தமிழர் நெறி வழங்கும் நெறி - வாங்கும் நெறி அல்ல.

 


தமிழர்நெறி வழங்கும் நெறி! வாங்கும் நெறி அல்ல.

-----

 

     "ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே" என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படிஈகை என்பது உயர்ந்தோன் ஒருவன் அவனிலும் தாழ்ந்தோனுக்குஅவன் வேண்டியதை மகிழ்ந்து அளித்தல் ஆகும். தரித்திரராய் வந்தோர்க்குஒன்றைக் கொடுத்துப் பிறிது ஒன்றை வாங்காமை ஈகை ஆகும்.

 

     எனவேஈகை என்னும் ஓர் அதிகாரத்தைத் திருக்குறளில் வைத்தார் நாயனார். இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒரு பொருளும் இல்லாதவர்க்குஅவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதேபிறர்க்குக் கொடுத்தல் என்னும் ஈகை ஆகும். அது அல்லாமல்தரித்திரர் அல்லாதுஒத்தார்க்கும் உயர்ந்தார்க்கும் கொடுத்தல் என்பதுஒரு பயனை எதிர்பார்க்கும் தன்மையினை உடையது" என்கின்றார் நாயனார். தன்னோடு ஒத்தார்க்கும்தன்னிலும் உயர்ந்தார்க்கும் கொடுப்பவை,திரும்பவும் தம்மிடம் வருதலினால்அது ஈகை ஆகாது.

 

     ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும்ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்"கூறுகின்றது. அது வருமாறு....

 

"மாண்பு உடையாளர்கேண்மையர்தத்தம்

     வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,

சேண்படு நிரப்பின் எய்தினோர்புரப்போர்

     தீர்ந்தவர்தந்தைதாய்குரவர்,

காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர்

     ஒன்பதின்மரும் உளம் களிப்ப,

வேண்டுறு நிதியம் அளிப்பின்மற்று ஒன்றே

     கோடியாம் என மறை விளம்பும்".

 

"முகன் எதிர் ஒன்றும்பிரியின் மற்றுஒன்றும்

     மொழிபவர்விழைவுறு தூதர்,

அகன்ற கேள்வி இலார்,அருமருத்துவர்கள்,

     அரும்பொருள் கவருநர்தூர்த்தர்,

புகல்அரும் தீமை புரிபவர்மல்லர்,

     செருக்கினார்புன்தொழில் தீயோர்,

இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்

     ஈந்திடல் பழுது என இசைப்பார்".

 

எனவே

 

"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை,மற்று எல்லாம்

குறி எதிர்ப்பை நீரது உடைத்து"

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.   

 

     தமது வறுமை நிலையைப் பொறுத்துக் கொள்ளும் வல்லமை உடைய ஒருவருக்கு ஒரு பொருளைத் தந்து உதவுவது என்பது அறம் ஆகாது. அது அறத்தை விலை பேசுவது ஆகும். உண்ணவும் வழி இல்லாதவரின் வறுமை நிலையைத் தீர்த்து வைப்பதே உலகின் உண்மை நெறி ஆகும். எனவேஇந்த மண்ணுலகத்தில் வாழுகின்ற மக்களுக்குஅவர்களது பசியைப் போக்கிக் கொள்ள உணவைக் கொடுத்து உதவியவர்கள் யாவரும்உயிரைக் கொடுத்தவரே ஆவார் என்கின்றது "மணிமேகலை" என்னும் காப்பியம்.

 

"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை;

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே"    --- மணிமேகலை.

 

     இந்தப் பிறவியில் ஒருவருக்கு நாம் ஓர் உதவியைச் செய்தோமானால்அது அடுத்த பிறவியில் வந்து உதவும் என்று எண்ணிஉதவியைச் செய்தவதும் ஒருவகையான வாணிகமே. அது "அறவணிகம்", "அறவியாபாரம்" எனப்படும்.

 

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்,பிறரும்

சான்றோர் சென்ற நெறி என

ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே".   --- புறநானூறு.

 

    பிற உயிர்களின் துன்பத்தைக் காணச் சகியாமல் உதவுவது வள்ளல் தன்மை ஆகும். வள்ளல் என்று நம்மைப் போற்றுவார்கள்பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து வழங்கும் நிலை அன்றைய தமிழரின் நிலை அல்ல. என்ன உதவுகின்றோம்எதற்காக உதவுகின்றோம்யாருக்கு உதவுகின்றோம்உதவுவது தகுதிதானா என்றெல்லாம் சிந்திக்காமல்பிறர் துன்பத்தைக் கண்ட மாத்திரத்திலேயே மனதில் என்ன தோன்றுகின்றதோஅதை உதவுவது வள்ளல்களின் தன்மை. தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாதிருந்த ஒரு முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரையே ஈந்தான் பாரி. அது அவசியமற்றது. அவனிடத்தில் ஒரு கொம்பு கூட இல்லாமல் இல்லை. தன்னுடன் வந்த பரிசனத்தை ஏவி இருந்தால்ஒர் அழகான பந்தலையே அமைத்து இருப்பார்கள். அப்படி இருக்க,முல்லைக் கொடிக்கு,தேர் அவசியமா?என்று தோன்றலாம். உதவவேண்டும் என்று தோன்றியது. உதவிவிட்டான் பாரி வள்ளல்.

 

    ஒருநாள் பேகன் வெளியிலே காலாற உலாவி வரப் புறப்பட்டான். அவனுடன் இரண்டு மெய்க்காவலர் சென்றனர். அது கார் காலம். மேகம் வான முழுதும் கப்பிக் கொண்டிருந்தது. குளிர் காற்று மெல்ல வீசியது. நெடுந்தூரம் சென்றவன் மீண்டு தன் இருப்பிடத்தை நாடி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் அழகிய காட்சியைக் கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண்மயில் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அவன் அங்கே சற்று நின்றான். மயில் தன் இயல்புப்படி சர் சர் என்ற ஒலி உண்டாகும்படி தோகையை அசைத்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியது. வாடையால் அந்த மயில் மெலிந்து போனதாக எண்ணிதான் அணிந்திருந்த போர்வையை அந்த மயிலுக்குப் போர்த்தி விட்டான். தான் அணிந்திருந்த விலை உயர்ந்த போர்வை மயிலுக்குத் தேவை அற்றது. அவனிடத்தில் வேறு போர்வை இல்லாமலா இருந்திருக்கும்உதவவேண்டும் என்று எண்ணினான். குளிருக்குக் காவலாகத் தான் அணிந்திருந்த போர்வையைத் தந்துவிட்டான்.

 

    காட்டில் படர்ந்த முல்லைக்கும்வாடையால் மெலிந்த மயிலுக்கும் வேறு பொருள்களைக் கொண்டு அவைகளின் துன்பத்தை நீக்க வழிவகைகளை பாரியும்பேகனும் உடையவர்கள்தான். இருந்தும் ஏதும் இல்லாதவர் போன்றும்ஏதும் அறியாதவர்கள் போன்றும் உயர்வுடைய தமது பொருள்களைக் கொடுத்து உதவியால்அறிந்தும் அறியாதவர் போன்று செய்கின்ற செயல்களுக்கு,"அறிமடம்" என்று பெயர். அறிந்திருந்தும்என்ன செய்யவேண்டும் என்று அறியாதவர்கள் போல இவர்களது செயல் இருந்தது. இந்த அறிமடம் என்பதும் சான்றோர்க்கு ஒரு அணிகலன் என்கின்றது நமது பழந்தமிழ் நூல்கள்.

 

"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் --- சொல்லின்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்கு அணி". --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!,  காட்டில் படர்ந்தும் படராது இருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும்வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாம் அறிந்துள்ளோம். இது குறித்து சொல்லப்போனால்சான்றோர்களுக்குஅவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களும் கூடச் சிறப்பையே தருவதாக இருக்கும்.

 

     அறிமடம் --- அறிந்தும் அறியாது போன்று இருத்தல்.

 

"முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் 

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை 

இரவாமல் ஈத்த இறைவன்போல் நீயும் 

கரவாமல் ஈகை கடன்".--- புறப்பொருள் வெண்பாமாலை.

 

இதன் பொருள் ---

 

     முல்லைக்குத் தனது அழகிய தேரினையும்மயிலுக்கு அழகிய நீலப் போர்வையினையும்எல்லை கடலாக உடைய உலகத்தே தம்புகழ் விளங்குமாறுமுற்காலத்தேஅவை கேட்காத போதும் கொடுத்த வள்ளல்களைப் போலநீயும் கரவு ஏதும் இன்றிக் கொடுத்தலே உனக்குக் கடமையாகும்.

 

"நல்லாறு எனினும் கொளல் தீதுமேல்உலகம்

இல்எனினும் ஈதலே நன்று"

 

என்று திருவள்ளுவர் கூறுவார். ஒளவைப் பாட்டி "இட்டார் பெரியோர்இடாதார் இழிகுலத்தோர்என்றே கூறினார். 

 

     துன்பத்தில் உள்ளோர்க்கு ஒன்றையும் கொடுத்து உதவாமல்கொள்வதையே தொழிலாக கற்றறிந்தவர்கள் சிலர் இருக்கவும் இக்காலத்தில் காண்கின்றோம். இது மனித இயலுக்கு மாறானதாகும். கொடுப்பதிலேதான் உயிரானது,அன்பைப் பெறுகிறது. இன்பத்தை அடைந்து அனுபவிக்கிறது. உலகின் எல்லா உயிர் இனங்களுமே கொடுப்பதில் தான் மகிழ்ச்சி அடைகின்றன. செடிகள்கொடிகள்மரங்கள் மனித குலத்திற்கு வழங்கும் கொடைஎவ்வளவு அற்புதமானவை! அவை யாரிடத்திலும்எதையும் கேட்டுப் பெறுவது இல்லை. தமக்கு வேண்டியது கிடைத்தால் வாழ்கின்றன. இல்லையேல் மடிகின்றன. கொடுப்பதை விடகொள்வது என்பது தகுதிக் குறைவானதுதான்.

 

     எனவேதான்நமது தமிழ் முன்னோர்கள்இத்தகு கொடை வளத்தை உயிரெனப் போற்றினர். தமிழன் பொருளீட்டுவான். ஏன்தான் வாழவாஇல்லைபிறரை வாழ்விக்கவே! வாழ்விப்பதன் மூலமே அவன் வாழ்வான். இயல்வது கரவேல்’ என்பது அவனது பொருள் பொதிந்த வாழ்க்கைப் பழமொழி. கொடைத் தன்மைக்கு கையிலுள்ள பொருள் ஓர் அளவல்ல. அத்தகு உயர்ந்த பண்பானதுஇன்றைக்கு உருக் குலைந்து வழங்கும் பண்பற்ற பழமொழியாகிய "தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்"என்ற பழமொழியின் பாங்கு அல்ல.

 

     ஈதல்அதனால் புகழ் உற வாழ்தல்இவை இரண்டும்தான் உயிருக்கு ஊதியமானவை என்று உணர்ந்து வாழ்ந்தவன் தமிழன். "ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். சேர்த்து வைக்கின்ற சொத்து உயிருக்கு ஊதியமாக வராது.

 

     சிலர் கொடுப்பர்ஆனாலும் அது கொடையாகாது. பெறுவான் தவம் தூண்டப் படுவதால் கொடுப்பதும் உண்டு. அது கொடை அல்ல. நன்கொடை என்று வலியுறுத்தி வாங்குகின்றனர். அது நல்ல கொடை அல்ல. இயல்பாக நிகழ்வதே கொடை. ஏதாவதொரு தூண்டுதலின் மூலம் கொடை நிகழுமானால் அதுவும் கொடை அல்ல. கொடைக்குக் கொடையே குறிக்கோள்! அவ்வாறு இல்லாமல்கொடைக்கு வேறு உள்நோக்கம் வருமானால் அது கொடை அல்லவணிகமே! அறவிலை வாணிகர் ஆதலைத் தமிழகத்து ஆன்றோர் விரும்பியதில்லை. இவை எல்லாவற்றையும் விட கொடை வழங்கக் காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தப்படுமாயின் கொடை தருபவனின் தகுதி குறையும். பெறுபவனின் துன்பம் பெருகும். பெறுகின்றவரின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டும் கொடுத்தல் கூடாது. பெறுவான் தகுதியை உயர்த்தும் வகையில் கொடை நிகழுதல் வேண்டும். ஆதலால் காலம் தாழ்த்திக் கொடை அளித்தல் தகுதியுடையது அல்ல. சிலர் காலம் தாழ்த்துதல் மட்டுமின்றிப் பலதடவை கூறிக் காலத்தைத் தள்ளிப்போடுவர். சிலர் கொடைக்கு மனம் இருப்பதாகவும் ஆனால் காலம் ஒத்து வரவில்லையென்றும் கூறுவர். அங்ஙனம் கூறுதல் வண்மைக்கு அழகல்ல; அது வாழும் நெறியும் அல்ல.

 

"உடையவர்கள் ஏவர்வர்கள் என நாடி,

     உளமகிழ ஆசு ...... கவிபாடி,

உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது

     என உரமுமான ...... மொழிபேசி,

 

நடைபழகி மீள,வறியவர்கள் நாளை

     நடவும் என வாடி,...... முகம்வேறாய்,

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு

     நளின இரு பாதம் ...... அருள்வாயே".

 

என்னும் திருப்புகழ்ப் பாடலில் இந்த நிலையை வைத்துக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய்அவர்கள் மனம் மகிழும்படிஆசு கவிகள் பாடியும்உங்களது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும்ஓயாது நடந்து நடந்து சென்றும்பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வாநாளை வா” என்று அந்தத் தனவந்தர் கூற,அதனால் அகமும் முகமும்வாடி வருந்துதற்கு முன்னரேயேசிவந்தவொளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.

 

     ஒரு காசும் கொடுக்க மனமில்லாதஅடுத்த வீட்டுக்கும் தெரியாத பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளிகொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையை உடையவர்அள்ளி வழங்குகின்ற வள்ளல்பரம தாதாதங்களின் புகழ் மேருகிரி போல் உயர்ந்ததுமேருகிரி வரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள்.அதனால் புலவன்அகம் வாடிமுகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவான்.

 

     பின்வரும் வரும்  திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் நமது பழந்தமிழர் பெருமையைப் பறைசாற்றும்.

 

"நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல,நாளையும்

உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,

பிச்சர் நச்சரவு அரைப் பெரிய சோதி,பேணுவார்

இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே".

 

"மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,

தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,

ஏலும் பதிபோலும்,இரந்தோர்க் கெந்நாளும்

காலம் பகராதார் காழிந் நகர்தானே".

 

எனவரும்  திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களைச் சிந்தித்தல் நலம்.

 

     திருஞானசம்பந்தர் காலத்தில் சீர்காழியில் வாழ்ந்த மக்கள்கொடையில் சிறந்தவர்கள்வழங்குவதில் புகழ்பெற்றவர்கள்காலத்தில் கொடுத்தவர்கள்எக்காரணத்தை முன்னிட்டும் நாளை’ என்றும், ‘மறுநாள்என்றும் காலம் கூறிக் கடத்தாமல் வழங்கியவர்கள். அது அந்த மண்ணின் பெருமை. அதனால்தான் போலும்திருஞானசம்பந்தர் அழுதவுடன் அவருடைய தந்தை யார் என்று தேடாமல் - தேடி உணர்த்தாமல் - நேரடியாகவே - உடனடியாகவே அன்னை பராசக்தி பாலைக் கரந்து ஊட்ட முன் வந்தாள். காலம் பாராமல் உதவுவது கடவுள் இயல்பு ஆகும்.

 

     இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாது உதவவேண்டும். கைம்மாறு கருதுதல் கூடாது. அது அற வணிகம் ஆகும். நாளை வாநாளை மறுநாள் வா என்று சொல்லி அலைக்கழித்துஇறுதியில் இல்லை என்று சொல்லுகின்ற இழிகுணத்தைத் தவிர்க்கவேண்டும். ஒருவருக்கு உதவி செய்ய வாய்ப்பு வந்தால்அது இறைவன் தந்த நல்வாய்ப்பு என்று கருதிஒல்லும் வகையால் உதவி செய்தல் வேண்டும்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...