அடியவர்க்கு அடிமை நாமே

 


 

அடியவர்க்கு அடிமை நாமே

-----

 

      சிவனடியார்களுக்குத் தன்னை அடிமைப் படுத்திசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி அருளியது "திருத்தொண்டத் தொகை" ஆகும். இத் திருப்பதிகத்தை ஓதி வந்தால்தீதுகள் நம்மைச் சாரமாட்டா என்பதால்இதனை "தீதிலாத் திருத்தொண்டத் தொகை" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

      ஐம்முகச் சிவம் ஆகிய சிவபரம்பொருளும்அறுமுகச் சிவம் ஆகிய முருகப் பெருமானும் வேறு அல்லர். மணியின் ஓளி போலும்பழத்தின் சுவை போலும்கண்ணின் மணி போலும் பிரித்து அறியமுடியாத அருட்பெருந் தன்மை உடையவை இரண்டுமே.

 

     பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாததுஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

"அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே".  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

                                                                        

     "சுசிமாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்,மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பொருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. இருவரும் வேறு அல்லர். உண்மையிலே சிவபெருமான் உணர,முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்". ---  தணிகைப் புராணம்.

 

            எனவேசுந்தரமூர்த்தி நாயனார் அருளிய "திருத்தொண்டத் தொகை" என்னும் திருப்பதிகத்தில் சொல்லப்பட்டு உள்ள சிவனடியார்களை முருகன் அடியார்களாகப் பாவித்துபிற அடியார்களையும் சேர்த்துஅவர்க்கு அடிமையாகத் தன்னை ஒப்புவித்துபாம்பன் சுவாமிகள் பாடிய திருப்பதிகத்தைக் காண்போம்.

 

"மறைமலி காழியோன்,நாவுக்குஅரையர்,சேம

            மதிகொண்ட நாவலூரர்,

பொறைமலி சண்டி,பூசல்,நமிநந்தி,முருகர்,

            புகழுடைத் தண்டிஅடிகள்,

நிறைமதி நீலநக்கர்,சோமாசி,கலயர்,

            நேய அப்பூதி அடிகள்

அறிவொடுநேடி நின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".               1.                 

 

இதன் பொருள் ---

 

            வேதம் முழுது உணர்ந்துவேதத்தைத் தமிழால் செய்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்திருநாவுக்கரசு நாயனார்பேரின்ப அறிவு கொண்ட சுந்தரமூர்த்தி நாயனார்பெருமைமிகு சண்டிகேசுவர நாயனார்பூசலார் நாயனார்நமிநந்தி அடிகள்முருக நாயனார்புகழுடைய தண்டியடிகள்நிறையறிவுடைய நீலநக்க நாயனார்சோமாசிமாற நாயனார்கலய நாயனார்அன்புள்ள அப்பூதியடிகள் ஆகிய அறிவுடன் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் ஆகிய முருகப் பெருமானுக்கு அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

      (குக + ஈசன் = குகேசன். அடியவர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருக்கும் ஈசன் ஆகிய குகப் பெருமாள்).

 

 

"புகழ்த்துணை,மானி,செங்கட்சோழர்,உயர்வுஆய

            பொறை இடங்கழியர்,கம்பர்,

புகழ்க் கழற்சிங்கர்,தூயநேசர்,மெய்ப்பொருளர்,

            புகழ்ச் சோழன்,மலையன்,ஒண்மை

திகழ் சிறப்புலி,குறும்பர்,கணநாதர்,திவ்விய

            திருமூலர்,விறல் மிண்டனார்

அகம் அதில் நேடி நின்ற அருள் ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     2.           

 

இதன் பொருள் ---

 

     புகழ்த்துணை நாயனார்மங்கையர்க்கரசியார்செங்கட்சோழ நாயனார்மேலான பொறுமையுடைய இடங்கழி நாயனார்,கலிக்கம்ப நாயனார்புகழுடைய காடவர்கோன் கழற்சிங்க நாயனார்தூய அன்புடைய நேச நாயனார்மெய்ப்பொருள் நாயனார்புகழ்ச் சோழ நாயனார்சேரமான் பெருமாள் நாயனார்சிறப்புலி நாயானார்பெருமிழலைக் குறும்ப நாயனார்கணநாத நாயனார்அழகிய திருமூல நாயனார்விறல்மிண்ட நாயனார் முதலியோர் தமது உள்ளத்தில் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

      இறைவனைப் புறத்தில் மட்டுமே தேடி அலையாமல்உள்ளத்திலேயே நாடி இருப்பவரே உண்மை அடியவர்கள் என்பதால், "அகம் அதில் நாடி நின்ற" என்றார். "திருமாலும் நான்முகனும் தேடித் தேட ஓ(ண்)ணாத் தேவனை என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்" என்று அப்பர் பெருமான் அருளியது காண்க.

 

"நரசிங்க முனையர்,மூர்த்தி,ஏனாதி,கலியர்,

            நலன் நின்ற நெடுமாறனார்,

வரம் விஞ்சு சடையர்,கூற்றர்,அமர்நீதி,அன்பின்

            மதர் சேர் ஐஅடிகள் கோனார்,

பரம்விஞ்சு சத்தி,மூர்க்கர்,ஆனாயர்,உருத்ர

            பசுபதிப் பெயரர்,பரிவால்

அரன் என்று நேடி நின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     3.

 

     நரசிங்கமுனையரைய நாயனார்மூர்த்தி நாயனார்ஏனாதிநாத நாயனார்கலிய நாயனார்வரம்மிகு சடைய நாயனார்கூற்றுவ நாயனார்அமர்நீதி நாயனார்அன்பு மிகுந்த ஐயடிகள் காடவர் கோன் நாயனார்மேன்மைமிகு சத்தி நாயனார்மூர்க்க நாயனார்ஆனாய நாயனார்உருத்திர பசுபதி நாயனார் முதலியோர் அன்பினால் சிவபெருமான் என்று தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியார்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

      (சிவபரம்பொருளாகப் பாவிப்பவர்க்கு சிவமாகவும்குகப் பெருமாளாகப் பாவிப்பவர்க்குகுகேசனாகவும், அவரவர் விரும்பி வழிபடும் வடிவில் எழுந்தருளுவது இறைவனுடைய எளிவந்த தன்மை ஆகும்.  "எனைத் தடுத்து ஆட்கொள்ள என் தனது உள்ளம் மேவிய வடிவு உறும் வேலவ" என்று கந்த சட்டி கவசத்திலும் குறிப்பிட்டு உள்ளது காண்க. "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண்,அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" என்று "மலர்மிசை ஏகினான்என்னும் திருக்குறளுக்கு வியாக்கியானம் தந்துள்ள பரிமேலழகர் வாக்கையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

 

"இயற்பகை,நாளைப் போவார்,வாய்இல்லார்,மாறர்,

            இசைஞானி,கண்ணப்பனார்,

தயைப் புகழ் திருக்குறிப்பர்,கலிக்காமர்,காரி,

            தாயர்,அருள் கொள் கோட்புலி,

கயல்கணம்,பேயர்,நாகை அதிபத்தர்,மானக்

            கஞ்சாறர்,எறிபத்தனார்,

அயிர்ப்புஅற நேடி நின்ற அருள் ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     4.     

 

இதன் பொருள் ---

 

     இயற்பகை நாயனார்திருநாளைப் போவார் நாயனார்வாயிலார் நாயனார்சோமாசிமாற நாயனார்இசைஞானியார்கண்ணப்ப நாயனார்அன்புடைய புகழுக்கு உரிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார்கலிக்காம நாயனார்காரி நாயனார்அரிவாட்டாய நாயனார்அருள்கொண்ட கோட்புலி நாயனார்கயல்மீன் போலும் கண்களுடைய காரைக்கால் அம்மையார்நாகையைச் சேர்ந்த அதிபத்த நாயனார்மானக்கஞ்சாற நாயனார்எறிபத்த நாயனார் முதலியோர் இதுவே பரம்பொருளை அடையும் பத்தித் திறம் என்று ஐயம் அறத் தெளிந்துதொண்டு நெறியில் நின்று தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

 

"செருத்துணை,சிறுத்தொண்டு அண்ணல்,கிழநீக்கு நல்ல

            திருநீலகண்டர்,அருளே

பெருத்திட விளங்கு தண்டிலே வல்ல பாணர்,

            பிழை அறு குலச்சிறை,நெடுந்

தருக்குஉறு கணம்புலார்,மாமுனை அடுவார்ஏசுஇல்

            சாக்கியர்,உயர்ந்த அன்பால்

அரிப்புஅற நேடி நின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     5.

 

இதன் பொருள் ---

 

     செருத்துணை நாயனார்சிறுத்தொண்ட நாயனார் என்னும் பெரியார்முதுமை நீங்கிய நல்ல திருநீலகண்டக் குயவ நாயனார்அருள் மிகுந்திருக்க விளங்கும் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்குற்றமற்ற குலச்சிறை நாயனார்பெருஞ்செருக்குடைய கணம்புல்ல நாயனார்சிறந்த முனைஅடுவார் நாயனார்கெடுதல் இல்லாத சாக்கிய நாயனார்ஆகியோர் தமது உயர்ந்த அன்பினால்உயிர்க் குற்றம் அறத் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

 

"பரமனைப் பாடுவார்,எந்நாளும் புகழ்ந்து

            பணிபவர்,மனத்தை அவனில்

மருவ வைப்பவர்கள்,ஆரூர் உதயம் செய் அன்பர்,

            வழுது அற்றபுலவர்,அறவோர்,

முருகு உடை மேனி தீண்டுபவர்,சாரும் அடிகள்,

            முழுநீறு பூசு முனிவர்,

அரணொடுநேடிநின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     6.

 

இதன் பொருள் ---

 

     பரமனையே பாடுவார்எந்நாளும் புகழ்ந்து பத்தராய்ப் பணிவார்மனத்தை இறைவன்பால் வைத்தவர் எனப்படும் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்திருவாரூர்ப் பிறந்தார்பொய்யில்லாப் புலவர்கள்அறவோர்கள்அழகுடைய திருமேனியைத் தீண்டுபவர் என்று கூறப்படும் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்அப்பாலும் அடிசார்ந்தார்,முழுநீறு பூசிய முனிவர் வலிமையுடன் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

      வழுது --- குற்றம். அரண் --- வலிமை. மனவலிமை. மனத்தில் வலிமை மிக்கு இருந்தால் தொண்டு நெறியில் நிலைத்து இருக்கமுடியும்.

 

"சேந்தனார்,கண்டராதித்தர்,அம் சேதிராயர்,

            திருவாலியமுதர்,அமுதம்

மாந்து புருடோத்தமப் பேராளர்,கருவூரர்,

            வாய்மை வேணாடர்,ஆர்வம்

தீந்தகாடவர்கள் கோன்,நல திருவாதவூரர்,

            திருமாளிகைத் தேவர்,ஒன்று

ஆம்தனையும் நேடி நின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                           7

 

இதன் பொருள் ---

 

     சேந்தனார்கண்டராதித்தர்அழகிய சேதிராயர்திருவாலியமுதர்அமுதம் உண்ணும் புருடோத்தமர் என்னும் பெரியார்கருவூர்ச் சித்தர்வாய்மை பேசும் வேணாட்டு அடிகள்ஆசையற்ற காடவர்கள் கோன்நல்ல திருவாதவூரடிகள் என்னும் மணிவாசகப் பெருமான்திருமாளிகைத் தேவர்ஆகியோர் பெருமானது திருவடியைச் சேரும்வரையும் தேடி நின்றவர் ஆவர்இந்த அருள் நிறைந்த குகேசன் அடியவர்களுக்கு அடிமை நாமே ஆவோம்.

 

      ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களை வைத்துப் பாடப்பட்டது இந்தப் பாடல்.

 

"பிடித்திடு தண்டு,குந்தம்,சுரிகை,முச்சூலம்,

            பிரபாவமோடுஇயங்க,

மடக்கொடி வள்ளிபங்கன்,மணநீறு அணிந்து

            மயில் ஏறும் எங்கள் பரமன்

நடித்திடின்,அகத்தின் உள்ளே நடுஆன சண்டன்

            நடம் ஆட வருவது ஏது?என்று

அடிக்கடி நேடி நின்ற அருள்ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     8.

 

இதன் பொருள் ---

 

     தமது திருக்கையில் பிடித்துள்ள தண்டாயுதம்குந்தம்உடைவாள்முச்சூலம் ஆகியவை ஒளி வீசிக்கொண்டிருக்கஇளங்கொடி போன்ற வள்ளியம்மையின் மீது பெருவிருப்பம் கொண்டுள்ளவனும்மணம் கமழும் திருநீறு அணிந்து மயில்வாகனத்தில் ஏறுகின்றவனும் ஆகிய எங்கள் முருகக் கடவுள்தங்களதுஉள்ளத்தில் திருநடனம் புரிவானாயின்நடுநிலை வகிப்பவன் என்று கூறப்படும் இயமன் என்பவன் நமது பக்கம் நடமாட்டம் செய்வது ஏது என்று உணர்ந்து,கணம்தோறும் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்களுக்கு அடிமை நாமே ஆவோம்.

 

 

"முனைதரும் சூரனோடு அன்று அமர் செய்து கொண்ட

            முருகவேள்,எங்கள் பரமன்,

பனிஉறு கடம்புநீலம் முடிமீது அணிந்து,

            பலகாலும் நெஞ்சின் நடுவே

கனைகழல் சிலம்ப நாடகம் செய்யின்,வந்து

            கவிபாதகங்கள் இலை என்று

அனுதினம் நேடி நின்ற அருள் ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே".                     9.

 

இதன் பொருள் ---

 

     தன்னோடு பகைகொண்ட சூரபன்மனுடன் அன்று போர் செய்த முருகவேள் ஆன எங்கள் இறைவன்,குளிர்ச்சி பொருந்திய கடப்பமலர் மற்றும் நீலோற்பல மலர்களால் ஆன மாலைகைளத் தனது கருத்த முடிமீது அணிந்து,எந்நேரமும் ஒலித்துக் கொண்டு இருக்கும் சிலம்பு திருவடிகளில் அசையத் தமது உள்ளத்தின் நடுவில் திருநடனம் புரிவானாயின்தம்மிடத்து வந்து குவிகின்ற பாதகங்கள் எவையும் இல்லையாகும்என்று அனுதினம் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே ஆவோம்.

 

"கொடுநிழல் அவிய,வந்த குறை ஓவ,இன்பு

            குறையாத பேறும் உறவே,

வடுஅறுகவிகள் சொன்ன அருணகிரி என்றும்

            மறவாது கொண்ட சரணம்

குடிகொள,உள் அஞ்சி அஞ்சி இவை பாடுகின்ற

            குமர குருதாசன் நாளும்

அடி அடைய நேடி நிற்கும் அருள் ஆர் குகேசன்

            அடியவர்க்கு அடிமை நாமே.                      10.

 

இதன் பொருள் ---

 

     உயிர்களுக்குப் பிறவி என்னும் கொடிய நோய் அவிந்து ஒழியும்படியாகவும்பிறவிகள் தோறும் வந்து சேர்ந்த குறைகள் இல்லாது ஒழியும்படியாகவும்இன்பம் என்பது சற்றும் குறையாதபடிக்கு பேறுகள் வந்து வாய்க்கும்படியாகவும் குற்றமற்ற (திருப்புகழ் முதலாகிய) பாடல்களைப் பாடி அருளிய அருணகிரிநாத சுவாமிகள் என்றும் மறவாது தமது உள்ளத்திலே கொண்டுள்ள முருகப் பெருமானுடைய திருவடிகள்தமது உள்ளத்திலும் குடிகொள்ளவேண்டும் என்றுஉள்ளத்தால் அஞ்சி அஞ்சி இப்பாடல்களைப் பாடுகின்ற குமரகுருதாசன் என்னும் அடியவன் ஆகிய நாமும்நாளும் திருவடியை அடைய நாடி நிற்கின்றஅருள்நிறைந்த குகப் பெருமாளின் அடியவர்களுக்கு அடிமை ஆவோம்.

 

     "நிழல்" என்னும் சொல்லுக்குஇருள்பேய் என்றும் பொருள்கள் உண்டு. இருள் என்பது பிறவித் துன்பத்தைக் குறிக்கும். எனவே, "கொடுநிழல் அவிய" என்றார்.

 

     ஓத ஓத உள்ளத்தில் இனிக்கின்ற இந்த அருட்பாடல்களைப் பாடி வழிபட்டு உய்வோமாக.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...