திருஞானசம்பந்தர் காட்டிய செந்தமிழ் நெறி

 


திருஞானசம்பந்தர் காட்டிய செந்தமிழ் நெறி

-----

 

     செந்தமிழையும் சிவநெறியையும் போற்றி வளர்த்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. நாயன்மார்கள்பழுத்த மனத்து அடியார்கள் எனப் பலர்காலந்தோறும் தோன்றிதிருநெறிய தமிழைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர். தமிழினத்தை ஆண்ட மூவேந்தர்களும் தண்ணார் தமிழைப் பேணுவதிலும் சிவநெறியைப் பேணுவதிலும் முன்னின்றனர். செந்தமிழையும் சிவநெறியையும் பேணி வளர்த்த நாயன்மார்களில் முதலில் நின்றவர் திருஞானசம்பந்தர்.

 

     திருஞானசம்பந்தர் தம்மைத் தமிழ்ஞான சம்பந்தர்” என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ந்தார். திருஞானசம்பந்தரைப் போற்றவந்த நம்பிராரூரர், “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்” என்று போற்றினார். சீகாழியில் சிவபாத இருதயர் - பகவதியார் ஆகிய இருவரும் தவம் செய்து பெற்ற குழந்தை திருஞானசம்பந்தர். இன்று நம் நாட்டில் ஆஸ்திக்கு ஒரு பிள்ளை” என்பர். அங்ஙனம் நினைத்த பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை அல்ல திருஞானசம்பந்தர். செந்தமிழையும் சிவநெறியையும் பேணி வளர்க்கக் குழந்தை வேண்டும் என்று தவம் செய்து பெற்ற குழந்தை. இளமையிலேயே அழுது உமையம்மையால்சிவஞானம் கலந்த பாலூட்டப் பெற்ற குழந்தை. மனம் வாக்குகளுக்கு அப்பாற்பட்ட கடவுளைக் கைவிரலால் சுட்டிக்காட்டி,

 

"தோடுடைய செவியன் விடையேறி ஓர்

தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப் பொடியூசி என்

உள்ளம் கவர்கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்

தேத்த அருள் செய்த

பீடுடைய பிர மாபுரம் மேவிய

பெம்மான் இவனன்றே!"

 

என்று அம்மையப்பனை அடையாளம் காட்டிய குழந்தை. உமையம்மையார் ஊட்டிய பால் பைந்தமிழ்க் கவிதைகளாக மலர்ந்தன. தமிழ்நாடு முழுதும் உள்ள திருக்கோயில்கள் தோறும் சென்றுஞானத் தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவினார் திருஞானசம்பந்தர்.

 

     திருஞானசம்பந்தரின் தமிழ்வெல்லும் தமிழ்நீரையும் நெருப்பையும் வென்று விளங்கிய தமிழ். சாம்பலைபூம்பாவையாக்கியது திருஞானசம்பந்தருடைய அருந்தமிழ். திருஞானசம்பந்தர் தாம் அருளிச்செய்த பதிகங்கள்தோறும் கடைக்காப்புப் பாட்டில் பதிகம் ஓதுதலின் பயன் என்ன என்பதையும் அருளிச்செய்கின்றார். ஏன்திருஞானசம்பந்தரின் தமிழ்அவர் தன்னிச்சையாகத் தந்ததல்ல. திருஞானசம்பந்தர் தம்மைத் தன்னிகரில்லாச் சண்பையர் கோன்” என்று கூறிக்கொள்வதைக் காண்க. திருஞானசம்பந்தரிடம் தன்முனைப்பு இருந்ததில்லை. சிவமாம் தன்மை பொருந்தியவர். ஆதலால் பதிகம் பயன் கூறியது ஏற்புடையதேயாம்.

 

     மனிதன் சிந்திக்கும் இயல்பினன். சிந்தனை சிறந்தால் மனிதன் வளர்வான். மனிதனின் சிந்தனை அன்புடையதாக அமையவேண்டும். மானுடத்தின் உயிர்நிலையே அன்புதான்! அன்பின் வழியது உயிர்நிலை” என்றார் திருவள்ளுவர். அன்பே சிவம்” என்றார் திருமூலர். அடியார்கள் என்றும் எப்பொழுதும் அன்புறு சிந்தையுடையவர்களாக இருப்பர்.சிவனைஎம்பெருமானைக் கூடும் அன்பினில் கும்பிடுதலையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். இன்ப வடிவினராகித் திருநல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவடிகளைப் போற்றுவர். சிவன் - அவனை அன்புறு சிந்தையில் கொண்டு விளங்கும் நாயன்மார்கள் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொள்வர். எத்தொண்டு செய்தாலும் சிவனுக்கெனவே செய்வர்பயன் பற்றிக் கருதார்அதனால் துன்புறுதல் இலர். துன்பம் என்பதே ஒன்றை விரும்பும் பொழுதுதான் வருகிறது. விருப்பத்தைக் கடந்த நிலையில் சிவ சிந்தனையுடன் தொண்டு செய்தால் துன்பம் வருவதில்லை.

 

     இன்று அன்புறு சிந்தையர் அருகிவரும் நிலை. எங்கும் எதிலும் வாணிகப் போக்கு! ஒரு காலத்தில் தொண்டாக விளங்கிய பணிகள் பலவும் இன்று தொழிலாக மாறிவிட்டன! இன்று திருக்கோயில்களில் திருமடங்களில் கூடத் தொழிலாளர்களே உள்ளனர்.தொண்டர்கள் இல்லை. அதனால்தொழில் உலகத்திற்குரிய பணி நிறுத்தம் முதலியன திருக்கோயில்களுக்கும் வந்துவிட்டனதொண்டு செய்தல் மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரின் கடமையாகும். தொண்டர்கள் பெருகி வளர்ந்து தொண்டு சிறந்தால்தான் இந்த வையகம் துன்பத்தினின்றும் நீங்கும்இன்புறும்மானுடமும் வழிவழி சிறந்து விளங்கி வாழ இயலும். இத்தகு தொண்டு அருகிப் போனமையால் இன்று எங்கும் துன்பம்! காவல் நிலையங்களும் சிறைச்சாலைகளும் ஆட்சி அதிகாரச் சட்டங்களும் பல்கிப் பெருகி வளர்வதன் காரணம் தொண்டு செய்வோர் குறைந்து போனதல்ல. இல்லாது போனதுதான்ஒரோவழி  தொண்டின் புனைவில்” விளம்பர வாணிகம் நடைபெறுகிறது. அது விளம்பரமே ஒழியத் தொண்டு அல்ல. தொண்டு என்பது அன்புறு சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்பெறுவது. அதனால்தான் அப்பரடிகள் என் கடன் பணி செய்து கிடப்பதே!” என்றார். கிடப்பது அஃறிணையேயாம். அஃறிணைப் பொருள்கள் - குறிப்பாகத் தாவரங்கள்மானுடத்தின் வாழ்வுக்கு நிறைய உதவி செய்யும். ஆனால் எந்தப் பயனையும் திரும்ப எதிர்பார்க்கா. மழைக்கும் மரங்களுக்கும் நன்றி சொல்வார் யார்ஆதலால் பயன் கருதாது தொண்டு செய்வோர் துன்புறமாட்டார்கள் என்பது திருஞானசம்பந்தரின் திருவுள்ளம்.

 

     அன்பில் விளைவது நலம். நலம் வேண்டுவோர் அன்புடையராதலன்றி வேறு வழியில்லை. அன்புக்கு நலம் என்று கூறும் வழக்கும் உண்டு. மானிட வாழ்க்கையின் இயக்கத்திற்குப் பொறுப்புள்ள உறுப்பு சித்தம். ஆம்! சித்தத்தின் தொழில் சிந்தனை. சிந்தனையில் அன்பு இருப்பின் சொல்செயல் அனைத்தும் நலமாக அமையும். இன்று அன்புறு சிந்தையினரையும் காணோம். நலந்தரும் சிந்தையினரையும் காணோம். நாள்தோறும் அன்புக்கும் நலத்திற்கும் மாறுபட்ட நிகழ்வுகளே மிகுதியாக நடக்கின்றன. இவற்றைத் தவிர்க்கவும் மக்கள் சமுதாயம் அன்புறு சிந்தையுடையதாகவும் நலந்தரு சிந்தையுடையதாகவும் விளங்கத் திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைப் பாடல்கள் உதவும்.

 

     இன்று எங்கும் பேச்சு! எப்போதும் பேச்சு! சொற்களை வழங்குவதற்கு யாரும் தயங்குவதில்லை. ஆனால் எல்லோரும் சொல்’ தான் சொல்கிறார்கள். சொல்லப்பெறும் சொற்களுக்கு இலக்கணம் வேண்டாமாபயன் வேண்டாமாபயனற்ற சொற்களைக் கூறுவானைப் பதடி’ என்றது திருக்குறள். இளங்கோவடிகள் வறு மொழியாளர்” என்று திட்டினார். திருஞானசம்பந்தர் பயனற்ற சொற்களை நகைச்சுவை ததும்ப, “முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே!” என்றருளிச் செய்கின்றார். தேர்வில் மதிப்பெண் வாங்காமையை முட்டை வாங்கினான்” என்று பரிகாசம் செய்வதுண்டு. அதுபோல் எந்தவிதமான பயனும் இல்லாததுடன் அறியாமையும் கலந்த சொற்களை முட்டைக் கட்டுரை” என்று குறிப்பிடுகின்றார். முட்டைக் கட்டுரையைபயனற்ற சொற்களைக் கேட்கவும் கூடாதுசொல்லவும் கூடாது என்பது திருஞானசம்பந்தர் வழங்கும் அறிவுரை.

 

     தமிழர் பண்பாடுகளில் தலையாயது கொடுத்தல். இல்லை’ என்று கூறி இரத்தலுக்கும் முன்பே கொடுத்தல்அறம். இந்த அறப் பண்பைத் திருஞானசம்பந்தர் பல இடங்களில் பாராட்டியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு அருகில் திருவேதிகுடி என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானைவேதங்கள் வழிபட்டமையால் அவ்வூர் திருவேதிகுடி என்று பெயர் பெற்றது. இத் திருத்தலம் வளமாக அமைந்திருந்தது என்பதனை வளமாரும் வயல் வேதிகுடியே!” என்றருளியமையால் அறியலாம். இன்று இந்தத் திருக்கோயில் முறையாகப் பேணப்படவில்லை. இத்திருத்தலத்தில் அன்று வாழ்ந்த மனிதர்கள் மிகவும் கொடைப் பண்பு உடையவர்களாக விளங்கியிருக்கிறார்கள்.

 

     விலை ஏற்றம் என்பது இப்போது மட்டும் உள்ள சிக்கல் அல்ல. திருஞானசம்பந்தர் காலத்திலும் விலை ஏற்றம் இருந்திருக்கிறது. விலை ஏற்றத்தைப் பற்றித் திருவேதி குடியில் அருளிச் செய்த பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வையம் விலை மாறிடினும்” என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. விலை மாறுதல் என்பது விலை ஏற்றத்தையே குறிக்கிறது. இந்த மண்ணகத்தில் விலை மாறினாலும் கெடாத பண்பாடுடைய திருவேதிகுடி மாந்தர்கள் புலவர்களுக்கு வழங்குவர். அங்ஙனம் வழங்கும் பொழுது இனிய முகத்துடன் இன்சொற்கள் கூறி வழங்கும் பண்பாடுடையவர்கள்.

 

"வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ்

மிக்கழிவி லாத வகையார்

வெய்ய மொழி தண்புலவ ருக்குரை செ

யாத அவர் வேதிகுடியே!"

 

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.

 

     புகழ் பெறுதல் அரிது. பெற்ற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரை உணர்தலுக்குரியது. கொடையளிப்பதில் காலந்தாழ்த்தக் கூடாது. இன்றுநாளை என்று கூறக்கூடாது என்பது தமிழர் மரபு. சங்க காலத்தில் மூவன் என்பவன் பெருந்தலைச்சாத்தனார் என்ற புலவருக்குப் பரிசில் தரக் காலம் நீட்டித்தமையின் காரணமாகப் புலவர் பரிசிலே பெறாமல் போய்விட்டார் என்று வரலாறு உண்டு. திருஞானசம்பந்தர் சீகாழி நகர மக்கள்,

 

"இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார்"

 

என்று அருளிச் செய்கின்றார். இன்று தமிழரிடையே இந்தப் பண்பு அருகிக்கொண்டு வருகிறது.

 

     திருஞானசம்பந்தர்மனித நேயம் மிக்குடையவர். இறைவழிபாட்டிற்கு ஈடாக மனித நேயம்உயிரிரக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தார். திருமருகல் திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு வழிபாட்டிற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் ஊரின் எல்லைக்குள் நுழையும்பொழுதே அவர் தம் காதில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. உடன் திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்குச் செல்லாமல் அழுகுரல் கேட்ட திசையில் செல்கிறார். ஆங்கு ஒரு மடத்தின் திண்ணையில் ஓர் இளைஞன் பிணமாகக் கிடக்கின்றான்! அந்தப் பிணத்தின் அருகில் ஒரு கன்னிப் பெண் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்தக் கன்னிப்பெண் அந்த இளைஞனைக் காதலித்து மணம் செய்து கொள்ள விரும்பிப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் உடன் போக்கில் வந்துவிட்டனர். திருமருகல் திருக்கோயிலில் திருமணம் செய்து கொள்வதாகத் திட்டம். திருமருகல் வரும்பொழுது நள்ளிரவாகிவிட்டது. திருக்கோயில் நடை சார்த்தப் பெற்று விட்டதால் அந்த மடத்தில் தங்கி மறுநாள் காலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் படுத்துத் தூங்கினர். அவர்களுடைய தீயூழ்அந்த இளைஞனை ஒரு நச்சுப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சினால் அந்த இளைஞன் அவளின் காதலன் இறந்து போனான். பொழுது புலர்ந்தது. பெண்தான் மணக்க இருந்த காதலன் இறந்துகிடப்பதைக் கண்டு ஒன்றும் செய்வது அறியாமல் அழுகிறாள். உடன் போக்கில் வந்த காதலர்களே. ஆயினும் தனியே படுத்து உறங்கினாலும் உடலுறவு ஏற்படவில்லை. அவ்வளவு ஒழுக்கக் கோட்பாடுகள் அன்றைய தமிழரிடம் இருந்தன. பாம்பு கூட அவனைத் தீண்டும் பேறு பெற்றது. ஆனால் அவள் அவனைத் தீண்டி அழமுடியவில்லை” என்று சேக்கிழார் கூறுகிறார்.

 

     வாளரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்’ என்பது சேக்கிழார் வாக்கு. முறையாகத் திருமணம் ஆகாத நிலையில் ஓர் ஆணின் உடலைப் பெண்ணோபெண்ணின் உடலை ஆணோ தொடக்கூடாது என்ற மரபுதமிழ் மரபுதமிழர் பண்பாடு. கன்னிப் பெண்ணின் துன்பமறிந்த திருஞானசம்பந்தர் நெஞ்சு நெக்குருகித் திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வேண்டி,

 

"சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

விடையாய் எனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தருமோ இவள் உள் மெலிவே"

 

என்று வேண்டிப் பதிகம் அருளிச்செய்கின்றார். இப்பதிகத்தினை ஓதுவார் எவர் நெஞ்சும் உருகும். இப்பதிகத்தில் பெருமான் அமரர்கள் சாவாமல் காக்க நஞ்சுண்டு கறைக் கண்டம் உடையானாக - நீலகண்டனாக ஆய வரலாற்றை நினைவு கூர்ந்து நீலகண்டம் உடையாய்’ என்று பாடுகின்றார். ஆலகால நஞ்சையே உண்டு கண்டத்தில் அடக்கிய நீஇந்த இளைஞன் சாவதற்குக் காரணமாய நச்சுப் பாம்பின் நஞ்சைக் கெடுத்து அருளுதல் எளிதே என்ற பொருள் தோன்றப் பாடுகின்றார். திருஞானசம்பந்தர் தம் வயமாக்கிக் கொண்ட திருவருள் ஞானம்அந்த இளைஞனை உயிர்ப்பித்தது. இளைஞன் எழுந்தான். இளங்காதலர்கள் முகங்களில் புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து திருமணம் செய்து வைத்தார் திருஞானசம்பந்தர். அதற்குப் பிறகுதான் திருமருகல் திருக்கோயிலுக்குச் சென்றார். அன்று நடந்த இந்த வரலாற்றின் மாட்சிமையுடன் இன்றையப் புன்மையை எண்ணி வேதனைப்பட வேண்டியிருக்கிறது. திருஞானசம்பந்தரின் அருட்பாடல்கள்தான் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

 

     திருஞானசம்பந்தரின் தமிழ் அருமையானதுஎளிமையானதுஆயினும் பொருள் பொதித்தது. அவர் திருச்சிராப்பள்ளியில் அருளிச்செய்த பதிகத்தில் இறைனை

 

"நன்றுடை யானைத் தீயதில் லானை"

 

என்று தொடங்கிப் பாடிப் பரவுகின்றார். நன்றுடையானை’ என்றாலே போதும், ‘தீயதில்லானை’ என்று எதிர்மறையாகவும் அருளிச் செய்தது ஏன்இந்த அடிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியன. நம்மில் பலர் நன்று’ என்று கருதிக் கொண்டிருப்பது உண்மையில் நன்றன்று. நன்று என்றால் தீமைக் கலப்பில்லாத நன்றாக இருத்தல் வேண்டும். ஒருபொழுது நன்றாகவும் ஒருபொழுது தீதாகவும் இருப்பது நன்றாகாது. அதுபோலவேஒருவருக்கு நன்றாகவும் பிறிதொருவருக்குத் தீதாகவும் அமைவது நன்றாகாது. இன்று நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய தீமையும் கலந்த நன்மைகளையே நன்மை என்றும் நன்று என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம். இறைவன் அப்படியல்ல. அவன் தீமையின் கலப்பே இல்லாத பூரண நன்மை என்பதை விளக்க, “நன்றுடையான்தீயதில்லான்” என்று கூறி விளக்கி அருளுகின்றார். நாம் அனைவரும் தீமைக் கலப்பில்லாத நன்மையை அடைய வேண்டுமாயின் நன்றுடையானாகதீயதில்லானாகத் திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கவேண்டும். திருஞானசம்பந்தர் அருளிய பாடல்களைப் பாடும் வல்லமை பெற்று வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்.

 

     தமிழில் திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைகள் முத்தமிழ் நான்மறை’ என்றும் பண்பொலி நான்மறை” என்றும் போற்றத்தகுவன. நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்தவர் திருஞானசம்பந்தர்தமிழ் நெறியை வளர்த்தவர். திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருநெறிய தமிழ் வளர்க! வையகம் துயர் தீர்க!

 

-------------

 

     தமிழ்மா முனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவ்வப்போது ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்துமணிவாசகர் நூலகம், 15 நூல்கள் கொண்ட ஒரு தொகுப்பாக இன்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டு உள்ளது. ஏழாம் தொகுதியில்திருஞானசம்பந்தர் குறித்து அடிகளார் ஆற்றிய சொற்பொழிவின் பகுதியை அன்பர்களின் சிந்தனைக்காக அப்படியே தந்துள்ளேன்.

 

     "எகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே" என்றார் அப்பர் பெருமான். சைவநெறி மிகவும் வலியுறுத்தியது தொண்டுநெறியே ஆகும். அடியார்களுக்குத் திருத்தொண்டர் என்றே பெயர் வழங்கப்பட்டது. அடியார் கூட்டம் என்பது திருத்தொண்டர் கூட்டம் என்றே வழங்கப்பட்டது. "தொண்டு செய்தால் துயர் தீரும்". "அன்பு நடந்து ஏற ஆணவப் புல் தேய்ந்து அழியும்". அடிகளார் மனம் வருந்திக் கூறியுள்ளபடிதொண்டு என்பது தொழிலாக மாறி பல்லாண்டுகள் கழிந்துவிட்டது. "தொண்டுநெறி" என்று சொல்லிக் கொண்டு "மிண்டுநெறி" மலிந்து வருகின்றது. "அருள்நெறி"யை விடுத்து, "பொருள்நெறி" மலிந்து வருகின்றது. தொண்டுநெறியாகிய தமிழ்நெறி தழைக்க வேண்டும். 

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...