅருள் புரிவாய்;
முயங்குமா
புகழ்ப்பூம் புகலிஅந் தணர்க்கு
முத்துவெண் பந்தர்ஈந்து அகல்வான்
தயங்குமீன்
முத்துப் பந்தர்வாழ் சோண
சைலனே கைலைநா யகனே. --- சோணசைலமாலை.
மின்னினில் நடுக்கம் உற்ற, நுண்ணிய நுசுப்பில், முத்த
வெண் நகையில், வட்டம் ஒத்து, ...... அழகு ஆர
விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில், குனித்த
வில் நுதலில் இட்ட பொட்டில், ...... விலைமாதர்,
கன்னல் மொழியில், சிறக்கும் அன்ன நடையில், கறுத்த
கண்ணின் இணையில், சிவத்த ...... கனிவாயில்,
கண் அழிவு வைத்த புத்தி, ஷண்முகம் நினைக்க வைத்த,
கன்மவசம் எப்படிக்கும் ......
மறவேனே. --- திருப்புகழ்.
அரும்பினால், தனிக்
கரும்பினால் தொடுத்து,
அடர்ந்து மேல் தெறித்து, ...... அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து, அயர்ந்து, அணாப்பி எத்து
அரம்பை மார்க்கு அடைக் ......
கலம் ஆகி,
குரும்பை போல் பணைத்து, அரும்பு உறாக் கொதித்து
எழுந்து, கூற்று எனக் ...... கொலைசூழும்,
குயங்கள் வேட்டு, அறத் தியங்கு தூர்த்தனை,
குணங்கள் ஆக்கி நல் ...... கழல்சேராய். --- திருப்புகழ்.
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே,
சிற்றிடையிலே, நடையிலே,
சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
சிறு பிறை நுதல் கீற்றிலே,
பொட்டிலே,
அவர்கட்டு பட்டிலே,
புனைகந்த
பொடியிலே, அடியிலே, மேல்
பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே
புந்தி தனை நுழைய விட்டு,
நெட்டிலே அலையாமல்; அறிவிலே,
பொறையிலே,
நின் அடியர் கூட்டத்திலே,
நிலைபெற்ற அன்பிலே, மலைவு அற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே, உன்இருதாள்
மட்டிலே மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
வளமருவு தேவை அரசே!
வரை ராசனுக்கு இருகண் மணியாய்
உதித்த மலை
வளர் காதலிப்பெண் உமையே. --- தாயுமானார்.
அலைக்கு
அடுத்த அசுரார் பதி கோ என விடப் பணச் சிரம் ஆயிரம் சேடனும் அதிர்த்திட கதிர் வேல்
விடு சேவக
---
சேவகன் --- வீரன்.
மாமரம் ஆகி நின்ற சூரபதுமனை
வேலாயுதத்தை விடுத்து இருகூறாகப் பிளந்தார் முருகப்பெருமான். ஒரு கூறு மயிலும் இன்னொரு கூறு சேவலுமாய்
நின்றது. விந்து வடிவான மயிலைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். நாத வடிவான
சேவலைத் தனது கொடியில் பொருத்திக் கொண்டார் முருகப் பெருமான்.
முருகப் பெருமானுடைய
விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக்
கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்"
என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய
அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம்
கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த
வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த
உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.
நண்ணினர்க்கு இனியாய் ஓலம்,
ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம்,
பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம்,
யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும்
கடவுளே ஓலம் ஓலம். --- கந்தபுராணம்.
தேவர்கள் தேவே ஓலம்,
சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம்,
வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம்,
பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற
மூர்த்தியே ஓலம், ஓலம். ---
கந்தபுராணம்.
"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள்.
முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர்.
முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால்
சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.
ஏயென முருகன் தொட்ட
இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும்
அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று
சென்றிட அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும்
வல்விரைந்து அகன்றது அன்றே. --- கந்தபுராணம்.
அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு
நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
"திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்".... --- வேல்
வகுப்பு.
சூரபதுமன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன.
சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள்
மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு
முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம்
பிளக்கப்பட்டதும், மாளா
வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப்
பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.
புங்கவர் வழுத்திச் சிந்தும்
பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி,
அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு,
கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை
எய்திவீற்று இருந்ததுஅன்றே. --- கந்தபுராணம்.
சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
தாவடி நெடுவேல் மீளத்
தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு
மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி
சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி
அமர்த்தொழில் கருதி வந்தான். --- கந்தபுராணம்.
அவ்வாறு மீட்டும் அமர் புரிய
வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி
அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும்
நீங்கி, தெளிந்த
உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக்
கொடியாகவும், மாமயிலை
வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன்
சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு
பெற்றான். அவனது தவத்தின் பெருமை
அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது
பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
மருள்கெழு புள்ளே போல
வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த
ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன்
ஆகிய இயற்கை யேபோல். --- கந்தபுராணம்.
தீயவை புரிந்தா ரேனும்
முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்புஇலா அருள்பெற்று
உய்ந்தான். ---
கந்தபுராணம்.
..... ..... ..... சகம்உடுத்த
வாரிதனில், புதிய
மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! - மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே! ---
கந்தர் கலிவெண்பா.
தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,
சலம் பிளந்து எற்றிப் ......
பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம்
புக்குத்
தடிந்திடும் சொக்கப் ......
பெருமாளே. ---
பொதுத் திருப்புகழ்.
கடல் சலம் தனிலே ஒளி சூரனை
உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா! --- அவிநாசித் திருப்புகழ்.
கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண்
திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
திறல! கொடும்பைக்கு உள் ......
பெருமாளே. ---
கொடும்பாளூர்த் திருப்புகழ்.
கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
கொதிவேல் படையை ......
விடுவோனே! ---
திருச்செந்தூர்த் திருப்புகழ்.
அடைக்கலப்
பொருள் ஆம் என நாயெனை அழைத்து, வேல்
மயில் அருள்வோனே ---
அடையாக வைக்கப்பட்ட பொருள், அடைக்கலப் பொருள்.
அடைக்கலம் புகுதல் என்பது, வேறு கதி ஏதும் இல்லை என உணர்ந்து
ஒருவருக்கு அடிமை ஆதல், சரண் புகுதல்.
அருணகிரிநாதப் பெருமானாரின். இத்தலத்தில் கனவில்
தோன்றி "அன்பனே! நீ எனக்கு அடைக்கலப் பொருள் ஆவாய்" என்று திருஅருணையிலும், எட்டிகுடிப் பதியிலும், பொதிய மலையிலும்
எழுந்தருளி, "நீ விரும்பிய வண்ணம்
உனது தோளில் நமது வேல்பொறி, மயில்பொறியை இட்டோம்.
முத்தி தரவல்ல நமது அநுபூதியையும் அருள்மயமாம் நமது திருப்புகழையும் ஒதும் பணியையே
நீ பணியாகக் கொள்வாயாக" என அருளி மறைந்தார். அருணகிரியாரும் விழித்தெழுந்து தமது
தோளில் வேல் அடையாளம் மயில் அடையாளம் இருக்கக் கண்டு மெய் சிலிர்த்து உள்ளங் குளிர்ந்து, "முருகா! நாயனைய என்னையும்
பொருட்படுத்தி அழைத்து அடைக்கலப் பொருள்போல அருமை பாராட்டி வேற்பொறி மயிற்பொறி இட்டனையே"
என மகிழ்ந்து "இறைவா! நான் வேசையர் மயலே மேலதாய், மகா பிணி மேலிட முடங்கி வெட்கமடைந்த பெருமதம்
பொருந்திய வீணன். இனி, எனக்கு அவ்வுறவு நேராதிருக்க
உன் திருவடியின் உறவே உறவாகும் பாக்கியம் வேண்டும் என வேண்டிப் பணிந்தனர்" இயமன் தன்னை முருகன் அடியான் என்பதைத் தெரிந்துகொண்டு, தன்னை அணுகாதிருப்பதற்கு
வேல் பொறி மயில்பொறி அருளுமாறு வேண்டினார்
அந்த அருளை இந்தத் திருப்புகழ்ப் பாடலில்
நினைந்து போற்றினார்.
அப்பர் பெருமானுக்கு, திருத்தூங்கானைமாடம் என்னும் திருத்தலத்தில்
"மின் ஆரும் மூவிலைச் சூலம்" பொறித்து ஆட்கொண்டார் சிவபெருமான்.
திருச்சத்திமுற்றம் என்னும் திருத்தலத்தில், திருவடி
தீட்சையை வேண்டினார். "திருநல்லூரில் வா வா" என்று அருளி, திருநல்லூர்
என்னும் திருத்தலத்திற்கு அப்பர் பெருமான் போந்தபோது, அவருக்குத் திருவடி
தீட்சையை அருள் புரிந்தார்.
"கோவாய்
முடுகி என்றுஎடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவார்
அடிகள் என்தலைமேல்
பொறித்து வைப்பாய்" எனப் புகன்று
நாஆர்
பதிகம் பாடுதலும்,
நாதன் தானும் "நல்லூரில்
வாவா"
என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர்". --- பெரியபுராணம்.
கோவாய்
முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூஆர்
அடிச்சுவடு என்மேல் பொறித்துவை, போகவிடில்
மூவா
முழுப்பழி மூடுங்கண்டாய், முழங்குந் தழற்கைத்
தேவா!
திருச்சத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே". ---
அப்பர் தேவாரம்.
நன்மைபெருகு
அருள்நெறியே
வந்துஅணைந்து, நல்லூரின்
மன்னுதிருத்
தொண்டனார்
வணங்கிமகிழ்ந்து எழும்பொழுதில்,
"உன்னுடைய
நினைப்புஅதனை
முடிக்கின்றோம்" என்று,அவர்தம்
சென்னிமிசைப்
பாதமலர்
சூட்டினான் சிவபெருமான். --- பெரியபுராணம்.
"நனைந்துஅனைய
திருவடிஎன்
தலைமேல்வைத் தார்"என்று
புனைந்ததிருத்
தாண்டகத்தால்
போற்றுஇசைத்து, புனிதர்அருள்
நினைந்து, உருகி, விழுந்து, எழுந்து ,
நிறைந்து,மலர்ந்து, ஒழியாத
தனம்பெரிதும்
பெற்று உவந்த
வறியோன்போல் மனம்தழைத்தார். --- பெரியபுராணம்.
நினைந்துஉருகும்
அடியாரை நைய வைத்தார்,
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினம்திருகு
களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்,
செழுமதியின் தளிர்வைத்தார், சிறந்து வானோர்
இனம்துருவி
மணிமகுடத்து ஏற, துற்ற
இனமலர்கள் போதுஅவிழ்ந்து, மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய
திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே. --- அப்பர் திருத்தாண்டகம்.
முத்தி
அது ஆம் அநுபூதியெ அருள் திருப்புகழ் ஓதுக, ---
முத்தி --- பாச நீக்கம்.
அனுபூதி --- அனுபவ ஞானம்.
திருப்புகழ் --- "பூர்வ பச்சிம தட்சிண உத்தர
திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும், சித்ர
கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழ்" என்பது அருணகிரிநாதப்
பெருமான் அருள் வாக்கு.
இருப்பு
அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் ...... என ஓதும்,
இசைத்தமிழ்
நடத்தமிழ் எனத் துறை விருப்புடன்,
இலக்கண இலக்கிய ...... கவிநாலும்
தரிப்பவர், உரைப்பவர், நினைப்பவர், மிகச் சக-
தலத்தினில் நவிற்றுதல் ...... அறியாதே,
தனத்தினில்
முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ?
என்பது
திருத்தணிகைத் திருப்புகழ்.
"சொலற்கரிய
திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை
அறுத்து
எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்"
என்பது
வேல் வகுப்பு.
பொதுவாக இப்படிக் கொள்ளலாம். என்றாலும், திருப்புகழ் என்பதற்கு, இறைவன் "பொருள்சேர்
புகழ்" திருப்புகழ் என்பதே சாலப் பொருந்தும்.
சிலைக்
கை முப்புரம் நீறு எழவே திரு உ(ள்)ளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் ---
திரிபுர தகன காலத்தில் சிவபெருமான் மேருமலையை
வில்லாகக் கொண்டார்.
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள்
வாள் வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள்
பிரமதேவனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில், கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி
யாது வரம் வேண்டுமென்ன, மூவரும் பத்மயோனியைப்
பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள
வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும்
அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலம் கழிந்தால் நானும்
இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை
இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார்
ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர்
சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக் கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்”
என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள்
பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும்
வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயர வேண்டும்.
அப் புரம் மூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி
வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு
வரமீந்து தனது இருக்கை சேர்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத
அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும்
தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில்
பொன் மதிலுமாக, பல வளங்களும்
பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையினை
காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப் படி வைகுந்தம்
முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள
பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர்.
அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன்
முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும்
களைத்து, சிவபரஞ்சுடரே
கதியென்று உன்னி தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலந்தவம்
செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து, திரிபுரத்தவர் புரியவுந் தீமையை
விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி
மறைந்தனர்.
திருமால், "தேவர்களே
அஞ்சாதீர்கள்" என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம்
அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை
மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால்
ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில்
பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து
தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அது அறிந்து
அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச்
செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தியண்ணல் மேருவரை சேர்ந்து
சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம்
சிங்காரிக்கலாயினர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு
தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள்
கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு
மரமாகவும், அட்டப் பருவதங்கள்
தூண்களாகவும், எட்டுத் திக்கு யானைகள்
இடையில் தாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள்
கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ
மந்திரத்தையே குதிரை தூண்டும் கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர்
நாற்புறமும் சாமரை இரட்டவும், தும்புரு நாரதர் இசை
பாடவும், அரம்பை முதலிய
அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன்
பாணமாகவும், சரஸ்வதி வில்லில் கட்டிய
மணியாகவும், அக்கினிதேவன் அம்பின்
கூர்வாயாகவும், வாயுதேவன்
அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி
திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக்
கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
“வண்டிஇரு சுடராக, வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கள்
அனைவரும் பரிவாரமாக,மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டு,மலை சிலையாக, அரவு நாணாக, மால் கோலாக, அழலாகவாய்
கோல்இறகு
காலாக வெந்து முப்புரம் எரி கொளுந்த எய்தவர்குமரனே.
--- திருவிரிஞ்சை முருகன்
பிள்ளைத்தமிழ்
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று
தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன்
*இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு
விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு
முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன
முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே, நாராயணர் இடபம் ஆக, அவ் இடபமேல் எம்பெருமான் ஏறுதலும், திருமால் தாங்கும் சக்தியற்றுத்
தரைமேல் விழ, சிவபெருமான்
திருவருள் கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர
சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும்
காண்க.
கடகரியும்
பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம்
உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு ஏடி,
தடமதில்கள்
அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த்
தாங்கினான் திருமால்காண் சாழலோ.
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால்
இரதம் முன்போலாக சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார்.
மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில்
ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள்
எழுவரும் வாழ்த்தவும், திருநந்தி தேவர்
பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள்
வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்றண்ணல்
இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே!
வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான்
தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில்
அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கோர் ஆயுதமேனும் படையேனும் துணை
வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய
வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக்
கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின.
பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப்
பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத்
துவாரபாலகராக அருளி, தேவர்களை
அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று
இன்புற்றனர்.
"கல்லால்நிழல்
கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு
தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி
காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில்
எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. --- திருஞானசம்பந்தர்.
வரிஅரவே
நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால்
முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை
ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான்
மேவியுறை கோயில் கைச்சினமே. --- திருஞானசம்பந்தர்.
குன்ற
வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு
எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற
லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில்
வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே. --- திருஞானசம்பந்தர்.
கையில்உண்
உடுழல்வாரும் சாக்கியரும்
கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா
தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார்
அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய்
வீழ்த்த
செய்யின்ஆர்
தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
--- அப்பர்.
நிற்பானும்
கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து
அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில்
அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும்
எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால
பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும்
பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும்
கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந்
தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---
சுந்தரர்.
வளைந்தது
வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.
ஈர்அம்பு
கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே
முப்புரம் உந்தீபற,
ஒன்றும்
பெருமிகை உந்தீபற.
--- மணிவாசகர்.
மாநாக
நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ஒரு
மால் ஆய வாளியைத் தொடுத்து, அரக்கரில் ......ஒரு
மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
தூளாகவே, முதல் சிரித்த வித்தகர் வாழ்வே!--- (ஆனாத ஞான)
திருப்புகழ்.
மலைமகள்
இடத்து வைத்து, மதிபுனல் சடைக்குள் வைத்து,
மழுஅனல் கரத்துள் வைத்து, ...... மருவார்கள்
மடிவுற
நினைத்து, வெற்பை வரிசிலை இடக்கை வைத்து,
மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே! --- (சலமலம்)
திருப்புகழ்.
உருவு
கரியது ஒர் கணை கொடு, பணிபதி
இரு குதையும் முடி தமனிய தநுவுடன்,
உருளை இருசுடர், வலவனும் அயன்என, ...மறைபூணும்
உறுதி
படு சுர ரத மிசை அடியிட,
நெறு நெறு என முறிதலும், நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற, ......ஒருகோடி
தெருவும், நகரியும், நிசிசரர் முடியொடு
சட சட என வெடி படுவன, புகைவன,
திகுதிகு என எரிவன, அனல் நகைகொடு ...முனிவார் தம்
சிறுவ!
வனசரர் சிறுமியொடு உருகிய
பெரும! அருணையில் எழுநிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய ......
பெருமாளே.
--- (அருவமிடையென)
திருப்புகழ்.
அனகன்
பெயர் நின்று உருளும் திரி
புரமும் திரி வென்றிட, இன்புடன்
அழல் உந்த நகும் திறல்
கொண்டவர்....புதல்வோனே!
--- (கனகம்
திரள்கின்ற) திருப்புகழ்.
தேசிகர்
சிறக்க
முத்தமிழால் ஒரு பா அகம் அருள் பாலா ---
ஆதிகுரு ஆகிய சிவபரம்பொருள் மகிழுமாறு, திஞானசம்பந்தப் பெருமான்
அற்புதமான,
அமுதினும்
இனிய தேவாரப் பாடல்களைப் பாடினார்.
அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
அழிந்து
புவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள்
குலத்தின் உதித்து, அரனோடு
அம்மை தோன்றி அளித்த வள்ளச்
செழுந்தண்
முலைப்பால் குடித்து, முத்தின்
சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன்
பிணியும், சமண் பகையும்,
தேவி துயரும் தீர்த்து அருளி,
வழிந்து
நறுந்தேன் உகுவனபோல்
மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத்
தெளிந்த செந்தமிழ்த் தே-
வாரப் பாடல் சிவன் கேட்க
மொழிந்து
சிவந்த கனிவாய்ச்சண்
முகனே! முத்தம் தருகவே.
முத்துக்
குமரா! திருமலையின்
முருகா! முத்தம் தருகவே. --- திருமலை முருகன்
பிள்ளைத்தமிழ்.
திரு
கடப்பு அலர் சூடிய வார்குழல் குறத்தி கற்புடனே விளையாடி ---
எம்பெருமான் முருகனுக்கு உகந்த மலர் கடம்பு. அதனையே
எமது அகிலாண்ட நாயகியாகிய வள்ளிபிராட்டியார் தமது கூந்தலில் சூடி மகிழ்ந்தார்.
ஒர்
திருத்துருத்தியில் வாழ் முருகா ---
திருத்துருத்தி என்பது சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் "குத்தாலம்" என்று
வழங்கப்படுகின்றது.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து 9 கி. மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி. மீ. தொலைவிலும் குத்தாலம் என்ற
ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகியவை
இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ளன.
இறைவர்
--- உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்,கற்றளி மகாதேவர்
இறைவியார்
---மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி,
அரும்பன்ன வனமுலையாள்
தல
மரம் --- குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)
திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு
வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால்
திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள
குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள்
வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை
திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று ந்தியில்
நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு இலிங்க வடிவில்
தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை
நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம்
முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும்
என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய
விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே
நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.
இத்திருத்தலத்தின் தலவிருட்சம்குத்தால
மரம் என்ற ஒரு வகை ஆத்தி மரம். அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து
கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். உத்தாலவனம் என்று
பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று
அறியப்படும் இத்திருத்தலம் மூவர் முதலிகாளால் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற
காலத்தில் திருத்துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில்
உள்ள தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் 3-ஆவது பாடலில் "பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி
யானைத் தொண்டனேன் கண்ட வாறே" என்று
குறிப்பிடுவதால், காவிரி நதியின்
இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம்
பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த
சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து
திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் இடகண் பார்வையைப் பெற்றாலும், நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து
இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும்
ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி
தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும்
பளபளக்கும் திருமேனியுடன் திகழ்ந்தார். அப்போது, திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து, "மின்னுமா மேகங்கள்"
எனத்
தொடங்கும் திருப்பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால்
தாமரைத் தடாகத்திற்கு சுந்தர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில்
சுந்தரருக்கு கோயில் உள்ளது.
கருத்துரை
முருகா! திருவடிப் பேற்றை
அருள்வாய்.
No comments:
Post a Comment