நாயோட்டு மந்திரம்

 


நாயோட்டு மந்திரம்

-----

 

     நமச்சிவாய வாழ்கநாதன்தாள் வாழ்க’ என்று தொடங்கும் திருவாசகத்தில் முதன்முதலாக வருகின்ற "சிவபுராணம்""நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தைநாதன் ஆகிய இறைவன் தாளுக்கும் முன்பாக முதன்மைப்படுத்தித் தொடக்கச் சொல்லாக வைக்கிறது. "நமச்சிவாயஎன்பது பஞ்சாக்கரம் (பஞ்சாட்சரம்) என்று சொல்லப்படும் திருஐந்தெழுத்து. நமச்சிவாய என்னும் சொல்லில் ஆறு எழுத்துக்கள் வருகின்றதே என்று தோன்றும். "நம" பதத்திற்கும், "சிவாய" என்னும் பதத்திற்கும் இடையில் சந்தியாக வருகின்ற ஒற்றெழுத்து கணக்கில் கொள்ளப்படாது. ஒற்று வந்தால் அது பெயர். ஒற்று நீக்கினால் அது மந்திரம்.  எழுத்து எண்ணிப் படித்தல் என்னும்போதும்ஒற்றெழுத்துக்களை நீக்கி எண்ணுவதே மரபு ஆகும். இதை அறியாத சிலர்அன்பு என்பது மூன்றெழுத்து. அம்மா என்புத மூன்றெழுத்து என்பார்கள். மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் என்று வந்த திரைப் பாடலைக் காவனித்தாலும்அந்த மூன்றெழுத்து, "கடமை" என்னும் சொல்லையே குறிக்கும். கடமை என்னும் சொல்லில் ஒற்றெழுத்து இல்லையாதலால்அது மூறெழுத்தே ஆகும்.

 

     சைவர்களுக்குச் சாதனமாக அமைந்தவைதிருநீறுதிருவைந்தெழுத்துஉருத்திராக்கம் என்னும் மூன்று ஆகும். திருவைந்தெழுத்து ஓதுதல் குறித்துதிருமுறைகளிலும்மெய்கண்ட சாத்திரங்களிலும் தெளிவாகவே விளக்கப்பட்டு உள்ளது. 

 

     உயிர்களுக்கு நல்ல துணை ஆவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து என்பதால் "நல்துணை ஆவது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். அது நல்ல துணைதான் என்பது அவரது வாழ்வில் மெய்ப்பிக்கப்பட்டது. உள்ளத்தில் வஞ்சகம் ஏதும் இல்லாமல் உண்மைப் பத்தி உணர்வுடன் ஓதி வந்தால்இயமனையும் உதைத்துக் காப்பது "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்து எனக் காட்ட, "வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்தவந்த கூற்றுஅஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே" என்று பாடினார் திருஞானசம்பந்தர். உயிருக்கு அரணாக இருந்து காப்பது திருவைந்தெழுத்து என்கின்றார் நமது கருமூலம் நீக்க வந்த திருமூலநாயனார்.

 

"கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக்

கரணங்கள் விட்டு உயிர் தான்எழும் போதும்,

மரணம் கை வந்து உயிர் மாற்றிடும் போதும்,

அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்தாமே"  --- திருமந்திரம்.

         

இதன் பொருள் ---

 

     "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்னும் சத்திய வாசகத்தின்படிக்குபிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை அடைந்த மக்களின் உடம்பைஅவரதுஉறவினரும்ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அந்த எரியானதுஏழுவகையான கதிர்கள் மிகுந்து தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் இந்தப் பருவுடம்பில் எஞ்சி நின்ற "தனஞ்சயன்என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவன. அவையும் நீங்க,உயிர் நுண்ணுடலோடு வினைக்கு ஈடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்பு வரினும்உயிர் செய்த பெருந் தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே ஆகும்.

 

     இந்த திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒரு பொருள் உண்டு. இதனாலேயே இதனை "அஞ்சுபதம்" என்றும் சொல்லுவார்கள்.

 

"ஈசன்அருள் ஆவி எழில்ஆர் திரோதமலம்

ஆசுஇல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம்".    --- உண்மை விளக்கம்.

                     

இதன் பொருள் ---

 

     ஈசன் அருள் ஆவி -- சிவனும் திருவருளும் உயிரும் எழிலார் திரோதம் -- எழுச்சியுள்ள மறைத்தல் (திரோபவம் அல்லது திரோதம்) சத்தியும்மலம் -- மூல மலமும்ஆசு இல்  --- குற்றமில்லாத எழுத்து அஞ்சின் -- திருவைந்தெழுத்தின் அடைவு ஆம் -- பொருள்களாம்.

 

"சி" என்னும் எழுத்துசிவனைக் குறிக்கும்.

"வ" என்னும் எழுத்துதிருவருளாகிய சத்தியைக் குறிக்கும்.

"ய" என்னும் எழுத்துஉயிர்களைக் குறிக்கும்.

"ந" என்னும் எழுத்துதிரோதான சத்தி என்னும் மறைப்பு ஆற்றலைக் குறிக்கும்.

"ம" என்னும் எழுத்துஉயிர்களைப் பற்றி உள்ள மூலமலம் ஆகிய ஆணவத்தைக் குறிக்கும்.

 

இவ்வாறு திருவைந்தெழுத்து நிற்கும் முறையைக் காட்டிஅதனை ஓதும் முறையைப் பின்வருமாறு காட்டுகின்றார் இந்நூலின் ஆசிரியர்.

 

சிவனருள் ஆவி திரோதம்மலம் ஐந்தும்

அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் --- இவன்நின்று

நம்முதலா ஓதில் அருள் நாடாது,நாடும் அருள்

சிம்முதலா ஓதுநீ சென்று.    --- உண்மை விளக்கம்.

 

இதன் பொருள் --- 

 

சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் --  மேற்கூறியபடிசிவன்,திருவருள்,உயிர்மறைத்தல் (திரோபவம் அல்லது திரோதம்) சத்தியும்மூல மலமும்குற்றமில்லாத திருவைந்தெழுத்தின் பொருள்களாம்.இவன் நின்று --- சாதகன் ஆகிய ஆன்மா உலகியலில் நின்றுகொண்டு, "ந" முதலா ஓதில் -- "ந"காரத்தை முதலாக வைத்து ஓதும் முறையை மேற்கொண்டால்அருள் நாடாது -- அவனது உணர்வில் திருவருள் வெளிப்படாது.(ஆதலால்)நீ -- திருவருளைத் தலைப்பட விரும்புகின்ற நீசென்று -- உலகியலின் நீங்கிச் சென்று, (வீட்டு நெறியில் உன் உணர்வை முழுதும் ஈடுபடுத்தி நின்று)"சி" முதலா ஓது -- "சி"காரத்தை முதலாக வைத்து ஓதுவாயாக.அருள் நாடும் --  அப்போது திருவருள் பாசமாம் பற்றை அறுத்து உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும்.

 

     எனவேஓதும் முறையில் "நமசிவாய" என்பதைக் கொள்ளமால், "சிவாயநம" என்பதைஉபதேசமாகப் பெற்று ஓதி வருவது மரபு. இந்த ஐந்தெழுத்துக்களுமே சிவனுக்கு ஐந்து முகங்களாக அமைந்தன. இவை அல்லமால்,அதோமுகம் என்றும் ஒன்று உண்டு. ஐந்து முகங்களோடுஅதோமுகம் ஆகிய ஆறாவது முகத்தில் இருந்து தோன்றிய தீப்பொறிகளில் இருந்துஆறுதிருமுகங்களைக் கொண்டவராக உருவானவர்தான் முருகப் பெருமான். இது, "ஓம்நமச்சிவாய" அல்லது, "ஓம்சிவாயநம" எனப்படும். எனவேபஞ்சாட்சர மந்திரத்தைத் தனியாகவும் ஓதலாம். ஒங்காரம் சேர்த்தும் ஓதலாம் என்னும் வழக்கம் உண்டாயிற்று.

 

     இந்த பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழுத்துஐந்து வகைகளாகப் பின்வருமாறு வகுத்துக் கொள்ளப்பட்டது. 

 

"நமசிவாய"என்பது தூல ஐந்தெழுத்து;

 "சிவாயநமஎன்பது சூக்கும அல்லது நுண் ஐந்தெழுத்து,

 "சிவாய"என்பது மீநுண் அல்லது அதிசூக்கும ஐந்தெழுத்து,

 "சிவ"என்பது காரண ஐந்தெழுத்து,

 "சி"என்பது பெருங்காரண அல்லது மகாகாரண ஐந்தெழுத்து.

 

     நமசிவாய’ என்னும் தூல ஐந்தெழுத்துமலங்களை முன்னால் வைத்துச் சிவனையும் அருளையும் இடையில் வைத்து உயிரைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது. சிவாயநமஎன்னும் நுண் ஐந்தெழுத்தோசிவனையும் அருளையும் முன்னால் வைத்துஉயிரை நடுவில் வைத்துமலங்களைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது. ஆகவே நமசிவாயஎன்னும் பரு ஐந்தெழுத்தைக் காட்டிலும் சிவாயநம’ என்னும் நுண் ஐந்தெழுத்தே சிறந்தது.

 

"சிவாயநம"என்றும் நுண் ஐந்தெழுத்தை விடவும் "சிவாயஎன்னும் மீநுண் ஐந்தெழுத்துச் சிறப்பு.அது ’, ‘’ என்னும் மலங்களை முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறது. இப்போது இருப்பது சிவனும் அருளும் உயிரும்தான்."சிவாய"என்னும் மீநுண் ஐந்தெழுத்தைக் காட்டிலும் "சிவஎன்னும் காரண ஐந்தெழுத்து இன்னும் சிறப்பு. 

 

எனவே

 

"சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்,

சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்அடங்க,

சிவசிவ ஆயத் தெளிவின் உள்ளார்கள்,

சிவசிவம் ஆகும் திருவருள் ஆமே."

 

என்றார் திருமூல நாயனார்.

 

     பஞ்சாட்சரத்தில்ஆன்ம எழுத்து ஆகிய "ய"காரத்தையும்மல எழுத்தாகிய "ம"காரத்தையும் நீக்கிதிரோபவ எழுத்தாகிய "ந"காரத்தையும் நீக்கிஎஞ்சிய இரண்டு எழுத்துக்களை மட்டுமே கணித்தல் சிறப்பு உடையது என்பதை அறியமாட்டாதவர்கள்பேசும் வன்மை இருந்தும் ஊமைகளே ஆவர். அம் மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள்அதனால் அடங்கஆன்மபோதமும் அடங்கச் சிவம் ஆவதற்கு உரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.

 

     இவ்வாறு செபித்து வந்தால்உயிர் தன்னை மறந்து அருளுக்குள் ஒடுங்கிவிட்டது என்பதால்."சிவ"என்னும் காரண ஐந்தெழுத்தைவிட"சி"என்னும் பெருங்காரண ஐந்தெழுத்தே உச்சம் ஆகி நிற்கும். இங்கே உயிர்,தான் என்பது அற்றுப்போய்ச் சிவத்தில் ஒடுங்கிசிவம் மட்டுமே விளங்குகின்றது.

 

     "சி"என்னும் இந்தப் பெருங்காரண ஐந்தெழுத்தை "நாயோட்டு மந்திரம்"என்கிறார் திருமூலர். நாயை ஒட்டும்போது சொல்லப்படுவது, "சீ" என நெட்டெழுத்தாய் இருந்தாலும்அதுவே அதனைக் குறிக்கும் சொல்லாகாமல்பொருளைக் குறிப்பால் உணர்த்துவதால்அது "சி" என்னும் குற்றெழுத்தையே குறித்ததானது. மனப் பாரிப்பு ஏதும் இல்லாமல் ஒடுங்கி நிற்கும் நிலைதான்நாயை ஓட்டுகின்ற நிலை.

 

நாய்ஓட்டும் மந்திரம் நான்மறை நால்வேதம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதஅந்தம் ஆம்சோதி;

நாய்ஓட்டும் மந்திரம் நாம் அறியோமே.    --- திருமந்திரம்.

 

     "மகாகாரண பஞ்சாக்கரம் ஆகிய "சி" என்னும் ஓர் எழுத்தேநான்கு வேதப் பொருள்களாக விரிந்தது. அது இறைவனின் இருப்பிடம். தத்துவாதீதமான ஒளிப் பொருளும் அதுவே. ஆகவேசித்தர்கள் "நாய் ஓட்டும் மந்திரம்" நகைச்சுவையாக மறத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தின் பொருளைப் பிறர் இன்னது என்று அறிதல் ஆகாது" என்பது இப்பாடலின் பொருள்."சி"வாய் திறந்து பேசாத மந்திரம்எனவே ஊமை எழுத்துஎனப்படும். பேசா எழுத்து என்றும் சொல்லப்படும்.

 

     சூக்கும பஞ்சாட்சரக் (சிவாயநம) கணிப்பினால்உள்ளமானது உலகியிலில் இருந்து நீங்கிசிவன்பால் செல்லும். அதனால் ஆன்மா சிவனுக்கு ஆளாகிவினையாகிய தீங்கில் இருந்து நீங்கும். பிறகு அதிசூக்கும பஞ்சாட்சரக் (சிவாய) கணிப்பினால்ஆன்மாவானது தன்னது அறிவு நீங்கப் பெறும். அப்பால் காரணப் பஞ்சாட்சரக் (சிவ) கணிப்பினால்ஆன்ம அறிவு நீங்கிசிவ அறிவு பெற்றுபிறப்பாகிய தீங்கில் இருந்து நீங்கும். அப்பால்மகாகாரணப் பஞ்சாட்சரக் (சி) கணிப்பினால்ஆன்மாவானது சிவானந்தம் என்னும் பேரானந்தக் கடலில் மூழ்கி இருக்கும். அது அலைகள் இல்லாத கடல் ஆகும். ஆகவேஎந்நேரம் மூழ்கி இருந்தாலும்சலிப்பு இராது.  

 

"அஞ்சுஎழுத்தி லேபிறந்துஅஞ்சுஎழுத்தி லேவளர்ந்து,

அஞ்சுஎழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்சுஎழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லிரேல்

அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!"

 

என்று பாடுகிறார் சிவவாக்கியர். 

 

இதன் பொருள் --- 

 

     பஞ்சாட்சரத்தையே இடைவிடாமல் செபித்துக் கொண்டு இருக்கின்ற பஞ்சபூத ஜென்மிகள் ஆகிய பாவிகளே! நீங்கள் அந்தப் பஞ்சாட்சரம் காரணமாகவே பிறந்தீர்கள். அதிலேயே வளர்ந்தீர்கள். இருந்தும்அஞ்செழுத்தில் ஒரு முக்கிய எழுத்தாகிய ("சி" என்னும்) ஓர் எழுத்தை அறிந்து துதி செய்யவில்லை. அவ்வாறு தெரிந்து துதி செய்ய வல்லவர்களானால்எல்லா உயிர்களுக்கும் தலைவன் ஆகிய பரம்பொருள், "அஞ்சாதேஅஞ்சாதே" என்று அசரீரியாக உங்களுக்கு அபயம் தந்துபிறகு வெளிவந்து திருச்சிற்றம்பலத்திலே திருநடனத்தை உங்களுக்குக் காட்டுவான்.

 

     தூல பஞ்சாட்சரத்தில், "ந"காரம் மண்ணையும், "ம"காரம் நீரையும், "சி"காரம் நெருப்பையும், "வ"காரம் வாயுவையும், "ய"காரம் வானையும் என ஐந்துபூதங்களை உணர்த்துவன. எனவே, "ஐந்துவகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆன யாக்கை" என்றார் பிற அருளாளரும். எனவே, "அஞ்செழுத்திலே பிறந்துவளர்ந்து" என்றார். பிறந்த உயிர்கள் தமது பாவங்களைத் தொலைத்து நிவிர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு ஓதவேண்டியது பஞ்சாட்சரம் என்பதால், "அஞ்செழுத்தை ஓதுகின்ற" என்றும்ஓதியும் பாவம் தீராமையால், "பாவிகாள்" என்றும் சொன்னார். பஞ்சாட்சரத்தில் முக்கியமான எழுத்தாகவும்விட்டும் விடாத எழுத்தாகவும், "நாயோட்டு மந்திரம்" என்றும் சொல்லப்படுகின்ற ஓர் எழுத்தின் உண்மை அறியாமையால், "அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்" என்றார். அந்த ஓர் எழுத்தை அறிந்து கூறுகின்றவர்க்குஇறைவன் திருநடன தரிசனம் கிடைக்கும் என்பதால், "அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே" என்றார்.

 

     "நாயோட்டு மந்திரம்" என்பதுநாயை ஓட்டுவது அல்ல. நாயின் தன்மையை ஓட்டுவது என்று பொருள்படும். நாயின் தன்மையாவது எப்பொழுதும் குரைப்பது. ஞானநெறியில் மனம் அடங்கி நில்லாது பேசும் பேச்செல்லாம் நாயின் குரைப்பைப் போன்றவை. அப்படிப்பட்ட பேச்சாகிய குரைப்பினை ஓட்டுகிற மந்திரம் இது. பேச்சை ஒழித்து மவுனத்தை உண்டாக்குவது என்ற பொருளில் இதனை "நாயோட்டு மந்திரம்" என்றனர்.

 

     நாய் என்பது மனத்தைக் குறிக்கும். "நாய்க்கு நிற்க நேரம் இல்லை" என்பார்கள். அதுபோமனமானது சற்றும் சலிப்பு இல்லாமல் ஏதாவது ஒரு எண்ணத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும். இதை "மனோவியாபாரம்" என்பார்கள். நாய் ஓய்வு ஓழிவு இல்லாமல் இங்கும் அங்குமாக உழன்றுகொண்டே இருக்கும். நல்லதைக் கண்டாலும் குரைக்கும் அல்லதைக் கண்டாலும் குரைக்கும். அதன் தொழிலே அதுதான். பகல் காலத்தில் சந்தடி நிறைய உள்ளதால்நாயின் குரைப்பு அதிகமாகக் கேட்காது. என்பதால்நாய் குரைப்பத்தில்லை என்று கொள்ளக் கூடாது. இரவில் எல்லாம் அடங்கிய பின்பு நாயின் குரைத்தல் ஒலி நன்றாகவே கேட்கும். எல்லாம் ஒடுங்கிய போதிலும்மனமானது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே,மனம் என்னும் நாயின் குரைப்பை அடக்கிஅதனைப் பக்குவப்படுத்த வேண்டி உள்ளது. நாயானதுகண்டதை எல்லாம் தேடித் தின்னும். 

 

"நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்".

 

"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்".

 

"நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்".

 

என்பன நாயைப் பற்றி வழங்கும் பழமொழிகள். அதுபோலவேமனமானதுஎண்ணாதஎண்ணக் கூடாத எண்ணங்களில் உழன்று கொண்டே இருக்கும்.

 

     நாயினது இயல்பு குறித்துநாலடியார் கூறுகின்ற செய்தி ஒன்று உண்டு.

 

"அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்

செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;

கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்

செவ்விய கொளல்தேற்றா தாங்கு".

 

இதன் பொருள் ---

 

     இறைச்சியை எடுத்துக் கொண்டுவீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்குபால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோலஅழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாத பெரியோர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது,நல்லறிவு இல்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.

 

"குக்கலைப் பிடித்து நாவிக் 

     கூண்டினில் அடைத்து வைத்து,

மிக்கவே மஞ்சள் பூசி,

     மிகுமணம் செய்தாலும் தான்,

அக்குலம் வேறதாமோ?

     அதனிடம் புனுகு உண்டாமோ?

குக்கலே குக்கல் அல்லால்,

     குலம் தனில் சிறந்ததாமோ?"

 

என்கின்றது"விவேக சிந்தாமணி"

 

     தெருநாயைப் பிடித்து புனுகு பூனையை அடைக்கவேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து,அதற்குத் தினந்தோறும் மேன்மையான மஞ்சளைப் பூசி,மிக்க நறுமணமுடையதாக ஆக்க முயற்சித்தாலும்,அந் நாயானது தனது நிலையில் இருந்து மாறி,புனுகுப் பூனையாகஆகிவிடுமோஅதனிடத்தில் மணம் மிகுந்த வாசனைப் பொருளான புனுகுதான் உண்டாகுமா?  நாய் என்றுமே நாய்தான்அது என்றும் உயர்ந்த புனுகுப் பூனை ஆகாது. 

 

     நாயினது வால் இயல்பகாவே கோணலாக இருக்கும். அதை நேராக்க யாராலும் முடியாது. அதுபோகீழ்மக்கள் மனக்கோட்டம் உள்ளவராக இருப்பதால்அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்தமாட்டார். எனவேஅவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற குற்றத்தைச் செய்து அவமானப் படவேண்டாம் என்பது கருத்து.

 

     நாயினது இயல்பு எப்படிநல்லவற்றை ஒதுக்கி விட்டு,அல்லாதவற்றைக் கொள்ளுமோ,அதுபோலவே மனித மனமும். நல்வழிப்படுத்துகின்றவர் பார்வையில் இருக்கும்வரை நல்லவனாக இருக்கும். கொஞ்சம் காவல் குறைவு பட்டால் அது தனது இயல்பான வேலையில் இறங்கும். ஆசிரியர் இருக்கும் வரை மாணவர்கள் அடங்கி இருப்பார்கள். ஆசிரியர் இல்லாத போது வாலை அவிழ்த்துவிட்டுக் கொள்வார்கள்.

 

     எவ்வளவுதான் கற்றவர்களாக இருந்தாலும்நல்ல பதவியில் இருந்தாலும்சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும்சமயத்தில் தங்களின் இயல்பான குணத்தைக் காட்டி விடுவார்கள். நல்லவர்கள் இனத்தில் இருக்கும்வரை தான் எல்லாம். எனவேதான், "மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     ஊரெல்லாம் அடங்கிய இரவில்தான் நாயினது குரைப்பு நன்றாகக் கேட்கும். அதுபோலவேநமது உடம்பில் உள்ள கருவிகள் செயலற்ற நிலைக்கு வந்துவிட்டாலும்மனோவியாபாரனாது சற்றும் ஓயாது. மனம் ஆலை பாய்ந்துகொண்டே இருக்கும். மனம் அமைதிப்பட வேண்டும். வாய்பேசாமல் இருந்தால் அது "வாய் மவுனம்". உடம்பு அசையாமல் இருந்தால் அது "காஷ்ட மவுனம்". மனம் அசைவற்று,காற்று அறியாத் தீபம் போல இருந்தால்அதுவே உண்மையான மவுனம். அந்த மவுன நிலை வந்தால்ஞானம் உதிக்கும்.

 

     "மோனம் என்பது ஞானவரம்பு" என்றார் ஔவைப் பிராட்டியார். மௌனநிலை என்பதுமெய்ஞ்ஞானத்துக்கு எல்லையாகும். மனதில் எந்தவித சலனமும் சிந்தனையும் இன்றி,அமைதியாக இருக்கும் நிலையே உண்மை ஞானத்தின் எல்லை ஆகும். "சினம் அடங்கக் கற்றாலும்சித்தி எல்லாம் பெற்றாலும்மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே" என்று தவராச சிங்கம் ஆகிய தாயுமான அடிகளார் காட்டியபடிமனம் அடங்கி இருப்பதே சிறந்தது.

 

     ஊமை எழுத்து என்றும்பேசா எழுத்து என்றும் சொல்லப்படும்நாயோட்டு மந்திரத்தை மனதால் உச்சரிக்கின்ற நிலை வந்தால், "பேசா அனுபூதி" பிறந்துவிடும். 

 

     மனத்தைத் தீய வழிகளில் செல்லாமல்கண்ட விடயங்களில் மேயாமல் காத்து,அடங்கி இருப்பது ஆன்மாவுக்குக் காவல். 

 

 

 

 

 

 

 

 

1 comment:

  1. வணக்கம் ஐயா. அடியேனுடைய தம்பி மூலம் தங்கள் blog கைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிறப்பாகவும் தெளிவாகவும் எழுதுகிறீர்கள் ஐயா. தங்கள் உழைப்பிற்கு நன்றி.

    ReplyDelete

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...