காவி ஆடையா? வெள்ளை ஆடையா?
-----
இல்வாழ்க்கையில் மனைவியோடும், மக்களோடும், சுற்றத்தாரோடும் கூடி இன்புற்று வாழ்ந்து, ஐம்பெரும் வேள்விகளாகிய கடவுள் வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி ஆகியவைகளை செய்து வந்ததன் பயனாக, சுவர்க்க உலகம் புகுந்து இன்பத்தை அனுபவிப்பார். ஆதலால், இல்வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்து இன்புற்றவர் எய்தும் சிறப்பு என்பதை "இன்புற்றார் எய்தும் சிறப்பு"என்றார் திருவள்ளுவ நாயனார். தவத்தினைச் செய்து துன்பமுற்று அடையும் விண்ணுலக இன்பத்தை, இல்வாழ்க்கையில் பொருந்தி இருப்போர் இங்கேயே அனுபவிப்பவர் ஆவார் என்பது,
"அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப, வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு"
என்னும் திருக்குறளால் பெறப்படும் தெளிவு ஆகும்.
வேள்வி என்பது விரும்பிச் செய்வது.அறத்தினைப் புரிந்தோர், அதன் பயனாக மேல் உலகத்தில் இன்புற்று வாழ்வர். அறத்தினைப் புரிவதற்கு இல்லறமே சிறந்தது. ஆகையால், "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" எனப்பட்டது.
கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தமது உரையில் "தென்புலத்தார்" என்னும் சொல்லுக்கு, "மெய்யறிவு உடையவர்" என்றே உரை கண்டருளினார். இதுவே, எனக்கும் உடன்பாடானது.
இக் கருத்துக் கொண்ட பாடல் ஒன்று பதினோராம் திருமுறையில், பட்டினத்து அடிகள் பாடி அருளிய "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"யில் வருதலைக் காணலாம்.
"புண்ணிய! புராதன! புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக!
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந!
பூத நாத! பொருவிடைப் பாக!
வேத கீத! விண்ணோர் தலைவ!
முத்தி நாயக! மூவா முதல்வ!
பத்தி ஆகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர்
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத! திரிபு ராந்தக!
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ,
மனையும் பிறவும் துறந்து, நினைவுஅரும்
காடும் மலையும் புக்கு, கோடையில்
கைம்மேல் நிமிர்த்து, கால் ஒன்று முடக்கி,
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி நாளிலும், வார்பனி நாளிலும்,
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்;
சடையைப் புனைந்தும்; தலையைப் பறித்தும்;
உடையைத் துறந்தும்; உண்ணாது உழன்றும்;
காயும், கிழங்கும்,காற்று உதிர் சருகும்,
வாயுவும், நீரும், வந்தன அருத்தியும்;
களர் இரும் கல்லிலும் கண்படை கொண்டும்;
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து,
ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற்காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்;
ஈங்கு இவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுது இன்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்,
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்,
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்,
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்,
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்டு அட்ட
மருப்பின் இயன்ற வாள் அரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உள் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொன் தோரணத்தைச் சுற்றிய துகில் என
அம்மென் குறங்கின் ஒம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்கு மணிமேகலை மருங்கில் கிடப்ப
ஆடரவு அல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணி இயல் கமுகை அலங்கரித்தது போல்
மணி இயல் ஆரம் கதிர் விரித்து ஒளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின் மிசை விரித்து மீது இட்ட
உத்தரீயப் பட்டு ஒருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்இரு காதொடு
பவளத்து அருகாத் தரளம் நிரைத்தாங்கு
ஒழுகி நீண்ட குமிழ் ஒன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்தும் இட்டு அமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டு, கடை மிளிர்தர,
மதி என மாசு அறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழல்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்;
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்கு என்றும், பாடினர்க்கு என்றும், வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்;
பூசுவன பூசியும்; புனைவன புனைந்தும்;
தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்;
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து;
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி;
இவ்வகை இருந்தோம், ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்து ஐந்தும் வாய் இடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின், அந்த
முத்தியும் இழந்திலம்; முதல்வ! அத்திறம்
நின்னது பெருமை அன்றோ! என் எனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லே போல்
நலத்தின் வழார் நின் நாமம்நவின் றோரே".
"நாங்கள் (இல்லற நெறியில்) இவ்வகை இருந்தோம்,ஆயினும் அந்த முத்தியும் இழந்திலம்" என்றதனால், `தம்மைத் தாமே ஒறுப்பவர்,அவ்வாறு ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறுவதில்லை` என்பது பெறப்பட்டது.பல வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டே ஆகும்.மனம் ஒருங்குதலின் பயன், "மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே" ஆகலின்,தம்மைத் தாமே ஒறுத்தும்,அது செய்யாதார்,அந்த முத்தியை அடைவார் அல்லர்` எனவும், "முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்`" எனவும் "எவ்வாற்றானும் சிவனை நினைதலே முத்தி சாதனம்" என்பதும், எனவே, "எதனைச் செய்யினும் அச்சாதனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை" என்பதும் உணர்த்தப்பட்டது.
அப்பர் பெருமானும் இக்கருத்தை, "கங்கை ஆடில் என், காவிரி ஆடில் என்" என்பது முதலாக எடுத்துக் கூறி, "எங்கும் ஈசன் எ(ன்)னாதவர்க்கு இல்லையே" என நியமித்து அருளிச் செய்தார்.
அதனால் அவர்,அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், "மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும்" இகழ்ந்தார் அல்ல.மற்று, எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வலியுறுத்தினர்.
அவைதிகருள் சமணரும் வைதிகரும் மீமாஞ்சகரும் இங்குக் கூறியவாறு, "தம்மைத் தாம் ஒறுப்பதே முத்தி சாதனம்" என்பர்.அது பற்றியே இங்கு வைதிகர் புரியும் தவங்களாகக் கூறி வந்தன பலவற்றுக்கு இடையே, தலையைப் பறித்தல், உடையைத் துறத்தல், உண்ணாது உழலல், கல்லில் கண் படைகொள்ளல் ஆகிய சமணர் தவங்களையும் கூறினார்.
கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம்முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை விட்டு, துறவு வாழ்க்கையில் நிற்க முயல்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்ந்து இல்லற நெறியில் நிற்பவர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.
கல்லின் இயல்பு, யார் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியில் சேர்த்தல்` என்பது இவ்வுவமைகளால் விளக்கப்பட்டது.
சிவனை நினையாது பிறவற்றை எல்லாம் செய்வோர் அச்செயல்களுக்கு உரிய பயன்களை மட்டுமே பெறுவர். பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறமாட்டார் என்பது கருத்து.
துறவு என்பது எது? சாதுக்கள் யார் என்னும் நேற்றைய பதிவில் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது, காவி உடுப்பதும், தாழ்சடை வைப்பதும், காய்கனி துய்ப்பதும் ஒழிந்து, இல்லற நெறியில் நின்று, ஐம்புலன்களையும் ஆர அனுபவித்து, இல்லறக் கடமைகளைச் செவ்வனே ஆற்றி நின்று, இறைவனையும் மறவாது ஒழுகுதலே ஆகும்.
இறைநெறியில் நிற்போர்க்கு வேண்டுவது காவி ஆடை அல்ல என்பது தமிழ் நெறி. காவி ஆடை உடுத்துவது, புறச்சமயங்கள் ஆகிய சமணம், புத்தம் ஆகியவற்றில் நிற்போர் கொள்ளுவது.
அப்பர் பெருமான் சமண சமயத்தில் இருந்து வந்தபோது, அந்த சமயத்துக்கு உரிய காவி ஆடை முதலானவற்றோடு இருந்தார் என்பதும், சமணத்தைத் துறந்து, சைவத்தை மீண்டும் சார முனைந்தபோது, காவி ஆடையைத் துறந்து, சமண சமயத்துக்கு உரிய சின்னங்களை விடுத்து, சைவசமயத்துக்கு உரிய வெள்ளை ஆடையைத் தரித்துக் கொண்டார் என்பதும், பின்வரும் பெரியபுராணப் பாடல்களால் அறியப்படும்.
"எடுத்தமனக் கருத்து உய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே,அயர்வுஒதுங்க,
திருஅதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய்ஒழிய
உறிஉறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப்
போவதற்குத் துணிந்து எழுந்தார்". --- பெரியபுராணம்.
இதன் பொருள் ---
மனத்தில் எழுந்த (சமணத்தை விட்டு, சைவத்தைச் சாரவேண்டும் என்னும்) இந்தக் கருத்தானது,தாம் பிழைத்தற்கு உரியதாய் இருக்க, மனத்தில் எழும் முயற்சியும் கூட, உள்ளத் தளர்ச்சியும், மனத் தளர்ச்சியும்நீங்கிய அளவில், திருவதிகையினை அடைவதற்கு, தாம் இதுவரையில் உடுத்தி உழன்ற பாயை ஒழித்து, உறியில் தூக்கிய குண்டிகையை ஒழித்து, கொண்ட மயிற்பீலியும் ஒழித்துப் போவதற்குத் துணிந்து எழுந்தாராகி.
"பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடம்கழிந்து,
மெய்தருவான் நெறிஅடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து,
கைதருவார் தமைஊன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவ மாதவர் வாழும்
திருஅதிகை சென்று அடைவார்". --- பெரிபுயாணம்.
இதன் பொருள் ---
பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய இழிந்த சமணர்கள் வாழும் இடத்தில் இருந்து நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத் தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கு ஏற்றவாறு வெண்மையான ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி வருவார்மீது ஊன்றியவாறு,சமணர்கள் காணாத வண்ணம், தவம் செய்யும் மாதவர் (ஆகிய திலகவதியார்) வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்,
மெய்தருவான் --- சிவபெருமான். வெண்புடைவை மெய் சூழ்ந்து --- சமணரின் காவி உடையை நீக்கிச் சைவருக்குரிய வெண்மையான உடையை அணிந்து.
திருவதிகை சேர்வதற்குத் தகுதிஉடையவராய்த் தம்மை ஆக்கிக்கொள்ளும் பொருட்டு,முன் தாங்கிய சமணசமயவேடங்களை விட்டு, வெண்புடைவை மெய் சூழ்ந்து உரியபடி சென்றனர் அப்பர் பெருமான். இந்நாளில் தவம் செய்வதற்குஉரிய உண்மையான தவக்கோலம்தாங்காது,தூய வெள்ளை ஆடையை உடுத்திக் கொள்ளாமல், பலப்பல வேடங்களுடன், வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு, திருத்தலங்களுக்குச் செல்வோர் இவ்வுண்மையை உணர்ந்து அதற்குத் தக்கவாறு ஒழுகுவாராயின் நலம் பெறுவர்.
சைவ சமயத்துக்கு உரிய மடங்களில் உள்ளோர் காவி ஆடையை உடுத்துவதும், தாழ்சடைகளை வைத்துக் கொள்வதும் சைவ நெறிக்குப் புறம்பானவை என அறியலாம்.
துறவு நெறியில் நிற்போர், எல்லாவற்றையும் துறந்து வந்தோர் ஆவர். பூர்வாசிரமத்தில் தாம் அனுபவித்தவை எல்லாம் அவருக்கு வேண்டாதவை ஆயின. எனவே, துறவு பூண்டு, காவி ஆடை தரித்து, சடையையும் வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு இருக்க, அண்மையில் ஒரு மடாதிபதிக்கு, மணிவிழா கொண்டாடப்பட்டதையும், அப்போது அவர் தமது பூர்வாசிரம இல்லாளுக்கு மாலை அணிவித்ததையும் அறிய, சைவ நன்னெறியில் இருந்துகொண்டே, அந்நெறிக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் வெற்று வேடதாரிகளும் உள்ளனர் என்பதும் அறியப்படும். துறவு நெறியில் நிற்போர்க்கு, இல்லறச் சடங்குகள் தேவை அற்றவை.
"நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறி ஒன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே". --- திருவாசகம்.
இதன் பொருள் ---
நெறி அல்லா நெறி தன்னை --- நல்ல வழி அல்லாத வழியை, நெறி ஆக நினைவேனை --- நல்ல வழியாக நினைக்கின்ற என்னை,சிறு நெறிகள் சேராமே --- சிறு வழிகளை அடையாமல், திருவருளே சேரும் வண்ணம் --- திருவருளையே அடையும் படி, குறி ஒன்றும் இல்லாத கூத்தன் --- தனக்கென வடிவம் ஒன்றும் இல்லாத கூத்தப் பெருமான், தன் கூத்தை --- தனது அருள் விளையாட்டை, அறியும்வண்ணம் --- நான் அறிந்துகொள்ளும்படி, எனக்கு அருளியவாறு --- எனக்கு அறிவித்தருளிய தன்மையினை,ஆர் பெறுவார் --- வேறு யார் பெற வல்லவர்? அச்சோ --- இது அதிசயமே.
நெறியல்லா நெறியாவது, சிவபெருமானை நினையாது பிறவற்றை நினைக்கின்ற நெறி. திருவருள் நெறியாவது, அவனை நினைந்து அவன் அருள்வழி நிற்கின்ற நெறி.
No comments:
Post a Comment