மன அடக்கத்தைக் காக்க வேண்டும்.
-----
1. இருக்கின்ற நல்லதை நீங்காமல் காத்துக் கொள்ளவேண்டும்.
2. இருக்கவேண்டியதைத் தேடிக் காத்துக் கொள்ளவேண்டும்.
காத்துக்கொள்ள வேண்டியவை குறித்து திருவள்ளுவ நாயனார் கூறி அருளுவதைக் காணலாம்.
மன அடக்கத்தை ஒருவன் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும். மனம் அடியாகச் சொல்லும், அதன் வழியாகச் செயலும் உண்டாகும். சொல்லும் செயலும் தூயவையாக இருக்கவேண்டுமானால், மனமானது அடங்கி இருக்கவேண்டும். மனமானது தீய வழியில் செல்லாது, அதனை அடக்கி வைத்தல் அடக்கம் உடைமை எனப்பட்டது. மன அடக்கம் இல்லாது தீயநெறிகளில் ஒருவன் பயிலுவதால் உண்டாகும் குற்றங்களை அடுக்குகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
புரைபடும் செற்றக் குற்ற மனத்தன்,
தவம்இலன்,சுத்தச் சத்ய அசத்யன்,
புகல்இலன்,சுற்றச் செத்தையுள் நிற்கும் ......துரிசாளன்,
பொறைஇலன்,கொத்துத் தத்வ விகற்பம்
சகலமும் பற்றி,பற்று அற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றும்இல் வெற்றன்,..கொடியேன் நின்
கரை அறும் சித்ரச் சொல்புகழ் கற்கும்
கலை இலன்,கட்டைப் புத்தியன்,மட்டன்,
கதிஇலன்,செச்சைப் பொன்புய வெற்பும்,......கதிர்வேலும்,
கதிரையும்,சக்ரப் பொற்றையும்,மற்றும்
பதிகளும்,பொற்புக் கச்சியும்,முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு ......அடைவேனோ?"
இதன் பொருள் ---
தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன். தவம் ஏதும் இல்லாதவன். கலப்பில்லாத உண்மைப் பொய்யன். வேறு திக்கற்றவன். காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன். பொறுமை இல்லாதவன். பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றி நின்றும், பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனிலி. பொல்லாதவன். உமது எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலைஞானம் சிறிதும் இல்லாதவன். குறுகிய புத்தி உடையவன். மட்டமானவன். நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற உமது திருத்தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும், ஏனைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மறவாது என் சித்தத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உம்மைச் சேர மாட்டேனோ?
புரை --- குற்றம். மனதிலே உள்ள குற்றங்கள். பொறாமை, ஆசை, கோபம், பகை என்பன. செற்றம் --- தணியாத கோபம். கோபத்தினால் பகை உண்டாகும்.
இந்தக் குற்றங்கள் உண்டாகாமல் காத்துக் கொள்வதற்கும், உண்டானால் போக்கிக் கொள்வதற்கும் உரிய உபாயங்களை, "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப் பெறும் அருளாளர் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் காட்டி அருளுவதைக் காணலாம்.
"திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி
செற்றம் ஆகியமன அழுக்கைத்
தியானம்என் புனலால்;பொய்,புறங்கூறல்,
தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை
அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;
அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை
அருச்சனை என்னும் புனலினால் கழுவா
அசுத்தனேன் உய்யும் நாளு உளதோ?
விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன
வெண்மதி யோடு வெண் தலையும்,
விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்
விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,
எருக்கையும் அணிந்து,மின்னொளி கடந்த
ஈர்ஞ்சடை,பாந்தள் நாண்உடையாய்,
இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்
ஈசனே,மாசிலா மணியே". --- சிவப்பிரகாசர் (நெடுங்கழிநெடில்)
(திருக்குறும் --- திருக்கு + உறும்) மாறுபாட்டைக் கொண்ட. தியானம் --- இறை நினைவோடு இருத்தல். பாந்தள் --- பாம்பு. நாண் --- கயிறு.)
மாறுபாட்டைக் கொண்ட மனத்தால் உண்டான அழுக்கு ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை,தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.
பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்று வாயால் உண்டாகும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.
பாவச் செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் உடல் அழுக்கை,அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.
இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.
ஆனால், மனமானது யாருக்கும் தன்வயப்படாமல், தாறுமாறாக ஓடுகின்ற குதிரையைப் போன்றதே. அதனை அவ்வளவு எளிதில் அடக்கமுடியாது. அதனை அடக்கி, தீயநெறிகளில் செல்லவொட்டாது, நன்னெறியில் நடத்துவது இறைவன் கருணையைப் பெறுவதன் மூலமாகவே சாத்தியம் ஆகும்.
"தீயினைச் சேர்ந்த மெழுகினைப் போல உள்ளம் நெக்கு உருகி, அதனால் உண்டாகின்ற எல்லை இல்லாத பேன்பு என்னும் வெள்ளமானது கண்களின் வழியாகப் புறப்பட்டது என்பது போல,காலங்கள் தோறும், நறுமலர்களைக் கொண்டு உனது திருவடியில் தூவி வழிபடுகின்ற அடியவர் உள்ளத்தில் உள்ள ஆணவ வல்லிருளானது கெட்டு ஓடும்படியாக,அனந்தப் பேரோளியைப் பரப்புகின்ற பரம்பொருளே! எனது கரத்தில் அமர்ந்து, மனம் என்னும் குதிரையானது எனது வசப்படாமல், ஐம்புலன்கள் என்னும் வீதிகளில், மறிக்க முடியாமல் படிக்கு ஓடுகின்றது. இது முறையாகுமா? அதனை மறித்து நிறுத்தி எனக்கு உதவுகின்ற ஒப்பற்ற துணை உன்னை அல்லால், எனக்கு வேறு யாரும் இல்லை. அதனால், உனது துணையை வேண்டி உன்னைப் போற்றுகின்றேன். தாறுமாறாக ஓடுகின்ற எனது மனமாகிய குதிரையைத் தடுத்து நிறுத்து, அதன் மீது நீ அமர்ந்து, செல்ல வேண்டிய நன்னெறியில் சொல்லுமாறு அதனை நீ செலுத்துதல் வேண்டும்" என்பதாக துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளார்.
"மனம் எனும் வயமா என்வயப் படாமல்
மயங்குறும் ஐம்புல வீதி
மறிபடாது ஓடுகின்றது முறையோ?
மறித்து அதை நிறுத்தி, என் தனக்கு
நினை அ(ல்)லது உதவுவார் இ(ல்)லை, அதனால்
நினைப் பரவுற்றனன், அதனை
நிறுத்தி, நீ இவர்ந்து, பின்னர் நீ வேண்டு
நெறிகளில் சென்றிட விடுவாய்!
கனல் உறும் மெழுகின் நெஞ்சம் நெக்கு உடைந்து
கரையில் பேரன்பு எ(ன்)னும் வெள்ளங்
கண்வழி புறப்பட்டு என்ன நீர் வாரக்
காலங்கள் தொறும் வழுவாமல்
இனமலர் தூவும் அடியவர் உள்ளத்து
இருள்கெட எழுந்த பேரொளியே!
இட்டம் நன்கு உதவி என்கரத்து இருக்கும்
ஈசனே! மாசிலா மணியே!"
"வளக் குறைவால் சோர்வுபடாத சென்னைக் கந்த கோட்டத்துள் திருக் கோயில் கொண்டு விளங்கும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளுள் சைவமணியாய்த் திகழும் சண்முகங்களை உடைய தெய்வமணியே, என் உள்ளம் என் வசத்தில் நிற்பது இல்லை. நல்வழிப்படாமல் எனது மனம் இருப்பதால், என்னுடைய முன்னை வினையும் விரைவில் என்னை விட்டு நீங்கவில்லை. அதற்குக் காரணம், எனது மனமானது உன்னுடைய திருவடியில் அன்பு செய்வதும் இல்லை. அன்பு செய்யும்படி நல்வழியில் அதனை நிறுத்துவதற்கு, எனக்கு உற்ற துணையாக உன்னைகத் தவி. வேறு எவரும் இல்லை. அறிவு ஒழுக்கங்களில் இளையவனாகிய இவனுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உன்னிடத்தில் எனது நிலையைச் சொல்லிப் பரிந்து உரைப்பவரும் இல்லை. தப்பித் தவறி நீ அருள் செய்வாயானால், அறிவில் ஏழையாகிய அவனுக்கு அருள் புரிவது ஏன் என்று உனது நின்று எனக்கு எதிராகப் பேசுபவரும் இல்லை. வளம் பொருந்திய உனது அருட்செல்வம் சிறிதும் குறைந்து போகக் கூடியதும் இல்லை. மேலும் உனது அருளியல்பற்றி வாதப் பிரதிவாதம் புரிபவரும் இல்லை. உன்னிடத்தில் வந்து இரப்பவர்களுக்கு நீ இல்லை என்று சொல்லுவதும் இல்லை. காரணம், இல்லை என மறுக்கும் கொடிய ஈரமில்லாத மனத்தை உடையவனும் நீ இல்லை. இவ்வாறு இருக்க, நான் எனது மனத்தை அடக்கி, நல்வழியில் அதனை நிறுத்தி, அதன் துணைக் கொண்டு உனது அருள்பெறாது வருந்துதற்குகின்றேன். அடியேனுக்கு அருள் புரியவேண்டும்" என்று வள்ளல் பெருமான் பாடி அருளுகின்றார்.
"உளம்எனது வசம் நின்றது இல்லை, என் தொல்லைவினை
ஒல்லை விட்டிடவும் இல்லை,
உன்பதத்து அன்பு இல்லை, என்தனக்கு உற்ற துணை
உனைஅன்றி வேறும் இல்லை,
இளையன் அவனுக்கு அருளவேண்டும் என்று உன்பால்
இசைக்கின்ற பேரும் இல்லை,
ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன்எதிர்நின்று
இயம்புகின்றோரும் இல்லை,
வளம்மருவும் உனது திருவருள் குறைவது இல்லை, மேல்
மற்று ஒரு வழக்கும் இல்லை,
வந்து இரப்போர்களுக்கு இல்லைஎன்பது இல்லை,நீ
வன்மனத்தவனும் அல்லை,
தளர்வுஇலாச் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!"
"அடக்கம் உடைமை" என்னும் அதிகாரத்தில், "ஒருவனுக்கு அடக்கத்தின் மேம்பட்ட செல்வமானது ஏதும் இல்லை. எனவே, அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்துக் கொள்ளவேண்டும்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்..
அடங்காத மனத்தை அடக்கி, நல்வழிப்படுத்தி வைக்கத் திருவருள் துணை வேண்டும். அதற்குப் பெருந்துணையாக இருப்பது இறைவழிபாடும், அடியார் திருக்கூட்டத்தின் இணக்கமுமே ஆகும். மன அடக்கமே, வீடுபேறு அல்லது மோட்சம் என்னும் ஆக்கத்தைத் தரவல்லது என்பதால், அதனை ஒருவன் காத்துக் கொள்ளவேண்டும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.
காக்க பொருளா அடக்கத்தை, ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு. --- திருக்குறள்.
மனம் அடக்கம் இல்லாமல் இருந்தால், சொல்லில் அடக்கம் உண்டாகாது. சொல்லில் அடக்கம் இல்லாது போனால், செயலிலும் அடக்கம் இல்லாது போகும். இறுதியாக விளைவது பெருந்துன்பமே ஆகும்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்
ஏன்று இறந்தான் அன்றோ?இரங்கேசா! - சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை யுயிர்க்கு.
இதன்பதவுரை ---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! ஆன்ற சபையில் அடங்காத சிசுபாலன் --- பெரியோர்கள் சபையில், அடக்கம் இன்றிப் பேசின சிசுபாலன், ஏன்று இறந்தான் அன்றோ --- அதற்கேற்ற தண்டனை அடைந்து செத்தான் அல்லவா, (ஆகையால் இது) அடக்கத்தை --- நாவடக்கம் முதலியவைகளை, பொருளா --- பெரிய பொருளாக மதித்து, சான்றோர்கள் காக்க --- பெரியோர்கள் காக்கக் கடவர்கள், (ஏனெனில்) உயிர்க்கு --- மக்கள் உயிர்க்கு,அதனின் ஊங்கு --- அதைக் காட்டிலும் (பெரிய), ஆக்கம் இல்லை --- செல்வம் கிடையாது (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை--- அடக்கமே பெரும் செல்வம்.
விளக்கவுரை--- இராஜசூய யாக முடிவில் தருமர், அங்குள்ள முனிவர்களை நோக்கி, "முதற்பூசை யாருக்குச் செய்வது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "கண்ணனுக்குச் செய்க" என்றனர். அங்கிருந்த சிசுபாலன் சும்மா இராமல், "என்னைப் போன்ற பெரியோர் இருக்க, இந்த இடைப்பயலோ முதற்பூசை பெறுபவன், இடையனோ மடையனோ, தெரியாதா" என்றான். முனிவர் சொன்னபடி கண்ணபிரானே முதற்பூசை பெற்றார். அவர் சிசுபாலனை எதிர்த்துத் தாக்கிக் கொன்றார். அவனுடைய அடக்கமின்மையால் அவன் உயிரிழந்தான்.
No comments:
Post a Comment