“பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்
வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர!ஈசனே!”
இதன் பொருள் —-
வரிவிழி மடந்தை குறவள்ளிநாயகிதனை மணந்து மகிழ் சகநாதனே! - செவ்வரி படர்ந்த திருக்கண்களை உடைய குறமடந்தையாகிய வள்ளியம்மையாரைத் திருமணம் புரிந்து மகிழும் உலக முதல்வரே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
பரிதனில் இருந்தும் - குதிரைமீது அமர்ந்தும், இயல் சிவிகையில் இருந்தும் - அழகிய பல்லக்கில் அமர்ந்தும், உயர் பலகையில் இருந்தும் - உயரமான மணைமீது அமர்ந்தும், பாங்கான அம்பலந்தனிலே மிக இருந்தும் - அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பருத்த திண்ணையில் இருந்தும் - பெரிய திண்ணைகளில் அமர்ந்தும், கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு தெரிவொடு வாங்கி இடினும் - திருநீறு அளிப்போர்கள் கீழே இருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து வாங்கி அணிந்தாலும், செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் - ஒரு கையாலும் மூன்று விரல்களாலும் ஏற்றாலும், திகழ் தம்பலத்தினோடும் - (வாயில்) தரித்த தாம்பூலத்தோடும், அரியது ஒரு பாதையில் நடக்கின்ற போதிலும் - அருமையான வழியொன்றில் செல்லும்பொழுதும், அசுத்த நிலமான அதிலும் - அழுக்கு நிலத்திலும், அங்கே தரிக்கினும் - (ஆகிய) அந்த இடங்களிலே அணிந்தாலும் தந்திடின் தள்ளினும் - அளித்தபோது மறுத்தாலும், அவர்க்கு நரகு என்பர் - அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று அறிஞர் கூறுவர்.
No comments:
Post a Comment