விதியினும் வலியது இல்லை

 


விதியினும் வலியது இல்லை

-----

 

     திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில்இல்லறம்துறவறம் ஆகிய இரு இயல்களின் வழிஇம்மைமறுமைவீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார்அறத்தின் வழிப் பொருள் செய்துஇன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கிபொருளை ஈட்டுதற்கும்இன்பங்களை அனுபவிப்பதற்கும் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.

 

     நல்வினைதீவினை என்னும் இருவினைகளின் பயனானதுஅவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை "ஊழ்" என்றார். ஊழ்பால்முறைஉண்மைதெய்வம்நியதிவிதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.

 

     இந்த "ஊழ்" என்பதுபொருளை ஈட்டுவதற்கும்,இன்பங்களைத் துய்ப்பதற்கும் பொதுவாக நிற்பதாலும்இம்மைமறுமைவீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும்பொருட்பாலின் தொடக்கத்திலும்அறத்துப்பாலின் இறுதியிலும் வைத்துக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஊழானது தன்னை விலக்குதல் பொருட்டுஅதற்கு மாறான ஒரு உபாயத்தை ஒருவன் சூழ்ந்தாலும்அந்த உபாயத்தின் வழியாவது,வேறொன்றின் வழியாவது,ஊழானது முன் நிற்கும். எனவேஊழைப் போல மிகுந்த வலிமை உடையவை எவை?" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தன்னுடைய அறிவின் முதிர்ச்சியால் பலருடனும் கலந்து ஆலோசித்துஊழை எவ்வித உபாயத்தாலாவது தடுக்க முயன்றாலும்அந்த உபாயத்தின் வழியாகவாவதுவேறு விதத்திலாவதுமுன்னதாக ஊழ் வந்து நிற்கும்.

 

 

ஊழின் பெருவலி யாஉளமற்று ஒன்று

சூழினும் தான் முந்து உறும்.           --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"வரருசி உள்ளிட்டார் மயங்கினார் என்றால்,

அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி,

ஊழின் பெருவலி யாஉளமற்று ஒன்று

சூழினும் தான் முந்து உறும்".

 

     வரருசி – இவர் திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குப் பணியாற்றி வந்த புஷ்பதந்தன் என்பாரின் அவதார புருஷர்.  இலக்கணத்தில் தாமே தீரர் என்று மமதை கொண்டுஇவரோடு ஒரு குருவினிடம் பயின்ற பாணினி முனிவரை அறிவு அற்றவர் என்று நிந்தனை செய்தார். சிவபக்தரான பாணினி பிறகு தவம் செய்து பாணினீயம் என்னும் வடமொழி வியாகரணத்தை எழுதினார். பின்பு வரருசி அதனையே கற்றுப் பூரணமான புலமை பெற்று விளங்கினார். சிவகணத்துள் ஒருவராய் இருந்தும்மிகுந்த புலவராக இருந்தும்பர நிந்தனை செய்தமையின் மயங்கினார் என்றார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"சிந்துபதி தந்தையொடு தேர்விசய னால்இறந்தான்

இந்துதவழ் இஞ்சி இரங்கேசா! --- முந்திவரும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்". 

 

இதன் பொருள்---  

 

     இந்து தவழ் இஞ்சி இரங்கேசா --- சந்திரன் தவழும் மதில் சூழ்ந்த திருவரங்கநாதக் கடவுளே! சிந்துபதி --- சயிந்தவன்தந்தையொடு --- தன் பிதாவுடனேதேர் விசயனால் --- தேர் ஏறிப் போர் புரிந்த அர்ச்சுனன் கை அம்பால்,இறந்தான் --- மடிந்தான்,  (ஆகையால்இது) முந்தி வரும் --- ஒருவனுடைய அறிவிற்கு முன்னே வந்து நிற்கும்,ஊழின் --- ஊழைக் காட்டிலும்பெரு வலி --- பெரிய வலிமையுடையவையா உள --- எவை இருக்கின்றன?  (இல்லைஆகையால்அது) மற்று ஒன்று சூழினும் --- (அதை வெல்ல) வேறு ஓர் உபாயம் செய்தாலும்,தான் முந்துறும் --- (அந்த உபாய வாயிலாகவே) அதற்கு முன்னே தான் வந்து நிற்கும் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை--- உள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழையும்.

 

            விளக்கவுரை--- பாரதப் போரின் பதினான்காம் நாள் சண்டையிலேகாலையில் அருச்சுனன் தேர் ஏறிப் புறப்படுகையில்தன் மகன் அபிமன்னன் இறந்ததைக் குறித்து விசனமும் கோபமும் கொண்டு, "என் மகனைக் கொன்றவன் எவனோ அவன் தலையை இன்று சூரியன் மறைவதற்குள் அறுத்து,நிலம் மேல் தள்ளாமல் போவேனானால் நான் நெருப்பில் குளித்து உயிர் விடக் கடவேன்" என்று சபதம் கூறினான். அது தெரிந்த துரியோதனன்,சயிந்தவனை நடுவில் இருத்திஅதிரதர்-மகாரதர்-சமரதர்-அர்த்தரதர் அனைவரையும் சூழ நிறுத்திஅவர்கட்கு நான்கு புறத்திலும் துரோணாசாரியர்கர்ணன்அசுவத்தாமன்சகுனிசல்லியன் முதலியோரை அமர்த்தி,  அதற்கு அப்புறம் தம்பிமார் நூற்றுவரும்பதினோரு அக்குரோணி சேனையோடும் பல மன்னர்களோடும் குடியிருந்து காக்கும்படி ஏற்படுத்தி இருந்தான். சயிந்தவனுடைய தந்தை தன் மைந்தன் தலையை எவன் அறுத்து நிலமேல் போடுவானோஅவன் தலை நூறு துண்டாக வெடித்து விழவேண்டும் என்று தவம் செய்துகொண்டு இருந்தான். சண்டை நடந்து கொண்டிருந்தது.  விடிந்து இருபத்தெட்டு நாழிகை ஆய்விட்டது. சூரியன் மறைய இன்னும் இரண்டு நாழிகை தான் இருந்தது. 'சயிந்தவனுக்கு இனிப் பயமில்லைஎன்று எல்லாரும் எண்ணி இருந்தார்கள்.  உடனே கண்ணபிரான் ஒரு மாயோபாயம் செய்தான். தன் கைச் சக்கராயுதத்தால் சூரியனை மறைத்தான். எல்லாரும் எப்போது சூரியன் மறைவான் என்று எண்ணியிருந்தார்கள். ஆகையால், "உண்மையாகவே சூரியன் மறைந்தான்சயிந்தவன் பிழைத்தான்அருச்சுனன் செத்தான்என்று எண்ணிக் கொண்டுஅருச்சுனன் தீ வளர்த்து நெருப்புக் குளிக்கும் வேடிக்கை பார்க்க வந்து சூழ்ந்துகொண்டார்கள். சயிந்தவனும் "இனிப் பயமில்லைஎன்று துணிந்துயானைமேல் ஏறி வேடிக்கை பார்க்க வந்துகொண்டு இருந்தான்.

 

            அப்போது கண்ணபிரான் அருச்சுனனை நோக்கி, "இதோ சயிந்தவன் வருகிறான்பாணப் பிரயோகம் செய்து சபதத்தை முடி" என்றான். அதற்கு அரச்சுனன், "பொழுது மறைந்தது. ஆகையால்அந்தச் சபதம் தப்பிற்று. இனி நான் தீக்குளிக்கும் சபதமே நிறைவேறும்" என்றான். "பொழுது இதிருந்தால்பாணப் பிரயோகம் செய்து சயிந்தவன் தலையை அறுப்பாயா?" என்றான் கண்ணபிரான். "ஆ! ஆஹா! அதற்கென்ன தடைஒரு பனைமரப் போது இருந்தாலும் போதும் அப்படியே செய்வேன்" என்றான் அருச்சுனன். உடனே கண்ணபிரான் சக்கராயுதத்தை நீக்கினார்.  ஒரு பனை உயரமல்லஇரு பனைமர உயரத்திற்கு போது இருந்ததைக் கண்டான் அர்ச்சுனன்சற்றேனும் தாழ்க்காமல் ஓர் அர்த்தசந்திர பாணப் பிரயோகத்தால் சயிந்தவன் தலையை அறுத்து அது நிலமேல் விழும் முன்வாயுவாஸ்திரப் பிரயோகத்தால்அதைதவம் பண்ணிக் கொண்டிருந்த சயிந்தவன் தந்தை கையில் இருத்தினான். அங்கிருந்து அது நிலத்தில் விழுந்தது. அதனால் அவன் செய்திருந்த சபதப்படிஅவன் தலையே நூறு துண்டாய் வெடித்து விழுந்தது. சயிந்தவனாகிய மகனோடு தந்தையும் மாண்டதனால் துரியோதனன் அடைந்த அவமானமே ஊழ்வலிக்குச் சரியான உவமானம். துரியோதனன் சூழ்ச்சியெல்லாம் தாழ்ச்சியாய் ஊழ்வலிமுன் நில்லாது ஓடின.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"விஞ்சுகங்கைத் தம்பநுனி மேவுபரிக்கித்து,அரவால்

முஞ்சினன் ஆய்ந்தோர்முன்,முருகேசா! - எஞ்சல்இலா

ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று

சூழினும் தான் முந்து உறும்".

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேவிஞ்சு --- மிகுதியானகங்கை --- கங்கையாற்றிலேதம்ப நுனி --- தூணின் முடியில்மேவு பரிக்கித்து --- சென்றிருந்த பரிட்சித்து மன்னன்ஆய்ந்தோர் முன் --- முனிவர்கட்கு முன்னேஅரவால் முஞ்சினன் --- பாம்பினால் மாண்டான். எஞ்சல் இலா --- குறைதல் இல்லாதஊழில் --- ஊழ்வினையைப் பார்க்கினும்பெருவலி யாவுள --- மிகுந்த ஆற்றல் படைத்தது வேறே யாது இருக்கின்றது,மற்று ஒன்று சூழினும் --- வேறொரு முயற்சியைச் செய்தாலும்தான் முந்துறும் --- தானே முற்பட்டு நிற்பதாகும்.

 

            பரிட்சித்து மன்னனானவன் கங்கையாற்றுத் தம்பத்திலே சென்றிருந்தும்,பாம்பினால் கடியுண்டு இறந்தான்.  ஊழ்வினையைக் காட்டிலும் மிகுந்த ஆற்றலுள்ளது வேறே எது இருக்கின்றது. வேறொரு முயற்சியைச் செய்தாலும் அவ் ஊழே எல்லாவற்றிற்கும் முற்பட்டு நிற்கும் என்பதாம்.

 

                                                பரிட்சித்து மன்னன் கதை

 

            பரிட்சித்து என்னும் பெயரையுடைய அரசன் வேட்டை ஆடுவதற்குக் காட்டிற்குச் சென்றான். வேட்டையாடுகையில் ஒரு மான் அம்பு பட்டு ஓடி மறைந்தது. அரசன் அதனைத் தேடிக் கொண்டு சென்றான். ஓரிடத்தில் சமீக முனிவர் என்பவர் தவத்தில் இருந்தார். அரசன் அவரைப் பார்த்துத் தான் எய்த மான் அப்பக்கம் வந்ததா என்று உசாவினான். முனிவர் தவத்தில் இருந்தபடியால் மறுமொழி யாதும் கூறவில்லை. அவர் தன்னை இழிவுபடுத்தியதாக அரசன் எண்ணினான். செத்துக் கிடந்த பாம்பு ஒன்றை எடுத்து அம்முனிவருடைய கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டுச் சென்றான். அம்முனிவருடைய மகனாகிய சிரிங்கி என்பவர் அங்கு வந்தார். தந்தையின் கழுத்தைப் பார்த்து மிகுந்த சினம் அடைந்தார். இவ்வாறு செய்தவன் ஒரு கிழமைக்குள் தட்சன் என்னும் பாம்பால் கடியுண்டு இறக்கக் கடவன் என்று வசவுரை (சாபம்) கூறினார். அரசன் அம் முனிவருடைய வசவுரையை அறிந்தான். பாம்பினால் கடிபடாமல் இருப்பதற்காகக் கங்கை ஆற்றின் நடுவில் ஒரு தூணை நாட்டி,அதன்முடியில் ஒரு மண்டபத்தை அமைத்துஅதில் பலமுனிவர்கள் சூழ அமர்ந்திருந்தான். எட்டாம் நாளில் சில பாம்புகள் தட்சகன் கூறியபடி தவக்கோலம் பூண்டு முனிவர்களைப் போல் அரசனிடம் சென்று சில கனிகளைக் கொடுத்தன. அரசன் கனிகளை எடுத்து முனிவர்களிடம் கொடுத்தான். ஒரு கனியைத் தான் தின்பதற்குக் கையில் எடுத்தான். அதில் ஒரு சிறு புழு இருந்தது. அது அப்பொழுதே பெரும் பாம்பாகி அரசனைக் கடித்தது. அதனால் பரிட்சித்து அரசன் இறந்தான்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்துசென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"உற்றாளைப் பெட்டகத்திட்டு ஓட்டும்இலங்க கேசனைப்பின்

செற்றாள்வந்து என்பார்,சிவசிவா! - உற்றுஓரின்

ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று

சூழினும் தான்முந் துறும்".   

 

இதன் பொருள் ---

 

     இராமாயணத்தில் வேதவதி கதை. வேதவதி விஷ்ணுவை மணப்பதற்கு கடும் தவம் புரிந்து கொண்டு இருந்த நிலையில் இராவணன் அவளைக் கண்டான். அவன் தன்னுடடைய ஆசையை தெரிவித்தும் அவள் அதற்கு இணங்காமல் விஷ்ணுவை மணப்பதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். அதனால் கோபம் அடைந்த இராவணன் அவளின் கூந்தலை பிடித்து இழுத்தான். அவள் தன்னுடைய அழகிய கூந்தலை தன்னுடைய கையினாலே அறுத்து எறிந்துஅங்கேயே தீ மூட்டி விட்டுராவணனை பார்த்து: உன்னால் தீண்டப்பட்ட நான் இனி உயிர் வாழப் போவதில்லைஉன்னுடைய அழிவிற்காக நான் மீண்டும் பிறப்பேன்என்று கூறி தீயிலே விழுந்து உயிரை விட்டாள். பின்னர் சனக மன்னர் குழந்தை வரம் வேண்டி யாக சாலை உழுது கொண்டிருந்த சமயத்தில் அந்த நிலத்தில் தோன்றிய வேதவதியே சனக மன்னரின் வளர்ப்பு மகளாகிய சீதை.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

"அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும்,

            பாதாளம் அதில் சென்றாலும்,

பட்டம் என வானூடு பறந்தாலும்,

            என்ன அதில் பயன் உண்டாமோ,

பிட்டுவர மண்சுமந்த தண்டலையா

            ரே,முன்நாள் பெரியோர் கையில்

இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின்

            வருவது இல்லை தானே".         --- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் ---  

 

     பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே --- பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த தண்டலை நீள்நெறி இறைவரே!,  முன்நாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை --- முற்காலத்திற் பெரியோர்களின் கையிலே கொடுத்தவாறே தவிர மற்று அரு வகையாக ஆசைப்பட்டால் வருவது ஏதும் இல்லை.எனவேஅட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் --- எட்டுத் திசைகளிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும்பாதாளம் அதில் சென்றாலும் ---- பாதாள லோகத்திலே சென்று தேடினாலும்,  வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் --- வானத்திலே காற்றாடி போலப் பறந்து திரிந்தாலும்,  என்ன --- என்ன கிடைக்கும்?  அதில் பயன்தான் உண்டோ ---- அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது.

 

     கருத்து --- விதிப்படியே எல்லாம் ஆகுமே அன்றிபேராசை கொண்டு அலைவதனால் பயன் இல்லை.

 

"செங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்

            நெறியே,நின் செயல் உண் டாகில் 
எங்கு ஆகிலென் அவரவர் எண்ணியது எல்--

            லாமுடியும்இல்லை யாகில் 
பொங்கு ஆழி சூழுலகில் உள்ளங்கால்

            வெள்ளெலும்பாய்ப் போக ஓடி 
ஐங்காதம் போனாலும் தன்பாவம்

            தன்னுடனே ஆகுந் தானே".        ---  தண்டலையார் சதகம்.

 

  இதன் பொருள் ---

 

     செங்காவி  மலர்த் தடம் சூழ் தண்டலை நீள் நெறியே --- சிவந்த குவளை மலர்களை உடைய பொய்கைகளால் சூழப்பட்டு உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியவரே!நின் செயல் உண்டாகில் --- உமது நல் அருள் உண்டானால்,  எங்கு ஆகில் என்ன --- எவ்விடமாக இருந்தாலும் என்ன?அவர் எண்ணியது எல்லாம் முடியும் --- அவர்கள் எண்ணியது எல்லாம் முடியும்இல்லை ஆகில் --- உமது அருள் இல்லையானால்,பொங்கு ஆழி சூழ் உலகில் --- நீர் மிகுந்து பொங்கும் கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில்,  உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக --- உள்ளங்காலில் உள்ள தசைகள் எல்லாம் தேய்ந்து,வெள்ளை எலும்பு தெரியும் படியாக,  ஐங்காதம் ஓடிப் போனாலும் --- ஐந்து காத தூரம் ஓடிப் போய் அலைந்தாலும்,  தன் பாவம் தன் உடனே ஆகும் --- தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.

 

               விளக்கம்--- இறைவன் அருளானது நமது ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால், "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போகஎன்பது பழமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனேஎன்பதும் பழமொழி.

 

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்,

அன்றி அதுவரினும் வந்து எய்தும், --- ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்,

எனை ஆளும் ஈசன் செயல்.            ---  நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     ஒரு பொருளைப் பெற நினைத்தால்அப்பொருள் கிடைக்காமல் வேறொரு பொருள் கிடைத்தாலும கிடைக்கும்அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும்இன்னும்,ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்.இவைகள் எல்லாம் என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

 

            இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே அன்றிஉயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது.

 

கடல்அளவு உரைத்திடுவர்அரிபிரமர் உருவமும்

     காணும் படிக்கு உரைசெய்வர்,

  காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்

     காயத்தின் நிலைமை அறிவார்,

 

விடலரிய சீவநிலை காட்டுவார்மூச்சையும்

     விடாமல் தடுத்து அடக்கி

  மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார்எட்டி

     விண்மீதி னும்தா வுவார்,

 

தொடலரிய பிரமநிலை காட்டுவார்எண்வகைத்

     தொகையான சித்தி யறிவார்,

  சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது

     துடைக்கவொரு நான்மு கற்கும்

 

அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்,

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!             --- அறப்பளீசுர சதகம்.

 

இதன் பொருள் ---

 

     அண்ணலே --- தலைவனே!அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     கடல் அளவு உரைத்திடுவர் --- கடலின் பரப்பளவுஆழம் ஆகியவற்றைக்கணக்கிட்டுக் கூறுவர்,  அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் --- திருமால் பிரமன் ஆகிய கடவுளர்களின் வடிவத்தையும் நாம் காணுமாறு விளக்கிக் கூறுவர்காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் --- உலகின் அளவையும் விளக்குவர். காயத்தின் நிலைமை அறிவார் --- உடல் கூறுபாட்டை அறிவர்விடல் அரிய சீவநிலை காட்டுவார் --- விடுதற்கு அரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர்,  மூச்சையும் விடாமல் தடுத்து அடக்கி மேன்மேலும் யோக சாதனை விளைப்பார் --- மூச்சையும் விடாமல் தடுத்து அடக்கி மேலும் மேலும் யோக சித்தியைச் செய்வர்விண் மீதினும் எட்டித் தாவுவார் --- வான மண்டலத்திலும் எட்டித் தாவுவர்தொடல் அரிய பிரமநிலை காட்டுவார் --- அடைய முடியாத பிரமத்தின் நிலையையும் காண்பிப்பர்,  எண்வகைத் தொகையான சித்தி அறிவார் --- எட்டு வகையான சித்திகளையும் அறிவர்.  (இவர்கள் யாவருமேசூழ்வினை வரும்போது சிக்கி உழல்வார் --- சூழுகின்ற பழைய வினைப்பயனை அனுபவிக்க வரும்போது அதனில் சிக்கித் தவிப்பர்ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு அல --- ஒப்பற்ற பிரமனுக்கும் அந்த ஊழ்வினையைத் துடைக்கும் வழி இல்லை,  என அளவு இல் பலநூல் தெரிந்து சொலும் --- என்று கணக்கற்ற பல நூல்களும் அறிந்து கூறும்.

 

        விளக்கம்--- "ஊழிற் பெருவலி யாவுள,மற்று ஒன்று  சூழினும் தான் முந்துறும்என்றார் திருவள்ளுவர். வினை வலியது. ஊழ் என்பது நல்வினை தீவினை என்னும் இரண்டையும் குறிக்கும். நல்வினைப் பயன் உள்ளபோது எதையும் சாதிக்கலாம். தீவினையின் பயன் வந்து உற்றபோதுஅதை விலக்குதற்கு இயலாது என்று நூல் வல்லோர் உரைப்பர்.

 

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,

தாழ் வினை அது வரசீரை சாத்தினான்;

சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ!   ---  கம்பராமாயணம், நகர்நீங்கு படலம்.

 

இதன் பொருள் ---

 

     வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் --- மகுடம் தரித்து அரசவாழ்வு வாழக் கருதப்பெற்ற அதே மங்கல நல் நாளிலே;  தாழ்வினை அது வர --- தாழ்த்துகின்ற வினையானது  வருதலால்சீரை சாத்தினான்---இராமன் மரவுரியை அணிந்தான்;  சூழ்வினை நான்முகத்து ஒருவன் --- விதியை வகுத்து அளிக்கும் பிரமதேவனே;  சூழினும் --- தவிர்க்கும் வழியை ஆலோசித்தாலும்;ஊழ்வினை --- செய்தவனைச் சென்று அடையும் அந்த ஊழ்வினைஒருவரால் --- வருவரால்;  ஒழிக்கற்பாலதோ? --- நீக்கிக் கொள்ளும் தன்மை உடையதோ?  இல்லை என்றபடி.

 

      விதிக் கடவுளாகிய பிரம தேவனாலேயே ஊழ்வினையைத் தடுக்க இயலாதாயின்,வேறு ஒருவரலாலும் இயலாது.  திருமாலின்அவதாரமாகிய இராமனுக்கு வினை என்பது ஒன்று இல்லைஆயினும்தேவர் வேண்டச் செய்துகொண்ட  சங்கற்பம் தானே இம்மனித வடிவ நிகழ்ச்சியில் வினை ஆனது என்று உய்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

 

'அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?

"துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்

விதி வயம்" என்பதை மேற்கொளாவிடின்,

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ ---  கம்பராமாயணம், சடாயு உயிர்நீத்த படலம்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவரால் அதிசயம் அமைக்கல் ஆகுமோ --- ஒருவரால் மட்டும் புதுமையைச் செய்ய முடியுமோ?முடியாது. துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான் --- புகழ் அற்ற மனிதப் பிறவிக்கு வருகிற இன்ப துன்பங்கள் தான்விதி வயம் --- ஊழ்வினைப்படி வருவனஎன்பதை மேற்கொளாவிடின் --- என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் போனால்;மதி வலியால் விதி வெல்ல வல்லமோ --- அறிவின் வலிமையால் ஊழ்வினையை வெல்லுவதற்கு வல்லமை உடையவர்கள் ஆவோமோ? (ஆக மாட்டோம்) என்றவாறு

 

     நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் தான்,நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது. வருவன வந்தே தீரும்,அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயுஆறுதல் கூறுகிறான். 'விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி'என்று சன்னத்தனாகிக் கொக்கரித்த இலக்குவன் கூண்ட, "வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோஎன்று கூறுதல் காண்க.

 

     அதிசயம் --- புதுமைதுதி அறு பிறவி --- புகழ் அற்ற பிறவி. விதி ஊழ்பால்தெய்வம் என்பன ஒரு பொருட் சொற்கள்.

 

'தெரிவுறு துன்பம் வந்து ஊன்றசிந்தையை

எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்;

பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை

அரிவுசெய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ

                                                        ---  கம்பராமாயணம், சடாயு உயிர்நீத்த படலம்.

 

இதன் பொருள் ---

 

     தெரிவுறு துன்பம் --- விதி வசத்தால் வருகிறது என்று தெளியப்பட்ட துன்பம்வந்து ஊன்ற --- ஒருவனிடம் வந்து சேரசிந்தையை எரிவு செய்து --- அதற்காக அவன் தன் மனத்தைக் கலங்க விட்டுஒழியும் ஈது --- அழியும் இத்தன்மைஇழுதை நீரதால் --- பேதமைத் தன்மையாகும்உலகு எலாம் --- உலகங்களை எல்லாம்பிரிவு செய்து --- வகுத்துப் பிரித்தலைச் செய்துபெறுவிப்பான் --- படைத்தவனாகிய பிரமனதுதலை அரிவு செய்--- தலையை அறுத்தல் செய்தவிதியினார்க்கு --- ஊழ்வினைக்குஅரிது உண்டாகுமோ --- செய்தற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டாகுமோ (ஆகாது)

 

     விதியினால் வரும் துன்பத்துக்காக மனம் கலங்கி அழிவது

பேதைமைத் தன்மையாகும். அவ்விதி பிரமனின் தலையையும் அறுத்தலைச் செய்த ஆற்றல் உடையது என்று உணர்ந்து ஆறுதல் அடைய வேண்டும் என்பது கருத்து. சிவபிரான் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிக்களைந்தார் என்பது புராணச் செய்தி. 

 

விதியது வலியினாலும்மேல்

     உ(ள்)ள விளைவினாலும்,

பதி உறு கேடு வந்து

     குறுகிய பயத்தினாலும்,

கதி உறு பொறியின் வெய்ய காம

     நோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமைபோல்,

     வளர்ந்தது அன்றே.            ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     விதியது வலியினாலும் --- ஊழ்வினையின் ஆற்றலினாலும்மேல் உ(ள்)ள விளைவினாலும் --- இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற பயன்களாலும்பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் --- இலங்கை மாநகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்;கதி உறு பொறியின் --- விரைவாய் உற்று பொறிகளின் வழியேவெய்ய காம நோய் --- இராவணனைப் பற்றிய கொடிய காம நோயானதுகல்வி நோக்கா மதியிலி --- கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்மறையச் செய்த தீமை போல் --- யாரும் அறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போலவளர்ந்தது --- ஓங்கிப் பெருகியதுஅன்றே - அசை.

 

     வேதவதி சாபம்வானரங்களால் இலங்கை அழிய வேண்டும் என நந்தி இட்ட சாபம் முதலியன எல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது. ஞானம் அற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பதுதோன்றக் கூறினார்.

 

'துஞ்சுவது என்னைநீர் சொன்ன

     சொல்லை யான்

அஞ்சுவென்மறுக்கிலென்அவலம்

     தீர்ந்து இனி,

இஞ்சு இரும்அடியனேன்

     ஏகுகின்றனென்;

வெஞ் சின விதியினை

     வெல்ல வல்லமோ?            --- கம்பராமாயணம்., சடாயு உயிர்நீத்த படலம்.

 

இதன் பொருள் ---

 

     துஞ்சுவது என்னை --- நீர் இறத்தல் ஏன்?; நீர் சொன்ன சொல்லை யான் அஞ்சுவென் மறுக்கிலென் --- நீர் கூறிய சொற்களை நான் கேட்டுப் பயப்படுகிறேன்உம் கட்டளையை மறுக்க மாட்டேன்அவலம் தீர்ந்து இனி இஞ்சு இரும் --- துன்பம் நீங்கி இங்கேயே இருங்கள்அடியனேன் ஏகுகின்றனென் --- அடியேன் செல்கின்றேன்வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ --- கொடிய கோபமுள்ள ஊழினை வெல்ல வல்லமையுடையவர்களோ நாம்? (அல்லோம்)

 

     துஞ்சுதல் --- இறத்தல்மங்கல வழக்கு. அவலம் --- துன்பம். தீயில் பாயச் சென்ற சீதையைத் தடுத்த இலக்குவன்  'நீர் இறப்பானேன்என்றான்.  ஊழிற் பெரு வலியாவுள காண்க.

 

வீதலும் பிழைத்தல் தானும் 

     விதிவழி அன்றிநம்மால்

ஆதலும் அழிவும் உண்டோ

     நின்னில் வேறு அறிஞர் உண்டோ?

பூதலம் தன்னில் யாவர்

     புதல்வரோடு இறந்தார்,ஐயா!

சாதல் இங்கு இயற்கை அன்று என்று

     அருளுடன் தடுத்த காலை.      --- வில்லிபாரதம், 13-ஆம் போர்ச் சருக்கம்.

 

இதன் பொருள் ---

 

     வீதலும் --- ஒரு பிராணி இறத்தலும்பிழைத்தல் தானும் ----- பிழைத்து இருத்தலும்வீதி வழி அன்றி --- ஊழ்வினையின்படி நடப்பனவே அல்லாமல்,நம்மால் --- நம்மால்,  ஆதலும் அழிவும் உண்டோ --- உண்டாதலும் அழிதலும் உண்டோ?நின்னில் அறிஞர் வேறு உண்டோ --- உன்னினும் அறிவுடையோர் வேறு உளரோபூதலந்தன்னில் --- உலகத்தில்யாவர் புதல்வரோடு இறந்தார் --- எவர்தாம் புத்திரரோடு இறந்தவர்ஐயா --- ஐயனே! இங்கு --- இப்பொழுதுசாதல் --- நீ இறத்தல்இயற்கை அன்று --- உலக இயல்புக்கு ஒத்தது அன்று,' என்று --- என்றும் சொல்லிஅருளுடன் ---கருணையுடனேதடுத்த காலை --- (அம் முனிவனைத்) தடுத்தபொழுது.

 

     கண்ணன் ஏஇந்திரன் முனிவர் வடிவில் வந்துதீயில் பாய இருக்கின்ற தனது மகனோடு தீயில் பாயத் தலப்படுகின்றான். அவனைத் தடுக்குமாறுகண்ணன் அருச்சுனனை ஏவுகின்றான். அருச்சுனன் முனிவருக்கு உலக இயற்கையைச் சொல்லித் தடுக்கின்றான். உனது மகன் இறந்தாலும்எனது வார்த்தையை மறுக்க மாட்டாய் அல்லவாஎன்று, "என் மகன் இறக்கஎன்னை இருத்தினை ஆயின்,அம்ம! நின் மகன் இறந்தால்என்சொல் மறாது ஒழிநீயும்!என்று முனிவனாக வந்த இந்திரன் சொன்னான்.

 

     ஊழ் வலிமை மிக்கது என்று கூறிய நாயனார்அதனை வெல்லும் உபாயத்தையும், "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில், "உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர்ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்று கூறி அருளினார்.

 

     பின்வரும் பாடல்களும்ஊழை வெல்லுதற்கு உரிய உபாயத்தைக் கூறுமாறு காண்க.

 

"சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை --- உபாயம்

இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.           ---  நல்வழி.

 

இதன் பதவுரை ---

 

     சிவாயநம என்று தியானித்துக் கொண்டிருப்பவருக்குஒருபொழுதும் துன்பம்உண்டாகாது;  இதுவே துன்பமில்லாமல் இருப்பதற்கு உரிய உபாயம். விதியை வெல்லுதற்கு ஏற்ற உபாயமும் இதுவே ஆகும்இது அல்லாத எல்லா அறிவுகளும்விதியின்படியே ஆகிவிடும்.

 

     சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லைஏனையர்க்கு உண்டு. சிவபெருமானுடைய திருவைந்தெழுத்து என்று ஔவைப் பாட்டியார் சொன்னதால்அது ஒன்றுதான் என்று கொள்ளவேண்டாம். அருள்நெறியில் நிற்போர்க்குஅவர் நினைந்த வடிவில் வந்து தெய்வம் அருள்புரியும். எனவேஎத் தெய்வம் கொண்டோமோஅத் தெய்வத்திற்கு உரிய மந்திரம் என்று கொள்வது பொருந்தும். சமயச் சாயம் தேவை இல்லை.

 

"வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை,- நினைப்பது எனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல்,நெஞ்சே!மெய்

விண்ணுறுவார்க்கு இல்லை விதி".      --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     இருவினைப் பயனை வெல்வதற்கு உரிய உபாயமானதுவேதம் முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதால் உண்டாவதில்லை. எனினும்,நெஞ்சே! --- மனமேகவலைப் படாதே. மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்குஅவர் நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல்விதி இல்லை.

 

            முத்தி நெறியாகிய தியான சமாதிகளினால் அன்றி,நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க ஒண்ணாது.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...