உண்மைத் துறவு எது? சாதுக்கள் யார்?

 


சாதுக்கள் யார்? --- துறவு எது?

-----  

 

குன்றக்குடி அடிகளார் துறவு பற்றி ஆற்றிய சொற்பொழிவு

 

     துறவு எதுதுறவி யார்என்பன போன்ற வினாக்கள் இன்றல்லநேற்றல்லபல நூறு ஆண்டுகளாகக் கேட்கப் பெற்றவை. இன்றும் கேட்கப் பெறுபவை. தமிழகம்தனக்கென ஒரு சிறந்த சமய நெறியைப் பெற்று விளங்கிய புகழுடையது. சேக்கிழார் தமிழகத்துச் சமய நெறியினைச் "செழுந்தமிழ் வழக்கு"என்றார். இந்தச் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கை வென்று விளங்க வேண்டும் என்றார். திருஞானசம்பந்தர் வரலாற்றில் இந்தக் குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. இங்குச் சேக்கிழார் குறிப்பிடும் அயல் வழக்கு எதுசமண் சமயமே அயல் வழக்கு - சமண சமயம் கடுந்துறவின் பாற்பட்டது. அந்தச் சமணத்தை எதிர்த்தே திருஞான சம்பந்தர் கிளர்ச்சி செய்தார்.

 

     மாணிக்கவாசகர் பெளத்தத்தைச் சந்தித்து இருக்கிறார்பெளத்தத்தை வழக்காடி வென்றிருக்கிறார். அந்த வழக்கில் நம் பெருமான் பெண்பால் உகந்தாடுகின்றானே” என்று பெளத்தர்கள் கேலி செய்திருக்கிறார்கள்மாணிக்க வாசகர்,

 

"பெண்பால் உகந்திலனேல்,பேதாய்! இருநிலத்தோர்

விண்பாலி யோகு எய்தி வீடுவர்காண்".

 

என்று பதில் சொல்லுகிறார்.

 

     அப்பரடிகள் ஐயாற்றில் கயிலையைக் காண்கிறார். கயிலைக் காட்சியை ஊன் உருகஉளம் உருக நின்று பாடுகிறார். கயிலையில் காதல் மடப்பிடியோடும் களிறு வருவன” காண்கிறார். சுந்தரர்பரவையாரை மணந்து,பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வாழ்ந்தார் என்று சேக்கிழார் பாடுகின்றார். இவர்கள் நமது நாயன்மார்கள்வழிகாட்டும் தலைவர்கள். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. வாழ்க்கைத் துறவை நம்முடைய சமய ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று.

 

     வாழ்க்கைபல்வேறு கூறுகளை உடையது. உடல் வாழ்க்கை - உயிர் வாழ்க்கை - உணர்வு வாழ்க்கை என்றெல்லாம் பகுத்துக் காணுவர். சிலர்,உடல் வாழ்க்கைக்கு உரியதையே உயிர்உணர்வு வாழ்க்கைக்கும் உரியதாக்கிவிடுவர். அது விலங்கியல் வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் படிகள் அனைத்தையும் அடைந்து அனுபவித்து அதனதன் எல்லையிலே நின்று உணர்விற் சிறந்து வாழ்தல் சிறப்புடைய வாழ்க்கை - சீலம் நிறைந்த வாழ்க்கை.

 

     திருஞானசம்பந்தர் சமணத் துறவிகளைப் பார்த்து வியப்புப் பொருள்படக் கூறுவதுபோலக் கூறுகிறார்"துறவி ஆகுமேஎன்று! நீ துறவியாவாய் - எப்பொழுது துறப்பதினால் மட்டும் துறவியாகி விடுவதில்லை. துறக்கக் கூடாத ஒன்றைத் துறக்காமலிருப்பதின் மூலமே துறவியாகின்றாய்துறந்த பொருட்களின் பட்டியல் பெருகலாம். "உடை துறந்தேன்என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்புஉடலுக்கல்லவா இழப்பு"உணவைத் துறந்தேன்!"என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்புஉடலுக்கல்லவா இழப்புதுறந்த பொருள்களின் பட்டியல் பெருகுவதால் பயனில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் வைத்து கொண்டா வாழ்கிறார்கள்மகிழ்கிறார்கள்காலால் நடத்தல் துறவு என்றால்உலகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் கால்களால் நடக்கிறார்கள். அவர்கள் எல்லாம் துறவிகளாஒரு வேளை உண்பது துறவென்றால்,அதுதானும் உண்ணாதார் பலரிருக்கிறார்கள். அவர்களைத் துறவியாக்கி விடலாமாஆதலால் துறந்த பொருட்களைக் கொண்டு துறவியை நிர்ணயிக்க முடியாது. துறக்கக் கூடாததை அவன் துறக்காமல் இருக்கிறானாதிருஞானசம்பந்தர் உண்மைத் துறவு நிலையை விளக்குகின்றார். நீ துறவாதிருந்தால் துறவியாவாய் என்கிறார். எதைத் துறக்கக்கூடாதுஇறைவன் திருநாமத்தை நெஞ்சு துறக்கக்கூடாதுமறக்கக்கூடாதுஏத்தி வழிபடத் தவறக்கூடாதுஇறைவன் திருநாமத்தை மறவாது நினைப்பற நினைந்து ஏத்தி வாழ்தலின் மூலமே துறவியாவாய் என்கிறார்அதுவே துறவுக்கு இலக்கணம் என்பதைத் துறவியாகுமே’ என்று வலியுறுத்துகிறார்.

 

     பெளத்தத் துறவிகள் கடவுளை மறந்தனர். சமணத் துறவிகள் நோன்பே கடவுளெனக் கொண்டனர். இன்றையத் துறவிகளில் சிலர்கடவுளை மறந்து சாதியே அனைத்தும் என்று சாதிவெறி பிடித்து அலைகின்றனர். சிலர் - உருத்திராக்கம் அதிகமாக அணிபவர்கள் - கடவுளை மறந்து காசுகளை எண்ணுகின்றனர். கடவுட் கோயில் நமக்கு வேண்டாம். காணிகளே வேண்டும் என்று சொல்லிக் கோயிலைப் பாழடித்து விட்டுக் காணிகளை வைத்துக் களிப்புறுகின்றனர். இப்படிப்பட்ட "துறவிகள் நம்முடைய தலைமுறையில் இல்லையாஎன்னதில்லைக்குச் சென்று அங்குள்ளோரைக் கேட்டால் விடை கிடைக்கும். உடை துறவுக் கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! ஆனாலும் துறவன்று! கனியின் தோல் பழுத்து பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்தில் கனிந்தகனிவே தோலையும் பற்றுகிறது. சுமைமிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதன்று. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம். முதற்கனிவு கனியின் உட்பகுதியேயாகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல் மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்லவெம்பல்! துறவிலும் உள்ளம் பழுக்கவேண்டும். "பழுத்த மனத்து அடியார்என்பார் மாணிக்கவாசகர். இன்றோ உடல் பழுத்திருக்கிறதுஉடை பழுத்துக் காட்டுகிறதுஆனாலும் உள்ளம் பழுக்கவில்லை! ஆங்காரம் பிடித்தாட்டுகிறது. இவர்கள் திருஞானசம்பந்தர் கூறிய துறக்கக் கூடாத ஒன்றைத் துறந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் இன்னும் துறவியல்ல. இனிமேலும் துறவியாதல் அரிது. உண்மைத் துறவியாக வேண்டுமாதிருஞானசம்பந்தர் கூறுவதைப்போல இறைவன் திருநாமத்தை நினைப்பற நினைந்து ஏத்துங்கள்! அந்தச் சீலமே துறவாக்கும். இதனைத் திருஞானசம்பந்தர்,

 

"பிறவி அறுப்பீர்காள்! அறவனாரூரை

மறவாமு ஏத்துமின்துறவி ஆகுமே!

 

என்று பாடுகின்றார்.

-----------------------------------------------

 

     சாதுக்கள்துறவிகள் என்போர்இல்லற நெறியைத் துறந்துகாடுகளிலும்மலைகளிலும்வாழ்ந்து வருகின்றனர். சிலர் ஆசிரமம் அமைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். துறவு நிலை என்பது பற்றுக்களை எல்லாம் துறந்துஇறைஞானத்தைப் பெற்றுஇறைவன் திருவடியை அடைவதற்கே ஆகும். 

 

     உண்மைத் துறவு எது என்பதைக் குறித்துஅருணகிரிநாதப் பெருமான் அருளியுள்ளதைக் காண்போம்...

 

"காவி உடுத்தும்,தாழ்சடை வைத்தும்

     காடுகள் புக்கும் ...... தடுமாறி;

காய்கனி துய்த்தும்,காயம் ஒறுத்தும்,

     காசினி முற்றும் ...... திரியாதே;

 

சீவன் ஒடுக்கம்,பூத ஒடுக்கம்

     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண,எனக்கு உன்

     சீதள பத்மம் ...... தருவாயே".      --- திருப்புகழ்.

 

இதன் பொருள் ---

 

     காவி ஆடையை உடுத்திக் கொண்டும்தொங்கும் சடையை வளர்த்து வைத்தும்காடுகளில் புகுந்து தடுமாற்றதை அடைந்தும்காய்பழவகைகளை உண்டும்உடம்பை விரத முதலானவைகளால் வருத்தியும்உலகம் முழுவதும் அலைந்து திரியாமல்உயிரைப் பற்றி அறிகின்ற பசுஞானத்தை நீக்கும் தன்மையும்பாசஞானத்தை நீக்கும் தன்மையும்தெளிந்த போது உதிப்பதாகியமேலான பதிஞான ஒளி விளக்கத்தினை அடியேன் கண்டு களிக்குமாறு,அடியேனுக்கு உமது குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

 

சீவன் ஒடுக்கம் ---

 

     உயிரைப் பொருள் என அறிவது பசுஞானம். அந்த அறிவும் இல்லாது போகவேண்டும். அந்தக்கரண ஒடுக்கம் இதுவே ஆகும். விடயங்களைப் பற்றி நிச்சயித்து அபிமானித்து சிந்தித்து நிற்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் அந்தக்கரண வாசனை நீங்குதல்வேண்டும். இதுமவே சீவன் ஒடுங்கிய நிலை.

 

பூத ஒடுக்கம் ---

 

     பாசத்தைப்(பொருள்களைப்)பற்றி அறியும் ஞானம் பாசஞானம்ஆகும். அதுவும் நீங்குதல் வேண்டும். விடயங்களை அபகரிக்கும் கண் முதலிய ஐம்புலன்களுக்கும்அபகரித்த போது வசன கமன தான விசர்க்க ஆனந்தம் ஆதிகளைவிடயீகரிக்கத் துணைபுரியும்வாக்கு ஆதி கன்மேந்திரியங்களுக்கும்ஆதாரமாய் நிற்கும் பூதங்களின் நீக்கம் இது ஆகும்.

 

பரஞானம் ---

     பசுஞானம் ஆகிய உயிர் அறிவும்பாசஞானம் ஆகிய பொருள் அறிவும்நீங்கிய போது உதிப்பது பரஞானம்.பதிஞானம்அநுபவஞானம்சிவஞானம் எல்லாம் ஒன்றே. இதுவே திருவருள் ஞானம். இதுவே பரகதிக்கு சிறந்த சாதனம்.

 

     காவி உடுத்தும்தாழ்சடை வைத்தும்காடுகள் புக்கும் வாழ்வது என்பது தடுமாற்றத்தையே தரும் என்று சுவாமிகள் அறிவுறுத்துவது காணலாம். இந்தத் தடுமாற்றத்தை அடைவதற்காகவா எல்லாவற்றையும் விடுத்துநல்ல உணவையும் விடுத்து,உடலை வறுத்தி,காய்கனிகளைப் புசித்துக் கொண்டு திரியவேண்டும். இவற்றால் எல்லாம் உண்மை ஞானத்தை ஒருவன் பெற்றுவிட முடியாது. "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்பதால் இல்வாழ்வில் இருந்துகொண்டேவினைப்பயனை அனுபவித்துக் கழித்துஅறவாழ்வை வாழ்ந்து அன்பைப் பெருக்கிஇன்பத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

 

"காடே திரிந்து என்ன,காற்றே புசித்து என்ன,கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன,உள்ளன்பு இலாதவர்,ஓங்கு விண்ணோர் 

நாடே இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர்,நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!"

                                

ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த ஞானச்செல்வர் ஆகிய பட்டினத்தடிகள் இல்லறத்தின் மாண்பை வலியுறுத்துவது காணலாம். 

 

இதன் பொருள் ---

 

     உள்ளத்தில் அன்பு இல்லாதவர்காட்டிலே திரிவதால் பயன் என்னகாற்றை மட்டுமே புசித்து வாழ்வதால் என்ன பயன்கந்தைத் துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டுஓட்டைக் கையில் ஏந்தித் திரிவதால் என்ன பயன்உயர்ந்த தேவர் உலகத்தை ஒத்த திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்கு உண்மை அன்பராய் இருப்பவர்கள்மாதரோடு கூடி இல்வாழ்க்கையில் இருந்தாலும்மெய்ஞ்ஞானத்தால் அடையக் கூடிய மோட்ச சுகத்தைப் பொருந்துவார்கள்.

 

     சாதுக்கள் என்போர் யார் என்பதைப் பட்டியலிட்டுவடலூர் வள்ளல்பெருமான் தாம் பாடியருளிய திருவருட்பாவில் "நெஞ்சறிவுறுத்தல்" என்னும் பகுதியில் காட்டுகின்றார்.

சாதுக்கள் என்பவர்கள் உலக வாழ்க்கையை விட்டுஅருள்நெறியில் நிற்பதற்கு முயலுகின்றவர்கள். சாதுக்கள் பெரும்பாலும் எளிய ஆடைகளை அணிந்துகொண்டு,இறை பணியில் நின்றுஇறையருள் பெற்றுஇறையருள் நிலையை உலகுக்கு உபதேசிப்பவர்கள்.

 

1. ஏக சொரூபமான இறைவன் திருவடிகளில் விளையும் அன்பையே தமக்கு வடிவம் ஆகவும்அந்த வடிவினுள் பொருந்தி உள்ள "உயிர் இரக்கம்" என்னும் சீவகாருண்ணியமே தமது உயிராகவும்பேரின்ப அனுபவத்தையே தமது உணர்வாகவும் கொண்டு அருட்பணியில் நிற்போர்கள்.

 

2. அன்பையே தமக்கு உரிய பண்பாகக் கொண்டுஉருத்திராக்கமாலையையே பொன்னால் ஆன அணிகலன் ஆக அணிந்துதிருவெண்ணீற்றையே நல்ல மணமுள்ள மேற்பூச்சாகவும் கொண்டுதம் உயிரை விட்டு நீங்காத இறைவன் திருநாமத்தையே சிந்தையில் கொண்ட இலட்சியத்தில் நிற்பவர்கள்.

 

3. இறைவனுக்கு நாம் அடிமை என்னும் உணர்வோடுவாக்கினால் துதிக்கின்ற சொல்மலர்களைச் சாத்தியும்தூய்மையான மலர்களைக் கொண்டு இறைவனுக்குச் சாத்தும் மாலைகளைத் தொடுப்பவர்கள்.

 

4. இறைவனுக்குச் சிறந்த திருநந்தவனத் திருப்பணிகளைச் செய்பவர்கள்.

 

5. தீயில் உருகும் மெழுகினை ஒத்த உள்ளத்தோடு இறைவனை நினைந்து உருகிஇறைவன் எழுந்தருளி உள்ள திருக்கோயிலைப் பசுஞ்சாணத்தால் மெழுகித் தூய்மை செய்பவர்கள்.

 

6. தமக்குத் தொண்டு பூண்டுள்ள அடியவர்களைத் தாயைப் போல வளர்க்கின்ற தயவினை உடைய இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயிலைதிருவலகு (துடைப்பம்) கொண்டு விளக்கம் செய்பவர்கள்.

 

7. உள்ளத்தில் தூய்மையான அன்பும் அருளும் நிறைந்தவராய்திருக்கோயிலுக்கு விளக்கு ஏற்றுதல் முதலான பணிகளை அன்புடனே செய்து,ஆலயமே கதியாக அமர்ந்து இருப்பவர்கள்.

 

8. அன்புடன் அடியவர்க்கு அமுது படைத்தல் முதலான சிவபுண்ணியங்களை நாளும் செய்து வருபவர்கள்.

 

9. இறைவனையே நினைந்து அவனது அருட்பெருமைகளைப் போற்றித் துதிப்பவர்கள்.

 

10. இறைவனையே சிந்தித்து இருப்பவர்கள்.

 

11. அகமுக நோக்கில் இறைவனைத் தமது நெஞ்சின் உள்ளேயே கண்டு இருந்தும்இறைவனைக் காணாத தன்மையரைப் போன்றுஅவனது திருமேனியைக் கண்டு நாளும் தரிசித்து மகிழ்கின்றவர்கள்.

 

12. இறைத் தொண்டு நெறியில் சேர்விக்கும் என்று உளமார நினைந்துதேவார மூவர் முதலிகள் அருளிய திருப்பதிகங்களை வாயாரப் பாடி இறைவனைத் துதிப்பவர்கள்.

 

13. கனவிலும் கூட அறிவு மயக்கத்தை உண்டு பண்ணாதகலப்பு இல்லாத மாணிக்கம் போன்ற திருவாசகத்தை வாயாரப் பாடித் துதிப்பவர்கள்.

 

14. அருளாளர்கள் பாடி வகுத்து வைத்த திருவிசைப்பா முதலான திருமுறைகளைப் பாடிப் பரவி மகிழ்பவர்கள்.

 

15. தம்மைத் துதிப்பவர்களுக்குப் பொருந்திய நல்வாழ்வை அருளுகின்ற இறைவனது திருவிளையாடல்களை விரித்து உரைப்பவர்கள்அவற்றைக் கேட்டு மகிழ்பவர்கள்.

 

16. இறைவனை நினைந்து சாமவேதம் முதலாகிய வேத ஆகமங்களின் நுட்பங்களை விரிவாக எடுத்து உரைப்பவர்கள்.

 

17. உபநிடதங்கள் கூறும் பரமஞானத்தைப் பெற்றவர்களுக்கு அருள் பாலிக்கும் இறைவனே மெய்ப்பொருள் என்று தேர்ந்து பூசை செய்பவர்கள்.

 

18. தமது நெஞ்சகமே இறைவன் வீற்றிருக்கும் கோயில் என்னும்படி மனத்தைச் செம்மையாக வைத்துநிறைந்த பத்தியில் திளைத்தவர்கள்.

 

19. பிரமன் எழுதிய எழுத்துக்களும் அஞ்சும்படியான எழுத்துக்கள் ஆகிய இறைவனது பஞ்சாட்சரம் முதலான மந்திரங்களை உருவேற்றிஞானமலர்களால் அர்ச்சனை புரிந்துமன அமைதியில் திளைத்தவர்கள்.

 

20. ஐந்து புலன்களையும் உலக விடயத்தில் செலுத்தாமல்இறைவன் திருவடிகளிலேயே பொருந்த வைத்தவர்கள்.

 

21. தம்மை வஞ்சித்துஉலக வாழ்வில் திளைக்க வைக்கின்ற ஆணவம்கன்மம்மாயை முதலான அழுக்குகளால் உண்டாகும் பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற இறைவன் திருவடியில் தமது ஆன்மாவை நிவேதனமாகச் சமர்ப்பிக்கும் நல்லவர்கள்.

 

22. நடக்கும்போதும்நிற்கும்போதும்எந்த நேரத்தில்எந்த வேலையைச் செய்தாலும்,இறைவன் திருவடித் தியானத்திலேயே மனத்தை வைத்தவர்கள்.

 

23. உயிரை எக்காலத்தும் வருத்துகின்ற துன்பம் நீங்கஇறைவனிடத்தில் தமது காதலை நிழலாட விடுகின்றவர்கள்.

 

24. மாயையால் உண்டானமாயைக்கு இடமான உடலில் இருந்துகொண்டேஅந்த மாயையைக்கு அப்பால் இருந்துசீவன் சிவமாக விளங்கும் தகுதியில் நிற்பவர்கள்.

 

25. வானத்தில் உண்டாகின்ற கருமேகங்களைக் கண்டு நடனம் ஆடும் மயிலைப் போன்றுஇறைவனுடைய இருப்பை உள்ளத்தில் கண்டு இன்பக் கூத்து ஆடுகின்றவர்கள்.

 

26. மௌன நிலையில்சடையும்திருவெண்ணீறும் தரித்துகோவணத்தையே ஆடையாகக் கொண்டுஇறைவனின் திருவுருவை உள்ளத்தில் தாங்கிய நிலையில் வாழ்பவர்கள்.

 

27. தத்துவங்கள் எல்லாம் சடம்அவைகளால் பயன் இல்லை எனத் தெளிந்துஅவைகளில் இருந்து நீங்கிஞானஇன்ப மயமான அருட்பெருஞ்சோதி வடிவில் இறைவனைத் தரிசித்துகாற்று அறியாத் தீபம் போல மனம் அசைவற்று இருப்பவர்கள்.

 

28. அசைவற்ற நிலையில் இருந்து பெயராமல்சிவராஜ யோகிகள் ஆன வெற்றியில் சிறந்த வேந்தர்கள்.

 

29. சத்துவ குணத்தையே தமது வடிவமாகக் கொண்டுமேலான பரதத்துவத்தில் பயிலுகின்ற பண்பினை உடையவர்கள்.

 

30. உள்ளம் ஒன்றிய நிலையில்துன்பமும் இன்பமும் எல்லாம் இறைவன் அருட்செயலே என்று சிந்தித்துவெறுப்பும் விருப்பும் அற்றுஎதையும் சமநோக்குடன் அனுபவித்து இருப்பவர்கள்.

 

31. தனது பெயர்தான் பிறந்த குலம்கோத்திரம்சாதிவீடுதோட்டம்துரவு எல்லாவற்றையும் மறந்துஉண்மைத் துறவில் நிற்பவர்கள்.

 

32. வினை வழி அனுபவங்கள் அனைத்தையும்உள்ள அமைதியோடு அனுபவித்து வினைகளைக் கழிப்பவர்கள்.

 

33. தம்மை வந்து பொருந்துகின்ற சித்துக்கள் எவற்றையும் விரும்பாமல்அவற்றையும் துறந்த சிறந்த ஆற்றலாளர்கள்.

 

34. எந்தப் பிறவியிலும் அடங்காமல் பெருகுகின்ற ஆசை ஆகிய பெருங்கடல் நீரைமான் குளம்பின் நீர்போலஎளிதாக நீந்திநிராசையில் நிலைத்தவர்கள்.

 

35. ஊழின் வழி தமக்கு அமைந்த மண்பொன்பெண் முதலானவற்றைக் கண்ட அளவில்அவற்றை உள்ளத்தில் பதிக்காமல்மெய்யின்ப வீட்டில்மெய்ப்பொருளைப் பொருந்தி இருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

 

36. பொன்மண் இவற்றின் மீது வைத்த பற்றினைப் போக்கிதாய்மார்களை எல்லாம் தமது தாயைப் போல எண்ணுகின்ற பெரியவர்கள்.

 

37. மென்மைத் தன்மை உடைய ஒரு துரும்பையும்உலகையே படைத்துக் காத்து அளிக்கும்படியான தன்மையைப் பெறும்படியாகஅதைத் தமது திருமேனியின் பரிசத்தால் செய்ய வல்ல ஞானவடிவானவர்கள்.

 

38. எல்லாவற்றையும் அறிந்து இருந்தும்ஏதும் அறியாதவர் போன்று இருந்துஎக்காலத்திலும்இறப்பையும்பிறப்பையும் தவிர்த்து இருப்பவர்கள்.

 

39. தம்மைப் பிறர் ஏளனம் செய்தாலும்வாழ்க என வாழ்த்திக் கூறிதமக்கு உபசாரம் செய்தவர்களிடத்தும் அபிமானம் வைக்காமல்தமது நிலையில் திறம்பாமல் இருப்பவர்கள்.

 

40. உலகத்தையே இறைவனது சொரூபமாகக் கண்டுமெய்ப்பொருளை உணரும் தெளிவு பெற்றுதன்முனைப்பு இல்லாமல் எப்போதும் ஒருபடியாய் இருப்பவர்கள்.

 

41. மௌன நிலையில் இருந்து மாறுபடாமல்விடய வாதனைகள் ஒழிந்த இடத்தில் விளங்குகின்ற உயர்ந்த இறையின்பத்தில் திளைத்து இருப்பவர்கள்.

 

     இவர்கள் எல்லோரும் குறையாத நிறைவினர் ஆன சாதுக்கள். இந்த சாதுக்களின் சங்க மகத்துவத்தைசாதுக்களால் தான் அறிந்து கொள்ள முடியும். எனவேஇந்த சாதுக்கள் கூடியுள்ள சங்கத்தில் நீயும் சேர்ந்து இருந்துநாள்தோறும் அவர்க்குக் குற்றேவல் புரிந்துதிருப்பணி செய்துபாழ்வாழ்வு நீங்கிபதிவாழ்வில் எப்போதும் வாழ்ந்திருப்பாயாக என்று அறிவுறுத்திகின்றார் வள்ளல்பெருமான்.


     புறத்துறவு என்பதுவீட்டை விட்டுக் காட்டை அடைந்துதூய வெள்ளை ஆடையைத் துறந்து காவி தரித்துஆறுசுவை உணவை விடுத்துகாய்கனியைத் துய்ப்பது. இவ்வளவுக்கு உடலை வறுத்திதன்னைச் சார்ந்தோரையும் வருந்தி இருக்க விட்டுச் செல்லும் புறத்துறவால் மட்டுமே உண்மைஞானத்தைப் பெற்று விடமுடியுமாஎன்பது கேள்விக் குறி. அறவழியில் ஒழுகினால் ஆண்டவன் அருளைப் பெறமுடியும். "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்றார் திருவள்ளுவ நாயனார். "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்றார் ஔவைப் பிராட்டியார்.

     இல்லறமே சிறந்தது என்பதனை மேலும் நமக்குத் தெளிவாக்குவது அறப்பளீசுர சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல். இல்லறம் என்பதன் இலக்கணத்தையும்அது துறவறத்தை விடச் சிறந்தது என்பதையும் அற்புதமாக விளக்குவது.

"தந்தைதாய் சற்குருவை,இட்டதெய் வங்களை,

சன்மார்க்கம் உளமனை வியைத்

தவறாத சுற்றத்தை,ஏவாத மக்களைத்

தனைநம்பி வருவோர் களைச்

 

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

தென்புலத் தோர் வறிஞரைத்

தீதுஇலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

தேனுவைப் பூசுரர் தமைச்

 

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

தான்புரிந் திடல்இல் லறம்;

சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

தம்முடன் சரியா யிடார்!

 

அந்தரி உயிர்க்குஎலாம் தாய்தனினும் நல்லவட்கு

அன்பனே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

அறப்பளீ சுரதே வனே"!

 

இதன் பொருள் ---

 

     பார்வதி தேவியும்எவ்வுயிர்க்கும் தாயினும் நல்லவளும் ஆன உமாதேவியின் அன்புக்கு உகந்தவனே!எம் அரிய மதவேள் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்றசதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     தந்தை தாயரையும் நல்லாசிரியனையும்வழிபாட்டிற்கு உரிய தெய்வங்களையும் நல்லொழுக்கமுடைய இல்வாழ்க்கைத் துணையையும்நீங்காத உறவினரையும்ஒரு செயலைச் சொல்லும் முன்னரேயே சொல்லுகின்றவரின் குறிப்பை அறிந்து செயல் செய்யும் பிள்ளைகளையும்தன்னை நம்பி வருகின்றவர்களையும்மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும்,மறைந்த முன்னோரையும்ஏழைகளையும்குற்றமற்ற விருந்தினரையும்அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும்,பசுக்களையும்அந்தணர்களையும்ஆதரித்தலும்எப்போதும் செய்யும் கடமைகளும் ஆகிய இவைகளைஎப்போதும் தவறாமல்ஒருவன் செய்து வருவது இல்லறம் எனப்படும்பொருந்திய நன்மையை உடையவர்களாகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இப்படிப்பட்ட இல்லறத்தானுக்கு ஒப்பாகமாட்டார்கள்.

 

     இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றுக்களை விடுத்து,இறைபணியில் நின்றுஉண்மை ஞானத்தைப் பெறுவதே உண்மைத் துறவு ஆகும். உண்மைத் துறவிகளை வழிபடுவதே உண்மைஞானம் பெறும் நெறி ஆகும். 

 

 

 

No comments:

Post a Comment

கோயில் திரு அகவல் - 3

  பட்டினத்து அடிகளார் அருளிய கோயில் திரு அகவல் - 3 திருச்சிற்றம்பலம் --- பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்...