தன்னைப் புகழ்தலும் தகும் --- யாருக்கு? எப்போது?

 


தன்னைப் புகழ்தலும் தகும் --- யாருக்குஎப்போது?

-----

 

     திருக்குறளில் "அடக்கம் உடைமை" என்னும் ஓர் அதிகாரம். மனம்மொழிமெய்களால் தீயவழியில் செல்லாமல் அடக்கம் உடையவனாய் இருத்தல் பற்றிக் கூறவந்த நாயனார் "மனம்வாக்குகாயம் என்னும் திரிகணங்களால் அடங்கி இருத்தல் ஆகிய அறமானது ஒருவனை தேவர் உலகத்தில் கொண்டு போய் விடும்அவ்வாறு அடங்காமையாகிய பாவமானதுநிறைந்த இருள் உலகமாகிய நரகத்தில் செலுத்தி விடும்" என்கின்றது.

 

நரகத்தை இருள் என்றதற்குப் பிரமாணம்....

 

"நரகமும் மயக்கமும் கருமையும் இருள் எனல்"    --- பிங்கலந்தை.

 

     நரக லோகத்தை இருள் என்றதால்தேவலோகத்தை ஒளி உலகம் என்று கொள்ளலாம். ஒளி உலகத்தில் இருந்த தேவர்களுக்கும் துன்பம் வந்தது. எனவேஒளியோடு பேரானந்தமும் நிறைந்து விளங்குவது,எல்லாவற்றினும் மேலான ஒளிஉலகம் ஆகியமோட்சம் என்னும் வீட்டு உலகம் ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறள், "பெருமிதம் கொள்ளாமல் அடங்கி இருத்தல் எல்லோர்க்கும் நன்மையைத் தரும்அவர் எல்லாருள்ளும் செல்வம் உடைவர்களுக்குஅந்தப் பணிவானதுவேறு ஒரு செல்வமாகத் தோன்றும் சிறப்பினைத் தரும்" என்கின்றது.

 

     கல்வி உடையார்குடிப்பிறப்பு உடையார்செல்வம் உடையார் என்னும் மூவகையினருக்கும் அடக்கம் என்னும் குணம் பொதுவானது என்றாலும்பொருள் உடையார் இடத்தில் செருக்கு மிகுந்து இருக்கும். அவரிடத்திலும் அடக்கம் இருக்குமானால்அது கல்வி உடையாரின் அடக்கத்திலும்குடிப்பிறப்பு உடையாரின் அடக்கத்திலும் மேம்பட்டு விளங்கும் என்பதை விளக்க,

 

"எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல்அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து".

 

என்று அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாககுமார பாரதி என்னும் பெரியார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் இருந்துபெரியபுராணத்தில் வரும் குலச்சிறை நாயனாரின் வரலாற்றினை வைத்துப் பாடிய பாடல்...     

                          

"நலச்சிறைநீர் வேணியர் நல்லடியார் யார்க்கும்

குலச்சிறையார் தாம்பணிதல் குன்றார் - இலர்க்குஇகழார்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து".           

 

இதன் பொருள் ---

 

     பாண்டிய நாட்டிலே மணமேற்குடியிலே குலச்சிறை நாயனார் என்பவர் அவதரித்தார். விபூதி உருத்திராக்கம் தரித்தவர்களும் திரு ஐந்தெழுத்தை இடையறாது ஓதுகின்றவர்களும் ஆகிய சிவனடியார்களை வணங்கித் துதித்து,அவர்க்கு வேண்டும் உதவிகளை எல்லாம் செய்யும் பணி பூண்டவர். குணம் இல்லாதவர்கள் ஆயினும்,அவரை இகழ்ச்சி செய்யாதவர். பாண்டிய அரசராகிய நின்றசீர்நெடுமாறனுக்கு முதல் மந்திரியாக இருந்து அரசு புரிவித்தார். ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தரை வணங்கிப் போற்றி,அவரால் தேவாரத் திருப்பதிகத்திலே வைத்துப் பாராட்டப் பெற்ற சிறப்பினையும் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையிலே "பெருநம்பி" என்று வியந்து உரைக்கப்பட்டார். 

 

     கல்விஅறிவுஒழுக்கங்களில் சிறந்து விளங்கிமுதலமைச்சராகப் பதவி வகித்தபோதும்நல்லோரிடத்தில் இணக்கமாகவும் பணிவாகவும் குலச்சிறையார் இருந்தார். அதனால் அவர் நாயன்மார்களால் பாராட்டுப் பெற்றார்.

 

நலம்இலர் ஆக நலம் அதுஉண் டாக

            நாடவர் நாடுஅறி கின்ற

குலம்இலர் ஆகக் குலம் அதுஉண் டாகத்

            தவம்பணி குலச்சிறை பரவும்

கலைமலி கரத்தன் மூஇலை வேலன்

            கரிஉரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்

            ஆலவாய் ஆவதும் இதுவே.  --- திருஞானசம்பந்தர்.

 

     பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே. எனினும்அவர் எல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாம் சிறப்பினை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.

 

     நலம் --- அழகு. நீர் என்றது கங்காநதியினை. வேணி --- சடை. இலர்க்கு --- குணம் முதலியன இல்லாதவர்களையும்.  பணிதல் --- அடங்குதல். தகைத்து --- சிறப்பினை உடைத்து.

 

     தம்மிடத்து அமைந்து உள்ள பொருட்செல்வம் முதலாகிய நலங்களை வியந்துஅவற்றைக் கொண்டு அருட்செல்வத்தைப் பெற முயலாமல்தம்மைத் தாமே சிறப்பித்துக் கொண்டு வாழ்வது குரங்குத் தனம். துன்பத்தில் இருந்த ஒரு குரங்குக்குநன்மையைச் சொல்லிய தூக்கணங்குருவி பட்டபாட்டைப் பற்றிய ஒரு கதையும் உண்டு. குரங்கின் கையில் அழகிய மலர்மாலை ஒன்றைத் தந்தால்அது அதனுடைய நன்மையை அறியாமல்பாழாக்கும்.

                                                                                    

"நோக்கு இருந்தும் அந்தகரா,காது இருந்தும்

    செவிடரா,நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா,மதி இருந்தும்

    இல்லாரா,வளருல் கைகால்

போக்கு இருந்தும் முடவரா,உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சியாரா

ஆக்கும் இந்தத் தனம் அதனை,ஆக்கம்என

    நினைத்தனை நீ அகக் குரங்கே".        ---  நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க்காதிருந்தும் செவிடராய்க்குற்றமற்ற வாய் இருந்தும் ஊமையராய்அறிவிருந்தும் மூடராய்நீண்ட கைகால்களிருந்தும் முடவராய்உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீய பொருளைவளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தனை.

 

            நோக்கு --- கண். அந்தகர் --- குருடர். மூகை --- ஊமை. பூட்சி --- உடல். அகம் --- மனம்செருக்குநெஞ்சம்.

 

"அறிவு மிகப்பெருக்கி,ஆங்காரம் நீக்கி,

பொறிஐந்தும் வெல்லும்வாய் போற்றி,--செறிவினால்

மன்னுயிர் ஓம்பும் தகைத்தே காண்,நன்ஞானம்

தன்னை உயக் கொள்வது".   --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     நல்லறிவு மிகவும் விளங்கும்படியாகச் செய்துசெருக்கினை நீக்கிமனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்களையும் வெல்லுகின்ற நல்ல வழியினை வளர்த்துஅடக்கத்தோடு இருந்துநிலைபெற்ற உயிர்களைத் துன்பம் தாக்காத வகையில் காக்கும் தன்மையை உடையவன் ஆவதேநல்லறிவு உடையவனுக்குபிறவிநெறியில் இருந்து தப்பிப் பிழைக்கும் வழியை அருளுவது ஆகும்.

 

     எனவேஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது என்றது. யாருக்குக் கூடாதுஎன்னும்போதுநன்னூல் ஒரு விளக்கத்தைப் பின்வருமாறு அளித்தலைக் காணலாம்..

 

"தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்

தான் தன் புகழ்தல் தகுதி அன்றே".      --- நன்னூல்.

 

     தோன்றாத நுட்பங்கள் எல்லாம் விளங்குமாறு தோற்றுவித்துபல துறைகளாக விரிந்த நூலைச் செய்து முடிக்கின்ற அளவுக்கு அறிவில் மிக்கவராக இருந்தாலும்,  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் ஒருவனுக்குத் தக்கது அல்ல.

 

     காரணம்தன்னை விய்ந்து ஒருவன் தருக்குதல் என்பதுஅவனுக்குள்ள செல்வாக்கைத் தேய்க்கின்ற கருவியாக அமையும் என்கின்றது "திரிகடுகம்" என்னும் நூல்.

 

தன்னை வியந்து தருக்கலும்,தாழ்வின்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும்,- முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும்,இம்மூன்றும்

செல்வம் உடைக்கும் படை.       --- திரிகடுகம்.

 

     தன்னைத் தானே புகழ்ந்து செருக்குவதும்வீணாகச் சினம் கொள்வதும்பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை. 

 

     தன்னைப் புகழ்ந்து செருக்குவதற்குப் பங்கம் உண்டானபோதுசினம் உண்டாகும் என்பது விளங்கும்.

 

     தன்னுடைய அறிவை மட்டுமல்லாதுதன்னுடைய அழகையும் வியந்து கொள்ளுதலும் மக்களிடத்து உண்டு. தன்னைப் பிறர் வியக்க வேண்டும் என்று எண்ணுவதும் கூடாது. தன்னைத் தானே வியப்பதும் தகாது. தாம் அழகில் மிகுந்து உள்ளோம் என்று தன்னைத் தானே வியக்கும்போது செருக்கு உண்டாகும். அதனால் தனக்குக் கேடு. தன்னைப் பிறர் வியக்கவேண்டும் என்னும்போதுதனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் கேடு உண்டாகும்.  

 

     "மகளிர் தம் கொங்கைகளைக் கச்சு இட்டு மறைத்தல்,தான் காணாது இருக்க. துகில் இட்டு மறைப்பது,பிறர் காணாது இருக்க." என்கின்றது ஒட்டக் கூத்தர் பாடிய "தக்கயாகப் பரணி".

 

     யானைக்கு முகபடாம் அணிதல்யானை கண்டால் கொல்லும் என்பதற்காக. பெண்களின் மார்பகத்தைக் கண்டால்காமநோயால் அவை தம்மைக் கொல்லும் என்று படா முலைமேல் துகிலினை இட்டதாகச் சொல்கின்றார் திருவள்ளுவ நாயனார். "படா முலை" என்றது தளராத முலை ஆகும். கண்ணை மறைத்தல் குறித்து, "கண்படாம்" என்றார்.

 

"கடாஅக் களிற்றின் மேல் கண் படாம்,மாதர்

படாஅ முலைமேல் துகில்".  

 

இதன் பொருள் --- 

 

     இவளுடைய தாழாத கொங்கைகளின் மேல் போர்த்திய ஆடையானதுமதம் கொண்ட ஆண் யானைக்குப் போர்த்தப்பட்ட முகத்திரை போன்றது.

 

     அவ்வாறே ஆண்மகனும் தனது அழகை வியக்கவும் கூடாது. பிறர் கண்டு வியக்குமாறு செய்யவும் கூடாது. பெண்கள் ஆடவரைப் பார்க்கும்போதுதிண்ணிய தொள்களும்பரந்த மார்பும் கருத்தைக் கவறும் என்பர். தலைவன் செல்லும் வழியில் உள்ள மற்றப் பெண்டிர் அவனது பரந்த மார்பைக் கண்களால் உண்டனர் எனத் தலைவி மறைமுகமாக அவன் அழகைப் புகழ்கிறாள். தன் நாயகனது பேரழகினை அப்பெண்கள் சுவைத்ததாகக் கொண்டு அவள் உள்ளுக்குள் எண்ணிபின்வருமாறு கூறுவதாகத் திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார்.

 

"பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன்,பரத்த! நின் மார்பு"

 

     விலைமாதர்க்குத் தமிழில் "பரத்தை" என்று பெயர். இதற்கு ஆண்பால் சொல் "பரத்தன்", "பரத்தர்"ஆகும். "வம்பப் பரத்தர் வறுமொழியாளர்என்பது சிலப்பதிகாரம். எனவேதனது தலைவனைப் பார்த்துபரத்தைமை உடையவன் என்னும் கருத்தில், "பரத்த!" என்று விளித்து, "நீ வருகின்ற வழியில் உனது பரந்த மார்பைக் கண்ட பெண்கள் யாவரும் உனது அழகைத் தமது கண்ணால் பருகினார்கள். பொதுமைப்பட்ட உனது மார்பைத் தழுவ நான் விரும்பவில்லை" என்று தலைவிதனது தலைவனைப் பார்த்துச் சொல்லி ஊடல் புரிகின்றாள். எனவேஆண்மக்களும் தமது மார்பை மேலாடையால் மறைத்துச் செல்ல வேண்டும் என்பது வழக்கம்.

 

     இதன் மூலம்யாரும் தனது உடலழகையும் வியந்துகொள்ளக் கூடாது. பிறர் வியக்குமாறு வைக்கக் கூடாது என்பது நமது தமிழர் பண்பாடாக இருந்தது என்பதை அறியலாம்.

 

     எனவேதன்னைத் தானே வியந்துகொண்டுபிறரும் வியக்க வேண்டும் என்று விரும்புவது எப்படிப் பார்த்தாலும் நல்லதல்ல என்பது விளங்கும்.   

 

     தன்னடக்கம் என்பதுதன்னிடத்து உள்ள உயர்வுகளுக்கு முதன்மை தராமல்தன்னிடத்து உள்ள தாழ்வுகளை மட்டுமே எண்ணி இருந்து அவற்றில் இருந்து நீங்கிஉயர்நிலையை அடைய எண்ணுதல்.

 

     தன்னடக்கத்திலேயே இன்னும் உயர்ந்த நிலை ஒன்று உண்டு. அது தன்னிடத்தில் உள்ள தாழ்வுகளைப் பற்றி வெளிப்படையாகவே தெரிவித்தல். இது, "நைச்சிய அனுசந்தானம்" என்று வடமொழியில் சொல்லப்படும். மிக உயர்ந்த நிலை அடைந்த சான்றோர்கள்பெரியோர்கள்அருளாளர்கள் எல்லாரும் இதனைக் கடைப்பிடித்தேமிக உன்னதமான நிலையை அடைந்து இருக்கின்றார்கள்.

 

     தன்னிடத்து உள்ள குற்றங்கள் யாவற்றையும் மறந்துஅல்லது மறைத்து,ஓரிரு பெருமைகளைப் பற்றிப் பேசுவது மிகத் தாழ்ந்த குணம் ஆகும். தன்னிடத்தில் உள்ள பெருமைகளைப் பற்றித் தன்னைத் தானே வியந்துகொண்டுபிறரும் வியக்குமாறு வலியுறுத்தி,எல்லோரையும் துன்புறுத்திய இரணியன்இராவணன் முதலானோர் பூண்டோடும்கூண்டோடும் அழிந்து ஒழிந்தனர் எல்லோரும் அறிந்ததே.

 

     பிறகுயார் தான் தன்னை வியந்து கொள்ளலாம்எப்போது வியந்து கொள்ளலாம்என்றால்அதற்கும் வழி ஒன்றைக் கூறுகின்றது பவணந்தி முனிவர் இயற்றிய "நன்னூல்"

                  

"மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும்,
தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும்,
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்,
தன்னை மறுதலை பழித்த காலையும்,
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே".

 

இதன் பொருள் ---

 

     மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும் --- அரசனுடைய அவைக்கு எழுதும் சீட்டுக் கவியிலும் (ஓலையில் கவி வடிவில் எழுதிய கடிதம். இதில் கவி எழுதுகின்ற தான் யார்தனது தலைவன் எப்படிப்பட்டவன் என்பது கூறப்பட்டு இருக்கும்.)தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும்--- தன்னுடைய புலமைத் திறத்தை அறியாதவர் இடையிலும்மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் --- பெரியோர் கூடியுள்ள சபையில் வாதம் புரிந்து வெல்லவேண்டிய சமயத்திலும்தன்னை மறுதலை பழித்த காலையும்--- தன்னை எதிரி ஒருவன் பழித்துப் பேசும்போதும்தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே. --- தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் புலவனுக்குத் தக்கதே ஆகும்.

 

     புலவர் என்று சொன்ன உடன்இப்போது உள்ள கல்வி நிலையில் பாடத்திட்டத்தில் உள்ள சிலவற்றைப் படித்துவிட்டு, "புலவர்" என்னும் பட்டத்தைப் பெற்றவர் என்று எண்ணிவிட வேண்டாம். தாம் கற்ற நூற்பொருளைநல்லாசிரியர் ஒருவரிடம் இருந்துஐயம்திரிபு,மயக்கம் அறத் தெளிந்துபுலன்களை வென்று நல்வழியில் நிற்போரே புலவர்.

 

ஐயம் --- நூலின் பொருள் இதுவாஅதுவா என்று ஐயம் உண்டாவது.

 

திரிபு --- நூலின் உண்மைப் பொருளை வேறாக அறிந்துகொள்வது.

 

மயக்கம் --- அறிவு மயக்கம். கற்றும் கேட்டும் தெளிந்த அறிவு இல்லாத நிலை.

 

     புலவர்களின் தன்மை குறித்து, "திருமுருகாற்றுப்படை" தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது காணலாம். இப்படிப்பட்ட புலவர்கள்தான் உண்மை வீரர்கள் ஆவர். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்" என்றார் ஔவைப் பிராட்டியார். இந்த வீரத்துக்கு இழுக்கு நேரும்போதுஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாம்.

 

     கல்விஅறிவுஒழுக்கங்களில் சிறந்தவரைத் தான் ஓர் அரசன்வேற்று அரசனுக்குத் தூதாக அனுப்புவது வழக்கம் என்பதை திருக்குறள் வாயிலாகவும்காப்பியங்கள்புராணங்கள் வாயிலாகவும் அறியலாம். கண்ணன் தூதுவிதுரன் தூதுவீரவாகு தூதுஅனுமன் தூதுஅங்கதன் தூது ஆகிய நிகழ்வுகளைப் படித்தால் விளங்கும். தகுதி மிக்கவரைத் தான் தூதாக அனுப்புதல் வழக்கம். காரணம்காரியம் கெட்டுவிடுதல் கூடாது.

 

     எல்லோரிடத்திலும் தன்னைத் தாழ்த்தியே வந்அனுமன்தனது நாயகன் ஆகிய இராமபிரானுக்குத் தூதாகச் சென்ற போதுஇராவணனுடைய அரசவையில் தனது நாயகனுடைய பராக்கிரமத்தை விளக்கவேண்டிதனது வீரம் விளங்கும்படியாகச் சொன்ன சொற்களையும்,செய்த வீரச் செயல்களையும் நாம் அறிவோம்.

 

     எனவேதன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல்தக்கது அல்ல என்பதும்எந்தச் சூழலில் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாம் என்பதும் இதனால் விளங்கும்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...