காமத்துக்குக் கண் இல்லை
----
"காமம்" என்னும் சொல்லுக்கு ஆசை, அன்பு, விருப்பம், இன்பம், புணர்ச்சியின்பம் என்று பொருள்.
"காமுறுதல்" என்னும் சொல்லுக்கு விரும்புதல், வேண்டிக் கொள்ளுதல் என்று பொருள்.
உயிர்க்கு உள்ள உட்பகை என்றும் அரிட்ட வர்க்கம் என்றும் சொல்லக்கூடியவை ஆறு. அவை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பவை ஆகும். இவற்றில் காமம், மோகம் என்னும் இரண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளதால், "காமம்" என்னும் சொல்லுக்கு, சிறப்பாக, ஆசை, விருப்பம் என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். "மோகம்" என்பதற்கு, காமமயக்கம், வேட்கை, மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்று பொருள்.
நெருப்பைப் புகை மறைப்பது போலவும், கண்ணாடியின் ஒளியைத் தூசு மறைப்பது போலவும், ஆடையின் ஒளியை அழுக்கு மறைப்பது போலவும், ஆன்மாவுக்கு உள்ள இயற்கை அறிவு என்று சொல்லப்படும் உண்மை அறிவை மறைத்து நிற்பது, ஆசை அல்லது காமம்.
ஓர் ஆண், ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஓர் ஆணை விரும்புவது காமம். ஆணோ, பெண்ணோ, அவரவர் தாங்கள் விரும்பும் பொருளின் மீது ஆசை கொள்ளுவது காமம் எனப்படும். அதனால்தான், விரும்பிய பொருள் கிடைக்காதபோது குடும்பத்தில் கூட குழப்பமும் கலவரமும் உண்டாகின்றது.
இதைத் தான் "காமத்துக்குக் கண் இல்லை" என்று முன்னோர் கூறி வைத்தனர். கண்ணால் கண்டுதான் ஒன்றில் விருப்பம் உண்டாகின்றது. பின், கண் இல்லை என்று சொல்லலாமா எனத் தோன்றும்.
மனத்தை மயக்குபவை ஐம்புலன்கள். இந்திரியங்கள் வழியாக ஒரு பொருளை, ஊனக் கண்ணால் கண்டு விருப்பம் கொள்கிறோம். அப்போது "அறிவுக்கண்", "மனக்கண்" "உள்ளக்கண்" செயல்படாமல் போவதைத் தான், மேற்குறித்த முதுமொழியால் சொல்லப்பட்டது. அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தால், விரும்பப்படும் பொருளின் தன்மை, அதன் உண்மை நிலை, அதன் அவசியம், அதனால் விளையும் நன்மை தோன்றும். புலன்களால் உண்டான காம உணர்வு, மன அறிவை மறைப்பதால், "கண் இல்லை" எனப்பட்டது.
"மாய விளக்கு அது மறைந்து நின்றிடும்" என்றார் திருமூல நாயனார். மாயையானது, ஒரு பொருளை நமக்குக் காட்டியது. அதன் உண்மையைத் தெளிய வைப்பதும் அந்த மாயையே என்பதால், மாயையை "விளக்கு" என்றார். அது விளக்கு என்பதை அறிவால் தெளிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெளிந்து கொண்டால் ஆனந்தம் உண்டாகும். மாயாகாரியம் ஆகிய கருவிகளால் ஆன இந்த உடம்பினுள் ஆன்மா பொருந்தி இருக்கின்றது.
இறைவன் தனது சத்தியோடு இயைந்து நின்று,உயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துகின்றான் என்பது உண்மை. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் எது? உடம்புதான் உயிரா? அல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிரா? அல்லது, இவையனைத்திற்கும் வேறான ஒன்றா? இப்படிப் பலவாறான ஐயங்கள் எழுதல் இயல்பு.
உளது, இலது என்றலின், எனது உடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்,
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.
என்பது "சிவஞானபோதம்" மூன்றாம் சூத்திரம்.
இதன் பதவுரை ---
இலது என்றலின் ஆன்மா உள்ளது --- ஆன்மா என்பது ஒன்று இல்லை என்று கூறும்போது, அவ்வாறு ஆராய்ந்து, "இல்லை"கூறும் அறிவு ஒன்று இருப்பதாலும், அவ்வறிவே ஆன்மா ஆகும். ஏனவே, ஆன்மா என்பது சூனியம் எனப்படும் இல்லாத பொருள் அல்ல.
எனது உடல் என்றலின் ஆன்மா உள்ளது --- உடம்பை நான் என்று சொல்லாமல்,எனது உடம்பு என வேறாகச் சொல்லுவதால், உடம்புக்கு வேறாக ஆன்மா உள்ளது.
ஐம்புலன் அறிதலின் ஆன்மா உள்ளது --- ஐம்பொறிகளுக்கு வேறாய் ஒரு பொருள் இருந்து அவ் ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு ஓசை முதலிய ஐந்து புலன்களையும் அறிந்து வருதலால்அவ்வாறு அறிகின்ற அதுவே ஆன்மா ஆகும்..
ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உள்ளது --- ஐம்பொறிகளும் செயற்படாது ஒடுங்கி நிற்கும் கனவு நிலையில் நடந்தவற்றை விழித்து எழுந்தபின் தெளிவாக அறியமுடியாமல், கனவில் இப்படிக் கண்டோமா, அப்படிக் கண்டோமா எனப் பலவாறு குழம்பி அறிதலினால், கனவு நிலையில் சூக்கும உடம்பில் இருந்துகொண்டு, கனவினால் உண்டாகும் அனுபவங்களை அறிந்து, பின் விழிப்பு நிலையில் தூல உடம்பிற்கு வந்த பிறகு, கனவில் கண்டதை மறந்துபோவதும், அல்லது மயங்கி அறிவதும் செய்வதினால், சூக்கும உடம்பிற்கு வேறாக ஆன்மா உள்ளது.
கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உள்ளது --- கண்ணை மூடி உறங்குகின்றபோது, உணவு உண்பது இல்லை. இன்பதுன்ப நுகர்ச்சி இல்லை.செயல்கள் ஏதும் நிகழ்வது இல்லை. பிராண வாயு மட்டும் இயங்குகின்றது. எனவே, பிராணவாயுவுக்கு வேறாகவும் ஆன்மா உள்ளது.
உணர்த்த உணர்தலின் ஆன்மா உள்ளது --- தானே தனித்து நின்று எதையும் உணரும் தன்மையில்லாமல், அறிவிக்கும் கருவிகளோடு கூடி நின்று உணர்த்த,உலகப் பொருள்களை உணர்ந்து வருதலினால், அவ்வாறு அறிவிக்கின்ற பரம்பொருளுக்கு வேறாக ஆன்மா உள்ளது.
(இத்தகைய ஆன்மா எங்கேதான் உள்ளது? என்றால், அது)
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உள்ளது --- மாயா காரியமாகிய கருவிகளால் கட்டி அமைக்கப்பட்ட இயந்திரம் போன்றுள்ள உடம்பில்தான், அறிவுப் பொருளாகிய ஆன்மா சடமாகிய கருவிக் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது.
மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம், எதிர்ச்சொல் உண்டு. ஆனால், ஆனந்தம் என்ற சொல்லுக்கு மாற்று இல்லை.
எனவே, "உள்ளக்கண் நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று முருகப் பெருமானை வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான். "உள்ளத்தை" என்றால், "உள்ளத்தின் உள்ளே நின்ற கரு" என்று அப்பர் பெருமான் கூறிய பரம்பொருளை என்று பொருள் கொள்ளவேண்டும். (உள்ள + அத்தை = உள்ளத்தை)
முகத்தில் உள்ள ஊனக்கண்ணைக் கொண்டு மட்டுமே ஒரு பொருளைத் தெளிபவர்களை "மூடர்கள்" என்று திருமூல நாயனார் காட்டி, அவர்களுக்குப் பின் வரும் பாடலைத் தனது அருளுரையாக வழங்கினார்.
"கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்
கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்"
"கருத்தினை உள்ளே கண்டு கண்டு உற வாங்கிடில்" என மாறிக் கூட்டிப் பொருள் காணவேண்டும்.
"ஊன்கண் கோக்கி, உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்" என்பார் அப்பர் பெருமான். சிவராத்திரி என்றால் கண் விழித்து இருக்கவேண்டும் என்று கொண்டு, உறங்காமல் இருப்பதற்கான உபாயங்கள் சிலவற்றைக் கையாள்கின்றோம். எடுத்துக் காட்டாக, பகடை ஆட்டம், திரைப்படம் பார்த்தல் முதலானவற்றில் ஈடுபட்டு, மிகவும் சிரமத்தோடு கண்விழித்து இருக்கின்றோம். இதுதான் சிவராத்திரியா?என்றால். அல்ல. பகடை ஆடுவதாலும், பொழுது போக்குக்களில் ஈடுபட்டுக் கண் விழிப்பதாலும் இறையருளைப் பெறவே முடியாது. ஊனக் கண்ணை விழித்து இருப்பது அல்ல. உள்ளக் கண்ணை விழிப்பு நிலையில் வைத்திருப்பதே சிவராத்திரி ஆகும் என்பதை அறிதல் வேண்டும்."ஊனக் கண்ணினுள் நோக்கினோமே அன்றி,உணர்வாகிய ஞானக் கண்ணுள் நோக்கவில்லை".
நாம் அறிவு என்னும் செம்மை இல்லாமல், அறியமையையே அறிவு என்று கொண்டு, மனம்போன போக்கில் எதையும் உணர்ந்து, தக்கது இது, தகாதது இது என்று தெளிந்து அறியாமல், யாரும் அறிவுறுத்தினாலும், நாம் கொண்டுள்ள காமம் (விருப்பு) காரணமாக, அவற்றைப் புறந்தள்ளி, நமது மனம் போன போக்கில் செயல்படுகின்றோம்.
நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனல்,அவற்றின் தரத்தை ஆராய்ந்து நல்லவற்றையே தேர்ந்தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள், வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்டகண்ட சரக்குகளை எல்லாம் வாங்குவார்கள். நாம் நம் அறியாமை தோன்றும்படி பாவம் என்னும் சரக்கையே ஈட்டிக்கொள்கிறோம்.
காய்தல் உவத்தல் இன்றி எப்பொருளையும், அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட் கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதாகும், உவப்பதன்கட்
குற்றமும் தோன்றாக் கெடும்". --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதாகும் --- வெறுப்புத் தோன்றும் போது பொருளில் உள்ளகுணம் ஆராய்வானுக்குத் தோன்றாது; உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் --- விருப்பம் உண்டாகும் போது, பொருளில் உள்ள குற்றமும் தோன்றாது மறையும் (ஆதலால்) காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் --- வெறுப்பு விருப்பு இல்லாமல்ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்து அறிதல், அறிவுடையோர் கண்ணதே --- அறிவுடையார் செயலாகும்.
எனவே, காமம் என்னும் விருப்பத்திற்கு, உண்மை அறிவு என்னும் கண் இல்லை. "காமத்திற்குக் கண் இல்லை" என்பது இதையே உணர்த்தும்.
No comments:
Post a Comment