அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எகின் இனம்பழி
(திருப்பந்தணை நல்லூர்)
முருகா!
திருவடியில் அன்புவைத்து
உய்ய அருள்வாய்.
தனன
தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி
னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
இசையி டுங்குர லார்கட னாளிகள் ......
வெகுமோகம்
எனவி
ழுந்திடு வார்முலை மேல்துகில்
அலைய வுந்திரி வாரெவ ராயினும்
இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ......
வலைவீசும்
அகித
வஞ்சக பாவனை யால்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
யதிக முங்கொடு நாயடி யேனினி ......
யுழலாமல்
அமுத
மந்திர ஞானொப தேசமும்
அருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழல் ......
அருள்வாயே
ககன
விஞ்சையர் கோவென வேகுவ
டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
கமற வெந்தழல் வேல்விடு சேவக ......
முருகோனே
கரிநெ
டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமிச தாசிவ
கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ......
யருள்பாலா
செகமு
மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி
திருவு றைந்துள மார்பக னார்திரு ......
மருகோனே
தினைவ
னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக
பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எகின்
இனம் பழி நாடகம் ஆடிகள்,
மயில் எனும் செயலார், அகி நேர் அல்குல்,
இசை இடும் குரலார், கடனாளிகள், ...... வெகுமோகம்
என
விழுந்திடு வார் முலை மேல்துகில்
அலையவும் திரிவார் எவர் ஆயினும்
இளகு கண்சுழல் வார், விலை வேசியர், ......வலைவீசும்
அகித
வஞ்சக பாவனையால், மயல்
கொடு விழுந்திட ராகமும் நோய்பிணி
அதிகமும் கொடு, நாய்அடியேன் இனி ......உழலாமல்,
அமுத
மந்திர ஞான உபதேசமும்
அருளி, அன்பு உறவே முருகா என,
அருள் புகுந்திடவே, கழல் ஆர் கழல் ......அருள்வாயே.
ககன
விஞ்சையர் கோ எனவே, குவடு
அவுணர் சிந்திடவே, கடல் தீவுகள்
கமற, வெந்தழல் வேல் விடு சேவக! ......
முருகோனே!
கரி
நெடும் புலி தோல் உடையார், எனை
அடிமை கொண்ட சுவாமி, சதாசிவ
கடவுள், எந்தையர் பாகம் விடா உமை ......அருள்பாலா!
செகமும்
அண்டமும் ஓர் உருவாய் நிறை
நெடிய அம்புயல் மேனியன் ஆர் அரி
திரு உறைந்து உள மார்பகனார் திரு ......
மருகோனே!
தினை
வனந்தனில் வாழ் வளி நாயகி,
வளர் தனம் புதை மார்பு அழகா! மிகு
திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
பதவுரை
ககன விஞ்சையர் கோ
எனவே
--- வானுலகில் உள்ள மந்திர வித்தையில் வல்லவர் "ஓ" என்று பதறவும்,
குவடு --- கிரவுஞ்ச மலையும்,
அவுணர் சிந்திடவே --- அவுணர்களும்
அழிவுபட,
கடல் தீவுகள் கமற --- கடலும், அதன்
நடுவில் உள்ள தீவுகளும் வெந்து ஒழிய,
வெம் தழல் வேல் விடு சேவக ---
கொடுமையான நெருப்பினை வீசுகின்ற வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரத்தில் மிக்கவரே!
முருகோனே --- முருகப் பெருமனே!
கரி நெடும் புலி
தோல் உடையார்
--- யானையின் தோலைப் போர்வையாகவும்,
புலியின்
தோலை ஆடையாகவும் கொண்டவரும்,
எனை அடிமை கொண்ட சுவாமி --- என்னை
அடிமையாக உடைய சுவாமியும்,
சதாசிவ கடவுள் --- சதாசிவம் ஆன
கடவுளும்,
எந்தையர் பாகம் விடா உமை பாலா --- எனது
தந்தையுமான சிவபரம்பொருளின் திருமேனியை விட்டு அகலாத உமாதேவியார் அருளிய பாலரே!
செகமும் அண்டமும் ஓர்
உருவாய் நிறை நெடிய அம்புயல் மேனியனார் --- இந்த நிலவுலகமும், அண்டங்களும் ஓர் உருவாய் நிறைந்து
விளங்கியவரும்,
நெடிய
கருமேகம் போன்ற திருமேனியை உடையவரும்,
அரி --- ஆன்மாக்களின் பாவங்களைப்
போக்குபவரும்,
திரு உறைந்துள மார்பகனார் திரு மருகோனே
--- திருமகள் உறையும் திருமார்பினரான திருமாலின் திருமருகரே!
தினை வனம் தனில் வாழ் --- தினைப்புனத்தினில்
வாழ்ந்திருந்த
வ(ள்)ளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா
--- வள்ளிநாயகியாரின் பெருத்த மார்பகங்கள் பொருந்திய திருமார்பினை உடைய அழகரே!
மிகு திலக பந்தணை மாநகர் மேவிய பெருமாளே
--- சிறப்பு மிகுந்து விளங்கும் திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
பெருமையில் மிக்கவரே!
எகின் இனம் பழி
நாடகம் ஆடிகள்
--- அன்னப் பறவை இனத்தைப் பழிக்கும்படி, நடையினை
உடையவர்கள்,
மயில் எனும் செயலார் --- மயில்
என்னும்படியான செயல்களை உடையவர்கள்,
அகி நேர் அல்குல் --- பாம்புப்
படத்தினை ஒத்த அல்குலை உடையவர்கள்,
இசை இடும் குரலார் --- இசை பொருந்திய
குரலை உடையவர்கள்,
கடனாளிகள் --- கடனைக் கொள்ளுபவர்கள்,
வெகுமோகம் என விழுந்திடும் --- மிக்க
மோகம் கொண்டுள்ளவர்போல் மேல் விழுபவர்கள்,
வார் முலை மேல்
துகில் அலையவும் திரிவார் --- கச்சணிந்த முலைகளின் மேல்
மூடியுள்ள ஆடை அலையும்படி திரிபவர்கள்,
எவராயினும் இளகு கண் சுழல்வார் ---
யாராக இருந்தாலும், கண்பார்வையால்
உள்ளத்தில் நெகிழ்ச்சி உள்ளது போல் காட்டுபவர்கள்,
விலை வேசியர் --- தமது உடல் சுகத்தை
விலை பேசும் விலைமாதர்கள்,
வலைவீசும் அகித வஞ்சக
பாவனையால்
--- இதம் அற்ற, வஞ்சனை நிறைந்த
பாவனையால்,
தமது
காம வலையை வீசுகின்ற அவர்களிடத்து,
மயல்
கொடு விழுந்திட --- நான் மோகம் கொண்டு விழுந்திட,
ராகமு(ம்) --- ஆசை அதிகமாவது போல்,
நோய் பிணி அதிகமும் கொடு --- நோயும்
பிணிகளும் அதிகமாகி,
நாய் அடியேன் இனி உழலாமல் --- நாய்
அடியேன் இனிமேல் அலைந்து உழலாமல்,,
அமுத மந்திர ஞான
உபதேசமும் அருளி --- அமுதம் போன்ற மந்திரத்தை அடியேனுக்கு ஞானோபதேசம் புரிந்து
அருள்செய்து,
அன்புறவே
--- உள்ளத்தில் அன்பு மிக,
முருகா என --- முருகா என்று நான்
வழிபடவும்,
அருள் புகுந்திடவே --- உமது
திருவருளைப் பெற்றிடவும்,
கழல் ஆர் கழல் அருள்வாயே --- கழல்
அணிந்த திருவடிகளைத் தந்து அருள்வாயாக.
பதவுரை
வானுலகில் உள்ள விஞ்சையர்கள் "ஓ"
என்று பதற, கிரவுஞ்ச மலையும், அவுணர்களும் அழிவுபட, கடலும், அதன் நடுவில் உள்ள தீவுகளும் வெந்து ஒழிய, கொடுமையான நெருப்பினை வீசுகின்ற
வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரத்தில் மிக்கவரே!
முருகப் பெருமனே!
யானையின் தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை ஆடையாகவும் கொண்டவரும், என்னை அடிமையாக உடைய சுவாமியும், சதாசிவம் ஆன கடவுளும், எனது தந்தையுமான சிவபரம்பொருளின்
திருமேனியை விட்டு அகலாத உமாதேவியார் அருளிய பாலரே!
இந்த நிலவுலகமும், அண்டங்களும் ஓர் உருவாய் நிறைந்து
விளங்கியவரும்,
நெடிய
கருமேகம் போன்ற திருமேனியை உடையவரும், ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குபவரும், திருமகள்
உறையும் திருமார்பினரான திருமாலின் திருமருகரே!
தினைப்புனத்தினில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியாரின் பெருத்த மார்பகங்கள்
பொருந்திய திருமார்பினை உடைய அழகரே!
சிறப்பு மிகுந்து விளங்கும்
திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
அன்னப் பறவை இனத்தைப் பழிக்கும்படி, நடையினை உடையவர்கள், மயில் என்னும்படியான செயல்களை
உடையவர்கள், பாம்புப் படத்தினை
ஒத்த அல்குலை உடையவர்கள், இசை பொருந்திய குரலை உடையவர்கள், கடனைக்
கொள்ளுபவர்கள், மிக்க மோகம்
கொண்டுள்ளவர்போல் மேல் விழுபவர்கள்,
கச்சணிந்த
முலைகளின் மேல் மூடியுள்ள ஆடை அலையும்படி திரிபவர்கள், யாராக இருந்தாலும், கண்பார்வையால் உள்ளத்தில் நெகிழ்ச்சி
உள்ளது போல் காட்டுபவர்கள்,
தமது
உடல் சுகத்தை விலை பேசும் விலைமாதர்கள், இதம்
அற்ற, வஞ்சனை நிறைந்த
பாவனையால்,
தமது
காம வலையை வீசுகின்ற அவர்களிடத்து,
நான்
மோகம் கொண்டு விழுந்திட, ஆசை அதிகமாவது போல், நோயும் பிணிகளும் அதிகமாகி, நாய் அடியேன் இனிமேல் அலைந்து உழலாமல், அமுதம் போன்ற மந்திரத்தை அடியேனுக்கு
ஞானோபதேசம் புரிந்து அருள்செய்து,
உள்ளத்தில்
அன்பு மிக, முருகா
என்று நான் வழிபடவும், உமது திருவருளைப்
பெற்றிடவும், கழல் அணிந்த
திருவடிகளைத் தந்து அருள்வாயாக.
விரிவுரை
எகின்
இனம் பழி நாடகம் ஆடிகள் ---
எகின்
இனம் --- அன்னப் பறவைகளின் கூட்டம்.
இயல்பாக
அல்லாமல் பிறரை மயக்குவதற்காக அன்னம் போன்று நடை நடப்பதால் நாடகம் ஆடிகள் என்றார்.
அகி
நேர் அல்குல்
---
அகி
--- பாம்பு.
கடனாளிகள்....
விலை வேசியர் ---
கடனாக
மிகு பொருளைப் பெற்றுக் கொண்டு,
தமது
உடல் சுகத்தால் அதைத் திருப்பித் தருகின்றவர்கள்.
வலைவீசும்
அகித வஞ்சக பாவனையால் ---
அகிதம்
- துன்பம். இதம் - இன்பம்.
ராகமு(ம்) ---
ராகம்
--- விருப்பம், ஆசை.
நோய்
பிணி அதிகமும் கொடு ---
அதிகமாகப்
பொருளைக் கொடுத்து, அதிகமாக நோயை வாங்குவது
விலைமாதரிடத்தில்.
பிரமாணத்தைப்
பின்வரும் பாடல்களால் அறிக.
வாதமொடு,
சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு
உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
மாதர்தரு பூஷணங்கள்...... என ஆகும்
பாதக
வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர்
ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,
ஏதம்
உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு
அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும்
முன்பு, உன்
ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய். --- திருப்புகழ்.
அரிய
பெண்கள் நட்பைப் புணர்ந்து,
பிணி உழன்று, சுற்றித் திரிந்தது,
அமையும்,
உன் க்ருபைச் சித்தம் என்று ....பெறுவேனோ?
--- (கருவடைந்து)
திருப்புகழ்.
அமுத
மந்திர ஞான உபதேசமும் அருளி ---
குருநாதனாகத்
திருமேனி தாங்கி வந்து,அமுதம் போன்ற மந்திரத்தை ஞானோபதேசம்
புரிந்து அருள்செய்து அருளவேண்டும் என்று
அடிகளார் வேண்டுகின்றார்.
ககன
விஞ்சையர் கோ எனவே ---
ககனம்
- வான், வானுலகைக் குறித்தது.
விஞ்சையர், விச்சை - அறிவு. மந்திர வித்தையில் வல்லவர்கள்.
வித்தியாதரர்கள். சூரபதுமனைடைய கொடுமைக்கு அஞ்சிப் பதறியவர்கள்.
குவடு ---
குவடு
--- மலை, கிரவுஞ்ச மலையைக் குறித்தது.
பொன் மயமாக இருந்து அனைவரையும் மயக்கியது கிரவுஞ்ச மலை.
இலட்சத்து ஒன்பது
வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில்
இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"வருசுரர் மதிக்க
ஒரு குருகுபெயர் பெற்ற கன
வடசிகரி பட்டு உருவ
வேல்தொட்ட சேவகனும்"
என்றார் வேடிச்சி காவலன்
வகுப்பில் அடிகளார்.
"மலை பிளவு பட மகர
சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத
வகுப்பில்.
"மலை ஆறு கூறு எழ
வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில்
சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம்
செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ......
விடுவோனே!"
என்றார்
திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு
இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக்
குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத்
தொகுதியை அழித்து, அவைகளைக்
காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால்
எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர்
தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங்
குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத்
தகும்."
என்னும்
திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு
எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில்
அடிகளார் காட்டியபடி, நமது
வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு
என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு.
"வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
பின்வரும் பிரமாணங்களால்
கிரவுஞ்ச மலையானது பொன்மயமானது என்பதை அறியலாம்.
"சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின்
மலர்மாலை மார்ப! மௌனத்தை
உற்று,
நின்னை உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்
பூண்டு
என்னை மறந்து இருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே".
--- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
பொன்னிறமான கிரவுஞ்ச மலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத்
தாங்கிய மன்னரே! நறுமணம்
மிக்க கடப்பமலர் மாலையைச் சூடிக்கொண்டு உள்ள திருமார்பினை உடையவரே! ஞானத்திற்கெல்லாம் வரம்பாக விளங்கும் மௌன
நிலையை அடைந்து,
தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து
ஜீவனாகிய அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன். இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.
"பங்கேருகன் எனைப் பட்டுஓலையில் இட, பண்டு தளை
தம் காலில் இட்டது அறிந்திலனோ? தனிவேல் எடுத்துப்
பொங்குஓதம் வாய்விட, பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எம்கோன் அறியின், இனி
நான்முகனுக்கு இருவிலங்கே". ---
கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
தாமரை மலரில் வாழும் பிரமதேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத
முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும்
பொன் உருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான்
அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு விலங்குகள்
பூட்டப்படும்!
பொன் அம் சிலம்பு --- பொன்மயமான அழகிய மலை. கிரவுஞ்ச மலை.
கடல் தீவுகள் கமற வெம்
தழல் வேல் விடு சேவக ---
கமறுதல் --- மிகவேகுதல், நெடி உண்டாகுதல்.
சேவகன் - வீரன்.
கிரவுஞ்ச மலை வினைத் தொகுதி
என்றதால், அலைகள் மிகுந்துள்ள
கடலானது,
உயிர்களிடத்து
உண்டாகும் அளவற்ற எண்ணங்களையும், ஆசைகளையும் குறிக்கும். எம்பெருமானின் ஞானசத்தியானது, ஆசைகளை வெந்துபோகும்படி
செய்தது.
பட்டு
உருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து,
கடல்
முற்றும் மலை வற்றிக் குழம்பும் குழம்ப, முனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண்டு எதிர்ந்த
அவுணர் ......முடிசாய,
தட்டு
அழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட, ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு, செந்தில்உறை ....பெருமாளே.
---
(கட்டழகு) திருப்புகழ்.
தவலோகம் எலாம் முறையோ எனவே,
தழல்வேல் கொடு போய், ...... அசுராரைத்
தலைதூள் பட, ஏழ்
கடல்தூள் பட, மா-
தவம் வாழ்வு உறவே ......
விடுவோனே! --- (சிவமாதுடனே) திருப்புகழ்.
கரி
நெடும் புலி தோல் உடையார் ---
தாருகாவனத்து
முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர் பன்னியர் கற்பே
உயர்ந்தது என்றும், கர்மமே பலனைக்
கொடுக்கும் என்றும் கருதி, கண்ணுதற் கடவுளை
கருதாது மமதையுற்று வாழ்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த நம்பன் திருவுளங்கொண்டு
திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலம் கொண்டு, திருமாலை மோகினி வடிவு கொள்ளச் செய்து
அம்முனிவர் தவத்தையும் முனிபன்னியர் கற்பையும் அழித்தனர். அக்காலத்து அரிவையர்
முயக்கில் அவாவுற்று தமது இருக்கை நாடிய அந்தணர் தம்தம் வீதியில் கற்பழிந்து உலவும்
காரிகையரைக் கண்டு, “நம் தவத்தை அழித்து
நமது பத்தினிகளின் கற்பை ஒழித்தவன் சிவனே, அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே”
என்று ஞானத்தால் அறிந்து, விஷ விருட்சங்களைச்
சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து, அந்த யாகத்தில் இருந்து எழுந்த பல
பொருள்களையும் பரமபதியின் மீது பிரயோகிக்க, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர்.
புலியை உரித்து தோலை உடுத்திக்கொண்டார்.
மழுவையும் மானையும் கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள்
புரிந்தார். கயமுகாசுரனை வதைத்துத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
தலத்
தநுவைக் குனித்து, ஒரு முப்-
புரத்தை விழக் கொளுத்தி, மழுத்
தரித்து, புலி, கரி, துகிலைப் ...... பரமாகத்
தரித்து, தவச் சுரர்க்கள் முதல்
பிழைக்க, மிடற்று அடக்கு விடச்
சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே! --- (குலைத்து) திருப்புகழ்.
மிகு
திலக பந்தணை மாநகர் மேவிய பெருமாளே ---
திலகம்
போல் விளங்குகின்ற "திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்"
என்று வழங்குகிறது.
கும்பகோணம்
- பந்தநல்லூர், திருப்பனந்தாள் -
பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவர்
--- பசுபதீசர்.
இறைவியார்
--- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல
மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம் --- சூரியதீர்த்தம்.
திருஞானசம்பந்தப்
பெருமானும், அப்பர்
பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.
இத்
திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு. உமாதேவி பந்துகொண்டு விளையாட
விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி
மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது
என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம்
முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக்
கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார்.
பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து
வணங்க, அம்பிகையை
பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப்
பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம்
வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து
வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர்
ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த
இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால்
நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப்
பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு,
சினமுற்றுப்
பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால்
அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு
புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து
சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.
பசுவுக்குப்
பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய
பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று.
மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.
காம்பீலி
மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று
பெயர் சூட்டியதோடு, திருக்கோயில்
திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம்
இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.
தனிக்கோயிலாக
பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன்
ஆயனாக வந்தவர்.
சுவாமி
சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று
பெயரிடப்பட்டுள்ளது.
கருத்துரை
முருகா!
திருவடியில் அன்புவைத்து உய்ய அருள்வாய்.
No comments:
Post a Comment