சமயத்தின் குறிக்கோள்அன்பை வளர்ப்பதே!
-----
அன்பு— வாழ்க்கையின் உயிர்நிலை. "அன்பின் வழியது உயிர்நிலை" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு வழியில் ஈட்டக் கூடியது துய்க்கக் கூடியது பொருள் ஆகும். உலகியல் வாழ்க்கையை உறவுகளால் செழிக்கச் செய்வது அன்பு.
உள்ளத்தில் பொருந்திய அன்பினை உடையவர் ஆதல் என்பது மிகவும் அரிது. அன்பின் போலித் தோற்றங்களை அன்பு என்று நம்பி ஏமாறுகின்றனர் மக்களில் பலர். அன்புடையராய் வாழ்பவர்களுக்கே உயிர் இருக்கின்றது. அன்பு இல்லாதவர்கள் உணவு உண்டு, உடுத்துத் திரியும் பிணம் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். உயிருக்கு இருக்கவேண்டிய பண்பாகிய அன்பு இல்லாமல் உண்டு உடுத்துத் திரிபவன் உயிர் இருந்தாலும் பிணத்தைப் போன்றவன். அன்பு என்பது உயிருக்கு இருக்கவேண்டிய பண்பு என்பதை, "அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றார். அன்பு பண்பு. அறம் அதன் பயனாக விளைவது. எனவே,
"அன்பின் வழியது உயிர்நிலை,அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
அன்பு உயிரைச் சார்ந்த உணர்வு - ஒழுக்கம். அன்புக்கு, அன்பைத் தவிரவேறு புறமான குறிக்கோள் ஏதும் இல்லை, இருக்கவும் முடியாது. அன்புக்குக் குறிக்கோள், அன்பே ஆகும். வேறுவேறு குறிக்கோளுடன் அன்பு உடையராகப் பழகுதல் உண்மை அன்பு ஆகாது. அது ஒரு வாணிகம் ஆகும்.
அன்பு, உயிரின் இயற்கைக் குணம். அன்பு வாழ்க்கை உயிரியல் வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. ஓரறிவு உயிர் முதல் ஐயறிவு உயிர்களிடத்தும் அன்பு உண்டு, ஆனால், அது வளச்சியில்லாத அன்பு, நிலையில்லாத, மாறக் கூடிய அன்பு,மறக்கக் கூடிய அன்பு. அது உறவை மறந்து, நட்பை மறந்துமோதிக் கொள்ளக்கூடிய அளவுக்குக் கீழே இறங்கக் கூடியது. மானிடச் சாதி ஆறறிவு வாய்ந்தது. ஆறாவது அறிவு மன அறிவு ஆகும். மன ஆறிவு இருப்பதால், மனிதன் எனப்பட்டான். எனவே, பயன் கருதாத வளர்ந்த அன்பினராய் இருக்க வேண்டியது மனிதர் கடமை. ஆனால், இன்று அப்படி இருக்கிறதாஎன்று சற்றே அலசிப் பார்த்தால், பெரும்பாலும் இல்லை என்றுதான் தோன்றும். மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது இல்லை. நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து ஒழுகுதல் ஆறாவது அறிவின் செயல்பாடு. இன்று மானிடச் சாதியில் பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை. தனக்கு நல்லதை மட்டுமே எண்ணுகின்ற நிலை உள்ளது. தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று ஒருவரோடு பழகும் காலத்தில்,தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கின்றார்கள். வெறுப்பு வந்தவுடன், அதுவரையில் அனுபவித்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டுத் தீமைகளையே, தவறுகளையே தொகுத்துப் பழிசுமத்துகிறார்கள். நேற்று அன்பு,உறவு! இன்று பகை,பழிதூற்றல்! மிகமிக அற்பமானவற்றுக்கும் கூட மனிதர்கள் அடித்துக் கொண்டு மடிகின்றனர். வீடு தொடங்கி, வீதி வாழ்க்கை வரை அன்பு வழியதாக அமையவில்லை. ஒவ்வொருவரும் உலகம் அவர்களுக்காகவே படைக்கப்பட்டதாக எண்ணுகின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்து, அன்பு காட்டி, இன்பத்தைப் பகிர்ந்து, துன்பத்தில் பங்குபெற்று வாழ்வதுதான் வாழ்க்கை என்பது மறந்தே போய்விட்டது. அவ்வளவு தன்னலம். அந்த தன்னலம் உறவுகளிலும் தலையெடுப்பதால், உறவில் முறிவுகள் உண்டாகின்றன. நட்பிலும் தன்னலம் தலை தூக்குவதால், நட்பு பகை ஆகின்றது. ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி, அன்பைப் பரிமாறி வாழ்வதே கடமை; கடமையைச் சரிவரச் செய்தால் உரிமை கிடைக்கும் என்ற நியதி மறந்தே போய்விட்டது. ஒவ்வொருவரும் தத்தமக்கு உரிய உரிமையைப் பற்றியே கவலை கொள்கின்றனர். இந்தச் சூழலில், அன்பு உடையவர் போல நடிக்க வேண்டிய அவசியம் உண்டாகின்றது. உண்மையான அன்பு இல்லை.
இறைவன் வேறு. அன்பு வேறு அல்ல. அன்பு வடிவானவன் இறைவன். "கருணையே வடிவம் ஆகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "அன்பு உருவாம் பரசிவமே" என்றார் வள்ளல்பெருமான். இன்னும் ஒருபடி மேலே சென்று, "அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார், அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்" என்று இடித்து உரைக்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால், பற்று அறும். "அற்றது பற்று என்றால் உற்றது வீடு". அன்பு பயனை மட்டும் கருதாது. கடமையைக் கண்ணாகக் கொண்டு செயல்படும். அன்பின் பயனாக, உயிரானது அன்பு வடிவான இறைவனை அடைந்து இன்புறும்.
அன்பு என்பது உயிரின் இயல்பான உணர்வு; ஒழுக்கம் ஆகும். அது உயிர்களிடத்தில் பொங்கி வழிந்து மற்ற உயிரினங்களுக்குப் பாய்ந்து வளப்படுத்துவது. இயற்கையான,தூய, இறையருளைப் பெறுவதற்கு ஊற்றுக் கண்ணைப் போல் விளங்குவது. தன்னலப் போக்கால்,ஆணவச் செருக்குக்களால் தூர்ந்து போக விடுதல் கூடாது.
வாழ்க்கையின் குறிக்கோள் குற்றங்களும் குறைகளும் உடையதாய் இருக்கும். உயிர், அவற்றினின்றும் விலகி விடுதலை பெற்றுத் தகுதிகளைப் பெற முயலுதல் வேண்டும். உயிரின் முழு நிலையான வளர்ந்த தகுதி, அன்பாய் அமர்ந்திருத்தலே ஆகும். அவ்வன்பின் வழி திருவருளைத் துய்த்து இன்புறுதலே ஆகும். அன்புதான் சிவம் என்பதை அறிந்து கொண்டால், அன்பை சிவமாக அமர்ந்து (பொருந்தி) இருக்கின்ற நிலை வாய்க்கும்.
"அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே"
என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.
இந்த உயரிய இலட்சியத்தினை அடைய அறிவு, ஆள்வினை,பொருள், பதவி எல்லாமே துணையாக அமைவனவே. அன்பே வாழ்வின் இலட்சியம், அதுவே உயிர்ப் பண்புஎன்று உணர்ந்தவுடன், அன்பினைத் தோற்றுவிக்க ஒரு நிலையான கருத்துத் தேவை! கடவுள் ஒருவர்! அவர் உலகத்தின் தந்தையும் தாயும் ஆனவர். "அம்மையப்பரே உலகுக்கு அம்மை அப்பர்" என்பது மெய்கண்ட சாத்திரம். உயிர்க்குலம் அனைத்தும் இறைவன் அருளுக்கு உரியன என்ற அடிப்படைக் கருத்தை எண்ணினால் தோற்ற நிலையிலும் சாதி குலம் தெரியாது. வாழ்க்கை நிலையிலும் தெரியாது. இறுதி நிலையிலும் எல்லோரும் ஓர் குலம் என்ற உணர்வு தோன்றும்! அந்த உணர்வு அன்பினைத் தூண்டும்! அன்புக்கு நாடு, இனம், மொழி ஆகிய எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடுகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்தால் அவை அன்பைத் தடைசெய்யும். குற்றம் குறைகள் உயிரிடத்தில் இருக்கலாம். அவை அன்புக்குத் தடையாக இருத்தல் கூடாது. குற்றம் குறைகைளப் போக்குவதற்கு அன்பு தேவைப்படும்.அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொள்வார் இல்லை. அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொண்டு அதைக் கிழிப்பவர்களும் யாரும் இல்லை. அழுக்கினைப் போக்கிப் பயன்படுத்தவே யாரும் விழைவர்.அதுபோல் குற்றம் குறைகள் உடையவர்களையும் கூட அன்பாகப் பழகித் திருத்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேற்றுமை பாராட்டக் கூடாது. வெறுப்புக் கொள்ளவும் கூடாது. மானிடச் சாதியை அன்பில் நனைத்து வளர்க்கவே சமயம் தோன்றியது. அன்பே சிவம் என்று திருமந்திரம் கூறும். GOD IS LOVEஎன்று ஆங்கிலத்தில் கூறுவர். இரண்டிற்கும் மொழிதான் வேறுபாடே தவிர, உணர்வு வேறுபாடு அல்ல.
எனவே, அன்பும் சிவமும் இரண்டு அல்ல, அன்புதான் சிவம், சிவம்தான் அன்புஎன்னும் அறிவினைப் பெற்று, அன்பைப் பேணி, அறத்தை வளர்த்து, இன்பநிலையை எய்த எண்ணுதல் வேண்டும்.
இறைவனுக்குப் பொருள் அவசியம் இல்லை. ஆனாலும் அவனிடத்தில் பொருள் உள்ளது. அது அடியார்கள் காட்டும் அன்புதான் என்கின்றார் அப்பர் பெருமான். "துன்பு இல்லாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பு அல்லால் பொருளும் இல்லை ஐயன் ஐயறனார்க்கே" என்றார். எனவே, அன்பு ஒன்றால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும்.
இத்தகைய ஒப்பற்ற அன்பினால் மனித குலத்தை இணைத்து வளர்த்து வாழ்விக்காதது சமயம் அல்ல. சமய வேற்றுமையால் மனிதகுலத்தை வேறுபடுத்தும் கொள்கைகளைப் பரப்புபவர்கள், பேசுபவர்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். சமயங்கள் நிறுவனங்களாக மாறிவிட்டதால், சமய நெறிக்கும் வாழ்வியலுக்கும் இடைவெளி அதிகம் ஆகிவிட்டது. இதனால், சமயங்களுக்குள் பூசல். சமயங்களுக்கு இடையில் பூசல் பெருகி விட்டதைக் காணலாம்.
அன்பு வாழ்க்கையை வாழ்பவர்களே உண்மை அடியார்கள். அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்வதே இறைநெறி, சமயநெறி ஆகும். அத்தகைய அடியார்களை, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஆட்பட்டு வாழ்வாய் என்று இறைவன் அறிவித்தார் என்று பெரியபுராணம் கூறும்.
"பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை நீ அடைவாய்" --- பெரியபுராணம்.
இதன் பொருள் ---
அடியவர்கள் தம் பெருமையினால் தமக்குத் தாமே ஒப்பானவர்கள். இடைவிடாது எம்மை நினைந்து உருகுதலால் எம்மைப் பெற்றவர்கள். எம்மோடு ஒருமைப்பட நிற்றலால் இந்த உலகை வென்றவர்கள். அதனால்,மேல் வரக்கூடியதுன்பங்கள் எவையும் இல்லாதவர். பிறர் எவரும் நிற்பதற்கு அரிய நிலையில் நிற்பவர்கள். அன்பின் நிறைவால் இன்பத்தையே நிறையத் துய்த்து வருபவர்கள். இம்மை மறுமைகளைக் கடந்து இனிய நிலையைப் பெற்றவர்கள். இவ்வியல்பினராய இவ் வடியவர்களை நீ அடைவாயாக.
இவ்வாறு இறைவர் அருளிச் செய்யவும், "நான் குற்றத்தில் இருந்து நீங்கப் பெறும் நெறியினை அடையப் பெற்றேன்" என்று கூறி இறைவரைத் தொழுதார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
"நாதனார் அருளிச் செய்ய
நம்பியாரூரர் நான் இங்கு
ஏதம் தீர் நெறியைப் பெற்றேன்
என்று எதிர் வணங்கிப் போற்ற
நீதியால் அவர்கள் தம்மைப்
பணிந்து, நீ நிறைசொல் மாலை
கோதிலா வாய்மை யாலே
பாடுஎன அண்ணல் கூற. --- பெரியபுராணம்.
சீருடை அணிவதாலேயே ஒருவன் மாணவன் ஆகிவிட முடியாது. மாணவனுக்கு உரிய ஒழுக்கத்தில் நின்று, கல்வியைப் பயின்று அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்குவதே மாணவனுக்கு அழகு. அதுபோலத்தான், சமயச் சின்னங்களைத் தரித்துக் கொள்வதாலேயே ஒருவர் இறை அடியார் ஆகமுடியாது. சமயநெறியினை அறிந்து ஒழுகி, உயிருக்கு இயல்பாக உள்ள அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய குற்றங்களில் இருந்து நீக்கி,அறவழியில் வாழ்ந்து, அன்பைப் பெருக்கிக் கொள்வதே அடியவருக்கு அழகு. இறையருளால் அருமையாகப் பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, பிழைகளையே பெருக்கி, அன்பைச் சுருக்கி வாழ்பவர் சமயச் சின்னங்களைத் தரித்து அடியவர் கோலத்தில் இருந்தாலும், அவர் தன்னை அடியவர் என்று சொல்லிக் கொள்ளலாமே, காட்டிக் கொள்ளலாமே அல்லமால், உண்மை அடியவர் ஆகிவிட முடியாது. அவர் வெற்று அடியவர் என்று மணிவாசகப் பெருமானால் அடையாளப் படுத்தப் படுகின்றார். "பெற்றது கொண்டு பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின் வெற்று அடியேன்" என்பது திருவாசகம்.
எனவே, சமயத்தின் குறிக்கோள் அன்பு என்னும் உயிர்ப் பண்பை வளர்த்து, அறம் என்னும் பயனைப் பெருக்கி, வாழும் காலத்திலும் இன்பத்தோடு வாழ்வதே ஆகும்.
"அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே" --- தாயுமானார்.
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே! --- தாயுமானார்.
"எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்,
வேறு ஒன்று அறியேன் பராபரமே" --- தாயுமானார்.
No comments:
Post a Comment