திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக
விளங்கியவர் சீர்வளர்சீர் சுப்பிரமணிய தேசிகப் பரமாசாரிய சுவாமிகள். மாயூரம் முன்சீப்பாக
இருந்தவர் வேதநாயகம் பிள்ளை அவர்கள். முன்னவர் சைவர். பின்னவர் கிறித்தவர். சமயத்தால்
வேறுபட்டவர்களாக இருந்தாலும், தமிழ் மீது கொண்டு பற்றுக் காரணமாக உள்ளத்தால் கலந்து இருந்தவர்கள்
இவ்விரு பெருமக்களும். இருவரும் அவ்வப்போது கூடி, கலந்து உரையாடி
மகிழ்வது வழக்கம்.
ஒரு நாள், பிள்ளை அவர்கள்
திருவாவடுதுறைக்குச் சென்று, தேசிகரைச் சந்தித்து, அளவளாவி இன்புற்று, மாயூரம் திரும்பினார்.
வீட்டுக்கு வந்த்தும், தேசிகருக்கு ஒரு கடிதத்தை வரைந்தார்.
கடிதம் பாடல் வடிவில் அமைந்தது.
"சூர் வந்து வணங்கும்
மேன்மைச்
சுப்பிர மணியத் தேவே!
நேர்வந்து நின்னைக் கண்டு
நேற்று ராத்திரியே
மீண்டு,
ஊர் வந்து சேர்ந்தேன், என்தன்
உளம் வந்து சேரக்
காணேன்,
ஆர் வந்து சொலினும் கேளேன்,
அதனை ஈங்கு அனுப்புவீரே"
என்பதுதான் அந்தப் பாடல்.
சூரபதுமன் வணங்குகின்ற
சுப்பிரமணியக் கடவுளே! தங்களை நேரில் கண்டு அளவளாவி மகிழ்ந்தபின், நேற்று இரவு
நான் எனது ஊருக்கு வந்து சேர்ந்தேன். எனது உடல் மட்டும் தான் வந்ததே வழிய, என் உள்ளம் இன்னமும்
திருவாவடுதுறையில் தங்களிடம் தான் உள்ளது. யார் வந்து சமாதானம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.
தங்களிடமே உள்ள எனது உள்ளத்தைத் தாங்கள் இங்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அப்பரும் அப்பூதி
அடிகளும் வெவ்வேறு குலத்தவர். ஆனாலும் இருவரும் உள்ளத்தால் ஒன்றானவர்கள். கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
நிலையில் வேறுபட்டவர்கள். ஆனாலும், உள்ளத்தால் ஒன்றானவர்கள்.
மேற்குறித்த இரு பெரியவர்களும் சமயத்தால் வேறுபட்டு நின்றாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டு
நின்றவர்கள்.
உண்மை அன்புக்கு
எதுவும் தடையாக மாட்டாது.
No comments:
Post a Comment