நன்மையும் தீயது ஆகும் - தீயதும் நன்மை ஆகும்.
-----
திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருளை ஈட்டுதற்கும், இன்பங்களை அனுபவிப்பதற்கும் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.
நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை "ஊழ்" என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.
இந்த "ஊழ்" என்பது, பொருளை ஈட்டுவதற்கும், இன்பங்களைத் துய்ப்பதற்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியிலும், பொருட்பாலின் தொடக்கத்திலும் வைத்துக் கூறினார்.
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "செல்வத்தைச் சேர்ப்பதற்கு நன்மையாய் உள்ளவை என்று நம்மால் கருதப்படுபவை எல்லாம் தீயவையாய் நின்று அழிக்கும். அவ்வாறே, தீயவையாய் உள்ளனவும், ஊழ் வசத்தால் நன்மையை ஆக்கும்" என்கின்றார் நாயனார்.
ஒருவனுக்கு செல்வத்தைச் செய்கின்ற காலத்தில், ஊழானது அவனுக்கு நல்லூழாய் நிற்குமானால், காலம், இடம், கருவி, தொழில் முதலானவைகள் எல்லாம் தீயவாக இருந்தாலும், அவற்றை எல்லாம் விலக்கி, நன்மையாகவே முடித்துச் செல்வத்தைப் பெருக்கும். அதுபோலவே, அல்லாத ஊழ் இருக்குமானால், காலம் முதலானவைகள் நன்றாக அமைந்து இருந்தாலும், அவைகளை எல்லாம் ஒழித்துச் செல்வத்தைத் தேடுவதைக் கெடுக்கும்.
நேர்வழியானது பொருள் இழப்பு ஏற்படுத்துவதும், தீயவழியானதுஆக்கத்தைத் தருவதும் ஊழின் விளையாட்டே ஆகும். பொருள்சார்ந்த உலகில் நன்முயற்சி என்று நம்பப்படுபவை, நம்ப முடியாத வகையில் தோல்வியில் முடியும். முயற்சி தோற்றுப் போகும் என்று நினைத்தது எதிர்பாராமல் வெற்றியடையும். எவ்வளவு முயன்றாலும் சிலருக்குச் செல்வத்தைச் சேர்க்க முடிவதில்லை. சிறிது முயன்றாலும் சிலருக்குப் பெருஞ்செல்வம் சேர்ந்து விடுகிறது. முயற்சியின் பயன்கள்கூட ஊழுக்கு ஏற்பவே அமைகின்றன.
ஊழானது. செல்வம் சேர்ப்பதற்கு எவ்விதம் துணை செய்கிறது என்பது குறித்து, "சீவகசிந்தாமணி" பின்வருமாறு கூறும்.
"பெருமுழங்கு திரை வரைகள் நீந்திப் பிணி உறினும்
திரு முயங்கல் இல்லை எனில் இல்லை பொருள் ஈட்டம்,
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும்வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ!"
இதன் பொருள் ---
பெரிய கடல்களைக் கடந்தும் நெடிய மலைகளைத் தாண்டியும் வெளிநாடுகளுக்குச் சென்றும் ஊக்கத்தோடு பொருள் சேர்க்க விரும்பினாலும், ஒருவனுக்குப் பொருள் சேர்வதில்லை. வீட்டை விட்டு வெளியே ஒரு முழம் கூடச் செல்லாமல் அமர்ந்திருந்தாலும், நல்லூழ் இருந்தால், செல்வமானது அவன் வீட்டிற்கு வழி கேட்டு வந்து சேரும்.
ஊழின் செயல்பாட்டால் சில வேளைகளில், சிலருக்கு, நல்லவையும் தீயவை ஆகின்ற. சிலருக்குதீயவும் நல்லவையாக அமைந்து விடுகின்றன என்பதைக் காட்ட,
"நல்லவை எல்லாஅம் தீயஆம், தீயவும்
நல்லஆம் செல்வம் செயற்கு".
என்னும் திருக்குறளை நாயனார் அருளிச் செய்தார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சண்டேசுர நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடிய "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
அறம்செய்த தாதைதாள் அற்றிடச் சண்டீசர்
மறம்செய்கொலை புண்ணியமாய் வாழ்ந்தார் - திறம்தெரியின்
நல்லவை எல்லாஅம் தீயவாம், தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
சண்டேசுர நாயனார் வரலாறு
நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம் திருச்சேய்ஞலூர். இத்தலத்தில், காசிப கோத்திரத்தில், எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன்,ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.
ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் ஆனிரைகளும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். 'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்கு உரிய சிறந்த வழிபாடாகும்' என்று உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அவ்வூரின் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.
விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார். அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும்,வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும், பசுக்கள்தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால்,அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.
பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும் தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது. மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு சிவலிங்கம் அமைப்பார். திருமதில்கள் எழுப்புவார். கோபுரங்கள் வகுப்பார். சுற்றாலயங்கள் எடுப்பார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வருவார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத் தீண்டுவார். ("சீர்த்த முலை பற்றி வாங்க,குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்" என்னும் ஆண்டாள் நாச்சியார் திருவாக்கு இங்கு வைத்து எண்ணத் தக்கது) பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொள்வார். சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டுவார். அருச்சிப்பார். பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்புவார். இவர் செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் அன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக் குறையாதபடி வழங்கி வந்தன.
இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரின் செய்கையைக் கண்டான். உண்மையை உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குரா மரத்தில் ஏறி ஒளித்து இருந்தான். விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி வந்து,ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல்,பாவி, பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்த கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார். சிவபெருமான் தேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.
சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உள்ள கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.
"அண்டர் பிரானும் தொண்டர்தமக்கு
அதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதம் தந்தோம்
என்றுஅங்கு அவர்பொன் தடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்". --- பெரியபுராணம்.
எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால்,அவன் செய்த குற்றமும் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.
"ஞாலம் அறியப் பிழைபுரிந்து,
நம்பர் அருளால்,நான்மறையின்
சீலந் திகழும் சேய்ஞலூர்ப்
பிள்ளையார்தம்திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு,
குற்றம் நீங்கி,சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்".
"வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்;
இந்த நிலைமை அறிந்தார் ஆர்
ஈறுஇலாதார் தமக்கு அன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமாம் அன்றோ சாற்றுங்கால்". --- பெரியபுராணம்.
செல்வத்தை ஆக்குதற்கு நல்லவைஎல்லாம் தீயவாய் அழிக்கும். அதுவே அன்றித் தீயவைதாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தால்எனத் திருவள்ளுவ நாயனார் கூறியமையால் இதனை அறிக.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், சேந்தனார் முதலிய பெரியோர் பலரால் இந்நாயனாரது பெருந்தன்மை பாராட்டப்பட்டுள்ளது காண்க. "அரன் அடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்" என்று தொடங்கும் சிவஞானசித்தியார் திருவிருத்தமும் ஈண்டுக் கருதுக.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
"இதுமன்னும் தீது என்று இசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே ஆகும்,--- மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
தீநாள் திருவுடையார்க்கு இல்". --- பழமொழி நானூறு.
இதன் பொருள்---
மது மன்னும் வீ நாறு கானல் --- தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையைஉடைய, விரிதிரை தண் சேர்ப்ப --- விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!, இது தீது மன்னும் என்று இசைந்ததும் --- இது மிகவும் தீங்கினைத் தருவதாகும் எனப் பிறர் குருதும் வகையில் பொருந்திய ஒன்றும், ஆவார்க்கு --- செல்வம்ஆகிவரும் நல்வினை உடையராய்(பொருளை ஈட்டுவார்க்கு), அது மன்னும் நல்லதேஆகும் --- அச் செயலானதுஊழ்வினை காரணமாகநல்லதாகவே முடியும் (ஆதலால்), தீ நாள்திருஉடையார்க்குஇல்--- முன்செய்த நல்வினை(அதிர்ஷ்டம்) உடையார்க்குத் தீய நாள் என்பது இல்லை.
நல்ல வினைப்பயன் உள்ளவர்களுக்குத் தீயநாள் என்று சொல்லப்படுபவையும், நல்ல நாளாகவே முடியும். "தீ நாள் திருவுடையார்க்கு இல்" என்பது பழமொழி.
"எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பு இயங்கும்
கோப்புக்குழிச் செய்வது இல்". --- பழமொழி நானூறு.
இதன் பொருள்---
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர --- பூக்களின் இடையே புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே!, இயங்கும் கோபுக்குழி --- (எந்த நாட்டிற்கும் தடை ஏதும் இன்றிச்செல்ல வல்ல செல்வாக்கினை உடைய) பேரரசன் ஒருவன் (போர் செய்யப்) புகுந்த இடத்து, குறும்பு --- குறுநிலத்தை ஆளுகின்ற அரசன் ஒருவன், செய்வது இல் --- (அவனை) எதிர்த்துச் செய்வது ஒன்றும் இல்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல), எவ்வம் துணையாய் --- துன்பமே துணையாக, பொருள் முடிக்கும் தாளாண்மை --- தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சியும், தெய்வம் முடிப்புழி --- இழவு ஊழாகவே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றபோது, மொய் கொண்டு என் செய்யும் --- ஒருவனது முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்?
தெய்வத்தால் ஊட்டப்படுகின்ற ஊழ்வினை, "தெய்வம்" எனப்பட்டது.
"ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த ஆயினும்,ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம், --- தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்,கேண்மின்
தரியாது காணும் தனம்". --- நல்வழி.
இதன் பொருள்---
மகி தலத்தீர்கேண்மின்--- பூமியில் வாழும் மனிதர்களே! கேளுங்கள். ஈட்டும் பொருள்முயற்சி எண் இறந்த ஆயினும் --- பொருளை ஈட்டுதற்குச் செய்யப்படும் முயற்சி அளவில்லாமல் இருந்தாலும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் --- ஊழானது கூட்டுகின்ற அளவுக்கு மேல் செல்வம் ஒருவனிடத்துச் சேராது. தனம் தரியாது --- ஊழ்வகையால் பொருள் வந்து சேர்ந்தாலும், அது நிலையற்றது என்பதால், உங்களிடம் நில்லாமல் எப்போதாவது நீங்கிவிடும். தேட்டம் மரியாதைகாணும்--- ஆதலினால்,நீங்கள் தேடவேண்டியது மரியாதையே என்பதை அறிவீராக.
பொருள் உலகில், கெட்ட காலம் இருந்தால் எல்லாமே இழப்பாக முடியும். நல்ல காலம் இருந்தால், கெட்டதும் கூட ஆக்கத்தைத் தரும். ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும். தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் என்பது நாயனார் கூறும் கருத்து.
மேலே "பொருள் உலகம்" என்று கண்டோம். அதுவே "அருள் உலகம்" என்று ஆகிவிட்டால், தீமைகள் எவையாய் இருந்தாலும், அவைகள் யாவும் நன்மைகளாய்ச் சிறக்கும். அப்பர் பெருமான் அருளுவதைக் காண்போம்....
"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம், நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,
ஏமாப்போம், பிணிஅறியோம், பணிவோம் அல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
இதன் பொருள் ---
தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபயத் திருவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம். எனவே, நாம் வேறு யார்க்கும் அடிமை ஆகமாட்டோம். எமனையும் அஞ்சோம்; நரகத்தில் புகுந்து துன்பப்பட மாட்டோம். எம்மிடத்தில் பொய்யும் இல்லை. என்றும் களிப்போடு இருப்போம். நோய் என்பது இன்னது என்று அறியோம். வேறு யாரையும் பணியவும் மாட்டோம். எந்நாளும் எமக்கு இன்பமே அன்றித் துன்பம் இல்லை.
"உறவுஆவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்,
உடுப்பனகோ வணத்தொடுகீள் உளவாம்அன்றே,
செறுவாரும் செறமாட்டார், தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே, பிறப்பில் செல்லோம்,
நறவார்பொன் இதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்,
சுறவுஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.
இதன் பொருள் ---
தேன் நிறைந்து, பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையை அணிந்த புகழுடைய சிவபெருமானுடைய "நமச்சிவாய" மந்திரத்தை எமது நாவால் சொல்லவல்லவராக நாம் இருக்கின்றோம். மகரக் கொடியானாகிய மன்மதனைப் பொடியாகுமாறு திருக்கண் விழித்த சோதி வடிவினன் ஆகிய சிவபரம்பொருளையே நாம் தொடர்கின்றோம். ஆதலால், தீமை என்பவை யாவும் எமக்கு நன்மையாய்ச் சிறக்கும். பிறப்பிலும் புகுதமாட்டோம். எமக்கு, சிவவேடத்தை உடைய சிவனடியார்கள் அனைவருமே உறவினர் ஆவர். கோவணமும் கீளுமே நாம் உடுப்பனவாய் உள்ளன. ஆகவே, பகைவரும் எம்மை வெகுளமாட்டார்.
"என்றும்நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்,
இருநிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை,
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்,
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,
ஒன்றினால் குறைஉடையோம் அல்லோம் அன்றே,
உறுபிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்,
பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உ(ள்)ளோமே".
இதன் பொருள் ---
இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளையேமாலையாகக் கோத்து அணிந்த திருச்சடையினை உடைய புண்ணியன் ஆகிய சிவபெருமானையே நாம் விரும்பிச் சேருகின்ற பண்ணியத்தைப் பெற்றுள்ளோம். எனவே,யாவர்க்கும்நாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இந்தப் பரந்த பூவுலகில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. நாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவதும் இல்லை.எனவே, நாம் ஒன்றினாலும் குறைஉடையவர்கள் அல்ல.பிணிகளும் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.
No comments:
Post a Comment