உயிர்க்குற்றம் வராமல் காக்க வேண்டும்.
உட்பகையை உடனே அறுக்கவேண்டும்.
-----
உயிர்க்கு,சிறுமை (காமம்), வெகுளி (குரோதம்), கடும்பற்றுள்ளம் (உலோபம்) மாணா உவகை (மோகம்), செருக்கு (மதம்), மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த ஆறு குற்றங்களையும், அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்டவர்க்கம்" என்பர். "இதசத்துரு" என்றும் கூறுவர். இதம் புரிவது போன்று இருந்து, முடிவில் தீமையை விளைவிப்பவை இந்த ஆறுவகைக் குற்றங்குளும்.
"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்
கனலோப முழுமூடனும்,
கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று
இயம்பு பாதகனும் ஆம்,
இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்"
என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.
இதன் பொருள் ---
கருவிலே தோன்றி, குழவிப் பருவத்தே முளைத்து, இளமை வளர வளர்ந்து, பிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சை நன்மையினும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்" என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம், நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும், உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலால் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக. கனலோபம், நில்லாது செல்லும் செல்வத்தின்பால் உண்டாகும் கடும்பற்று. செல்வப் பற்று,அறிவை மறைத்து மேலே செய்வது என்னவென்று எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்" என்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும், அறிவு மயக்கத்தில் செய்வன பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடுமோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம், உடைமை நலங்களால் அறிவு இல்லாமல், நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உளதாவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம், நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையதாகலால், மதம் என்பது, "ஆங்காரி" என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும், ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும், அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்தது.அது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால், அதனை "ஏமம் அறும் மாற்சரியம்" என்றும், அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது அன்றி, எதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் “விழலன்”என்றும் எள்ளுகின்றார். விழல்--- பயனில்லாதது.
எனவே, இந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "செல்வக் களிப்பால் தன்னைத் தானே வியந்து கொள்ளும் மதமும், பிறர் ஆக்கம் பொறாமையால் வரும் சினமும்,தனதானியாதிகள் மேன்மேலும் உண்டாகவேண்டும் என்னும் சித்தவிருத்தி ஆகிய காமமும் எனப்படும் மூன்று வகையான குற்றங்கள் இல்லாரது செல்வமானது மேம்பட்டு விளங்கும் தன்மையினை உடையது" என்கின்றார் நாயனார்.
செருக்கு --- அகங்காரத்தால் வருகின்ற நிமிர்ச்சி.
சினம் --- ஆணவத்தால் மூண்டு எழுவது.
சிறுமை --- இழிவான வழியில் பழகிவரும் புன்மை.
மேலே சொல்லப்பட்ட ஆறுவகையான குற்றங்களுள், ஒருவனைக் கெடுத்தற்கு மிகுதியும் முற்பட்டுள்ள குற்றங்கள் மதமும், வெகுளியும், காமமும். ஆதலால், அம் மிகுதி பற்றி,அவை முதலில் கூறபட்டன. அந்தக் குற்றங்கள் தன்னிடத்து உண்டாகாமல் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்கின்றார் நாயனார்.
குற்றமே காக்க பொருளாக, குற்றமே
அற்றம் தரூஉம் பகை. --- திருக்குறள்.
அடுத்து, புறப்பகைக்கு இடமாக்கிக் கொடுத்து, நண்பர்போல் அடுத்து இருந்து, மறைவில் பகையாய்க் கெடுக்க முற்படுகின்ற,உடன் நிற்கும் பகைக்கு இடம் கொடாது இருத்தல் கூறினார் நாயனார். இந்த உட்பகையானது, புறப்பகையை வெல்லுதற்கு முன களைந்து விட வேண்டியது.
"உட்பகை" என்னும் அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "வாளைப் போல வெட்டுவோம் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்சாது இருக்கலாம். உறவினரைப் போல மறைந்து நிற்கும் பகைவரது தொடர்பிற்கு அஞ்சுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.
பகைவர் என்று சொல்லப்படுவோர் வெளிபடையாக இருப்பதால்,அவரால் தீங்கு நேராவண்ணம் காத்துக் கொள்வது கூடும். எனவே, புறப்பகைக்கு அஞ்சுதல் வேண்டாம். ஆயினும், சுற்றத்தவர் உட்பகைவர் ஆகி, நட்பினர் போல் நடிப்பதால்,அவரது பகைமையைக் கண்டு, தம்மைக் காத்துக் கொள்ளுதல் கூடாமலும் போகலாம் என்பதால், உட்பகைக்கு அஞ்சுதல் வேண்டும். வடமொழியில் உட்பகையை, "இதசத்துரு" என்பர்.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "அகப்பகைக்கு அச்சப்பட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காக்காமல் தளர்ச்சி உண்டாகிய போது,குயவன் மண் கலதை அறுக்கும் ஆயுதம் போல உடன் இருந்தே அழித்துவிடும்" என்கின்றார் நாயனார்.
காத்தல் என்பது, அகப்பகைவர் தன்னிடத்து வந்து சேராமலும், அவருக்கு உடன்படாமலும் காத்துக் கொள்ளுதல்.
சுற்றத்தவர் போல் இருந்து, உட்பகைவராகத் தன்னைக் கெடுக்க முயற்சிக்கும் பகைவரிடம் இருந்து தன்னை ஒருவன் காத்துக் கொள்ளுதல் வேண்டும். குயவன் மண் பாண்டத்தைச் செய்கின்ற காலத்தில், அதைச் செய்து முடிக்கும் அளவும் காத்திருந்து, அறுக்க வேண்டிய பக்குவம் வந்த பின்னர் அதை அறுப்பதற்குத் தன்னிடம் உள்ள மரத்தால் ஆகிய ஒரு சிறு பலகை போன்ற ஒரு கருவியை வைத்து அறுத்து எடுத்து விடுதலைக் காணலாம். உட்பகையாக உள்ளவரும் ஒருவரும் அறியாதபடிக்கு உடன் இருந்தே, காலம் வந்தபோது அழித்துவிடுவர்.
"முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா வஞ்சரே அஞ்சப்படும்" என்று முன்னரும் நாயனார் அறிவுறுத்தியது காண்க. எனவே,
உட்பகை அஞ்சித் தற்காக்க, உலைவு இடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
என்று அருளினார் நாயனார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
நாரதர் மால் உட்பகையாய்,நம்பர் அடி பேணாத
வாறுசொல்லி,முப்புரமும் மாய்வித்தார், ஆதலினால்,
உட்பகை அஞ்சித் தற்காக்க, உலைவு இடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
நாரதர் மால்........... மாய்வித்தார் --- திரிபுரவாசிகளை ஒழிக்கக் கருதிய திருமால் நாரதரை அவர்கள்பால் ஏவிப் பாஷாண்ட மதத்தை (நாத்திகத்தை) அவர்களுக்கு உபதேசிக்கச் செய்து சிவபக்தர்களாக இருந்த அவர்களின் மனத்தைக் கெடுத்துச் சிவபெருமானுடன் போராடும்படி செய்தார் என்பது வரலாறு.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக...
புறநட்டு அகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறுஆதல் வேண்டும்,- கழிபெரும்
கண்ணோட்டம் செய்யார்,கருவியிட்டு ஆற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
புண் --- புண்ணை, கருவியிட்டு ஆற்றுவார் --- கருவியினால் அறுத்து அதனைக் குணப்படுத்துவார்கள்; (அவ்வாறின்றி) பொதிந்து மூடார் --- அதனை மறைத்து மூடிவையார்; (அதுபோல்) புறம்நட்டு --- வெளிக்கு உறவுகாட்டி. அகம் வேர்ப்பார் --- உள்ளே கோபிப்பவரது, நச்சுப் பகைமை --- நஞ்சுபோலும் கொடிய பகைமையை, வெளியிட்டு --- வெளியாக்கி, வேறு ஆதல் வேண்டும் --- நீங்கல் வேண்டும்; கழிபெருங் கண்ணோட்டம் செய்யார் --- (அத்தகைய வஞ்சகமான பகைவர்பால்) மிகுந்த அன்பு செய்யமாட்டார்.
கருவியினால் அறுத்துக் குணப்படுத்த வேண்டிய புண்ணை மூடிவைத்தால், அது உள்ளே புடைத்துக் கெடுதி விளைத்தல் போல; உள்ளே பகை உணர்வும்,வெளியில் உறவும் உடையவரால் தப்பாமல் கேடுவரும். ஆதலின், அன்னாரின் நச்சுப் பகைமையை `வெளியிட்டு வேறாதல் வேண்டும்' என்றார்.
முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண்டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. --- நாலடியார்.
இதன் பொருள் ---
சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றி ஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட ---இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக் கண்டால் போன்ற தன் விரல்களால் தன் எதிர் வந்த தந்தையின் கையைக் குத்தி விரியச் செய்து அது வைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்ற மலைகளையுடைய நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்பு இன்னாது --- அகம் கலந்த நேயம் கொள்ளாதாரது நட்பு துன்பம் உடையதாகும்.
ஆக, இதுவரை,
1. காக்க பொருளா அடக்கத்தை, ஆக்கம்
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு.
2. யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
3. பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.
4. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு.
5. தன்னைத் தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
6. குற்றமே காக்க பொருளா, குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
7. உட்பகை அஞ்சித் தற்காக்க, உலைவிடத்து
மண்பகையின் மாணத் தெறும்.
என்று திருவள்ளுவ நாயனார் ஒருவன் காத்துக் கொள்ளவேண்டியவை (இருப்பது நீங்காமல் காத்துக் கொள்வதும், தீயவை வராமல் காத்துக் கொள்வதும்)பற்றித் தொடர்ந்து சிந்தித்தோம்.
No comments:
Post a Comment