மன்னா! உன் ஆடு பொன் ஆடு
——
பல ஆண்டுகட்கு முன்பு தமிழ் இதழ் ஒன்றில் ஒரு செய்தி. எந்த இதழ் என்பது நினைவில் இல்லை. மேல் நாட்டில் அறிவுசான்ற பேராசிரியர் ஒருவரின் அறிவு நுட்பத்தை உணர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று அவரை விரும்பியது. தமது பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு, அப் பல்கலைக் கழகத்தின் தலைவர் கடிதம் அனுப்பினார். அதற்கு விடையாக, அந்தப் பேராசிரியர், தனது தகுதிக்கு ஏற்ற ஊதியமாக ஆண்டுக்கு ஐயாயிரம் பவுன் தந்தால் ஏற்புடையதாக இருக்கும் என்றும், அதற்குக் குறைவாக ஊதியம் பெறுவது தனது தகுதிக்கு இழுக்கு என்றும் தெரிவித்தார். அதற்குப் பல்கலைக் கழகத் தலைவர், ‘தாங்கள் கேட்கும் ஊதியத்தைத் தமது பல்கலைக் கழகத்தால் தர இயலாது. தங்களது தகுதி ஒன்றையே கருதி இவ்வாறு கேட்டு விட்டீர்கள். எமது பல்கலைக் கழகத்தின் தகுதியையும் பெருமையையும் தாங்கள் எண்ணிப் பார்க்க வில்லை. எமது பல்கலைக் கழகத்தின் தகுதிக்கு ஏற்ப, ஆண்டிற்குப் பத்தாயிரம் பவுனுக்குக் குறைவாகத் தங்களுக்கு ஊதியம் தருவதே சாத்தியம் ஆகும்’ என்று தெரிவித்தார்.
இந்தச் செய்தி வியப்பு தருவதாக இருக்கலாம். ஆனால், தமிழ்நூல்களைக் கற்றவர்களுக்கு இது வியப்புத் தருவதாக அமையாது. நமது பழந்தமிழர் வாழ்வு அத்தகு சிறப்பினை உடையது. வள்ளல்கள் பலரும் தமது தகுதிக்கு ஏற்ப உயர்ந்த பொருள்களையே பரிசாகத் தந்து வந்தனர். நாஞ்சில் வள்ளுவன் சங்க காலத்து வள்ளல்களில் ஒருவன். இவன் சிறந்த போர்வீரனாகவும் விளங்கினான். அவன் சிறந்த வள்ளலும் கூட. ஒருகால் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிற்கு ஒளவையார் விறலியர் பலர் சூழ்ந்து வரச் சென்றிருந்தார். தாம் தங்கியிருந்த மனைப் பக்கத்தே முளைத்துத் தழைத்திருந்த கீரைகளைப் பறித்துச் சமைத்தனர். சமைத்த கீரையோடு சேர்த்து உண்பதற்குச் சிறிது அரிசி தேவைப்பட்டது. அதனால், ஒளவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் சென்று சிறிதளவு அரிசி தருமாறு வேண்டினர். அவன் ஔவையாரது சிறப்பையும், தனது நிலைமையும் சீர்தூக்கிச் சிந்தித்து, மலையைப் போன்றதொரு பெரிய யானை சுமக்கும் அளவுக்கு அரிசியை ஔவையாருக்குக் கொடுத்தான். சிறிதளவு அரிசியைத் தருதல் தனது பெருமைக்குச் சிறுமை என்று அவன் எண்ணினான். ஒளவையார் அவனது கொடைமடத்தை வியந்து, ஏனைச் சான்றோர்களை நோக்கி, “புலவர்களே! நாஞ்சில் வள்ளுவன் ஒரு மடவன் போலும். யாம் சில அரிசி வேண்ட, எமக்கு மலைபோல்வதொரு களிற்றைக் கொடுத்து உள்ளானே! இப்படிப்பட்டதொரு கொடை மடமும் உண்டுபோலும்! பெரியோர் தமது செய்தற்குரிய கடமையை முன்பின் ஆராய்ந்து செய்யாரோ? கூறுமின்” என்று இப் பாட்டைப் பாடியுள்ளார்.
“தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற, செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆக, தான்பிற
வரிசை அறிதலின் தன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங்களிறு நல்கி யோனே, அன்னதுஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
போற்றார் அம்ம, பெரியோர்தம் கடனே!”
புறநானூற்றில் வரும் இப் பாடலின் பொருள் வருமாறு— சிறந்த செந்தமிழ் பாடும் அழகிய நாவினை உடைய புலவர்களே! நீண்டு நெடிது உயர்ந்த மலை நாஞ்சில் மலை. பலா மரங்கள் நிறைந்த மலை அது. அந்த மலைக்குச் சொந்தக்காரன் ஆன நாஞ்சில் வள்ளுவன் என்பான் உண்மை நிலை உணரும் அறிவு இல்லாதவனாய் இருப்பான்போல் இருக்கிறது. மலைச் சரிவில் பறித்துச் சமைத்த கீரையோடு சேர்த்து உண்ணுதற்குச் சோறு சமைப்பதற்காகக் கொஞ்சம் அரிசியைத் தருவான், பெற்றுப் போகலாம் என்று அவனிடம் வந்தால், இவனோ, நம் நிலையை உணராமல், தன்னுடைய தகுதியை மட்டுமே நினைத்து, மலையைப் போன்றதொரு யானையைக் கொடுத்து (அது சுமக்கும் அளவுக்கு அரிசியைத் தந்து) இருக்கிறானே! இப்படிப்பட்டதொரு கொடையும் உண்டா? என்னே இவனது அறியாமை? இப்படி ஆராயாது வழங்கும் கொடையும் உலகில் உள்ளதுபோலும்? பெரியோர்கள் என்பவர் தங்களை கடமையை வரைமுறை பார்த்துச் செய்யமாட்டார்களா?
பிற்காலத்திலும் ஔவையார் என்ற பெயரில் ஒரு புலவர் வாழ்ந்து இருந்தார். அவருக்கு ஒருமுறை ஆடு ஒன்று வேண்டி இருந்தது. அக்காலத்தில் சேர நாட்டினை ஆண்டு வந்த மன்னனிடம் சென்று ஒரு ஆட்டினைத் தருமாறு கேட்டார். தன்னிடம் ஒரு ஆடு கேட்டு வந்தவர் சிறந்த புலவர் ஆகிய ஔவையார் என்பதை உணர்ந்தான். பெரியவர்கள் எத்தகைய சிறுபொருளைத் தந்தாலும் விருப்புடன் ஏற்றுக் கொள்வர். எனினும், பால் கொடுக்கும் ஒரு ஆட்டைப் பரிசிலாகத் தருவது அவனது பெருமைக்குச் சிறுமை என்று அவன் எண்ணினான். பெருவள்ளல் ஆகிய அவன், பொன்னால் ஆன ஆடு ஒன்றினை ஔவையாருக்குப் பரிசாகத் தந்தான். மன்னனின் இந்தச் செயலை ஔவையார் பெரிதும் வியந்தார். “சேரனிடம் நான் சுரப்பு ஆடு ஒன்றினைக் கேட்டேன். அவனோ பொன் ஆடு ஒன்றை அளித்தான். எத்தகைய பொருள் கிடைத்தாலும் இரப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், வள்ளல்கள் தாம் வழங்கும் பொருளின் சிறப்பினைத் தானே ஆராய்வார்கள்” என்னும் பொருள் படுமாறு,
“சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னை
சுரப்பாடு யான்கேட்க, பொன்னாடு ஒன்று ஈந்தான்;
இரப்பவர் என்பெறினும் கொள்வர், கொடுப்பவர்
தாம் அறிவர் தன்கொடையின் சீர்”
என்னும் பாடலைப் பாடினார். பொன் ஆட்டினைப் பரிசாகப் பெற்ற ஔவையார் மிக மகிழ்ந்து, சேரமன்னனைப் பார்த்து, “உன்னாடு பொன்னாடு” என்று இருபொருள்படக் கூறினார். “உன் ஆடு பொன் ஆடு” என்று ஒரு பொருள். “உன் நாடு பொன் நாடு” என்று இன்னொரு பொருள்.
சிவபூசையில் ஈடுபட்ட சேராமான் பெருமாள் என்னும் சேரமன்னர், சிறந்த சிவனடியாராகவும் விளங்கினார். சிவனடியார்களுக்கு வரையாது கொடுத்தும், சிவவேள்விகள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலம்செய்து வந்தார். இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திருவாலவாய் என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையால் பரவிப்போற்றும் பாணபத்திரன் என்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுள்ளம் கொண்டு அவரது கனவில் தோன்றி ‘அன்பனே, என்பால் பேரன்பு உடைய சேரமான் பெருமாள் என்னும் வேந்தன் உனக்குப் பொன், பட்டாடைகள், நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாம் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு திருமுகம் எழுதிக் கொடுத்திருக்கிறோம் நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று பொருள் பெற்று வருவாயாக’ எனக் கூறி “மதிமலிபுரிசை” எனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார்.
தென்மதுரைச் சொக்கலிங்கப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர், சேர நாட்டை அடைந்து, சேரமான் பெருமாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேல் கொண்ட சேரமான் பெருமாள், அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உள்ளம் உருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது கருவூலத்தில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து ‘இப்பெரும் பொருள்களையும், யானை, குதிரை முதலிய சேனைகளையும், இம்மலை நாட்டு ஆட்சி உரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும்’ எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். அவரது கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பாணபத்திரர் ‘என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின், அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரசு உறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டு அருளதல் வேண்டும்’ என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரமான்பெருமாள். அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினால் தம்மைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தையடைந்தார்.
கொடையாளி தான் கொடுக்கின்ற பொருளின் சிறப்பையே நோக்குவான். தனது தகுதிக்கு ஏற்ற உயர்ந்த பொருளையே, இல்லை என்று வந்தவர்க்குப் பரிசாக அளிப்பான் என்பதற்கு இந்த வரலாறுகள் சிறந்த எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment