நல்லார் இடத்துச்
சேர்ந்த வறுமை
-------------
அறம் சாரா வறுமை, அறம் சார்ந்த
வறுமை குறித்துப் பார்த்தோம்.
"இருவேறு உலகத்து இயற்கை, திரு வேறு, தெள்ளியர் ஆதலும்
வேறு" என்று திருவள்ளுவ நாயனார் ஓர் உண்மையை நமக்கு அறிவுறுத்துகின்றார்.
அறிவு உடையவர்க்கு, செல்வத்தை உண்டாக்குதலும், உண்டாக்கிய
செல்வத்தைக் காத்தலும், காத்த செல்வத்தால் பயன் கொள்ளுதலும் எளிமையாக
இருந்தும்,
அவ்வாறு
செல்வத்தை அடையாது ஏழைகளாய் இருப்பதும், அறிவே இல்லாதவர் எல்லாச் செல்வங்களையும்
பெற்று இருப்பதும் காணப்படுவது உலக இயற்கை.
இதனால், அறிவு உடையார்க்கு உள்ள
ஊழானது,
செல்வம்
உடையார்க்கு ஆகாது. செல்வம் உடையார்க்கு உள்ள ஊழ் அறிவு உடையார்க்கு ஆகாது என்றது காட்டப்பட்டது.
செல்வத்தைத் தேடுதற்கும், அறிவைத் தேடுதற்கும் அவரவர்க்கு உள்ள ஊழே
முதற்காரணம் என்றார்.
ஆனால், ஒருவன் நல்லவனாக
வாழ்வது அவனது அறிவுடைமை காரணமாகும். தீயவனாக வாழ்வது அவனுடைய அறிவின்மை
காரணமாகும்.
செல்வம் இல்லாதவனுக்குச் செல்வத்தைக்
கொடுத்து உதவவேண்டும். அறிவு இல்லாதவனுக்கு அறிவை ஊட்டவேண்டும்.
நன்னெறியில் ஒருவன் வாழ்வதற்குச் செல்வம் ஒரு
பொருட்டல்ல. அவன் பெற்ற அறிவே அதற்கு வழியினை வகுக்கும். அறிவு உள்ளவன்
செல்வத்தைப் பெற்று இருந்தாலும், அதைத் தானும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து
உதவுவான்.
அறிவில்லாதவனிடத்தில் செல்வம் உண்டானால், கூடவே
செருக்கும் மிகுந்து இருக்கும். அவனால் தனது சுற்றத்திற்கு மட்டும் அல்லாமல், பிறருக்கும்
நன்மை விளையாது.
சங்க நூல்களும், நீதி நூல்களும், அறநூல்களும், அக் காலத்துப்
பெரியோர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் உண்மைகளை நமக்கு அறிவுறுத்தவது காணலாம்.
வாழ்தற்கு உரிய பொன்னும் பொருளும் இன்மையால், பாடிப்
பிழைப்போரும்,
ஆடிப்
பிழைப்போரும்,
செல்வம்
உள்ளவரிடத்துச் சென்று, அவர்களைப் புகழ்ந்து பாடி, அவர் தரும்
செல்வத்தைப் பெற்றே மகிழ்ந்திருந்தனர். வறுமை காரணமாக நெறியற்ற வாழ்வை அவர்கள்
வாழவில்லை. அத்தோடு அல்லாமல், தன் பெற்ற வளத்தைப் பிறருக்குக் காட்டி மகிழ்ந்து
இருந்தனர்.
தொல்காப்பயனார் வாழ்வியல் கூறவந்த போது,
"கூத்தரும்
பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக்
காட்சி உறழத் தோன்றி,
பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்
எதிரச் சொன்ன பக்கமும்"
என்னும்
அருமையான வாழ்வியல் உண்மையைக் காட்டுகின்றார். இது ஆற்றுப்படை இலக்கணம் ஆகும்.
ஆடல் மாந்தரும், பாடல் பாணரும், கருவிப் பொருநரும்(வாத்தியம்
இசைப்போர்),
இவருள்
பெண்பால் ஆகிய விறலியும் என்னும் நாற்பாலரும், செல்வம் உடையோரைத்
தேடிச் சென்று,
பாடி
ஆடிப் பொருள் பெற்று வருகின்றனர். வருகின்ற வழியில் எதிர்ப்பட்ட தம்மைப்
போன்றவர்க்கு,
தாம்
பெருஞ்செல்வத்தைப் பெற்ற விதத்தை, எதிர் வந்த வறியோர்க்கும் அறிவுறுத்தி, அவரும் அங்கு
சென்று,
தாம்
பெற்றவை எல்லாம் பெறுமாறு அறிவுறுத்துகின்றனர் என்பதே இதன் பொருளாகும்.
பத்துப்பாட்டில் வரும் ஆற்றுப்படை நூல்களில் இதைக் காணலாம்.
அந்த நிலையில், முருகப் பெருமானின்
அருளைப் பெற்ற ஒருவர், அவ்வருளைப் பெற்றில்லாதவருக்கு, முருகப் பெருமானிடத்துச்
சென்றால், பெறுதற்கு அரிய
பேரருளைப் பெறலாம் என்று ஆற்றுப்படுத்தும் முகமாக எழுந்ததே, நக்கீரதேவ
நாயனார் அருளிய "திருமுருகாற்றுப்படை" என்னும் அருள் நூல் ஆகும்.
எனவே, முன்வினைப் பயனாக
வருகின்ற வறுமை நிலையிலும், நன்னெறியில் வழுவாது வாழ்ந்தால், நன்னெறியில்
நின்று முயன்றால், இல்லாததைப் பெற்று, இன்பமாக வாழலாம் என்பதுதான் முன்னோர்
வாழ்ந்து காட்டிய வாழ்வியல்.
அறம் சார்ந்த வறுமை நிலையில் செம்மையாக
வாழ்வது,
வறுமையில்
செம்மை எனப்பட்டது.
"கொடிது, கொடிது வறுமை
கொடிது" என்று ஔவைப் பாட்டியார் பாடி இருப்பது பொதுமையானது. வறுமையை விடவும்
கொடியது ஒன்று உண்டு என்பதைத் திருவள்ளுவ நாயனார் காட்டுகின்றார். அக் கொடியது எது
என்றால்,
கல்வி
அறிவு இல்லாதவனிடத்தில் சேர்ந்த செல்வம் என்கின்றார்.
நல்லார்கண்
பட்ட வறுமையின் இன்னாதே,
கல்லார்கண்
பட்ட திரு.
என்பது
திருக்குறள்.
கல்வி அறிவு உடைய சான்றோரிடத்து உண்டான
வறுமையைக் காட்டிலும், கல்வி அறிவு
இல்லாத கடையரிடம் உண்டான செல்வம் துன்பத்தைத் தருவது என்கின்றார்.
திரு கல்லாரைக் கெடுக்கும். வறுமை நல்லாரைக் கெடுக்காது.
"மிகப்பேர்
எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி
இல்லோர் உடைமை உள்ளேம்,
நல்லறிவு
உடையோர் நல்குரவு
உள்குதும்
பெரும, யாம் உவந்து நனி
பெரிதே"
என்பது
புறநானூறு கூறும் செய்தி.
தகுதி உடையவர் மதித்துத் தருவதே பரிசு.
வறுமையிலும் செம்மையே வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டும் பாடல் பகுதி இது.
இதன்
பொருள் ---
மிகப்பேர் எவ்வம் உறினும் --- யாம் மிகப்
பெரிய துன்பத்தை அடைந்தாலும்; எனைத்து உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் --- சிறிதும் அறிவில்லாதோருடைய செல்வம் பயன்படாமையின்
அதனை நினைத்தும்
பார்க்கமாட்டோம். நல்லறிவுடையோர் நல்குரவு --- நல்லறிவினை உடையோரது வறுமை பயன்படுதலின் அதனை; பெரும --– பெருமானே; யாம் உவந்து நனி பெரிது உள்ளுதும் --- நாங்கள்
உவந்து மிகப் பெரிதும் நினைப்பேம்.
ஈகைக் குணம் இல்லாதவர் பெருஞ்செல்வராய்
இருந்தாலும் அவரால் நன்மை இல்லை என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் உணர்த்தும்.
எறிநீர்ப்
பெருங்கடல் எய்தி இருந்தும்
அறுநீர்ச்
சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்;
மறுமை
அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழி
நல்குரவே தலை.
இதன்
பொருள் ---
எறி நீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும் அறுநீர்ச்
சிறுகிணற்று ஊறல் பார்த்து உண்பர் --- அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய பெரிய
கடலை அடுத்து இருந்தாலும், அதன் நீர்
பயன்படாமையால் அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின் ஊற்றையே மக்கள்
தேடிக்கண்டு உண்பர்; மறுமை அறியாதார்
ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவே தலை --- ஆதலால் மறுமைப் பயன் அறியாது ஒழுகும்
புல்லியோர் செல்வத்தினும் குணம் நிறைந்த பெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும்.
நற்குண நற்செயல்கள் இல்லாதார் செல்வராய்
இருப்பினும், அதனை சான்றோர்
மதிக்கமாட்டார்கள் என்கின்றது பின்வரும் நாலடியார் பாடல்...
நல்லார்
நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க்கு
ஒன்று ஆகிய காரணம், - தொல்லை
வினைப்பயன்
அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப
வருவது ஒன்று இல்.
இதன்
பொருள் ---
நல்லார் நயவர் இருப்ப, நயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம்
--- உயர்ந்த அறிவுச் செயல்களை உடையவரும் இனியவருமான மேலோர் உலகத்தில் வளமின்றி இருக்க, இனிமையும் கல்வியறிவும் இல்லாக் கீழோர்க்கு ஒரு
செல்வ நிலை உண்டான காரணம், தொல்லை வினைப்பயன்
அல்லது வேல்நெடு கண்ணாய் நினைப்ப வருவதொன்று இல் --- வேற்படை போன்ற நீண்ட
கண்களையுடைய மாதே! பழைய நல்வினையின் பயனே அல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம்
இல்லை.
கீழ்மக்கள் அடைந்துள்ள செல்வத்தை விட, மேன்மக்கள்
அடைந்துள்ள வறுமையே நல்லது என்று அறிவுறுத்துகின்றது, "பழமொழி
நானூறு" என்னும் நூலில் வரும் பாடல் ஒன்று....
சிறியவர்
எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர்
நல்குரவு நன்றே, --- தெரியின்
மதுமயங்கு
பூங்கோதை மாணி்இழாய்! மோரின்
முதுநெய்
தீது ஆகலோ இல். -
இதன்
பொருள் ---
மது மயங்கு பூ கோதை மாணிழாய் --- தேன்
மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் அண்ந்துள்ளவளே!, தெரியின் --- ஆராய்ந்தால், மோரின் முதுநெய் தீது ஆகலோ இல் ---
புதிய மோரினை விடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்), சிறியவர் எய்திய செல்வத்தின் --- அறிவில்
சிறியார் பெற்ற செல்வத்தைவிட, பெரியவர் நல்குரவு
மாண நன்றே --- அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே ஆகும்.
மோர் புதிது. நெய் பழையது. ஆயினும், மோரைவிட நெய்யில் தான் மிக்க பயன் உண்டு.
அதுபோல, சிறியவர் எய்தியது
செல்வமே ஆனாலும், பெரியவர் எய்தியது வறுமையே
ஆனாலும், அவர் செல்வத்தைவிட
இவர் வறுமையே மிக நல்லது என்று இப்பாடல் அறிவுறுத்துகின்றது.
கல்வி அறிவு இல்லாத கீழோரிடம் பொருள்
உண்டானால், செல்வச் செருக்கால்
அவன் அழிவதோடு, பிறரையும்
கெடுப்பான். பெரியவர்கள் வறுமையில் இருந்தாலும், தமது நிலையில் தாழாது
மானத்தோடு வாழ்தல்லாமல், பிறரையும் வாழ்விக்க நினைப்பர். பிறர் கேடு
எண்ணமாட்டார்.
மெய்ந்நெறியை உணராதவர் பெற்ற செல்வமானது
அவனது நெருங்கிய சுற்றத்திற்குத் துன்பத்தையே விளைவிக்கும் என்கின்றது நமது சொந்த
புராணமான கந்தபுராணம். சுற்றத்திற்குத் துன்பம் என்றால் மற்றவர்க்கும் துன்பம் தானே.
"மெய்ந்நெறி
உணர்கிலார் வெறுக்கை பெற்றது
துன்னிய
கிளைக்கு ஒரு துன்பம்"
வெறுக்கை
--- செல்வம். துன்னிய - நெருங்கிய. கிளை - சுற்றம்.
சிங்கமுகாசூரன்
வதைப் படலத்தில் காணலாம்.
No comments:
Post a Comment