தன்னைத் தானே புகழ்தல் கூடாது.

 


தன்னைத் தானே புகழ்தல் கூடாது.

-----

 

     தன்னிடத்தில் பெருமை உள்ளவன்அது குறித்து யாராவது பாராட்டினால் நாணப்படுவான். அதுதான் பெருமை. ஆனால்சிறுமையானதுதன்னைப் பிறர் புகழவேண்டும் என்று விரும்புவதோடுதன்னைத் தானே பாராட்டிக் கொள்ளவும் செய்யும். அப்படிப் பாராட்டும்போதுபிறரிடத்தில் உள்ள குறைகளைத் தூற்றும். "நீ ஏன் இந்தத் தவறு செய்தாய்" என்று யாராவது கேட்டால் போதும். உடனே சீறி எழுந்து, "நான் யாரும் செய்யாத தவற்றையா செய்துவிட்டேன். அவர் செய்யவில்லையாஇவர் செய்யவில்லையா?" என்று தலைகால் திமிர்க்கக் குரலை உயர்த்தும். தவறு என்று தெரிந்தால்தன்னைத் திருத்திக் கொள்வதுதான் பெருந்தன்மை. திருப்பிக் குரைப்பது சிறுமை. 

 

     உயிர்க்கு,சிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்),மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்டவர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழவிப் பருவத்தே முளைத்து,இளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சை நன்மையினும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலால் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. கன லோபம்நில்லாது செல்லும் செல்வத்தின்பால் உளதாகும் கடும்பற்று. செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்வன பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடுமோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உளதாவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையதாகலால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடுமதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்ததுஅது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை"ஏமம் அறும் மாற்சரியம்என்றும்,அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது அன்றிஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். விழல்--- பயனில்லாதது.

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும்அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.இந்த அதிகாரத்துள்வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தான் மிகவும் உயர்ந்திருக்கும் காலத்தில் கூட,எப்போதும் தன்னை ஒருவன் மதம் காரணமாக வியந்துகொள்ளக் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களில் விருப்பம் கொள்ளாது இருக்கவேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     "மதம்" என்னும் சொல்லுக்குகருத்து,கொள்கைஅறிவு,இசைவுபோதனை,பெற்றதைப் பெரிதாக மதிப்பதுவலிமை,செருக்குவெறிகாமவிகாரத்தின் மிகுதி என்றெல்லலாம் பொருள்கள் உண்டு. ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும்போது "மதம்" பிடிக்கின்றது. மதம் என்பதை ஒரு பேய் என்றார் வள்ளல்பெருமான். "மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்" என்று வேண்டினார். பேயால் பிடிக்கப்பட்டவன் செயல் எல்லாம் தன் செயலாக இருக்காது. பேயின் செயலாகவே இருக்கும். "கொடுமதம் என்னும் கண்கெட்ட துட்ட ஆங்காரி" என்று வள்ளல்பெருமான் அருளியதை எண்ணுக. மதம் பிடித்தவனுக்குக் கண் தெரியாது. எதிரில் யார் வந்தாலும் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டாத துட்டத்தனம் நிறைந்து இருக்கும்.

 

     ஒருவன் செல்வத்தினால் அல்லது அதிகாரத்தினால் மிக உயர்ந்த தகுதியை அடைந்த காலத்திலும்தன்னை அதிகமாக எண்ணிக் கொள்ளுதல் கூடாது. தன்னினும் மேம்பட்டார் இல்லைதன்னை வெல்வார் இல்லை என்று கருதுவானானால் அது அவனுக்குப் பெரும் தீங்காக முடியும். தன்னால் ஒரு காரியமும் ஆகாத நிலை இருந்த போதும்செல்வம் அல்லது அதிகாரச் செருக்கினால்,தான் எந்தச் செயலையும் செய்து முடிப்பேன் என்று தருக்கி இருப்பானாயின்அவனுக்குப் பழியும்பாவமும்,கெடுதியுமே வரும் அல்லாது நன்மை ஏதும் வராது. குற்றங்களுள் மதம் என்னும் குற்றத்தைப் பற்றியும்மானம் என்னும் குற்றத்தைப் பற்றியும்,

 

"வியவற்க எஞ்ஞான்றும் தன்னைநயவற்க

நன்றி பயவா வினை"

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.  

 

     பின்வரும் பாடல்கள் சிந்தனைக்கும்பின்பற்றுதலுக்கும் உரியவை ஆகும்.   

 

"உன்பால் உறும் உயர்வை ஓர்ந்துபிறர் பாராட்டின்

இன்பாம்நீ சொன்னால் இளிவாமே --- பொன்புனைந்த

தன்முலையைத் தன்கையால் தான்வருடின் ஒருமங்கைக்கு

உள்மலி இன்பு உண்டோ உணர்".   --- தருமதீபிகை.

 

     ஒருவனுடைய உயர் நலங்களை உலகத்தார் பலமுறையும் கூர்மையாக ஆராய்ந்துஉணர்ந்து பாராட்டிப் புகழ்ந்து கொண்டாடினால்,அது இன்பத்தைத் தரும். தன்னைக் குறித்துப் பிறர் பெருமையாகப் பேசவேண்டும்எண்ணிக் கொள்ளவேண்டும் என்பது மனித இயல்பு. தானே தனது பெருமையைச் சொல்ல நேர்ந்தால்அழகிய மங்கை ஒருத்திதனது கொங்கையைத் தானே வருடியது போல் நகைப்புக்கே இடமாகும்.

 

     ஒரு மனிதனுடைய உயர்வை அறிவுடைய பிறர் கூறினால்அது இருபாலார்க்கும் இனிமை தரும். அவ்வாறு அல்லாமல்தானே தனது பெருமையைப் பேசப் போவது யாருக்கும் இனிமையைத் தராது.

 

"எம்மை அறிந்திலிர்,எம்போல்வார் இல் என்று

தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று: - தம்மை

அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள்".       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     "எமது தகுதியை நீர் அறிந்திருக்கவில்லைஎம்மைப் போன்ற தகுதி டையார் பிறர் யாரும் இல்லை"என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துப் பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாதுதம்மை அருமைடையவர் என்றுஅறவழியைஉணர்ந்த சான்றோர் மதித்து ஏற்றுக் கொள்ளுதலே பெருமையாகும்.

 

      தம்மைச் சான்றோர் பெரியர் என மதித்து ஏற்குமாறு தமது செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே நல்லது. தம்மைத் தாமே பெரியர் என வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது.

 

"கற்றனவும்,கண்அகன்ற சாயலும்,இற்பிறப்பும்,

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்".        --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தனக்கு உள்ள கல்வி அறிவு தனது நெடிது உயர்ந்த தோற்றம்தனது உயர் குடிப் பிறப்புப் பெருமை ஆகியவற்றைத் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பாராட்டிப் பேசினால் அது பெருமை ஆகும். அவ்வாறன்றித் தன்னைத் தானே புகழ்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டால்,  அப்படிப்பட்டவனைகண்டபோது முகமன் கூறி விளையாடி உடன் இருந்துஅப்பால் சென்றுமருத்துவர் பலர் கூடி மருந்து கொடுத்தால் கூடத் தேற்ற முடியாத பித்தன் இவன் என்று இகழுபவர்கள் மிகப் பெருகுவார்கள். 

 

     அறிவுடையோர் நன்னெறியில் ஒழுகி வருவதால்அவரது தன்மையைப் பிறர் என்றுமே பாராட்டுவர். அறிவில்லாதவர் அவ்வாறு இல்லாமையால் அவரைப் பாராட்டுவார் இல்லை. தம்மைத் தாமை புகழ்ந்து கூறுவது இழிவு என்பது அறிவிலிக்குத் தோன்றாது. எனவே,தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்ளுகின்ற இவரது பித்துத் தன்மையானதுமருந்தினால் தீராது என்றார்.

 

"தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவதுஇன்பம்

நயவாமை அன்றே நலம்"          --- நீதிநெறி விளக்கம். 

 

இதன் பொருள் ---

 

     தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் என்பது,குளிர்ந்த நீரை விட்டு எரிகின்ற நெருப்பை வளர்க்க நினைத்தது போல ஆகும். தீ வளரும் என்று குளிர்ந்த நீரை விட்டால்முன் இருந்த தீயும் எவ்வாறு அணைந்து போகுமோஅதுபோலதனது மதிப்பு உயரும் என்று நினைத்துஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொண்டால்தனக்கு முன்னர் இருந்த நன்மதிப்பும் அழிந்து போகும். எனவேஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பது மதிப்பை உண்டாக்கும்.

 

"சடம் அதைக் கழுவ உன்னிச்

      சகதியில் தோய்தல் போலும்,

சுடரினைத் தூண்ட வேண்டி

            ஊதியே தொலைத்தல் போலும்,

மடமையால் தன்னைத் தானே

            புகழுவோன் வசைகள் எல்லாம்

புடவியே எடுத்து உரைக்கப்

             பூணுவன் நிந்தை அம்மா".               --- நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     உடம்பைக் கழுவுவதற்காக் குளிக்கவேண்டும் என்று நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும்விளக்கைத் தூண்ட விரும்பி அதனை ஊதி அணைத்தலும்போலஒருவன் அறியாமையால் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வானானால் உலகோர் அவனுடைய பழியையே எடுத்துரைப்பர். அதனால் இகழ்வு  பெறுவான்.

 

"தற் புகழ்வோன் தனைப் பழிக்கும் தாரணி,

சொற்புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்,

நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு

அற்பமும் தற் புகழாமை ஆகுமே".        --- நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு செருக்குபவனை உலகில் உள்ளவர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். எனவேநல்ல புகழைஒருவன் பெறுவதற்குச் சிறந்த உபாயம்பிறருக்கு நன்மை செய்தலும்தன்னைத் தானே சிறிதும் புகழ்ந்து கொள்ளாமையுமே ஆகும்.

 

     தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவதோடுதன்னைத் துதி பாடுவதற்காகவே ஒரு கூட்டத்தையும் சிலர் வைத்து இருப்பர். இதனால்அவரத் செல்வ நிலை மற்றும் அதிகார நிலையை வைத்துஅவரைக் கண்டபோது வேண்டுமானால்இச்சகம் பேசுவார்களே ஒழியபுறத்திலே சென்று தூற்றிப் பேசுபவர்களும்இகழ்பவர்களுமே இருப்பார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

 

     புகழ் என்பது மலரில் இருந்து வீசுகின்ற நறுமணம்,காற்று வீசுகின்ற திசைகளில் எல்லாம் தன்னாலேயே பரவுவது போல அமைந்து இருக்கவேண்டும். சரிஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுகின்றான் என்றால்அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது குறித்துத் திருவள்ளுவ நாயனார் கூறுவது காண்போம்.

 

"அமைந்தாங்கு ஒழுகான்அளவு அறியான்தன்னை

வியந்தான் விரைந்து கெடும்".

 

இதன் பொருள் ---

 

     சூழலுக்கு ஏற்றபடி பொருந்தி வாழாதவன்தனது வலிமை என்னவென்று அறியாதவன்தன்னைத் தானே வியந்து கொள்ளுவான். அப்படிப்பட்டவன் விரைந்து கெட்டுப் போவான்.

 

     "அமைந்தாங்கு ஒழுகுதல்"அமைவு உடையவனாய் ஒழுகுதலைக் குறிக்கும். தனக்கு நட்பாக உள்ளவர்களோடு பொருந்திய முறையில் நடக்கவேண்டும். ஒத்துப்போக முயலவேண்டும்தனக்கு எதிரானவர்களை அவர்களின் வலிமை அறிந்து பகைத்துக் கொள்ளவேண்டும் மேலும்ஒரு செயல் நல்ல முறையில் நிறைவேறி முடிந்தால்அதனைப் பிறர் பாராட்டி விட்டால்தான் செய்கின்ற மற்ற எல்லாச் செயல்களும் அவ்விதமே அமையும் என்னும் பெருநம்பிக்கை கொண்டுஅதனால் செருக்குற்று நடக்கக் கூடாது. 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...