“இரந்தனையித் தனைநாளும் பரந்தனை,நான்
என்றலைந்தாய்! இனிமே லேனும்
கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்
நெறியாரே காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்,
உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்
தண்ணீரும் வார்ப்பர் தாமே.”
இதன்பொருள் —
மரம்தனை வைத்தவர் வாடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பர் - மரத்தை வைத்தவர்கள் அது வாடிடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பார்கள். (ஆகையால்),
இத்தனை நாளும் இரந்தனை, பரந்தனை நான் என்று அலைந்தாய் - இத்துணை நாட்களாக (உணவு வேண்டி) இரந்து, நான் நான் என்று உன்னையே நினைத்துத் திரிந்தாய், இனிமேலேனும் - இனியாவது, கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் - திருநீற்றுப் பச்சையையும் பிறைத் திங்களையும் திருச்சடையில் மிலைந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே காத்து அருள் புரிவார், என்னும் உரந்தனை வைத்து இருந்தபடி இருந்தனையே - என்கிற உறுதியை உள்ளத்தில் மேற்கொண்டு (பேராசையின்றி) அமைதியாக இருந்தனையானால், உள்ள எலாம் உண்டாம் உண்மை - (பழவினை வாயிலாக) இருப்பன யாவும் உனக்குக் கிடைக்கும்! இது வாய்மையாகும்!
‘மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment