உண்மையான பத்திமை வாழ்வு
-----
பத்திநெறியில் வாழும் வாழ்க்கை தூயது. இனிமை நலம் மிக்கது. சழக்கு நெறிகளைக் கடந்தது.முத்திநெறிக்கு இதுவே சாலச் சிறந்தது. எல்லா உயிர்களையும் ஒன்று என ஒக்கப் பார்க்கும் கருணை நோக்கம் உடையது. உண்மையான பத்திமை, வாழ்க்கையில் விளங்கினால் சிக்கல்கள் இல்லை; பகையில்லை. புகைச்சல் இல்லை. பண்பட்ட நிலத்தில் விளைச்சல் பெருகி உயர்வதைப் போலப் பண்பட்ட மனத்தில் உண்டாகும் பத்திமை உணர்வால் சமுதாயத்தில் அன்பு பெருகும்.அருள் வளரும்.
இத்தகு பத்திமை வாழ்வு புறக்கோலத்தோடு அமைவது அல்ல. அக ஒழுக்கத்தால் உண்டாவது. பயிருக்கு வளம் தரும் மண்ணின் உரச்சத்து எளிதில் நமது கண்ணுக்குப் புலனாவதில்லை. வளரும் பயிரின் வளத்தைக் கொண்டே மண்ணின் வளத்தை அறிகின்றோம். பத்திமை வாழ்வு உடம்போடு மட்டும் தொடர்பு உடையது அல்ல. பத்தி செய்வதற்கு உடம்பு ஒரு வாயில் மட்டும்தான். உண்மையான பத்தி என்பது, முழுக்க முழுக்க உள்ளத்தோடு தொடர்புடையது. நெஞ்சில் பத்தி தழைத்தால், நல்ல பண்பு தழைக்கும்.
திருஞானசம்பந்தர் பத்திமை வாழ்க்கையின் இலக்கணத்தை வடிவமைத்துத் தந்துள்ளார்.
இன்று, எங்கும் பரபரப்பு! எதிலும் பரபரப்பு! ஆண்டவன் முன்னே அருச்சனை நாமங்களைச் சொல்வதில் கூடப் பரபரப்பு! காரணம் பத்திமை நோக்கமல்ல. அருச்சனை என்பது ஒரு தொழிலாகிவிட்டது. சடங்காக மாறி விட்டது. "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை" என்று தெய்வச் சேக்கிழார் காட்டியது சொல்லளவில் மட்டுமே உள்ளது. குறைந்த நேரத்தில் நிறையச் சம்பாதிக்க வேண்டுமென்றால், அருச்சனையைச் சாங்க உபாங்கமாகச் செய்ய முடியாது. அப்படியே அருச்சகர் செய்தாலும் செய்துகொள்ள வந்தவர் அடுத்த வேலையைப் பார்க்க, தனது கையில் உள்ள கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு, விரைவில் போகப் பரபரத்துக் கொண்டிருப்பார்.
தகுதியை வளர்த்துக் கொள்ளக் கொள்ள உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. உரிமை உணர்வில் கூட ஒரே பரபரப்பு! தகுதியைப் பற்றி மனம் எண்ணிக்கூடப் பார்க்க மறுக்கின்றது. எப்படியாவது உரிமையைப் பெறவேண்டும் என்னும் பரபரப்பு. ஆனால் ஊர்க் கதைகளை எல்லாம் பேச நேரமுண்டு. எத்தனையோ வகையில் பரபப்பு! பரபரப்பு உடையவர் பண்பாளராக முடியாது. பத்திமைக்கும் பரபரப்புக்கும் எப்பொழுதும் பகை. "பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்"என்றார் தருமைக் குருஞானசம்பந்தர். "பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்" என்றார் மணிவாசகப் பெருமான். "பரப்பு அமைந்து கேண்மின்" என்றது மெய்கண்ட சாத்திரம். திருஞானசம்பந்தப் பெருமானும் பரபரப்பு கூடாது என்கின்றார். பரபரப்பு கூடாது என்பது மட்டுமல்ல.பரபரப்புக்குரிய சூடு ஆற வேண்டும். ஆக்கின சூட்டில் அள்ளித் தின்ன முடியாதல்லவா? சூடு ஆற வைத்துத்தானே சுவைத்து உண்டு மகிழவேண்டும். உள்ளமும் ஆற அமர நிதானித்து எண்ணிப் பழகும் இயல்பைப் பெற்றால் நல்ல பண்பு வளரும்.பக்தியும் வளரும்.பரமனும் தனது இன்னருளைப் புரிவான்.
பத்திமைக்குக் கள்ளத்தனம் முரணானது. பத்திநெறியில் நிற்போருக்கு உள்ளத்தில் கள்ளத்தனம் சிறிதும் கூடாது. வஞ்சகம் ஒழிந்தால்தான் வாழ்வியல் சிறக்கும். உதடு சிரிக்கிறது. ஆனால் உள்ளமோ பற்றி எரிகிறது. முகம் முகமன் உணர்வைக் காட்டுகிறது. ஆனால் முதுகுக்குப் பின்புறம் பேசப்படுகின்றது. பாராட்ட மனமில்லை. ஆனாலும், பாராட்டு நிகழ்கிறது. பிறர் உயர்வு கண்டு மகிழ மனமில்லை. கருத்து மாறுதல்கள் அல்லது தவறுதல்கள் திருத்தப்படக் கூடியவையே! ஆனால், கருத்து மாறுதல்கள் வஞ்சகத்திற்கு வித்திடக் கூடாது. கள்ளம் ஒழிந்தால்தான் கங்காளரைக் காணலாம். கள்ளமில்லா மனத்தில் கங்களான் விளங்குவான். "உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அல்லால், கள்ளம் உள்ளவருக்கு அருள்வான் அல்லன்" என்றார் அப்பர் பெருமான். "கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கி" என்றும் அப்பர் பெருமான் பாடினார். "கள்ளத் தொண்டு" என்று காட்டியிருப்பது சிந்தனைக்கு உரியது. இது "உண்மைத் தொண்டு" ஆகாது. "பொய்த்தொண்டு" ஆகும். "உண்பதற்கே பொய்த்தொண்டு பேசி, புறம்புறமே உன்னப் போற்றுகின்ற இத் தொண்டனேன் பணி கொள்ளுதியோ?" என்று வினவுகின்றார் பட்டினத்து அடிகள்.
சொல், உலகத்தில் மிக உயர்ந்தது. சொல்லே மனித உலகத்தை இணைக்கும் பாலம். சொல்லே உணர்வைத் தூண்டுகிறது.உள்ளன்பை வளர்க்கிறது. உறுதியைத் தருகிறது. உறவினை வளர்க்கிறது. சொல்லே பரமனையும் நம்மோடு இணைத்துத் தருவது. இத்தகு ஆற்றலுடைய சொல்லை இன்றைக்கு நெறி தெரிந்து பயன்படுத்துவோர் வெகு சிலரை உள்ளதைக் காணலாம். சொல்லில் நிகழ்ந்த சோர்வுதான் கோவலனின் உயிரைப் பறித்தது. சொல்லில் உண்டான சோர்வுதான் நீதியில் சிறந்த நெடுஞ்செழியனை அநீதிக்கு ஆளாக்கியது. சொற்களைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினாலும் குறைந்த அளவு சொற்களின் கடுமையைக் குறைக்க வேண்டும். சுடும் சொற்கள் பேசுவோர், நிறையத் திருநீறு பூசியவர்களிலும் இருக்கிறார்கள். சொற்களில் ஈரக் கசிவு இருக்கவேண்டும்.
மனித வாழ்க்கை செயல்களை உயிர்ப்பாகக் கொண்டது. செயற்படாத உலகம் செம்மை நெறியில் சேர முடியாது. தொழிற்படாத உலகம் தொல்லை இரும்பிறவிக் கடலைக் கடக்க முடியாது. ஆனால் காமத்தோடு செய்யும் செயல்கள் பயனைத் தரமாட்டா. காமம் என்பது அறிவு மயக்கத்தால் உண்டாகும் விருப்பம் ஆகும். காம உணர்ச்சி இருந்தால் காரியத்தில் நாட்டம் இருக்காது. பயன்மீதே நாட்டம் இருக்கும். இன்று எந்தச் செயலிலும் பயன் மீது நாட்டம் கொள்ளாமல், பயன் கருதாமல் பணி புரிவதில் நாட்டம் கொண்டோரைக் காணுதல் அரிதாகி விட்டது. இத்தகு காம உணர்வானது உண்மை இன்பத்தைத் தராது. மாறாகத் துன்பத்தையே தரும். பொருள், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான். தம்மைச் சார்ந்தோரை உண்பித்தும், தாமும் உண்டும் மகிழப் பொருள் தேவை. இதற்குப் பொருள் தேடாது, பொருளாளன் ஆவதற்குப் பொருள் தேடுதல் காமம் ஆகும். நட்பிலும் காமம் உண்டு. அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று நட்பு பூணுதல், நட்பு அல்ல. அதுகாமம். காமம் என்பது பயனின்றி இயங்குகின்ற ஓர் உணர்ச்சி. அது தன்னலத்தைச் சுற்றியே வட்டமிடும். காம உணர்வு உடையவர்களுக்கு, மற்றவர்களைப் பற்றிய கவலையே இருக்காது. அவர்கள் ஏதாவது செய்தாலும் காம விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வார்களே தவிர, பலருக்குப் பயன்படச் செய்யமாட்டார். செல்வச்செருக்கு, தன்முனைப்பு, மக்கட்பணி மறத்தல் ஆகியவை காமத்தின் சின்னங்கள். நெஞ்சில் சந்து பொந்துகளிலும் கூட சம்பிரதாயம் என்ற பெயரில் ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கு ஒட்டியிருக்கக் கூடாது.
மனித வாழ்க்கையின் மையம் மனமே! அவன் வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மனமே காரணம். மனத் தூய்மையே அனைத்து அறங்களுக்கும் அடிப்படை. நெற்றி நிறைய நீறு பூசினால் போதுமா? பூசும் நீறுபோல் உள்ளும் புனிதம் இருக்கவேண்டும். மனத் தூய்மை என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பதல்ல. மனத்துய்மை இல்லாதார் தன் முனைப்பில் ஈடுபடுவர்; உயர்வு மனப்பான்மை கொள்வர். இத்தகு கேடுகள் மனத் தூய்மை இன்மையின் அறிகுறிகள். பத்திமை வளர வேண்டிய இடம் மனம், பயிர் வளர்தற்குரிய நிலத்தைத் திருத்திப் பண்படுத்தாமல், செழுமையான பயிரை வளர்க்க முடியாது. மனம் பண்டபடாமல், தூய்மை அடையாமல் பத்திமை வாழ்க்கை வாழ்வது அணுவளவும் முடியாது. பத்திமைக்கு உரிய வேடத்தைப் பூண்டு கொள்ளலாம். பஜனை செய்யலாம். ஆனால், அது மட்டுமே பத்திமை வாழ்க்கை ஆகாது.
இறைவனை ஒன்றிய உணர்வுடன் ஏத்தி வழிபடுதல் வேண்டும். அலையும் மனம் கூடாது. வழிபடும் கடவுள் வடிவங்கள் பலவாகக் கூடாது. அத் தேவர் தேவர், அவர் தேவர் என்று பொய்த்தேவு பேசிப் புலம்பக் கூடாது; அலையக் கூடாது. வழிபாடு செய்கின்ற காலத்தின் அளவைக் கொண்டே பெருமை உடையதாக மாட்டாது. ஆரவாரச் சடங்குகளால் வழிபாடு சிறந்துவிடாது. வழிபாட்டுக்கு ஒன்றிய மனம் தேவை. இறைவன் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்.பொருந்த வேண்டும். அதுவே உண்மை வழிபாடு!
இறைவன் நாமத்தை நல்லவாறு சொல்லி வாழ்த்த வேண்டும். சிலர், நல்லவாறும் வாழ்த்த மாட்டார்கள். ‘பகைவர்களை அழித்து எனக்கு அருள் செய்க’ என்றும் வேண்டுவார்கள். அது பத்திநெறி அல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவனும் அருள்பாலிக்கமாட்டான். நல்லனவற்றையே கருதி, நல்லனவறையே சொல்லி, நன்றுடையானாகவும், தீயது இல்லாதவனும் ஆக இருக்கின்ற இறைவனை வாழ்த்துதலே இறைவனை வாழ்த்தும் நெறி.
இதுவே இறையருள் பெறுவதற்குரிய வழி.
இவ்வாறு, உள்ளத்தில் பரபரப்பு இல்லாமல், கள்ளத்தனம் ஒழிந்து, காம உணர்வுடைய செயல்களிலிருந்து விடுதலை பெற்று, மனத் தூய்மை உடையவராகி இறைவன் திருவடிகளிடத்தில் அன்பு காட்டுதலையே நெறியாகக் கொண்டு உள்ளம் ஒன்றிக் காதலித்து, நல்லவாறே ஏத்தி வழிபட்டாலும் இறைவன் அருள் முழுநிலையில் முதிர்ந்து வெளிப்பட்டுவிடுவதில்லை. உயிரின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அளந்தே இறைவன் அருளை வழங்குவான். மிகுதியாக வழங்கக்கூடாது என்பதல்ல. வழங்கினாலும் பயன்படுத்தும் தகுதியிருக்காது என்பதனால், அவன் தன்னை வழிபடும் உயிர்களை வளர்த்து வளர்த்தே தனது இன்னருளை வழங்குவான். கண்ணப்பரின் அன்பினை வளர்க்க ஆறு நாள் தேவைப்பட்டது காளத்திநாதருக்கு. ஆனால், பலநாளும் அருச்சனை புரிந்த சிவகோசாரியார் வளரவில்லை. மனிதனின் ஆன்மத் தகுதிக்கு ஏற்றவாறே இறையருள் கிடைக்கும். இங்ஙனம் பத்திமை வாழ்க்கையின் சிறந்த இயல்பினைக் காட்டி நம்மை நெறிப்படுத்த வந்த திருஞானசம்பந்தர்,
"ஒல்லை ஆறி,உள்ளம் ஒன்றி,கள்ளம் ஒழிந்து, வெய்ய
சொல்லை ஆறி,தூய்மைசெய்து,காமவினை அகற்றி
நல்லவாறே உன்தன் நாமம் நாவிலு நவின்று எத்த
வல்லவாறே வந்து நல்காய்,வலிவலம் மேயவனே"
என்று பாடுகிறார்.
இதன் பொருள் ---
திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி,வஞ்சம் இல்லாமல்,வெம்மையான சொல் தவிர்ந்து, உள்ளத் தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.
No comments:
Post a Comment