திரு நீக்கப்பட்டார் தொடர்பு




திரு நீக்கப்பட்டார் தொடர்பு

--------------------

     திரு என்பதன் பொருளை முன்னர் விரிவாகக் கண்டோம். திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் உடையது என்று கண்டோம்.

     உலகியல் இன்பத்தை நாடுவோரால் விரும்பப்படும் திரு, பொன்னும் பொருளும் ஆகும். அது பொருட்செல்வம் எனப்பட்டது.

     அருளியல் இன்பத்தை நாடுவோரால் விரும்பப்படும் "திரு" இறைவன் திருவருள். அது அருட்செல்வம் எனப்பட்டது.

     இரு செல்வங்களையும் பகுத்து அறியும் அறிவு பகுத்தறிவு அல்லது விவேகம் எனப்படும்.

     பொருட்செல்வம், அருட்செல்வம் ஆகிய இரண்டின் நன்மை தீமைகளைப் பகுத்து உணர்ந்த திருவள்ளுவ நாயனார், "செல்வத்துள் செல்வம் அருட்செல்வம்" என்றும், பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் உள்ளது என்பதைகை காட்ட, "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றும் தெளிவித்தார்.

     தீவினையின் பயனாக பொருட்செல்வம் இல்லாதவர், தமது நல்வினைப் பயனாக, ஒருகால் அதைப் பெறுதலும் கூடும். தீவினையின் பயனாக அருட்செல்வத்தை இழந்தவர் மீளவும் அதனைப் பெறுதல் இல்லை என்பதைக் காட்ட, "பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார் அற்றார், மற்று ஆதல் அரிது" என்றும் தெருட்டினார்.

     உலகியலார் "திரு" என்கின்ற பொருட்செல்வமும், அதை நிலையற்றது எனக் கருதித் தெளிந்த, அருளியலார் "திரு" என்கின்ற அருட்செல்வமும் ஒருங்கே நீங்கும் நிலையும் உண்டாகும்.

     ஒன்றை விரும்பினால் ஒன்றை விட்டாகவேண்டும். ஒன்று சேரும்போது, ஒன்று நீங்கும்.

     ஒளி வரும்போது இருள் நீங்கும். ஒளி மழுங்கும்போது இருள் சூழும். துன்பம் நீங்கியபோது இன்பம் உண்டாகும். இன்பம் நீங்கியபோது துன்பம் உண்டாகும். இது உலகியல்.

     திருவுக்குப் பொருத்தம் இல்லாதவை சேரும்போது திரு நீங்கும். திருவால் நீக்கப்பட்டவர்க்கு உண்டாகும் தொடர்புகள், இன்பம் போன்று துன்பத்தையே தருபவை.
இதை, துக்க சொரூபமான இன்பம் என்றும் சிற்றின்பம் என்றும் பெரியோர் கூறுவர்.

     "திரு நீக்கப்பட்டார் தொடர்பு" எவை என்பதைப் பற்றியது இன்றைய சிந்தனை.

     சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஓர் அரிய மணி. அது நினைத்ததை எல்லாம் அளிக்கும் என்று கூறுவர்.

     விவேகம் என்னும் சொல்லுக்குப், பகுத்தறியும் வல்லமை, புத்திகூர்மை, அறிவுநுட்பம் என்று பொருள் உண்டும. நன்மை தீமையைப் பகுத்து அறிவது விவேகம். வேகம் நீங்கினால் விவேகம் பிறக்கும். வேகத்தில் செய்யும் செயல்கள் முழுமையாக வெற்றியைத் தருவது இல்லை. விவேகத்தோடு செய்யும் செயல்கள் முழு வெற்றியைத் தருவன. "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க" என்று மணிவாசகப் பெருமான் காட்டியது இந்தக் கருத்தில்தான். இதை "நித்தியாநித்திய வஸ்து விவேகம்" "நித்திய அநித்திய நிர்ணயம் தெரி விவேகம்" என்று கைவல்யம்.

     விவேகத்தை சிந்தாமணி போல அருள்கின்ற "விவேக சிந்தாமணி" என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதை அருளியவர் யார்? அவருடைய காலம் என்ன? என்பன போன்ற ஆராய்ச்சிக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை. ஆனாலும், சான்றோர்களால் போற்றப்படுகின்ற நூல் "விவேக சிந்தாமணி" என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. பல வாழ்வியல் உண்மைகளைத் தெரிவிக்கின்ற நூல் இது.

     இந்த விவேக சிந்தாமணியில், வினா விடையாக ஒரு செய்தி சொல்லப்பட்டு உள்ளது. வினாவைத் தொடுப்பது ஒரு பரத்தை. அதற்கு விடை இறுப்பவள் அவளது தோழி. பரத்தையின் தோழி பரத்தையாகத் தானே இருப்பாள்? ஆனால், பரத்தையர்கள் சிந்தையிலும் அற உணர்வு உள்ளது என்பது இந்த நூலைப் படித்தால் தெரியும்.

     தலைவியாகியவள் தனது தோழியைப் பார்த்து, "எனக்குத் தாயைப் போன்ற தோழியே! அற உணர்வை உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணே! உன்னிடத்தில் ஒர் உண்மையைக் கேட்பேன். அதனைத் தெளிந்து எனக்கு நீ சொல்லுதல் வேண்டும். தமக்கு இன்பம் வேண்டி, என்னைக் கூடி மகிழ வருபவர்கள், எனக்கும் இன்பத்தைத் தருகின்றார்கள். அது அல்லாமல் பொன்னையும் பொருளையும் வேறு தருகின்றார்கள். அதுவும் அல்லாமல் எனது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றார்கள். இது ஏனோ?" என்று கேட்கின்றாள்.

பாடலைப் பார்ப்போம்....

"அன்னையே அனைய தோழி!
     அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னை ஓர் உண்மை கேட்பேன்,
     உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்;
என்னையே புணருவோர்கள்
     எனக்குமோர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப்
     போதினில் வீழ்வதேனோ? "

     இந்த வினாவிற்கு விடையைத் தோழியானவள் திறம்படத் தெளிந்து சொல்லுகின்றாள். நமக்கு அறிவில் தெளிவு இல்லாமல் குழம்பி இருக்கும் காலத்தில், தெளிவுபடுத்துவது தோழன் ஆகும். எனவேதான், நட்பைப் பெரிதும் போற்றுகின்றோம்.
    
     அப்படிப்பட்ட அருமையான தோழி, தனது தலைவியின் ஐயம் தெளிதல் பொருட்டுப் பின்வருமாறு விடை பகருகின்றாள்.

     "காதல் உணர்விற்குத் தலைவனான மன்மதன் காதல் உணர்வை உயிர்களுக்கு ஊட்டி, காதல் போரை உண்டாக்குவான். (மலர்க்கணைகளைச் சொரிவான்) அந்த மன்மதனே மயங்கி விழும்படியான பெருத்துக் குவிந்த மார்பகங்களை உடையவளே! நான் ஒன்று கூறுவேன், கேட்பாயாக. நல்ல அறச் செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமானது பாழாகவேண்டும் என்றதான், பிரமதேவன் நம்மைப் போன்ற கணிகைகளையும், குடித்து மயங்குவதற்கான கள்ளையும், பொருளைத் தோற்று அழிவதற்கான சூதாட்டத்தையும் படைத்து வைத்தான்"

பாடலைப் பார்ப்போம்....

"பொம் எனப் பணைத்து விம்மிப்
     போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே!
     கூறுவேன் ஒன்று கேண்மோ;
செம்மையில் அறம் செய்யாதார்
     திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
     நான்முகன் படைத்தவாறே!"

     திரு நீக்கப்பட்டார் என்பது, திருவால் நீக்கப்பட்டவர் என்பது பொருளாகும். திருவால் நீக்கப்பட்டவர்கள், விலைமதார் ஆசை கொண்டோர், கள் குடிப்போர் மற்றும் சூதாடுவோர் என்பது, மேற்குறித்த வினாவிடைப் பாடல்களால் தெளிவாகும்.  

     இந்த உரையாடல் பாடல்களுக்கு,  கரு எங்கிருந்து வந்தது என்று பார்ப்போமானால், அது, வான்புகழ் கொண்ட திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளே ஆகும்.

"இரு மனப் பெண்டிரும், கள்ளும், கவறும்,
திரு நீக்கப் பட்டார் தொடர்பு". 

என்கின்றார் நாயனார்.

     இரண்டு வகையான மனத்தைக் கொண்ட பொதுமகளிரும், கள்ளும், சூதும் ஆகியவை, திருமகளால் புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் ஆகும்.

1. இருமனப் பெண்டிர், 2. கள், 3. சூது ஆகிய இவை மூன்றும் பற்றி, ஒவ்வொன்றாகப் பார்ப்போம்....


1.  இருமனப் பெண்டிர்....   

     இருமனம் என்பதற்குப் பொருளாக, அருணகிரிநாதப் பெருமான் பாடியுள்ள திருப்புகழைக் கொள்ளலாம்...

ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
     ஒருவரொடு செங்கை ...... உறவாடி,
ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
     ஒருவரொடு இரண்டும் ...... உரையாரை

மருவ, மிக அன்பு பெருக உளது என்று
     மனம் நினையும் இந்த ...... மருள் தீர,
வனசம் என வண்டு தனதனன என்று
     மருவு சரணங்கள் ......  அருளாயோ?

         இழிந்த அறிவு மயக்கத்தைக் கொண்டு பொதுமகளிர் இன்பத்தைத் துய்த்தல், எச்சில் கள்ளைக் குடித்தல், பெரியோர் சொல்லும் அறிவுரையை இகந்து சூதாடுதல் ஆகிய இம்மூன்றும் நன்மை தருபவற்றை நாடுகின்ற உணர்வு இல்லாதவர்கள் தொழில் என்கின்றது "திரிகடுகம்" என்னும் நூல்.


"புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து
பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்".    --- திரிகடுகம்.

     கலமயக்கம் என்றது, கள் உண்போர், எச்சில் என்று கருதாது, பிறர் உண்ட கலத்திலேயே தானும் உண்பதைக் குறிக்கும்.

     காம மயக்கம் கொண்டு, விலைமாதரைக் கூடுபவர் செல்வமானது வற்றிப் போகத்தான் செய்யும். அது அவருடைய தீவினைப் பயன் ஆகும். செல்வம் சுருங்க வரும் காலத்து, மாதர் மேல் மனம் வைக்கத் தோன்றும்.

     மாதர்மேல் மனம் வைத்தார்க்கு ஞானம் கல்வி ஒழுக்கம் ஆகிய அனைத்தும் அழியும் என்பதை ஔவைப் பிராட்டியார் அருளிய பாடலால் தெளியலாம்.


நண்டு ,சிப்பி, வேய் ,கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண் தொடீ
போதம், தனம், கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

     பொதுமாதரைப் பற்றி, காஞ்சிப் புராணம் கூறுவதைப் பார்ப்போம்....

     இருவகை வியாபாரத்தில் கூர்த்த அறிவினை உடையவரும், வியப்பு அடையுமாறு கண்ணிற்குப் புலனாகாத இன்பத்தைப் பொருளின் அளவுக்குச் சிறிதே தந்து விலைப்படுத்தி நடத்துவதில் வல்ல இருமனப் பெண்டிர் தமக்குத் தாமை செருக்குக் கொண்டு வாழும் இடம் இது என்று கணிகையர் வாழும் இடத்தைக் குறித்து வரும் பாடலைப் பார்ப்போம்....

இருமைவா ணிபத்தில் கூர்த்த
     மதியரும் இறும்பூது எய்த
அருவமாம் இன்பந் தன்னை
     இம்மியின் அளவும் ஏறா
துருவமாம் பொருளுக் கேற்ப
     நிறுத்துவிற் றொழுக வல்ல
இருமனப் பெண்டீர் தம்முள்
     தருக்கிவாழ் இருக்கை ஈதால்.


2.    கள்ளை அருந்துவதால் உண்டாகும் தீமை குறித்து, கம்பநாட்டாழ்வார் கூறுவதைக் காண்போம்...


'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும்,
      மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும்
      தன்மையும், களிப்பும், தாக்கும்:
கஞ்ச மெல் அணங்கும்
     தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்,
      நரகினை நல்காது அன்றே?
                 

இதன் பொருள் ---

     கள்ளைக் குடிப்பதால், வஞ்சனையும், திருட்டும், பொய் பேசுதலும், அறியாமையும், தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான கொள்கையும், அடைக்கலமாக அடைந்தவரைப் பாதுக்காகாமல் நீக்கும் தீய பண்பும், செருக்கும் ஆகிய யாவும் சேர்ந்து வந்துவருத்தும். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும் நீங்குவாள்.  நஞ்சு கூட உண்பவரைக் கொல்லுமே அல்லாமல், நரகத்தைக் கொடுக்காது.

     இந்தக் கள் குடியானது, எல்லாத் தீய பண்புகளையும் விளைப்பதோடு, திருமகள் அருளையும் நீக்கும். நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.


3.   சூதாட்டத்தினால் விளைந்த தீமையை மகாபாரதம் காட்டும். சூதினால் உண்டாகும் தீமைகள் குறித்து வில்லிபாரதம் என்னும் நூலில் ஒரும் ஒரு பாடலைக் காண்போம்....

அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,
     அழகும், வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,
     குலமும், இன்பமும், தேசும்,
படியும், மாமறை ஒழுக்கமும், புகழும், முன்
     பயின்ற கல்வியும் சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின் மேல்
     வைப்பரோ? மனம் வையார். 

இதன் பொருள் ---

     தலைமையும், பராக்கிரமமும், பலமும், சேனையும்-, அழகும் வெற்றியும், ஜயமும்,  அவரவரது  குடிப்பிறப்பின் மேன்மையும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும் இன்பமும், புகழும், ஒளியும், நற்குணமும், சிறந்த வேதங்களில் கூறிய விதிமுறைப்படி ஒழுகும் நல்லொழுக்கமும், முன்பு பயின்ற கல்வியும் ஆகிய இவையெல்லாம் சூதாடுவார்க்கு ஒரு சேர அழியும். ஆதலால், அறிவினால் அறிய வேண்டுபவற்றை அறிந்தவர்கள், சூதின் மேல் மனத்தைச் செலுத்தமாட்டார்கள்.

     வரைவில் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, என்பது குறித்து, திருவள்ளுவ நாயனார் தனித்தனி அதிகாரங்களில் வைத்து அருளினார்.

   

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...