049. காலம் அறிதல் --- 09. எய்தற்கு அரியது

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பெறுதற்கு அரிய காலம் வந்து பொருந்திய போதுஅந்த வாய்ப்பிலேயே செய்தற்கு அரி செயல்களைச் செய்துகொள்ள வேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

திருக்குளைக் காண்போம்...

 

எய்தற்கு அரியது இயைந்தக்கால்அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.                        

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

         எய்தற்கு அரியது இயைந்தக்கால்- பகையை வெல்லக் கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால்

 

     அந் நிலையே செய்தற்கு அரிய செயல்--- அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.

 

         (ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியதுஎன்றும்அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்என்றும்இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையேஎன்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின்'செய்தற்கு அரியஎன்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

சிந்து பதியைத் தந்தையோடு இறுத்தான் செவ்விஉற

முந்து விசயன்தான்,முருகேசா! - நந்தல்இன்றி

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.                             

 

இதன் பொருள் ---

 

         முருகேசா --- முருகப் பெருமானே,  முந்தி விசயன் --- முன்னாளில் அருச்சுனன்செவ்வியுற --- சமயம் நன்றாகப் பொருந்தசிந்துபதியைத் தந்தையோடு இறுத்தான் --- சயத்திரதனை அவனுடைய தந்தையோடு கொன்று ஒழித்தான்.  நந்தல் இன்றி --- கெடுதல் இல்லாமல்எய்தற்கு அரியது இயைந்தக் கால் --- கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால்அந்நிலையே --- அதனைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதேசெய்தற்கரிய செயல் --- செய்தற்கு அருமையான காரியங்களைச் செய்து முடித்தல் வேண்டும்.

 

         அருச்சுனன் காலம் நன்கு அமைந்தபொழுது சயத்திரதனையும் அவனுடைய தந்தையையும் கொன்றான். கிடைத்தற்கரிய காலம் வாய்க்குமானால் அப்பொழுதே செய்தற்கரிய செயல்களைச் செய்து முடிக்கவேண்டும்.

 

         அருச்சுனன் தன் மகன் அபிமன்னுவைக் கொன்ற சயத்திரதனை மறுநால் மாலைக்குள் கொன்று முடித்து விடுவதாகச் சூளுரை புகன்றான். மறுநாள் சயத்திரதனைப் பகைவர்கள் நன்கு காப்பாற்றியவடியால் அவனை எளிதாகக் கொல்ல முடியவில்லை. கொல்வதற்கு அருச்சுனன் சமயத்தை எதிர்நோக்கி இருந்தான். கண்ணனுடைய மாயையால் அருச்சுனன் தீக்குளிப்பதற்கு ஏற்பாடு செய்தான். அதனைப் பார்க்க சயத்திரதனும் வந்தான். கண்ணன் கதிரவனைக் காட்டி சயத்திரதனை உடனே கொல்வாயாக என்று கூறினார். அப்பொழுதே அருச்சுனன் சயத்திரதனைக் கொன்று அவன் தந்தையையும் வீழ்த்தித் தன்னுடைய பகையை முடித்தான். அச்சமயத்தை அருச்சுனன் நழுவ விட்டிருப்பின் பிறகு உயிரிழக்குமாறு நேர்ந்திருக்கும். ஆகவேஎதனையும் சரியான காலம் வாய்த்த பொழுதே விரைந்து செய்து முடித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...