திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 49 -- காலம் அறிதல்
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "இந்த பூமியெல்லாம் தன்வசம் தவறாமல் ஆகவேண்டும் என்று எண்ணுபவர், இடையூறுகளுக்கு உள்ளம் தளராமல், தக்க காலம் கனிந்து வரும் வரையில் பொறுமேயோடு இருப்பர்" என்கின்றார் நாயனார்.
மேலைத் திருக்குறள்களில், மூவகை ஆற்றல்களும், நால்வகே உபாயங்களும் பொருந்தி இருக்கவேண்டும் என்றும், அவ்வாறு பொருந்த வந்த போதும்,தக்க இடத்தில் செய்யவேண்டும் என்று உரைத்த நாயனார், அவையெல்லாம் உண்டான போதும்,தக்க காலம் பொருந்தி வரவேண்டும் என்றார்.
தவறாமல் ஆகவேண்டும் என்று கருதுதல் என்றது, வலிமிகுதியும், காலத்தையும் கருதிச் செய்வதால் ஆகும்.
திருக்குறளைக் காண்போம்...
காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருது பவர்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கலங்காது ஞாலம் கருதுபவர்--- தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர்,
காலம் கருதி இருப்பர்--- தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.'
(தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் ஒருந்து ஒரு பாடல்...
ஆண்டு பதின்மூன்று அரவு உயர்த்தோன் செய்தஎல்லாம்
ஈண்டுபொறுத்து ஆண்டான்,இரங்கேசா! - வேண்டிய
காலங்கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
இதன் பொருள் ---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! பதின்மூன்று ஆண்டு --- பதின்மூன்று வருட காலம், அரவு உயர்த்தோன் செய்த எல்லாம் --- சர்ப்பக் கொடியோனாகிய துரியோதனன் செய்த கொடுமைகளை எல்லாம், ஈண்டு --- இவ் உலகத்தில், பொறுத்து --- வனவாசமும், அஞ்ஞாத வாசமும் செய்து தருமராஜன் பொறுத்துக் கொண்டிருந்து, ஆண்டான் --- பிறகு அவனைச் சுற்றத்தாரோடு கொன்று அத்தினாபுரியில் இருந்து அரசாண்டான், (ஆகையால், இது) கலங்காது ஞாலம் கருதுபவர் --- தவறாமல் உலகத்தை ஆளவேண்டுமென்று எண்ணும் அரசர், வேண்டிய காலம் கருதி இருப்பர் --- தமக்கு அநுகூலமாக வேண்டிய காலத்தை எதிர் நோக்கி இருப்பார்கள் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை--- பொறுத்தார் பூமி ஆண்டார்.
விளக்கவுரை--- தருமராஜன் பதின்மூன்று வருஷகாலம் வனவாசமும், அஞ்ஞாத வாசமும் செய்துகொண்டு இருந்தபோது, துரியோதனன் செய்து வந்த கொடுமைகள் பொறுக்க முடியாதன என்பது பாரதத்தில் எல்லோருக்கும் தெரிந்தது. அவைகளை எல்லாம் தருமராஜன் பதறாமல் பொறுத்துக்கொண்டு வந்ததை அவனுடைய தம்பிமார்களே ஒப்புக்கொள்ளவில்லை. காலம் வரும் பொறுங்கள் என்று அவன் தன் தம்பிமார்களுக்குத் தேறுதல் சொல்லி வந்தான். பிறகு காலம் வந்து பாரதப் போர் நடந்தபோது அவனும் தம்பிமாரும் தத்தம் போர்த் திறத்தைக் காட்டித் துரியோதனனையும் அவன் நண்பர், சுற்றத்தார்களையும் அடியோடு தொலைத்து, அத்தினாபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். தருமராஜன் முடிசூடி அரசாண்டான். ஆகையால், காலம் கருதிப் பொறுத்துக் கொண்டு இருந்ததின் பலனாக அவன் ஞாலம் கட்டியாண்டு நற்பேர் பெற்றான். "பொறுத்தார் பூமி ஆண்டார், பொங்கினார் காடாண்டார்" என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
கறுத்தவிடம் உண்டுஅருளும் தண்டலையார்
வளநாட்டில் கடிய தீயோர்
குறித்துமனை யாள்அரையில் துகில் உரிந்தும்
ஐவர்மனம் கோபித் தாரோ!
பறித்து உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்
காடு ஆளப் போவார் தாமே. --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார் வளநாட்டில் --- கரிய விடத்தினை உண்டு, உலகில் உள்ளோர் யாவருக்கும் அருளிய திருத்தண்டலை நீள்நெறி இறைவர் எழுந்தருளி உள்ள வளம் மிக்க நாட்டிலே, மனையாள் அரையில் துகில் கடிய தீயோர் குறித்து உரிந்தும் --- தங்களுடைய மனைவியான திரௌபதையின் இடையில் இருந்த ஆடையை மிகவும் கொடியரான கவுரவர் அவிழ்த்து அவமானப் படுத்திய காலத்திலும், ஐவர் மனம் கோபித்தாரோ --- பாண்டவர்கள் உள்ளத்திலே கோபம் கொண்டனரோ? உரிய பொருள் முழுதும் பறித்துக் கவர்ந்தாலும் அடித்தாலும் பழி செய்தாலும் --- தமக்கு உரிமையான எல்லாப் பொருளையும் வலிதில் கொண்டாலும், அடித்தாலும், இழிவு செய்தாலும், பொறுத்தவரே அரசு ஆள்வர் --- பொறுத்துக் கொண்டவரே உலக்னைப் பின்னர் ஆள்வர், பொங்கினவர் காடு ஆளப் போவர் --- மனம் பொறாமல் சினத்தோடு பொங்கினவர் காட்டை ஆளப் போவர்.
அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா, --- தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. --- மூதுரை.
இதன் பொருள் ---
தொடுத்த --- கிளைத்த, உருவத்தால் நீண்ட --- வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம் --- உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி --- பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா --- பழுக்கமாட்டவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் --- அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி --- முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள் --- மேற்கொண்ட காரியங்கள்; ஆகா --- முடியாவாம்.
எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும்.
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க;
வரையக நாட! விரைவில் கருமம்
சிதையும்,இடராய் விடும். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
வரையக நாட --- மலைமேலுண்டாகிய நாடனே!, புரையக் கலந்தவர் கண்ணும் --- உள்ளம் ஒப்ப நட்புக் கொண்டவரிடத்தும், கருமம் --- அவரால் உளவாகும் செயலை, உரையின் வழுவாது --- கூறுஞ் சொற்களில் வழுவாது, உவப்பவே கொள்க --- அவர்கள் மனம் மகிழும்படி செயலை முடித்துக் கொள்க. விரைவில் --- தமக்கு வேண்டிய பொழுதே அச் செயலைக் கொள்ள விரைவாயாயின், கருமம் சிதையும் --- செயலும் முடிவுறாது இடையிலே அழிந்தொழியும், இடராய் விடும் --- அங்ஙனம் அழிதலால் தமக்குத் துன்பம் உண்டாகும்.
மேற்கொண்ட செயலை அமைதியாகச் செய்க. இல்லையாயின் மிகுந்த துன்பங்களை அடைவாய்.
‘சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?
--- கம்பராமாயணம். மந்த்ரை சூழ்ச்சிப் படலம்.
இதன் பொருள் ---
சீலம் அல்லன நீக்கி --- நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி;செம்பொன் துலைத் தாலம் அன்ன --- சிவந்த பொன்னை நிறுத்துகின்ற தராசினது நடுநாவை ஒத்த; தனி நிலை --- ஒப்பற்ற நடுவு நிலைமையை;தாங்கிய --- உடைய; ஞால மன்னற்கு --- உலகை ஆளும் அரசனுக்கு;நல்லவர் --- அமைச்சர்கள்; நோக்கிய --- ஆராய்ந்துரைத்த; காலம் அல்லது--- பொழுது அல்லாமல்; கண்ணும் உண்டாகுமோ? --- வேறு கண்ணும் உண்டாகுமோ?’ (இல்லை).
நடுவு நிலைமை - பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார் கண்ணும் அறத்தின் வழுவாதுஒப்ப நிற்கும் நிலைமை. தாலம் - தாலு - தாக்கு.
துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு. நடுவு நிலைமைக்குத் துலாக்கோல் உவமையாதல்“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற், கோடாமை சான்றோர்க் கணி”என்பதிற் (குறல். 118) காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின்‘செம்பொன் துலை’ என்றார். நல்லவர் - இங்கு அமைச்சர். ‘காலமறிதல்’என்னும் திருக்குறள்அ திகாரத்தின்கண் ‘காலம்’அரசர்க்கு இன்றியமையாத சிறப்புடையது எனல் காண்க.
No comments:
Post a Comment