கடவுளியல் விளக்கம்

 


கடவுளியல் விளக்கம்

-----

 

     இறைத் தன்மை என்பதுஎல்லா உயிர்களையும் விட  மேம்பட்டது. ஆற்றலால் அல்லதமக்கு ஆட்பட்ட அடியவர்க்கு அருள் புரியும் திறத்தால் மேம்பட்டது.கடவுளைக் காணாமல் போகலாம். கடவுளைப் பற்றி வாதங்கள் நிகழலாம். ஆனால்கடவுள் இயலைப் பற்றி விவாதங்களை நடத்திட முடியாது. கடவுளை இயலை உணர்ந்தவர்கள் பேச்சு அடங்கிசிவமே என்று இருப்பர். பேசா அனுபூதி நிலை அவர்களுக்கு உண்டாகும். "சும்மா இருசொல் அற" என்று இறைவன் அவர்களுக்கு அறிவில் அறிவாக நின்று உணர்த்தி அருள்வான். எனவேதான்,

 

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

            போக்கு இலன் வரவு இலன் என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

            கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

            சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்து,எம்மை ஆண்டுருள் புரியும்

            எம்பெருமான் பள்ளி எழுந்து அருளாயே".

 

என்று திருவாசகம்திருப்பள்ளி எழுச்சித் திருப்பதிகத்தில் பாடிக் காட்டினார் மணிவாசகப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்து விளங்கும்திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்திற்கு அரசனே!நினைப்பதற்கும் அருமையானவனேஉன்னைஎல்லாப் பூதங்களிலும் கலந்து இருக்கின்றாய் என்று பலரும் சொல்லுகின்றார்கள். போக்கு என்னும் மரணம்வரவு என்னும் பிறப்பு (பிறப்பு இறப்பு) இல்லாதவன் என்று அறிவுடையவர் உனது தன்மையை உணர்ந்துஇசைப் பாடல்களைப் பாடுவதும் ஆனந்தக் கூத்து ஆடுவதும் செய்து உன்னை வழிபாடு செய்கின்றார்கள். ஆயினும்உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. எங்களது குற்றங்களைப் போக்கி அடியேங்களின் எதிரில் எழுந்தருளி வந்துஎங்களை ஆட்கொண்டு அருள் புரிகின்றஎமது பெருமானே! நாங்கள் உன்னை நேரில் கண்டு மகிழும்படியாக பள்ளிக் கிடத்தலை விட்டு எங்கள் முன்னர் எழுந்து வந்து அருள் புரிவாயாக.

 

     இறைவன் இப்படிப்பட்டவன்அப்படிப்பட்டவன் என்று விரிவாகப் பேசுவதை விடுத்து,அவனது அருட்தன்மையை உணர்ந்துஅவனது அருளில் தோய்ந்துஎல்லா உயிர்களும் அத்தகு அருட்தன்மையை அடைந்து இன்புற்று வாழ விரும்பிஅனுபூதி நிலையில் தோய்ந்து இருத்தல் வேண்டும்.

 

     அனுபூதி நிலை எப்போது வாய்க்கும் என்று ஒரு வினாவை எழுப்பி பொருள் உணர்ந்து அருட்பாடல்கள் ஓதி வழிபட்டு வந்தால்,"முருகா! நினது அன்பு அருளால் ஆசாநிகளம் துகள் ஆயின பின்பேசா அனுபூதி பிறந்தது" என்று அருணகிரிநாதப் பெருமான் காட்டி அருளிய அருமை விளங்கும். இறைவனுடைய அன்பும் அருளும் நம்மிடத்தில் விளங்குமானால் இது சாத்தியமே என்றும் நமக்குக் காட்டினார்.

 

     எதைப் போடுகின்றோமோஅதையே திரும்ப எடுக்க முடியும். எதை விதைக்கின்றோமோஅதையே அறுவடை செய்யமுடியும். அன்பைக் காட்டினால்அன்பைப் பெறலாம். அன்பு என்பது நமக்கு மேலானவர்கள்ஒத்தவர்களிடம் செலுத்தப்படும் உள்ள நெகிழ்ச்சி ஆகும். அருள் என்பதுஇதற்கும் முன் அறிந்திராதநமக்குத் தொடர்பே இல்லாத எல்லோரிடத்தும் காட்டுவது ஆகும். அன்பாலும்அருளாலும் நாம் செய்கின்ற செயல்கள்அறச் செயல்கள்தொண்டு ஆகின்றன.

 

     அன்பு இல்லறத்தைச் செம்மையாக நடத்துகின்றபோது உண்டாகும். அருள் என்பதைபற்றுக்களை விட்டொழித்துத் துறுவறத்தை மேற்கொள்ளுகின்றபோது உண்டாகும். அன்பையும் (அன்புடைமை), அறத்தையும் (அறன்வலியுறுத்தல்) இல்லற இயலில் வைத்துக் காட்டிய திருவள்ளுவ நாயனார், "அருள் உடைமை"யைத் துறுவற இயலில் வைத்துக் காட்டிய அருமை எண்ணி எண்ணி இன்புறத் தக்கதும்பயிலத் தக்கதும் ஆகும். இல்லறம் துறவறம் என்னும் இரண்டும் அகநிலையில் பயிலப்பட வேண்டியவை. புறக்கோலத்தால் அதனை உணரமுடியாது.

 

     அன்பும் அருளும்தாயையும் குழந்தையையும் போன்றவை. அன்பாகிய தாய் அருளாகிய குந்தையைப் பெற்று எடுக்கின்றாள். பெற்ற பின் அவள் குழந்தையை விட்டுப் பிரிவதில்லை. உடலால் பிரிந்தாலும்உள்ளத்தால் தனது குழந்தையோடுதான் அவளது வாழ்க்கை நடைபெறுகின்றது. அதுபோலவேஅன்பும் அருளும் உள்ளத்தில் இருந்தால் ஆன்ம ஈடேற்றம் உண்டாகும். அன்பும் அருளும் உள்ள இடத்தில் பற்றுக்கள் இருப்பதில்லை. உண்டாவதும் இல்லை.

 

     எனவேதான்முருகப் பெருமானது அன்பும் அருளும் வாய்த்தபோதுஆசை என்னும் விலங்கு அறுபட்டுப் போனதாக அருணகிரிதாநப் பெருமான் அருள் செய்தார். ஆசை என்னும் விலங்கினால் நாம் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற வரையில்பற்றுக்கள் தொலைய மாட்டா. அந்த நிலையில் நாம் காட்டுகின்ற அன்பு பெயரளவில்தான் அன்பாக இருக்கமுடியும். உண்மையான அன்பு இல்லாதபோது,அருள் எங்கிருந்து பிறக்கும்?

 

     இறைவன் மீது உள்ளர்ந்த அன்பு வைத்தோம். அது பிற உயிர்கள் மேல் காட்டும் அருளில் வெளிப்பட்டது. நம்முடைய தூய்மையை உணர்ந்துகொண்ட இறைவன்,நம்மிடத்தில் அன்பையும் அருளையும் பொழிகின்றான். அந்த மேலான அனுபூதி நிலையில் பேச்சு எழாது. எனவே,கடவுள் இயலை உணர்ந்து கொள்ளவேண்டும்.

 

     இன்று எங்கும் கடவுளியலைப் பற்றிய பேச்சு இல்லைகடவுளைப் பற்றிய பேச்சே அடிபடுகிறது. கடவுளியலைப் போற்றிப் புகழ்ந்து பேணுவாரைக் காணோம். கடவுளைப் பூசிப்பார் பலருண்டு. 

 

"பாடிற்றிலேன்பணியேன்மணி! நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்

வீடிற்றிலேனை விடுதிகண்டாய்! வியந்து ஆங்கு அலறித்

தேடிற்றிலேன்சிவன் எவ்விடத்தான்எவர் கண்டனர் என்று

ஓடிற்றிலேன்கிடந்து உள்ளுருகேன்நின்று உழைத்தனனே".

 

எனத் திருவாசகம்நீத்தல் விண்ணப்பத்தில், "இறைவா! உன்னைப் பற்றி நிறையப் பேசுகின்றேனே ஒழியஉன்னைக் குறித்து மனம் மொழி மெய்களால் செய்யவேண்டிய அன்புப் பணிகளைச் செய்யாமல் வீணாக சுகபோகங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன். இருந்தாலும் என்னை விட்டுவிடாதே என்று வேண்டுகின்றார்.

 

இதன் பொருள் ---

 

            மணி --- மாணிக்க மணியைப் போன்றவனே!பாடிற்றிலேன் --- நான் உனது அருட்புகழைப் பொருள் உணர்ந்து பாடினேனில்லை. பணியேன் --- உள்ளத்தில் கனிவும் பணிவும் கொண்டு உனது திருவடிகளைப் பணியவும் செய்யவில்லை. நீ ஒளித்தாய்க்கு --- திருப்பெருந்துறையில் குருநாதனாக அருட்காட்சி கொடுத்து மறைந்த உன் பொருட்டு,பச்சூன் வீடிற்றிலேனை --- பசிய இறைச்சிப் பிண்டமாகிய இந்த உடம்பையும் நான் தொலைக்காமல், (உடம்பின் மீது வைத்த பற்றினைத் தொலைத்துஉன் மீது பற்றுக் கொண்டு உன்னைத் தேடாமல்இதனை ஓம்புதல் பொருட்டு இன்னும் வீணாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்.)விடுதி கண்டாய் --- (இப்படிப்பட்ட) என்னை நீ விட்டுவிடுவாயோ?ஆங்கு வியந்து --- உன்னைக் கண்ணாரக் கண்ட அப்பொழுதே வியப்பினை அடைந்துசிவன் எவ்விடத்தான் என்று அலறித் தேடிற்றிலேன் --- சிவன் எவ்விடத்து உள்ளான் என்று மனம் பதைபதைக்கத் தேடவில்லை. எவர் கண்டனர் என்று ஓடிற்றிலேன் --- சிவபரம்பருளைக் கண்டு அறிந்தவர் யார் என்று தேடி ஓடவும் செய்யவில்லை. கிடந்து உள் உருகேன் --- எம்பெருமான் எவ்விடத்தில் உள்ளான்யார் கண்டவர் என்று தேடித் தேடியும்ஓய்ந்து கிடந்து உள்ளம் உருகவும் இல்லை. நின்று உழைத்தனனே --- (இப்படி எந்த முயற்சியும் இல்லாமல்) வீணாக இந்த உடலை ஓம்புதல் பொருட்டு இன்னமும் இந்த உலக வாழ்க்கையில் உழைத்துக் கொண்டு இருக்கின்றேன். 

 

            இதனால்பாடுதல்வணங்குதல்உருகுதல் முதலியன இறைவனை அடைதற்குரிய அன்பர்களது செயல் என்பது கூறப்பட்டது. சிவன் எவ்விடத்தான் என்னும் ஆராய்ச்சி சற்றேனும் இருந்திருக்குமாயின்அடியார்கள் சித்தத்தில் உறைகின்ற இறைவனைஅவர்களோடு கூடி இருந்து கண்டு மகிழ்ந்து இருக்க முடியும். "பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டு கொண்டேன்திரு ஆரூர் அம்மானே!என்பது அப்பர் வாக்கு. இறையியலைஇறைவனது அருட்தன்மையை உணர்ந்தவர்க்கே இது சாத்தியம் ஆகும். 

 

     எம்பெருமான் "திருநீலகண்டம்"என்றும் போற்றப்படுகின்றார். அந்த நீலகண்டத்தை வண்ணத்தில் காட்ட முடியாது போனாலும்வடிவத்தில் காட்டும் தோற்றமே ஒவ்வொரு மனிதரின் கண்டத்திலும் உருளும் உருளை என்று கூறப்படும். எம்பெருமான் கண்டம் உயிர்களைக் காத்ததுஇன்பத்தை வழங்கியது. ஆனால்அதன் நினைவாக விளங்கும் கண்டத்தின் உருளைகள் பிறரை வாழ்விக்கப் பயன் படுவதில்லை.  வெற்றுப் பேச்சுகளுக்குப் பயன்படுகின்றன.

 

     கருங்கடலில் இருந்து தண்ணீர் ஆவியாக மாறிப் பயணம் செய்கிறது. பயணத்தால் அந்நீரும் தூய்மை பெறுகிறது. நிலவுலகத்தையும் அது மழையாகப் பொழிந்து தூய்மை செய்கிறது. வானில் இருந்துகருணை வடிவாகமண்ணுக்குப் பயணம் செய்கிறான் இறைவன். காரணம்மனிதர்களை ஆட்கொண்டு அருள் புரியவே. ஆனால்மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ன ஆகிறதுபயன் தரத்தக்க பணிகளை மேற்கொள்ளாதபோது அவனுடைய வாழ்க்கை ஒரு வெற்றுப் பயணம் ஆகிவிடுகிறது. பயன் இல்லாத பயணம். மனித வாழ்க்கையின் பயன் கடவுள் நலத்தை அறிந்துஅதனை அனுபவித்தலே ஆகும்.இந்த ஒப்பற்ற கடவுள் நலம் - இன்ப அன்பு நலம் எளிதில் கிடைக்கவேண்டுமானால்பூசனையால் மட்டுமே பெற முடியாது.  தன்னல மறுப்பால் பெறலாம்.பிறர் நலம் பேணும் பெருந்தவத்தால் பெறலாம். இதுவே கடவுளியலின் உயிர் நாடி. இந்தச் சமய உயிரியலின் தன்மை இன்றைய சமய வாழ்க்கையில் இல்லை. அதனாலேயே சமய நெறிகளைப் பற்றிச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

 

     பதவியை அடைய விரும்புகின்ற பலரும்பதவிக்குரிய தகுதி பேணிஅதற்குத் தக்க பணிகளைச் செய்ய முயலாமல்பயனை மட்டுமே எதிர்பார்க்கும் நிலை இன்று உண்டு.இது மனித உலகத்தின் இயல்பு மட்டுமல்ல.தேவர் உலகத்திலும் இந்த இயல்புதான் உள்ளது. தக்கன் வேள்வியில் தேவர்கள் தலைமை வேண்டிப் பெற்றனர். ஆனால்அலைகடலில் ஆலகால விடம் எழுந்தபொழுது எல்லோரும் அலறி ஓடினர். எந்தை ஈசன் எம்பெருமான் யாராலும் உண்ணற்கரிய அந்த நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தான். நஞ்சினைத் தொடர்ந்து அமுதம் வந்தது. தேவரர்கள் நாவில் எச்சில் ஊறியது. நஞ்சைக் கண்டு நடுங்கி ஓடிய தேவர்கள் அமுதுண்ண ஆசை காட்டினர். இறைவன்அமுதுண்ண விரும்பாது தேவர்களுக்கு அதனை வழங்கினான். தேவர்களைப் போகத்தில் ஆழ்த்திவாழ்வித்தான். இது புராண வரலாறு.  என்றாலும்தத்துவச் செறிவுடையது. வாழ்வில் நஞ்சனைய துன்பத்தை ஏற்றுக்கொண்டுதொழிற்பட வேண்டும். மற்றவர்களும் வாழ,தான் வாழவேண்டும். தனக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. அதுவே வாழ்க்கையின் தவம் என்பதை இந்தப் புராண வரலாறு காட்டும்.  இந்தத் தத்துவம் உண்மையில் செயற்படும் பொழுதே கடவுளியல் என்பது நமது உள்ளத்தில் காட்சியளிக்கும். எம்பெருமான் தனக்கு வாகனமாகக் கொண்ட பசுவின் தன்மையும் இதுவே ஆகும். எல்லோரும் வேண்டாம் என்று ஒதுக்கிய கொடிய நஞ்சைத் தான் உண்டுதேவர்களுக்கு அமுதத்தை அருளிய பெருமானின் இயல்இந்தப் பசுவிலும் காணப்படும். எல்லோரும் வேண்டாம் என்று தள்ளுகின்ற வைக்கோலை உண்டு,எல்லோரும் விரும்புகின்ற பாலைப் பொழிந்து தருகின்றது பசு.

 

     எனவேதனக்கென வாழாமல்அன்பையும் அருளையும் உள்ளத்தில் தேக்கி வாழ்தல் வேண்டும். "அம்பொன் மணிநூல் தாங்காது,அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கிஇம்பர் மனை வாழத் தவம் இயற்றிய" காரைக்கால் அம்மையின் அருள் வாழ்வு வழிகாட்டும். இறவாத இன்ப அன்பை அம்மையார் இறைவனிடத்தில் வைத்திருந்தார். இறைவன் அவரது தூய்மையான தாய்மை நிலைக்கு இரங்கி,அவருக்கு அருள் புரிந்து திருக்காட்சி தந்தபோது, "அம்மா" என்று வாயார அழைத்தான். இறைவனிடத்தில்,இறவாத இன்ப அன்பையே அம்மையார் வேண்டினார். காரணம்இறவாத இன்ப அன்பு இருக்குமானால்பிறவாமை வாய்க்கும்.

 

     இதுவே இறையியல் கொள்கை கடவுளியல் காட்டும் தவ வாழ்வு. இத்தகு வாழ்க்கை முறையை மேற்கொண்ட அனைவரும் சமயநெறியாளர்கள். அவர்கள் நெஞ்சில் இறைவன் கோயில் கொள்வான். இத்தகு வாழ்க்கை முறை என்றைக்குத் தனிமனித வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்குகிறதோ அன்று கடவுளியல் உலகத்தவரால் ஒப்புக்கொள்ளப் பெறும். வேறு எந்தவகையாலும் முறையாலும் உலகம் ஒப்புக்கொள்ளாது. 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...