இறையருள் பெறும் நெறி
-----
உயிர்களும் இறைவனும் அறிவுப் பொருள்களே. உயிர்களுக்கு உரிய அனுபவப் பொருள்கள் அறிவற்ற சடப் பொருள்கள். இறைவனுடைய அறிவு முற்றறிவு. உயிர்களுக்கு உள்ள அறிவு சிற்றறிவு. இறைவன் எல்லாவற்றையும் ஒருங்கு அறிவான். உயிர்கள் அறிவிக்க அறியும் திறம் உடையவை. அறிந்தவற்றைக் கொண்டே "நான் அறிந்தவன்" என்று மார்தட்டிக் கொள்ளும் அறியாமையாகிய அஞ்ஞானம் நிறைந்தவை. உயிரினது உண்மை அறிவை மறைப்பது ஆணவம்.
மனிதனுடைய அறிவு சிற்றறிவு என்றாலும் பிறந்தது முதல் அவன் அறிவு வளர்கிறது. அனுபவத்தாலும்,ஆராய்ச்சியாலும்,கேள்வியாலும், நூல்களைப் படிப்பதாலும் அவனுடைய அறிவு வளர்ச்சி அடைகின்றது. முதலில் திட்பமானவற்றை அறிந்து கொள்கிறான். பிறகு நுட்பமானவற்றை அறிந்து கொள்கிறான். குழந்தை முதலில் தாயை அறிந்து கொள்கிறது. அவள் தனக்குப் பால் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிறது. அவள் அணைப்பதை அறிகிறது. ஆனால், அவளுடைய அன்பின் பெருமையை வளர்ந்த பிறகே தெரிந்து கொள்ள முடிகிறது. அன்பினால் செய்யும் செயல்கள் திட்பமாக இருப்பதனால் அவற்றைக் கண்முன்னே பார்த்துத் தெரிந்து கொள்ளும் அறிவுதான் ஆரம்பத்தில் இருக்கிறது. காட்சிப் பொருளை அறியும் அறிவு அது. இந்தச் செயல்களுக்கு எல்லாம் காரணமான அன்பை உணர, அறிவு வளர்ச்சி பெறவேண்டும். திட்பத்தை அறியும் அறிவு முதலில் இருக்கிறது. வளர வளர நுட்பத்தை அறியும் ஆற்றல் வருகிறது. மனிதர்களுக்கு உள்ளே அறிவில் வேறுபாடு இருக்கிறது. ஒரே வயது உடையவர்கள் ஒரே மாதிரி அறிவுடையவர்களாக இருப்பதில்லை.சிலர் சிறிய பருவத்திலேயே பிறர் வியக்கும் வகையில் அறிவாற்றல் உடையவர்களாக விளங்குகிறார்கள். சிலர் மந்த புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். பிறவிதோறும் அறிவு, விளக்கம் பெற்று வரும். முன் பிறவியில் அறிவு விளக்கம் பெற்றவர்கள் இந்தப் பிறவியில் இளமையிலேயே பேரறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று பிறவிகள்தோறும் அறிவு தொடர்ந்து உயிருக்கு அரணாக அமைந்து வருவதைத் திருவள்ளுவ நாயனார் தெரிவிக்கின்றார்.
விலங்குகளை விட அறிவில் சிறந்தவன் மனிதன். மனிதர்களுள் ஞானிகள் சிறந்த அறிவுடையவர்கள். அவர்களைப் புலவர் என்றும் சொல்வார்கள். அதற்கு, மிக்க அறிவுடையவர்கள் என்பது பொருள். இவ்வாறு அறிவின் தரம் பலபடியாக இருந்தாலும் அறிவின் உச்ச நிலையை அடைந்தவர் யாரும் இல்லை.முழுமையான அறிவை உடையவர் மனிதருள் யாரும் இல்லை. மனிதனைச் சிற்றறிவு உடையவன் என்று சொல்லுவது இதனால்தான்.
மனிதனால் முடியாத காரியமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. எவ்வளவுதான் அவன் சாதித்தாலும் அவன் சிற்றறிவு உடையவன்தான். அவன் அறியாதவைகளே அதிகம். "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு, உற்ற கலைமடந்தை இன்னும ஓதுகின்றாள்" என்றது மிகப் பொருத்தமானதாகும். சந்திரமண்டலத்துக்குப் போய் அங்கு உள்ளவற்றைத் தெரிந்துகொண்டாலும், மற்றக் கிரகங்களை இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. எல்லாக் கிரகங்களையும் அறிந்து விட்டாலும் சூரிய மண்டலத்துக்குச் சென்று கால் வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதன் பக்கத்திலே கூடச் செல்லமுடியாது. அந்த அற்புதமும் நடந்து விட்டால், நட்சத்திரங்களை அளந்து அறிய முடியாத நிலையில்தான் மனிதன் இருப்பான்.
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நிலை என்றும் மனிதனுக்கு வரப் போவதில்லை. மனிதன் என்ன? தேவர்களுக்கும் கூடத் தெரியாது. அப்படியானால் எல்லாவற்றையும் அறிந்தவர் ஒருவரும் இல்லையா? ஒருவன் இருக்கின்றான். அவன்தான் இறைவன். அவனே முற்றறிவு உடையவன். பரிபூரண அறிவு மயமானவன். ஞானபூரணன்.
எல்லாவற்றையும் அறிந்தவனாகிய அவனே யாவருக்கும் அறிவிக்கின்றவன். படித்தவன் ஒருவன் கல்லாதவனுக்குத் தான் அறிந்ததைக் கற்றுக் கொடுக்கின்றான். அறிந்தவன் அறியாதவனுக்கு அறிவிக்கின்றான். இப்படி அறிவிக்கிறவனும், வேறு ஒருவரிடம் அறிந்து கொண்டவன்தான். அவனும் தனக்கு வாய்த்த குருவின் மூலம் அறிந்து கொண்டிருக்கின்றான். இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால், முதலில் அறிவித்தவன் இறைவன்தான் என்பது புலப்படும். எனவேதான், "எழுத்து அறிவித்தவன் இறைவன்" என்றனர். அவன் அறிவிக்க அறிந்தவர்கள், தாம் பெற்ற அறிவை வழிவழியே பிறருக்கும் அறிவித்து வருகிறார்கள். சிறிய ஆசிரியனிடம் சில ஐயங்களைத் தெளிந்து கொள்ளலாம். அந்த ஆசிரியனாலும் விளக்க முடியாத பெருத்த ஐயங்களை அவனை விடப் பெரிய ஆசிரியனிடம் தெளியலாம். அந்தப் பெரிய ஆசிரியனுக்கும் விளங்காத இடங்கள் இருக்கும். அவற்றை இன்னும் பெரிய ஆசிரியனிடம் அணுகித் தெரிந்து கொள்ளலாம். இப்படி மேலே மேலே போனால்,யாவராலும் தெரிவிக்க முடியாத ஐயங்கள் எஞ்சி நிற்கும். அவற்றை இறைவன்தான் தெளிவிக்க முடியும்.
முருகனுடைய ஆறு திருமுகங்களின் செயல்களைச் சொல்லும் போது, "ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே" என்கின்றது திருமுருகாற்றுப்படை. ஆகவே முதலில் அறிவிப்பவனும், எல்லாம் தெரிந்தும் தெரியாததை, இறுதியில் அறிவிப்பவனும் இறைவனே.
அறிவை "ஞானம்" என்றும், அறியும் பொருளை "ஞேயம்" என்றும், அறிபவனை "ஞாதா" என்றும் கூறுவர். இந்த மூன்றையும் "திரிபுடி" என்றும்,"முப்புடி"என்றும் வழங்குவர். சடம் அறியாது, அறிவித்தாலும் அறியாது. சிற்றறிவுப் பொருளாகிய பசுவும் (ஆன்மாவும்) இயல்பாக அறியாது. அறிவித்தால் அறியும். அறிவதற்குரிய கருவியாகிய அறிவு, பசுவாகிய ஆன்மாவிடம் இருக்கிறது. அறிவு நுட்பமானது. நுட்பமான யாவும் இறைவன் மயம். ஆகவே அறிவும் அவன்தான். அறிவாகிய கருவியாக இருந்து அறிகின்றவனும் அவன்தான். உயிர் அறிவைப் பெறும்போது அதனிடம் தெய்வத்தின் அம்சம் உண்டாகி விடுகிறது. அவன் பேரறிவு உடையவன் ஆகும்போது,அந்த அறிவே இறைவனாகிறது.
"அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி;
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே".
என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனாரின் அருள்வாக்கு.
அறிவு வடிவு எது என்று அறியாமல் மயங்கி இருந்தேன். அது நானே என்று எனக்கு அருளப்பட்டது. என்னை உணர்ந்து என்னிலே இருந்தேன். அறிவது உயிர். அறியப்படுவதும் உயிர்.அறியும் வழி அருள். அறிவே அறிவை அறியும்; அறிவிக்கும்.
எனவே, நாம் வாழும் இந்த வாழ்க்கை, அறிவு சார்பு உடையது. பொருள் உடையது. இலட்சியங்கள் உடையது. நெறிகளை உடையது. ஆனால், இன்பமயமானது அல்ல. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசைதான் பிறவிக்கும் காரணம். எனவே, நமது வாழ்க்கையானது துன்பத்தால் தொடக்குண்டு கிடக்கிறது. இந்தத் துன்பத் தொடக்கிலிருந்து விலகி, இன்பமான வாழ்க்கைக்கு மனிதன் செல்ல வேண்டும். அங்ஙனம் துன்பத்தை இன்பமாக மாற்றியமைக்க வேண்டுமானால், தெளிவான அறிவு தேவை. தெளிவான அறிவும் உணர்வும் இன்றி எந்த முயற்சி எடுத்தாலும் கைகூடாது; பயனும் கிடைக்காது. ஆனால், அறியாமை உயிருக்கு நீங்கியபாடு இல்லை. அறிதோறும் அறியாமை மிகுந்து வருகின்றது.
மனிதனுக்கு அறியாமையை விடக் கொடிய பகை வேறு இல்லை. அறிவு மயக்கத்தை விடத் தீமை தருவது வேறு எதுவும் இல்லை. அறியாமையையே அறிவு என்று கருதி, நம்பி மயங்கும் மயக்கம் மிகவும் கொடுமையானது. இன்றைய சமுதாயத்தில் அறியாமையை அறிவு என்று நம்பி, தன் முனைப்புடன் தலைதடுமாறித் திரிபவர்கள் பலர். அறிவு உள்ளவனாகத் தன்னைச் சொல்லிக் கொண்டே அறியாமையில் உழல்பவன் மனிதன். எனக்கு எல்லாம் தெரியும் என்பான். உண்மையில் அவன் தெரிந்துகொண்டது அவனது உள்ளங்கை அளவுதான்.
நல்ல வெட்டவெளியில் வெய்யில் எரிக்கும்பொழுது தொலைவில் நின்று பார்த்தால் தண்ணீர் அலைகள் பாய்ந்து செல்வது போல் ஒரு காட்சி தெரியும். அதனை மேலோர், "பேய்த் தேர்"என்று கூறுவர். கானல் நீருக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. இந்தப் பேய்த் தேரை, தண்ணீர் வேட்கை எடுத்த ஒருவன் தண்ணீர் வெள்ளம் என்று கருதிக் குடத்தினை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்றால், அது பைத்தியக்காரத் தனம் ஆகும். அப்படிச் சென்றவனுக்குத் தண்ணீரும் கிடைக்காது; தாகமும் தணியாது. பயன்தராத முயற்சியில் ஈடுபட்டதால் ஆற்றலும் வீணாக்கப்பட்டது. அதுபோல், அறிவை வளர்க்காத - வாழ்வுக்குப் பயன் தராத கொள்கை வழிச் செல்லுதல் பயனற்றது.
கடவுள் உண்டு என்று நம்பி, கடவுளை எங்கும் எல்லாவற்றிலும் கண்டு, இதயக் கனிவுடன் ஏத்தி வழிபடுதல் உய்யும் நெறி, இன்பநெறி. அதனை விடுத்து அறிவு என்ற பெயரில் அறியாமை பேசிச் சழக்குகளுக்குக் காரணமாகிய சாத்திரங்களை விரிவாகப் பேசித் தானும் மயங்கி, மற்றவர்களையும் மையல் வலையில் வீழ்த்துதல் நல்ல நெறியாகாது. சாத்திரத்தின் உண்மை அறியாதவர்கள், தாம் சொல்லுவதே தக்க நெறி என்று சொல்லி வருகின்றனர். இது இம்மையிலும் துன்பம் தரும். என்றால், மறுமை என்னவாகும் என்பதை ஊகித்து அறியலாம்.
எனவே, சமயசாத்திரங்களின் உண்மையை உணர்ந்து தெளிந்தவர்கள் சொல்லும் நெறியில், செல்லும் நெறியில் நாமும் செல்வதே பயனுடைய, துன்பம் இல்லாத வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அந்த நெறி, ஒருநெறிய மனம் வைத்து உணர்கின்ற நெறியாகும். "ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் சொன்ன திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே" என்று தொடக்கத்திலேயே தெளிவித்தார் திருஞானசம்பந்தப் பெருமான். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்தப் பாடல் வரிகளை நாளும் ஓதிக் கொண்டே, இன்னமும் மெய்ப்பொருளை உணராமல், தாம் உணர்ந்ததையே அறிவாகச் சொல்லிக் கொள்பவர்கள் உண்டு. சொல்லிக் கொள்வதோடு, பிறரது அறிவையும் மயக்கி வருகின்றனர். சொல்லிக் கொள்வதிலும் வேகம்/அவசரம் இருக்கின்றது. இப்படிச் சொன்னால் மனம் ஒருநிலைப் படாது. அறிவுக்கு அறிவாக இருந்து உணர்த்துகின்ற இறைவனை உணரத் துணை புரிவது ஒருநெறிய மனமே ஆகும். மனத்தை ஒருமுகப்படுத்தி, காற்றறியாத் தீபம் போல் வைத்திருத்தல் வேண்டும்.
சாத்திரங்கள் கூறும் உண்மைப் பொருளைத் தெளிந்து அறியாமல், சாத்திரங்களைத் தாம் உணர்ந்த வழியிலேயே நின்று, இதுதான் உண்மை என்று கூறுபவர்கள், இன்னமும் மடமையில், அறியாமையில் உள்ளவர்கள் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். அறிவு மயக்கம் கொண்டு, அவர்களைத் தொடர்ந்து செல்வோர் செல்லட்டும். நாம் திருப்பருப்பத இறைவன் வழிபட்டு உய்வோம் வாருங்கள் என்று அறிவுறுத்துகின்றார் திருஞானசம்பந்தர்.
"சடங்கொண்ட சாத்திரத்தார், சாக்கியர் சமண்குண்டர்,
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கி,ஓர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின், குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே".
இதன் பொருள் ---
அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை (அறியாமையை) விரும்பியவராய் மயங்கிய சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவர் ஆவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை (ஸ்ரீசைலம்) நாம் சென்று பரவுவோம்.
"பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய், திகழ்தில்லை அம்பலத்தே திருநடம் செய் கூத்தா" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியுள்ளதை எண்ணுதல் நலம். கானல் நீரை, உண்மையான நீர் என்று எண்ணி, தாகவிடாய் தீர்த்துக் கொள்ள ஓடுபவன் பேதை என்றார்.
சமணர் புத்தர் என்றது சாத்திரங்களை ஓதிக் கொண்டே அறியாமையில் உள்ளவர்களைக் குறிக்கும். தெளிந்த அறிவு உள்ளவர்கள் சமணத்திலும் உண்டு, பௌத்தத்திலும் உண்டு. தெளிந்த அறிவில்லாது, புறச்சமயத்தாரைத் தூற்றிக் கொண்டே உள்ள சைவர்களும் உண்டு.
"உவலைச் சமயங்கள்,ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்து,கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ". --- திருவாசகம்.
இதன் பொருள் ---
பொய்ச் சமயங்கள், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாமல் வேறுபட்டு உள்ள சாத்திரங்கள், ஆகியவற்றால், குழப்பமான பிறவிக் கடலில் அகப்பட்டுக் கிடந்து தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி, திருவடி இணைகளைத் தந்து அருளுகின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
விரிவிலா அறிவினார்கள் ஆக்கினமையால், அச்சமயங்கள் பொய்ச்சமயங்களும், அவற்றின் சாத்திரங்கள் ஒவ்வாத சாத்திரங்களும் ஆயின. அவை மனக்குழப்பத்தையே உண்டு பண்ணுமாதலின், ‘சவலைக் கடல்’ எனப்பட்டது.
ஓயாமல் எதற்கு எடுத்தாலும், சாத்திரங்களையும், கோத்திரம் குலம் முதலியவற்றையுமே பேசிக் கொண்டு இருப்பவர்களை அறிவற்றவர்கள் (சழக்கர்கள்) என்கின்றார் அப்பர் பெருமான்.
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே".--- அப்பர்.
இதன் பொருள் ---
சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் அறிவற்றவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்? பணிதற்கு உரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.
இறைவனிடத்து அன்பும் நினைப்பும் இல்லாமல் போனால், எதுவும் பயன் தராது என்றார். சாத்திரம் --- சமய இலக்கண வரம்பு. சழக்கர் --- அறிவற்றோர்; பொய்யர். கோத்திரம் --- சிறந்தார் ஒருவரின் பரம்பரையைக் குறித்துச் சொல்வது. குலம் --- சாதி. பாத்திரம் --- வணங்கப்படுதற்கு உரியவர். மாத்திரைக்குள் --- கணப்பொழுதிற்குள். சாத்திரம் கோத்திரம் குலம் முதலாயினவற்றையே கருதி உண்மைப் பொருளை உணரும் பயனை அறியாது ஒழுகுவோரை வெறுத்து இவ்வாறு கூறியருளினார். இதனால், சாத்திரங்களை வெறுப்பதாகக் கொள்ளுதல் கூடாது. சாத்திரங்களின் உண்மையை உணர்ந்து ஒழுகினால், தம்மை மறந்த நிலை வரும்போது, தூங்கினவன் கையில் உள்ள பொருள் அவனை அறியாமலேயே நழுவினத் போல, நீங்கும் என்பதையே இது காட்டும்.
இறைவனை எப்படி நினைக்கவேண்டும் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான், அறிவுறுத்துவதைக் காணலாம்.
"ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி,கள்ளம் ஒழிந்து, வெய்ய
சொல்லை ஆறி, தூய்மைசெய்து, காமவினை அகற்றி
நல்லவாறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே".
இதன் பொருள் ---
திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் எழந்தருளி உள்ள இறைவா! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, கள்ளத்தனம் இல்லாமல், கடும்சொல் சொல்வதைத் தவிர்ந்து, அகத் தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமம் ஆகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன்,வந்து அருள்புரிவாயாக.
ஒல்லை --- வேகம். மனமானது எப்போதும் பரபரப்பில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கும் இறையருள்தான் துணை செய்யும் என்பதால், "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க" என்றார் மணிவாசகப் பெருமான். பரபரப்பு நீங்கி, மனமனாது அடங்கி இருக்கவேண்டும். உள்ளத்தில் கள்ளத்தனம் சிறிதும் இருத்தல் கூடாது. கடுமையான சொற்களையும் விட்டுவிடுதல் வேண்டும். இவ்வாறாக மனதைத் தூய்மைப்படுத்தி, இறைவன் திருநாமத்தை உச்சரித்து வருதல் வேண்டும். புறத்தூய்மையும் வேடமும் போதாது.
No comments:
Post a Comment