அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மழையளக பாரமும் (பொது)
முருகா!
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் அருள்.
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ...... தனதான
மழையளக பார முங்கு லைந்து
வரிபரவு நீல முஞ்சி வந்து
மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே
மகுடதன பார முங்கு லுங்க
மணிகலைக ளேற வுந்தி ரைந்து
வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக்
குழையஇத ழூற லுண்ட ழுந்தி
குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக்
குழியிலிழி யாவி தங்க ளொங்கு
மதனகலை யாக மங்கள் விஞ்சி
குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ
எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
இரணகள மாக அன்று சென்று
எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே
எழுகடலு மேரு வுங்க லங்க
விழிபடர்வு தோகை கொண்ட துங்க
இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா
பொழுதளவு நீடு குன்று சென்று
குறவர்மகள் காலி னும்ப ணிந்து
புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே
புதியமட லேற வுந்து ணிந்த
அரியபரி தாப முந்த ணிந்து
புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மழை அளக பாரமும் குலைந்து,
வரிபரவு நீலமும் சிவந்து,
மதிமுகமும் வேர்வு வந்து அரும்ப,...... அணைமீதே
மகுட தன பாரமும் குலுங்க,
மணி கலைகள் ஏறவும் திரைந்து,
வசம் அழியவே புணர்ந்து அணைந்து,...... மகிழ்வாகி,
குழைய இதழ் ஊறல் உண்டு அழுந்தி,
குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச,
குமுத பதி போக பொங்கு கங்கை ...... குதிபாய,
குழியில் அழியா விதங்கள் ஒங்கு,
மதன கலை ஆகமங்கள் விஞ்சி,
குமரியர்களோடு உழன்று,நைந்து ...... விடல் ஆமோ?
எழுபடைகள் சூர வஞ்சர் அஞ்ச,
இரணகளமாக அன்று சென்று,
எழுசிகர மா நிலம் குலுங்க,...... விசை ஊடே
எழுகடலும் மேருவும் கலங்க,
விழி படர்வு தோகை கொண்ட துங்க
இயல் மயிலின் மாறு கொண்டு அமர்ந்த ....வடிவேலா!
பொழுது அளவு நீடு குன்று சென்று,
குறவர்மகள் காலினும் பணிந்து,
புளிஞர் அறியாமலும் திரிந்து,...... புனமீதே,
புதியமடல் ஏறவும் துணிந்த,
அரிய பரிதாபமும் தணிந்து,
புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச--- போருக்குப் படைகளோடு எழுந்த சூராதியவுணர்கள் அஞ்சுமாறு,
இரண களமாக அன்று சென்று--- போர்க்களம் இரணகளம் ஆகுமாறு சென்று,
எழு சிகர(ம்) மாநிலம் குலுங்க--- ஏழு மலைகளும், பெரிய இந்த நிலப்பரப்பும் குலுங்குமாறு,
விசை ஊடே--- வேகமாகச் செல்லுகின்ற போது,
எழு கடலு(ம்) மேருவும் கலங்க--- ஏழு கடல்களும் மகாமேரு மலையும் கலங்குமாறு,
விழி படர்வு தோகை கொண்ட--- கண்கள் படர்ந்து உள்ள தோகையினை உடைய,
துங்க இயல் மயிலின்--- தூய இயல்பினை உடைய மயிலின் முதுகில் ஏறி,
மாறு கொண்டு அமர்ந்த வடிவேலா--- திருவடிகளை
மாற்றிப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த கூரிய வேலாயுதப் பெருமானே!
பொழுது அளவு நீடு குன்று சென்று--- பொழுது சாயும் காலம் வரை பெரிய வள்ளிமலைக் குன்றில் இருந்து,
குறவர் மகள் காலினும் பணிந்து--- குறவர் மகளாக வளர்ந்திருந்த (எம்பிராட்டி) வள்ளிநாயகியாரின் திருவடிகளில் பணிந்து இருந்து,
புளிஞர் அறியாமலும் திரிந்து--- வேடர்கள் அறியாமலும் வள்ளிமலையில் திரிந்து,
புன(ம்) மீதே --- தினைப்புனத்தில்,
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து--- (வள்ளிநாயகியாரை அடைய) புதிதாக மடல் ஏறுவதற்கும் துணிந்து, அந்தப் பரிதாபமான நிலையும் தணிந்த பின்னர்,
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே--- வள்ளிநாயகியாரின் புளகிதம் பொருந்திய மார்பினை அணைந்த பெருமையில் மிக்கவரே!
மழை அளக பாரமும் குலைந்து--- மேகம் போன்ற நீண்ட கூந்தல் அவிழ்ந்து குலையவும்,
வரி பரவு நீலமும் சிவந்து --- ரேகைகள் பரவியுள்ள நீலோற்பல மலரை ஒத்த கண்களும் சிவக்கவும்,
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப--- திங்களை ஒத்த முகத்தில் வியர்வை அரும்பவும்,
அணை மீதே--- படுக்கையில்,
மகுட தனபாரமும் குலுங்க--- மகுடம் அணிந்தது போன்று உள்ள முலைகள் குலுங்கவும்,
மணி --- இரத்தின அணிகலன்களும்,
கலைகளே அறவும் திரைந்து--- மேகலை என்னும் ஆடையும் ஒருசேர விலகவும்,
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி குழைய--- என் வசம் இழந்துபுணர்ந்தும், அணைந்தும் மகிழ்வோடு இருந்து, மனமானது குழைய,
இதழ் ஊறல் உண்டு அழுந்தி--- வாயில் ஊறும் எச்சிலைப் பருகி,காம உணர்வில் அழுந்தி இருந்து,
குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச--- வாயைத் திறந்து, பறவைகளின் குரலுடன் கொஞ்சிப் பேசவும்,
குமுதபதி போக--- மாலைக் காலம் கழிந்து, வானில் சந்திரன் வந்தபோது,
பொங்கு கங்கை குதி பாய--- அதுகண்டு பொங்குகின்ற கங்கையைப் போல எனது மனமானது மகிழ்ச்சியில் ததும்பி,
குழியில் இழியா விதங்கள் ஒங்கு--- பெண்குறியாகிய குழியில் விழுந்து, பலவிதமாகச் சொல்லப்படுகின்ற,
மதன கலை ஆகமங்கள் விஞ்சி--- மன்மதக் கலைளும் விஞ்சுமாறு,
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ--- இளம் பெண்களோடு திளைத்து இருந்து, அடியேன்உடலும் உள்ளமும் நொந்து போதல் நன்றாகுமா? (ஆகாது).
பொழிப்புரை
போருக்குப் படைகளோடு எழுந்த சூராதியவுணர்கள் அஞ்சுமாறு, போர்க்களம் இரணகளம் ஆகுமாறு சென்று, ஏழு மலைகளும், பெரிய இந்த நிலப்பரப்பும் குலுங்குமாறு வேகமாகச் செல்லுகின்ற போது, ஏழு கடல்களும் மகாமேரு மலையும் கலங்குமாறு, கண்கள் படர்ந்து உள்ள தோகையினை உடைய,உயர்ந்த தகுதியினை உடைய மயிலின் முதுகில் ஏறி, திருவடிகளை மாற்றிப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த கூரிய வேலாயுதப் பெருமானே!
பொழுது சாயும் காலம் வரை பெரிய வள்ளிமலைக் குன்றில் இருந்து,குறவர் மகளாக வளர்ந்திருந்த எம்பிராட்டி வள்ளிநாயகியாரின் திருவடிகளில் பணிந்து இருந்து, வேடர்கள் அறியாமலும் வள்ளிமலையில் திரிந்து, தினைப்புனத்தில், வள்ளிநாயகியாரை அடைய புதிதாக மடல் ஏறுவதற்கும் துணிந்து, அந்தப் பரிதாபமான நிலையும் தணிந்த பின்னர்,அம்மையாரின் புளகிதம் பொருந்திய மார்பினை அணைந்த பெருமையில் மிக்கவரே!
மேகம் போன்ற நீண்ட கூந்தல் அவிழ்ந்து குலையவும், வரிகள் பரவியுள்ள நீலோற்பல மலரை ஒத்த கண்களும் சிவக்கவும்,திங்களை ஒத்த முகத்தில் வியர்வை அரும்பவும், படுக்கையில் மகுடம் அணிந்தது போன்று உள்ள முலைகள் குலுங்கவும், அவற்றின் மீது அணிந்துள்ள இரத்தின அணிகலன்களும், மேகலை என்னும் ஆடையும் ஒருசேர விலகவும்,என் வசம் இழந்து புணர்ந்தும், அணைந்தும் மகிழ்வோடு இருந்து, மனமானது குழைய,வாயில் ஊறும் எச்சிலைப் பருகி, காம உணர்வில் அழுந்தி இருந்து, வாயைத் திறந்து, பறவைகளின் குரலுடன் கொஞ்சிப் பேசவும், மாலைக் காலம் கழிந்து, வானில் சந்திரன் வந்தபோது,அதுகண்டு பொங்குகின்ற கங்கையைப் போல எனது மனமானது மகிழ்ச்சியில் ததும்பி,பெண்குறியாகிய குழியில் விழுந்து, பலவிதமாகச் சொல்லப்படுகின்றமன்மதக் கலைளும் விஞ்சுமாறு, இளம் பெண்களோடு திளைத்து இருந்து, அடியேன்உடலும் உள்ளமும் நொந்து போதல் நன்றாகுமா? (ஆகாது).
விரிவுரை
மழை அளக பாரமும் குலைந்து---
மழை --- மழயைப் பொழிகின்ற கருமையான மேகத்தைக் குறித்தது.
அளக பாரம் --- கைந்தல் பாரம்.
வரி பரவு நீலமும் சிவந்து ---
வரி --- ரேகைகள் பரவியுள்ள.
நீலம் --- நீலோற்பல மலரை ஒத்த கண்கள்.
எழு சிகர(ம்) மாநிலம் குலுங்க---
எழு சிகரம் --- ஏழு மலைகள்.
மாநிலம் --- பெரிய நிலப்பரப்பு.
விசை ஊடே---
விசை --- வேகம்.
எழு கடலு(ம்) மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க இயல் மயிலின் மாறு கொண்டு அமர்ந்த வடிவேலா---
விழி படர்வு தோகை --- மயிலின் தோகையில் உள்ள பீலிகளில் கண்கள் நிறைந்து உள்ளன.
எம்பெருமான் மயினின் மீது கால்மாறி இருந்துகொள்ள, அந்த உயர்ந்த மயிலானது வெகுவேகமாகச் செல்லுகின்ற போது,அதன் ஆற்றலால்,உயர்ந்த மேருமலையும்,கடல்களும் கலங்கின.
"குசைநெகி ழாவெற்றி வேலோன், அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்டவாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்ததுமேரு; அடியிட எண்
திசைவரை தூள்பட்ட; அத்தூளின்வாரி திடர்பட்டதே". --- கந்தர் அலங்காரம்.
எம்பெருமான் அமர்ந்து செலுத்துகின்ற மயில்வாகனத்தின் தோகையானது அசைவதால் உண்டாகும் காற்றுப்பட்டு மகாமேரு மலை அசைவு பட்டது. மயிலானது அடி எடுத்துவைக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகள் தூள்பட்டன. அந்தத் தூளால் கடல் மேடாகி விட்டது.
"நவநதிகள் குமுகுகு என,வெற்புத் திரள் சுழல,
அகிலமுதல் எழுபுவனம் மெத்தத் திடுக்கிடவும்,
நவமணிகள் உரகன் உடல் கக்கத் துரத்திவரு ...முருகோனே!" --- பழநித் திருப்புகழ்.
"யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்தது என்று அயன் அஞ்சவே,
ஒருகோடி அண்டர் அண்டங்களும்,பாதாள
லோகமும்,பொற்குவடு உறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து, இரு
விசும்பில் பறக்க,விரிநீர்
வேலைசுவற, சுரர் நடுக்கங் கொள, சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்;
நககோடி கொண்டு அவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி,முராரி,திருமால்,
நாரணன்,கேசவன்,சீதரன்,தேவகீ
நந்தனன்,முகுந்தன் மருகன்,
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே. --- மயில் விருத்தம்.
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர் மகள் காலினும் பணிந்து புளிஞர் அறியாமலும் திரிந்து, புன(ம்) மீதே, புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து,புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே---
வள்ளிநாயகியார்வேடர் குல முறைப்படி தினைப்புனத்தில் தினைப்பயிரைக் காவல் செய்துகொண்டு இருக்கின்றாள். அகிலாண்ட நாயகியாகிய எம்பிராட்டியைக் கண்டார் முருகப் பெருமான். கண்ட அளவில், எப்பொழுதோ காவலாக வைத்த பழம்பொருள் ஒன்றினை இப்போது கண்டவன் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ந்தார். கண்ட அளவிலேயே காமம் மீதூர,எம்பிராட்டி காவல் புரிகின்ற பரணுக்கு அருகில் சென்றார் முருகப் பெருமான்.
மண்டலம் புகழும் தொல்சீர்
வள்ளிஅம் சிலம்பின்மேல் போய்ப்
பிண்டிஅம் தினையின் பைம் கூழ்ப்
பெரும் புனத்து இறைவி தன்னைக்
கண்டனன் குமரன், அம்மா!
கருதிய எல்லை தன்னில்
பண்டு ஒரு புடையில் வைத்த
பழம் பொருள் கிடைத்தவா போல்.
பூமஞ் சார் மின் கொல் என்னப்
பெருப்பினில் ஏனல்காக்கும்
காமஞ் சால் இளைமையாளைக்
கடம்பு அமர் காளை நோக்கித்
தூமஞ் சால் விரகச் செந்தீச்
சுட்டிடச் சோர்ந்து வெம்பி
ஏமஞ் சால்கின்ற நெஞ்சன்
இதணினுக்கு அணியன் சென்றான். --- கந்தபுராணம்.
வள்ளயாகியைக் கண்டவுடனே, "நீ என்னோடு வருவாயாக. என்னுடைய பதியாகிய திருத்தணிகையும், நீ இப்போது இருக்கும் ஊராகிய வள்ளிமலையும் வெகு தொலைவில் இல்லை. இரண்டரை காத தூரமே உள்ளது. எனது பதிக்கும், உனது பதிக்கும் உடையில் வயல் வெளிதான் உள்ளது என்றார் முருகப் பெருமான். மேலும், எமது ஊரிலே உள்ள சோலைகளில் உள்ள வண்டுகள், உமது ஊரிலே உள்ள சோலைகளில் வந்து தேனை நுகரும். அது எப்படி இருக்கும் என்றால், கண் ஆனது காது வரை சென்று மீள்வதை விடவும் மிகவும் குறுகி இருக்கும்" என்றார்.
"காந்தள்அம் போது கமழும்எம்
ஊர்வரைக் காவியில் தேன்
மாந்துஅளி பாய்ந்து, நும் ஊர்வரைச்
சோலை மது நுகரும்,
தேந்து அளி தூவும் சில் ஓதி
நல்லாய்! சென்று மீட்சி செவி
போந்து அளி வாட்கண் மறிவது
நீட்டிக்கும் பூங்குழலே".
தணிகைப்புராணத்தில் வரும் இப்பாடலின் பொருள் வருமாறு ----
பூவை அணிந்த கூந்தலை உடையவளே!காந்தள் செடியில் மலரும் பருவத்து அரும்பு கமழ்கின்ற எமது ஊரின் வரைக் கண் உள்ள காவிமலரிடத்துத் தேனை உண்ணுகின்ற வண்டினங்கள், பாய்தல் செய்து உமது ஊரினது வரையின் கண் உள்ள சோலையின் இடத்துத் தேனை நுகரா நிற்கும் (அத்துணை அணிமைத்து ஆதலால்) தேனின் துளிகளைச் சிந்துகின்ற சிலவாகிய கூந்தலினை உடைய நற்குணங்கள் அமைந்தவளே! அவ்விடம் யான் சென்று மீளும்பொழுதினும் ஒளியோடு கூடிய கருணையை உடைய கண்கள் காதின் இடத்துச் சென்று திரும்பும்பொழுது நெடும் பொழுதாகும் என்க.
இது அகத்துறையில் இடம் அணித்துக் கூறி வறுபுறுத்தல் எனப்படும். திருக்கோவையாரிலும் இக்கருத்து அமைந்த பாடல் ஒன்று உள்ளது.
வரும் குன்றம் ஒன்று உரித்தோன், தில்லை
அம்பலவன் மலயத்து
இரும் குன்றவாணர் இளம்கொடி
யே! இடர் எய்தல்; எம் ஊர்ப்
பரும் குன்ற மாளிகை நுண் கள
பத்து ஒளிபாய, நும் ஊர்க்
கரும் குன்றம், வெண் நிறக் கஞ்சுகம்
ஏய்க்கும் கனம் குழையே!
தலைவனது ஊரிலே உள்ள மலைபோன்ற மாளிகைகளில் உள்ள வெண்மை நிறமானது, தலைவியின் ஊரில் உள்ள கருமை மிகுந்த குன்றில் படுவதால் அவை வெண்ணிறமாக உள்ளன. கருமை நிறக் குன்றுகள் வெள்ளை நிறச் சட்டையை அணிந்தது போல உள்ளது. ஆக, தலைவனின் ஊர் தலைவியின் ஊருக்கு அருகியேலே உள்ளது.
வள்ளிநாயகியார் காவல் புரியும் தினைப்புனத்தில் எள்ள சோலையில் நின்று வள்ளிபிராட்டியை அடைய விரும்பிய முருகப் பெருமானின் இச்சை மேலிடவும், தான் மடல் ஏறப் போவதாக முருகப் பெருமான் வள்ளிநாயகியிடம் கூறுகின்றார்.
மடல் ஏறுதலாவது, பனைமரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.
பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவாரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் பிடித்திருப்பான். (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின்மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.
தலைவன் இவ்வாறு மடல் ஏறுவதால், தலைவனின் துன்பத்தை ஊரில் உள்ளவர்கள் பார்ப்பார்கள். அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயல்வார்கள். இதனால், தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் தலைவனின் காமத் துயரம் நீங்க ஒரே வழி இது என்றும் கருதப்படுகிறது. எனவே தான், மடல் என்பதைக் காமம் ஆகிய கடலை நீந்துவதற்கு உரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. திருவள்ளுவ நாயனாரும்,
"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி"
என்று அருளினார்.
மணம் இரண்டு வகைப்படும். ஒன்று களவு. மற்றொன்று கற்பு. பண்டைக்காலத்தில் களவு மணம் நிகழ்ந்தபின் கற்பு மணம் நிகழும். தமிழ்க் கடவுளாகிய முருகவேள் இந்த இருமணங்களுக்கு இலக்கியமாகவே கற்பு நெறியினாலே தெய்வயானை அம்மையாரையும், களவு நெறியிலே வள்ளியம்மையாரையும் மணம் செய்து கொண்டு அருள் புரிந்தனர்.
களவு என்பது பிறர்க்குரிய பொருளை வௌவுதல் போன்றது அல்ல. ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் ஊழ் கூட்டத் தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒருமைப்பட்டு அன்பு வெள்ளத்தில் திளைத்துப் புணர்தலே ஆகும். வேதத்தை மறை என்றது போல,இம்மணத்தை களவு என்று கூறுவர்.
"களவு எனப்படுவது யாது என வினவின்,
வலைகெழு முன்கை வளங்கெழு கூந்தலும்
முனைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைவுஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடமென வேறுமலைச் சாரல்
மானிளம் குழவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி மென்மனார் புலவர்".
இக்களவு மணம்,காந்தருவ மணம் என்றும் கூறப்படும்.
“மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லயாழ்த் துணைமையோர் இயல்பே”
என்று தொல்காப்பிய சூத்திரத்தினால் அறிக.
இனி மேற்கண்ட சூத்திரத்துள் மன்றல் எட்டு எனப்பட்டதால், அந்த எட்டு மணத்தின் தன்மையையும் சிறிது விளக்குவாம்.
பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மணம் எட்டாகப் பேசப் படுகின்றது. இவற்றுள்;
1. பிரமம்--- ஒத்த கோத்திரத்தவனாய் நாற்பத்தியெட்டு ஆண்டு இளமையில் கழித்த (பிரமசரிய விரதம் இருந்த) ஒருவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுடையவளாய்ப் பூப்பு எய்திய ஒருத்தியைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தா முன் அணிகலன் அணிப்பித்து தானமாகக் கொடுப்பது.
“அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை" --- திருமுருகாற்றுப்படை
2. பிரசாபத்தியம்--- உரிய கோத்திரம் உடைய தலைமகனை அழைத்து அவனுக்கு உரியார் தந்த பரிசத்திற்கு இரட்டி தம்மகட்குத் தந்து தீ முன் மணஞ்செய்து தருவது.
3. ஆரிடம்--- தாம் புரியும் வேள்வியாதி கருமங்களின் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு, பசு எருது இவைகளைப் பெற்றுக்கொண்டு மகளை மணஞ்செய்து தருவது.
4. தெய்வம்--- வேள்வியில் வந்த கன்னியைத் தக்க தலைமகனுக்குத் தருவது. அல்லது தம் மகளை வேள்வி வேட்பித்துத் தரும் ஆசானுக்குத் தக்கணையாகத் தருவது.
5. ஆசுரம்--- கொல் ஏறு கோடல், திரி பன்றி யெய்தல், வில்லேற்றுதல் செய்து வீரத்தால் மிக்க ஒருவனுக்கு மகளைத் தருதல். இவைகளில் கொல் ஏறு தழுவுதல் என்பது முரட்டு எருதை வீரத்தால் அடக்குதல். இது ஆயர்க்கு உரியது.
6. இராக்கதம்--- பெண் வீட்டாரிடம் தனது வலிமையைக் காட்டி அவர்கள் இணங்காதிருப்பினும் போராடித் தலைமகளை வலிதில் கொள்வது. (இது அரசர்க்கு உரியது).
7. பைசாசம்--- துயில்பவளை சென்று கூடுதல் பிசாச மணமாகும். இனி வயதில் மூத்தவளைப் புணர்தலும், இழிந்தவளைப் புணர்தலும் இதன் இனமாகும்.
8. காந்தருவம்--- கொடுப்பாரும் கேட்பாரும் இன்றி,ஒத்த ஆணும் ஒத்த பெண்ணும் பண்டை ஊழ் கூட்ட,தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒன்றக் கூடுவது ஆகும். இந்த காந்தருவ மணம் மிகவும் இனிமையானது என்க. அன்பின் பெருக்கினால் நிகழ்வது.
தான் களவு ஒழுக்கத்தினால் எய்திய தலைவியை, இடையில் எய்துதற்குக் காவல் முதலிய தடைகள் நேர்ந்த போது தலைவன் பெரிதும் வருந்துவன் தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறி வேண்டுவான் அவள் உள்ளம் இரங்கித் தலைவியைக் கூட்டி வைப்பாள். ஒருக்கால் அவ்வாறு செய்திலளாயின், இறுதியாக மடல் ஏறியாவது விரும்பிய கரும்பனைய காரிகையை அடைய முயலும்.
"ஏறிய மடல் திறம்,இளமை தீர்திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே". --- தொல்காப்பியம்.
"காய்சின வேல்அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ள மீனிழந்தார்,வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழிபிடித்து
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர்ப் பனைமடலே". --- திருக்கோவையார்.
"வாமத்து உமைமகிழ் வெங்கைபுரேசர் மணிவரைமேல்
தாமக்குவிமென் முலைமட்டுவார்குழல் தையல்நல்லாய்!
நாமக் கடலைக் கலம் இவர்ந்து ஏறுவர் நானிலத்தோர்
காமக் கடலை மடல்மா இவர்ந்து கடப்பர்களே". --- திருவெங்கைக்கோவை.
"மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியுஞ் சூடுப;
மறுகி னார்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமங்காழ்க் கொளினே".---குறுந்தொகை
எனவே முருகவேள் வள்ளியம்மையாரைக் களவு ஒழுக்கத்தினால் அடைந்து, இடையே தடை எய்தியதாகக் கொண்டு, தோழியிடம் போய் மடல் ஏறுவேன் என்று கூறியருளிய திருவிளையாடல் கந்தபுராணத்துள் வருமாறு காண்க.
"தோட்டின் மீதுசெல் விழியினாய்!
தோகையோடு என்னைக்
கூட்டிடாய் எனில்,கிழிதனில்
ஆங்கு அவள் கோலம்
தீட்டி,மாமடல் ஏறி, நும்
ஊர்தெரு அதனில்
ஓட்டுவேன்,இது நாளை யான்
செய்வது என்று உரைத்தான்".
“மதனன் விடு புஷ்பசர படலம் உடல் அத்தனையும்
மடல் எழுதி நிற்கும் அதிமோகத் தபோதனனும்” --- வேடிச்சி காவலன்வகுப்பு.
செண்பக அடவியினும் இதணினும் உயர்
சந்தன அடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும்,வளைஅணி ...... புதுவேயும்
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத
குங்கும அசல யுகளமும், மதுரித
இந்தள அம்ருத வசனமும்,முறுவலும்,...... அபிராம
இந்த்ர கோபமும்,மரகத வடிவமும்,
இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரும்
இந்த்ர நீலமும் மடல்இடை எழுதிய ...... பெருமாளே. --- (கொந்துவார்) திருப்புகழ்.
"கவளத்த வேழக் கவர்மணிப் போர்வைக் கடவுள்விழை
தவளத்த நீறென் பெருக்குந் தரித்துத் தகுமடன்மா
பவளத்த வாய்நுங்கை பண்பினைப் பாடிப் படங்கை தழீஇத்
துவளத் தடாய உளத்தாய் நும் ஊர்வயின் தூண்டுதுமே". --- தணிகைப் புராணம்.
வள்ளிநாயகியாரின் திருவடிகளில் முருகப் பெருமான் பணிந்த விதத்தை, "குறமகள் பாத சேகர" என்று திருப்புகழிலும்,"குறமின் பத சேகரனே”என்றும், "வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தராபரனே" என்றும் கந்தர் அநுபூதியில் அடிகளார் பாடியது காண்க.
கருத்துரை
முருகா! சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் அருள்.
No comments:
Post a Comment