திருமகள் வாழிடம், சிறப்பு.





திருமகள் எங்கே இருப்பாள்?
திருமகள் யாரைச் சேர்ந்து இருப்பாள்?

---------------

     பூமியில் மனிதராகப் பிறந்துவிட்டால், அறவழியில் வாழவேண்டும், அதற்குப் பொருள் ஈட்டவேடண்டும். காதல் மனையாளுடன் கருத்து ஒருமித்து வாழவேண்டும். அறவழியில் பொருளைத் துய்த்து, பிறர்க்கும் துய்க்கத் தந்து இன்பம் காணவேண்டும். இறுதியில் எல்லாப் பற்றையும் விட்டொழித்து பரகதியைக் சேரவேண்டும்.

"ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு".

என்றார் ஔவைப் பிராட்டியார்.

     பரனை நினைத்து ஈதல் --- அறம் ஆகும்.

     அந்த அறத்தைச் செலுத்த, பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது --- பொருள்

     அறவழியில் சேர்த்த பொருகளைக் கொண்டு, அறச் செயல்களைப் புரிந்து, தாமும் துய்த்து, பிறர்க்கும் உதவி வாழ், பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே --- இன்பம்

     பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் --- வீடுபேறு.

     பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். விருப்போடும் கொடுக்கலாம். வெறுப்போடும் கொடுக்கலாம். அப்படித் தருவது அறம் ஆகாது. ஏன் பரனை நினைந்து செல்வத்தைச் செய்தல்வேண்டும்? பிறருக்குக் கொடுத்தல் வேண்டும்? என்னும் வினா எழலாம். நாமாகச் செல்வத்தைச் செய்தோம், நாம் கொடுக்கின்றோம் என்னும் எண்ணத்தோடு கொடுத்தால், "நான்" கொடுக்கின்றேன், "எனது" பொருளைக் கொடுக்கின்றேன் என்னும் முனைப்பு எழும். நான் எனது என்னும் பற்று இல்லாமல் செய்வதே அறம் ஆகும்.

     செல்வம் நம்மால் மட்டுமே வந்து சேருவதில்லை. இறைவன் திருவருளால் வந்தது என்று கொண்டால் நல்லது. காரணம், முயன்றவர் அனைவருக்குமே செல்வம் வந்து சேர்வது இல்லை.

"பிறக்கும்போது கொடு வந்தது இல்லை, பிறந்து மண்மேல் 
இறக்கும்போது கொடுபோவது இல்லை, இடைநடுவில்
குறிக்கும் இச் செல்வம் சிவம் தந்தது என்று கொடுக்க அறியாது,
இறக்கும் குலாமருக்கு என்ப சொல்வேன் கச்சிஏகம்பனே!"

என்றார் பட்டினத்தடிகள்.

     சரி, எப்படி வாழவேண்டும் என்பது குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் காட்டுவதைக் காண்போம்....

புண்ணிய வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
     பொருளை ரட்சிக்க வேண்டும்
  புத்தியுடன் அது ஒன்று நூறாக வேசெய்து
     போதவும் வளர்க்க வேண்டும்;

உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ர ஆபரணம்
     உடலில் தரிக்க வேண்டும்;
  உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
     ஓங்கு புகழ் தேட வேண்டும்;

மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர் மோட்ச
     வழிதேட வேண்டும்; அன்றி,
  வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
     மார்க்கம் அறியாக் குருடராம்

அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
     அழகன்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அண்ணலே --- தலைவனே!,

     கங்காகுலத் தலைவன் மோழைதரும் அழகன் எமது அருமை மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- கங்கை மரபில் முதல்வனான மோழை ஈன்றெடுத்த அழகு மிக்கவனான, எமது அரிய மதவேள் என்பான்,  நாள்தோறும் உள்ளத்தில் கொண்டு வழிபடுகின்ற, சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     செல்வமது புண்ணிய வசத்தினால் வரவேண்டும் --- செல்வமானது ஒருவனுக்கு அவன் நன்னெறியில் ஒழுகியதன் பயனா வந்து சேர வேண்டும்.

     பொருளை ரட்சிக்க வேண்டும் --- நன்னெறியில் சிறுச் சிறிதாக வந்த செல்வத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டும்.

     புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து போதவும் வளர்க்க வேண்டும் --- அறிவோடு சிந்தித்து, அந்தப் பொருளை ஒன்று நூறாகுமாறு நன்றாகப் பெருக்கும் உபாயத்தைத் தேட வேண்டும்.

     உண்ண வேண்டும் --- உலோப குணம் இல்லாமல் வயிறு ஆர உண்ண வேண்டும்.

     பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில் தரிக்வேண்டும் --- பிறகு அழகிய ஆடைகளையும், அணிகலன்களையும் உடலிலே தரித்து மகிழ வேண்டும்.

     உற்ற பெரியோர், கவிஞர், தமர், ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் --- தம்மை அடைந்த பெரியோர்க்கும், கவிஞருக்கும், உறவினர்க்கும், வறியவர்க்கும் கொடுத்து மிக்க புகழைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும் --- உலகில் பல வகையான அறச் செயல்களையும் செய்தல் வேண்டும்.

     உயர் மோட்ச வழி தேட வேண்டும் --- மேலான வீடு பேற்றினை அடையும் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     அன்றி --- இவ்வாறு அல்லாமல்,

     வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் --- தேடிய செல்வத்தை வீணிலே மண்ணில் புதைத்து வைத்துவிட்டு தானும் துய்க்க அறியாமல், பிறர்க்கும் கொடுக்காதவர்களே நல்ல நெறியினை அறியாத அறிவுக் குருடர்கள் ஆவர்.

     அவ்வாறு நன்னெறியில் வாழப் பொருளை ஈட்டவேண்டுமானால், நன்னெறியில் வாழத் திருவருள் வேண்டும். திருவருள் இருக்குமானால், திருமகள் அருளும் இருக்கும். திருமகள் இருப்பது எங்கு? அவளது இருப்பால் என்ன விளையும்? என்பது குறித்து, "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...

சத்தியம் அது இருப்பவர் இடத்தினில்
     சார்ந்து திருமாது இருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
     தனது பாக்கியம் இருக்கும்;

மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களைஇருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்
     மிக்கான தயைஇருக்கும்;

பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;

வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்னுயிர் சிறக்கும் அன்றோ?
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

          இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது
சார்ந்து இருக்கும் --- உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில் திருமகள் சேர்ந்து இருப்பாள்,

     திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் --- திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம் இருக்கும்,

     மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடந்தனில் விண்டுவின் களையிருக்கும் --- உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம் இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்,

     விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் --- திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும்,

     பத்தியுடன் இனிய தயை உள்ளவரிடந்தனில்
பகர் தருமம் மிக இருக்கும் --- திருமாலிடத்து வைத்துள்ள அன்பும், இனிய இரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்,

     பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் --- புகழ்ந்து கூறப்படும் அற உணர்வு உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும்,

     இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ --- புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?

     கருத்து --- சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும், இறைவன் அருளும், தானமும், தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பு இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.

     திருமகளின் கடைக்கண் பார்வை உண்டானால் வருகின்ற சிறப்புக்கள் குறித்து, "குமரேச சதகம்" கூறுவது...


திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
     சிறப்புண்டு, கனதை உண்டு,
சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்,
     செல்லாத வார்த்தைசெல்லும்

பொருளொடு துரும்பு மரியாதைஆம், செல்வமோ
     புகல் பெருக்காறு போல் ஆம்,
புவியின் முன் கண்டு மதியாதபேர் பழகினவர்
     போலவே நேசம் ஆவார்,

பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும், அனுதினம்
     பேரும் ப்ரதிட்டை உண்டாம்,
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான்,
     பேச்சினில் பிழை வராது,

வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும், அதிக
     வல்லமைகள் மிகவும் உண்டாம்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு --- யாவருக்கும் திருமகளின் கிடைக்கண் நோக்கம் உண்டானால் கீர்த்தி உண்டு;

     கனதை உண்டு --- பெருமை உண்டு;

     சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும் ---வாழ்ந்து காட்டும் வழி எல்லாம் எல்லோரும் பின்பற்றும் பெரிய ஒழுக்கநெறி ஆகிவிடும்;

      செல்லாத வார்த்தை செல்லும் --- ஏற்றுக் கொள்ளத்தகாத சொற்களும் பிறரால ஏற்றுக் கொள்ளப்படும்;

     பொருள் ஒரு துரும்பு --- எல்லாப் பொருளும் அவருக்கு எளிதில் கிடைக்கும்;

     மரியாதை ஆம் --- பிறர் போற்றும் சிறப்பு உண்டாகும்;

     செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் --- அவரிடத்தில் செல்வமானது வற்றாத ஆற்று வெள்ளம் போல் வந்து சேரும்,

     புவியில் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் --- இந்த உலகில் வறுமை உடையவனாய் இருந்தபோது, கண்டும் காணாதது போல், மதியாமல் சென்றவர் எல்லாம், முன்பே நெடுநாள் பழகினவர் போல் வந்து நட்புக் கொண்டாடுவர்.

     சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் --- பிறந்த குலத்தில் பெருமையும், உயர்வும் உண்டாகும்,

      அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் --- எந்நாளும் பேரும் புகழும் உண்டாகும்,

     பகையாளி கூட பிரியமொடு உறவாகுவான் ---
பகைவனும் கூட அன்போடு உறவு கொண்டாடுவான்;

     பேச்சினில் பிழை வராது --- பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்;  (வந்தாலும் பிழையாக யாரும் கொள்ளமாட்டார்)

     வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் --- வரவேண்டும் என்று எண்ணிய பொருள் யாவும் தவறாமல் கிட்டும்,

     அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் --- எடுத்த செயலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.


     இவ்வளவு சிறப்புக்களையும் அருளுகின்ற திருமகள் எங்கு வீற்றிருக்கின்றாள் என்பதை, பின்வரும் பாடல்கள் காட்டும்...

கடவா ரணத்திலும், கங்கா சலத்திலும்,
     கமலா சனந்தன்னிலும்,
காகுத்தன் மார்பிலும், கொற்றவ ரிடத்திலும்,
     காலியின் கூட்டத்திலும்,

நடமாடு பரியிலும், பொய்வார்த்தை சொல்லாத
     நல்லோ ரிடந்தன்னிலும்,
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்,
     ரணசுத்த வீரர்பாலும்,

அடர்கே தனத்திலும், சுயம்வரந் தன்னிலும்,
     அருந்துளசி வில்வத்திலும்,
அலர்தரு கடப்பமலர் தனிலும்,இர தத்திலும்,
     அதிககுண மானரூப

மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது
     மாறாது இருப்பள் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கட வாரணத்திலும் ---  மதயானையின் இடத்திலும்,

     கங்கா சலத்திலும் --- கங்கையின் தூய நீரிலும்,

     கமல ஆசனம் தன்னிலும் --- தாமரை மலராகிய ஆசனத்திலும்,

     காகுத்தன் மார்பிலும் --- திருமாலின் மார்பிலும்,

     கொற்றவர் இடத்திலும் --- அரசர் இடத்திலும்,

     காலியின் கூட்டத்திலும் --- பசுக்களின் கூட்டத்திலும்,

     நடம் ஆடு பரியிலும் --- நடையில் சிறந்த
குதிரையின் இடத்திலும்,

     பொய் வார்த்தை சொல்லாத நல்லோர் இடம் தன்னிலும் --- பொய் கூறாத நல்லவர்கள் இடத்திலும்,

     நல்ல சுப லக்கணம் மிகுந்த மனை தன்னிலும் --- சிறந்த சுப இலக்கணங்கள் பொருந்தி உள்ள வீட்டிலும்,

     இரண சுத்த வீரர் பாலும் --- போருக்கு உரிய உயர்ந்த வீரர் இடத்திலும்,

     அடர் கேதனத்திலும் --- மிகுந்த வெற்றிக் கொடியின் இடத்திலும்,

     சுயம்வரம் தன்னிலும் --- சுயம் வர திருமணத்திலும்,

     அருந் துளசி வில்வத்திலும் --- அரிய துளசி மற்றும் வில்வ பத்திரத்திலும்,

     அலர் தரு கடப்ப மலர் தனிலும் --- மலர்ந்த கடப்ப மலரிலும்,

     இரதத்திலும் --- தேரிலும்,

     அதிக குணமான ரூப மடவாரிடத்திலும் --- நற்குணம் வாய்ந்த அழகிய பெண்கள் இடத்திலும்,

     திருமாது குடிகொண்டு மாறாது இருப்பள் அன்றோ --- திருமகள் குடிகொண்டு எப்போதும் நீங்காமல் இருப்பாள் அல்லவா?


நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
     நாகரிகர் மாமனை யிலே,
  நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
     நறைகொண்ட பைந்துள விலே,

கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
     கல்யாண வாயில் தனிலே,
  கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
     கதிபெறு விளக்க தனிலே,

பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
     பொய்யாத பேர்பா லிலே,
  பூந்தடம் தன்னிலே, பாற்குடத்து இடையிலே
     போதகத் தின்சிர சிலே

அற்பெரும் கோதைமலர் மங்கைவாழ் இடம் என்பர்
     அண்ணல்எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!      --- அறப்பளீசுர சதகம்.

  இதன் பொருள் ---

     அண்ணல் --- தலைவனே!

     எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- எமது அரிய மதவேள் என்பான், க்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     நல் பரி முகத்தில் --- அழகிய குதிரையின் முகத்திலும்,

     மன்னவர் இடத்தில் --- அரசரின் இடத்திலும்,

     நாகரிகர் மாமனையில் --- நயத்தகு நாகரிகம் அறிந்தவர்கள் வாழும் வீட்டிலும்,

     நளின மலர் தன்னில் --- தாமரை மலரிலும்,

     கூவிளந் தருவில் ---- வில்வ மரத்திலும்,

     நறை கொண்ட பைந் துளவில் --- மணமுடைய பசிய திருத் துழாயிலும்,

     கற்புடையர் வடிவில் --- கற்புடைய பெண்களின் வடிவத்திலும்,

     கடலில் --- கடலிலும்,

     கொடியில் ---- துகில் கொடியிலும்,

     கல்யாண வாயில் தனில் --- திருமண வீட்டின் வாயிலிலும்,

     கடி நகர் இடத்தில் --- காவலுடைய நகரத்திலும்,

     நல் செந்நெல் விளைவில் --- நல்ல செந்நெல் விளைவிலும்,

     கதிபெறு விளக்கு அதனில் --- ஒளிவீசுகின்ற விளக்கிலும்,

     பொற்பு உடைய சங்கில் --- அழகுள்ள சங்கிலும்,

     மிக்கோர்கள் வாக்கில் --- பெரியோர் வாயிலிருந்து பிறக்கும் சொல்லில்,

     பொய்யாத பேர் பாலில் --- பொய் சொல்லாதவர் இடத்திலும்,

     பூந் தடம் தன்னில் --- மலர்கள் நிறைந்துள்ள குளத்திலும்,

     பாற்குடத்திடையில் --- பால் குடத்திலும்,

     போதகத்தின் சிரசில் --- யானையின் மத்தகத்திலும்,

     அல்பெரும் கோதை மலர்மங்கை வாழ் இடம் என்பர் --- இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமகளானவள் வாழுகின்ற இடம் என்பர் பெரியோர்.


     ஆனால், திருமகள் வாழும் இடம் எது என்று திருவள்ளுவ நாயனார் கூறுவது,

"மடி உளாள் மாமுகடி என்ப, மடி இலான்
தாள் உளாள் தாமரையினாள்"

     சோம்பல் இருக்கும் இடத்திலே மூதேவி இருப்பாள். சோம்பல் இல்லாதவன் இடத்திலே திருமகள் இருப்பாள்.

     "தாள்" என்னும் சொல்லுக்கு முயற்சி அல்லது சோம்பல் இல்லாமை என்பதைப் பொருளாக் கொண்டால், மேற்படி பொருள் வரும்.

     முயற்சி என்பது, நன்னெறியில் முயலுவதையே குறிக்கும்.

     "தாள்" என்னும் சொல்லுக்கு, காலடி, பாதம் என்றும் பொருள் உண்டு. அவ்வாறு கொண்டால், நன்னெறியில் முயலுபவனது காலடியில் திருமகள் தவழ்ந்து கொண்டு இருப்பாள் என்பது பொருளாய் வரும்.

     இரண்டாவதாகச் சொன்னதே பொருந்தும் என்பது, பின்வரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலால் அறியலாம்....

"கொய்த அம் மலரடி கூடுவார், தம்

மை திகழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை, உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே"


இதன் பொழிப்புரை ---

     அன்பர்களால் கொய்து அணியப் பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களை, பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

பின்வரும் அப்பர் தேவாரப் பாடலையும் காண்போம்...

"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்
வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்
கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே".

இதன் பொழிப்புரை ---

     சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.

     ஆக, திருமகள் எங்கு இருப்பதாகக் கொண்டாலும் சரி. நினைக்கும் இடத்தில் அவள் இருப்பாள். அறவழியில் முயலும் இடத்தில் அவள் இருப்பாள். சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்தில் அவள் இருப்பாள். இறை அடியாருடைய காலடியில் நீங்காமல் இருப்பாள்.







No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...