நச்சுமரம் ஆயினும் கொல்லார்

 


நச்சுமரம் ஆனாலும் கொல்லலாமோ?

-----

 

"விச்சு அதுஇன்றியே விளைவு செய்குவாய்,

            விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்

வைச்சு வாங்குவாய்,வஞ்ச கப்பெரும்

            புலையனேனை உன் கோயில் வாயிலில்

பிச்சன் ஆக்கினாய்,பெரிய அன்பருக்கு

            உரியன் ஆக்கினாய்,தாம் வளர்த்தது ஓர்

நச்சு மாமரம் ஆயினும் கொ(ல்)லார்

            நானும் அங்ஙனே உடைய நாதனே". 

 

மணிவாசகப் பெருமான் பாடி அருளிய அற்புதமான திருவாசகப் பாடல் இது..

 

இதன்பொருள் ---

 

     விண்ணும் --- விண்ணுலகத்தையும்மண் அகம் முழுதும் --- மண்ணுலகம் முழுதையும்யாவையும் --- பிற எல்லாவற்றையும்விச்சு அது இன்றியே --- வித்து இல்லாமலேவிளைவு செய்குவாய் --- படைப்பாய்வைச்சு வாங்குவாய் --- காத்து அழிப்பாய்வஞ்சகம் - வஞ்சகத்தை உடையபெரும் புலையனேனை --- பெரிய புலையனாகிய என்னைஉன் கோயில் வாயிலில் --- உன் திருக்கோயில் வாசலில் திரிகின்றபிச்சன் ஆக்கினாய் --- பேரன்பினராகிய உன் அடியார்க்கு உரியவனாகச் செய்தாய்தாம் வளர்த்தது --- மக்கள் தாம் நட்டு வளர்த்ததுஓர் --- ஒருமா --- பெரியநச்சுமரம் ஆயினும் --- விடத்தன்மையினை உடைய மரமேயானாலும்கொல்லார் --- அதனை அழிக்க மாட்டார்கள்உடைய நாதனே --- என்னை அடிமையாக உடைய இறைவனே!  நானும் அங்ஙனே --- நானும் உனக்கு அப்படிப் பட்டவனே.

 

     இந்தப் பாடலில் இரண்டு செய்திகளை நமக்கு அறிவிக்கின்றார் மணிவாசகப் பெருமான். ஒன்று, "விதை இல்லாமல் விளைவு செய்வது". இன்னொன்று, "அப்படி விளைவு செய்தது வேண்டத் தகாததாக இருந்தாலும் காப்பது.". இதனை "தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொல்லார்" என்றார்.

 

            உயிர்களின் பிறப்புக்கு அவை செய்கின்ற நல்வினை தீவினையே காரணம். வினையின் காரணமாகவே உடம்பும்அதில் பொருந்தி உள்ள கருவி கரணங்களும் வாய்க்கின்றன. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய்வினைதான் தீர்ந்தால் தினைப் போது அளவும் நில்லாது" என்றார் பட்டினத்து அடிகள். உயிர்களுக்கு அவை செய்த வினைகள் முதலில் இல்லை. 

 

     மரம் முந்தியாவிதை முந்தியாகோழி முந்தியாமுட்டை முந்தியாஎன்று சொல்வதெல்லாம் கேள்விப்பட்டு இருப்போம். விதை ஒன்று இல்லாமல் மரம் உண்டாவதில்லை. முட்டை  ஒன்று இல்லாமல் கோழி உண்டாவதில்லை. ஆனால்முதல் இல்லாமலே எல்லாம் செய்யும் பேராற்றல் படைத்தவன் இறைவன். அனாதியிலே கேவல நிலையில் அழுந்திக் கிடந்து ஆணவம் என்னும் இருளில்,அறிவு என்னும் கண் இழந்துகருவிலே கிடக்கும் குழந்தையைப் போன்று கட்டுண்டு கிடந்த உயிர்களை உய்விக்க வேண்டும் என்னும் அளப்பரும் கருணை காரணமாகஇறைவன் தனது அருட்சத்தியால் அவைகளுக்கு உடம்பைப் படைத்து அளிக்கின்றான். இதைத் தான்விதை இல்லாமலே விளைவு செய்வது என்னும் பொருளில், "விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

            பிறப்பை எடுத்துச் செய்கின்ற நல்வினை தீவினைகள் உயிர்களுக்கு அனாதியில் இல்லாவிடினும்அனாதி கேவல நிலையில் உள்ள உயிர்களுக்கு மாயா காரியமாகிய சூக்கும தேகத்தை இறைவன் கூட்டிய பொழுது அவ்வவற்றின் ஆணவமலத் தன்மைகளுக்கு ஏற்பஅவற்றுக்கு விருப்பு வெறுப்புகள் வேறு வேறு வகையாய் நிகழும். அந்நிகழ்ச்சிக்கு ஏற்பத் தூல தேகங்கள் தரப்படும். இது முதல் உற்பவத்தின் நிலை. பின்னர் பிறப்புகளில் உயிர்கள் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப இறைவன் பிறப்புகளைத் தருவான். இது புனர் உற்பவத்தின் நிலை. இவற்றின் வேறுபாடு அறிந்துகொள்ளத் தக்கது.

 

     இறைவனைக் குறித்து, "விச்சு இன்றி நாறு செய்வானும்" என்று ஒரு தேவாரப் பாடலில் அப்பர் பெருமான் பாடி உள்ளார். விதை இல்லாமலேயே பயிரை உண்டாக்க வல்லவன் இறைவன் என்கின்றார்.

 

     திருநீலகண்ட நாயனாரிடத்தில் திருவோட்டினைத் தந்துஅதனைப் பாதுகாத்து வைக்குமாறு சொல்லிச் சென்றுபின்னர் வரும்போது அதனை மறைத்தவன் இறைவன் என்பதைச் சொல்ல வந்த தெய்வச் சேக்கிழார் பெருமான்பின்வருமாறு பாடுகின்றார்.

 

"வந்தபின் தொண்ட னாரும்

   எதிர் வழிபாடு செய்து,

"சிந்தை செய்து அருளிற்று எங்கள்

    செய்தவம்" என்று நிற்ப,

"முந்தை நாள் உன்பால் வைத்த

   மொய் ஒளி விளங்கும் ஓடு

தந்து நில்" என்றான்,எல்லாம்

   தான்வைத்து வாங்க வல்லான்".

 

இதன் பொருள் --- 

 

     சிவபெருமான் யோகியாகத் திருவடிவம் தாங்கித் தம் மனைக்கு எழுந்தருளிய பின்பு,திருநீலகண்டரும் எதிர்கொண்டு அழைத்து வந்துமுறைமையாக வழிபாடும் செய்து, "பெருமான் அடியேன் இல்லத்திற்குத் திருவுள்ளம் கொண்டு எழுந்தருளியது நாங்கள் செய்த பெருந்தவமே ஆகும்என்று கூறிஅவர் திருமுன் நிற்கஎல்லாப் பொருள்களையும் தானே வைக்கவும் வாங்கவும் வல்லானாகிய அச் சிவயோகியாராம் இறைவன், "முன்னாள் உன்னிடத்தில் நான் வைத்த பேரொளி மிக்க திருஓட்டினை எனக்கு அளித்து நிற்பாயாகஎன்று அருளிச் செய்தார்.

 

     எனவேஇறைவன் விதை இல்லாமலே விளைவு செய்யும் பேரருளும்பேராற்றலும் படைத்தவன் என்பது தெளிவாகும்.

 

     அடுத்துஉலகத்தவர் பேணி வளர்த்த மரமானதுநஞ்சு மரமாய் இருந்தாலும் (பயன் தராத மரமாய் இருந்தாலும்)அதனை  வெட்டி அழிக்கத் துணிய மாட்டார். அதைப் போலவேஉன்னால் ஆட்கொள்ளப்பட்ட நான் உள்ளத்தில் அன்பு இல்லாதவனாக இருந்தாலும்,என்னை ஒதுக்கித் தள்ளல் ஆகாது என்னும் கருத்தில், "தாம் வளர்த்தது ஓர்நச்சு மாமரம் ஆயினும் கொ(ல்)லார்நானும் அங்ஙனே" என்றார்.

 

     "துடுக்குப் பிள்ளையாக இருந்தாலும்இடுக்கில் வைத்துக் காப்பது" பெற்ற தாய்தந்தையரின் இயல்பு. மக்கு மாணவனாக இருந்தாலும்அவனையும் அறிவுடையவன் ஆக்க வேண்டும் என்று ஆசிரியர் முயல்வாரே அல்லாமல்அவனை ஒதுக்கித் தள்ள நினைக்கமாட்டார். எனவேதிருக்கோயிலின் வாயிலில் பிச்சன் ஆகும்படி செய்ததோடு,நல்லடியார்களாகிய பெரிய அன்பினரோடு கூட்டிய இறைவன்தன்னைத் தள்ளிக் கைவிடல் ஆகாது என்றார்.

 

     உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாமல்முத்தியைப் பெற விழைந்தது குறித்துப் பாடும்போது,வித்து இல்லாமலே விளைச்சலை விரும்பியவன் போலத் தான் உள்ளதாகவும்அன்பு இல்லாமல் அருள் விளையாது என்பதால்அன்பினைப் பெருக்கிஅருட்பண்பினைப் பெற அருள் புரிய வேண்டும் என்றும் வள்ளல்பெருமான் பாடுகின்றார்.

 

"வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல்,

     மெய்ய! நின்இரு மென்மலர்ப் பதத்தில்

 பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்;

     பாவியேன்அருள் பண்பு உற நினைவாய்;

 மித்தை இன்றியே விளங்கிய அடியார்

    விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்

சித்தி வேண்டிய முனிவரர் பரவித்

    திகழும் ஒற்றியூர்த் தியாக நாயகனே!".

 

இதன் பொருள் ---

 

     சித்திகளைப் பெற விரும்பிய முனிவர்கள் வழிபடுவதால் விளக்கமுற்று இருக்கும் திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகநாயகனேபொய்ம்மை இன்றி மெய்யுணர்வால் விளங்கிய அடியவர்கள் விரும்பிய அனைத்தும் தழைக்குமாறு அருள்பவன் நீவித்து இல்லாமலே விளைவு செய்ய முயலுபவன்போல மெய்ம்மை வடிவினனாகிய உன்னுடைய மெல்லிய மலர்போன்ற பாதங்களில் பத்தி சிறிதும் இல்லாமலே இருந்து,முத்தியைப் பெற விரும்பினேன்பாவியாகிய நான் உனது திருவருளுக்கு ஏற்ற பண்பினைப் பெறுமாறு திருவுள்ளம் பற்றி அருளவேண்டும்.

 

     திருமுறைகளில் தோய்ந்த அடியவர் ஆகிய கவிராச பண்டாரத்தையா அவர்கள்தாம் இயற்றிய "திருவிலஞ்சி முருகன் பிள்ளத் தமிழ்" என்னும் நூலில்மணிவாசகப் பெருமான் காட்டிய "நச்சுமரம்" குறித்த ஒரு பாடலைப் பாடி உள்ளார்.

 

"நச்சு மரம்தான் ஆனாலும்,

          நட்ட மரம்காண்,தொன்றுதொட்டு,

     நாங்கள் அடிமைநீங்கள் எம்மை

          நடத்தும் தலைமைப் பெருமாள்காண்,

 

வைச்சு மரம்தண் நீர்வார்த்து

          வளர்ப்போர் குறைக்க நினைப்பாரோ?

     மற்றோர் குறைவந்து உற்றாலும்

          மாற்றிப் புரக்க வழக்கு அன்றோ?

 

கச்சை முனிந்து முகம்கறுத்துக்

          கனத்துச் சினத்துக் கடக் களிற்றின்

     கதிர்வாள் மருப்பை முனைமடக்கிக்

          கதிர்க்கும் கதிர்ப்பூண் முலைக்குறத்தி

 

செச்சை செறிக்கும் திருமார்பா!

          சிறியேம் சிற்றில் சிதையேலே,

     தேவே இலஞ்சிச் சினவேலோய்!

          சிறியேம் சிற்றில் சிதையேலே".

 

இதன் பொருள் ---

 

     மார்பின் மீது அணிந்துள்ள கச்சினைத் தள்ளிக் கொண்டு, "கச்சு அற நிமிர்ந்துகதிர்த்துமுன்பணைத்து" என்று மணிவாசகப் பெருமான் பாடி உள்ளதுபோல் விளங்கிமுலையின் முகமானது (காம்பானது) கறுத்துஒளி பொருந்திய யானைத் தந்தத்தின் முனையும் தோற்றுப் போகுமாறு விளங்குகின்றஒளி பொருந்திய முலைகளை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியார் தனது முலைகளின் மீது பூசப்பட்டுள்ள செஞ்சாந்தின் குழம்பானது நிறைந்து விளங்குமாறு அம்மையாரைத் தனது திருமார்போடு தழுவி மகிழ்கின்றவரே! திருவிலஞ்சி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள வேலாயுதப் பெருமானே! 

 

     நச்சு மரமாக இருந்தாலும்அது நட்டுவைக்கப்பட்ட மரமாயிற்றே. நாங்கள் நச்சு மரம்போன்று உள்ளத்தில் உம்மீது அன்பு இல்லாதவர்களாக இருந்தாலும்நாங்களும் உம்மால் படைக்கப்படவர்கள் தானே. நீங்கள் எமது ஆண்டவர். நாங்கள் உமக்கு அடிமைகள். இது தொன்றுதொட்டு (ஆதிமுதல் நாளில்) இருந்து வரும் மரபுதானே. நீங்கள்தானே எம்மைப் படைத்துக் காத்து அருள்புரிபவர். நாங்களாகப் பிறக்கவில்லையே. ஒரு மரத்தை நட்டு வைத்துஅதற்குத் தண்ணீர் பாய்ச்சி வளர்ப்பவர்கள்அதனை வெட்ட முனைவார்களாஅப்படியே ஒரு குறையைக் கருதி (ஓரிரு கிளைதழை முதலியவற்றை) வெட்டிவிட்டாலும்அதனை மீண்டும் வளர்ப்பதுதானே மரபு. அதுபோலவேநாங்கள் அருமையாக இப்போது இழைத்து வைத்துள்ள சிறிய வீட்டை (சிற்றில்) உமது திருவடியால் சிதைக்கக் கருதவேண்டாம். எங்கைளக் காத்து அருள் புரியவேண்டும்.

 

     பிள்ளைத் தமிழ் என்பதுஅவரவர்க்கு உகந்த கடவுளரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது ஆகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே. பாட்டுடைத் தலைவர்களின் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக் கவியில் வைத்துப் பாடப்படுவது. தம்மால் பாவிக்கப்பட்ட கடவுளர் குழந்தையாகப் பிறந்துமூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து,ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது. பத்துப் பருவங்களில்சிற்றில் பருவம் தவிர மற்றைப் பருவங்கள் எல்லாம் பெற்றோரால் பாடப்படுவது. சிற்றில் பருவம் ஒன்றுதான்பாடுகின்ற அடியவரால் (சிறுமிகளால்) பாடப்படுவது ஆகும். சிற்றில் பருவம் என்பதுஆண்பால் பிள்ளைத் தமிழிக்கு உரியது.

 

     பெண்குழந்தைகள் மணலில் சிறுவீடு கட்டி விளையாடுவார்கள். அது உண்மையில் வீடு அல்ல. என்றாலும் அவர்களின் கருத்துக்கு இசைந்த ஒன்றாக இருப்பதால்அந்த வீட்டினை ஆண் குழந்தைகள் சிதைத்துவிட்டால்பெண்குழந்தைகள் வருந்தும். இங்கே ஆண்பால் குழந்தை என்பதுதிருவிலஞ்சி முருகன். தாம் கட்டிய சிறுவீட்டைச் சிதைக்க வேண்டாம் என்று முருகனை வேண்டிப் பாடிய பாடல் இது. 

 

     நச்சு மரம் என்பதுஒருவராலும் நச்சப் படாத மரம். அது காஞ்சிரம் என்னும் எட்டி மரத்தைக் குறிக்கும். எட்டியின் இலைகள்தழைகள்காய்கள்கனிகள் யாவும் பார்ப்பதற்கு அழகாகவே தோன்றும். அணுகுவதற்கு எளிதாகவும்பார்ப்பதற்கு இனிமையாகவும் இருக்கும். அதன் தன்மையை அறியாமல் உண்போர்க்கு கேடு தரும்.

 

     அடியவர்கள் என்பவர் உண்மையில் உள்ளத்தில் கனிந்த அன்பினை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அந்தப் பாங்கு வாய்க்கவேண்டும் என்பதற்காகவேடத்தைப் புனைந்துகொள்வது வழக்கம். உலகத்தார் பழித்தவற்றை ஒழித்து விடவேண்டும் என்பதற்காகமழித்தலும் நீட்டலும் செய்வது போல. ஆனால்வேடத்தால் மட்டுமே அடியவராக இருந்துகொண்டுஉள்ளத்தில் உள்ள நச்சுத் தன்மை சிறிதும் மாறாமல்மழித்தலும் நீட்டலும் செய்துகொண்டு இருப்பதால்இறைவன் அருளைப் பெற முடியாது என்பதைக் காட்ட இவ்வாறு கூறப்பட்டது. மேலும்அவ்வாறு வேடத்தால் மட்டுமே அடியவர்களாகக் காட்சி அளிப்போரைத் தக்க வழியில் திருத்த வேண்டுமே அல்லாமல்அவர்களைநச்சுமரமாக எண்ணி ஒழித்து விடுதலும் கூடாது என்பதும் இங்குக் காட்டப்பட்டது.

 

     அறியாத பருவத்தில் தான் மணலால் கட்டிய சிறுவீடு குலையாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுவதைப் போலஅஞ்ஞானத்தில் உள்ளோரும்இந்த உடம்பை அழகுபடுத்திஇது என்றும் அழியாமல் நிலைத்து இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்குச் சிதைவு வராமல் காப்பார்கள். பக்குவம் வந்துவிட்டால்முதலில் அருமையாகப் போற்றிக் காத்த இந்த உடம்பே ஒரு சுமையாகத் தோன்றும். "விடக்கு ஊன் மிடைந்த சிதலை செய் காயம் போறேன்சிவனே! முறையாமுறையோ?" என்று இறைவனிடம் முறையிடுவார் மணிவாசகப் பெருமான். 

வீடுபேறு பெற விரும்புவார்துன்பத்துக்கு இடமான இந்த உடலில் வாழ விரும்பார்."வேற்று விகார விடக்கு உடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்"என்றார் மணிவாசகப் பெருமான். "பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"மொய்ப்பால் நரம்பு கயிறாக 

மூளை என்பு தோல்போர்த்த

குப்பாயம் புக்கு இருக்ககில்லேன்,

கூவிக் கொள்ளாய் கோவே! ஓ"             --- திருவாசகம்.

 

     என்றார். குப்பாயம் --- சட்டை. இந்த உடம்பு ஏழுவகையான தாதுபொ பொருள்களால் ஆனதொரு கூடு.பல வகைத் துணிகளை நூலால் தைத்து அணியப்படுவது சட்டை. மூளை எலும்பு முதலியவற்றை நரம்பால் பிணித்து ஆக்கப்பட்ட இந்த உடம்பு குப்பாயம் எனப்பட்டது.

            

சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கொடு 

     திரியும் சிறுகுடில் இதுசிதையக்

கூவாய்,கோவே! கூத்தா! 

     காத்து ஆட்கொள்ளும் குருமணியே!"  --- திருவாசகம்.

 

     சீழ் ஒழுகிஈக்களால் மொய்க்கப்பட்டுஅழுக்கோடு அலைகின்றசிறிய குடிசையாகியஇவ்வுடம்பு அழியஎன்னை அழைத்துக் கொள்வாய்என்கின்றார்.

 

     "என்று நீஅன்று நான். உன் அடிமை அல்லவோயாதேனும் அறியா வெறும் துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோதொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று தாயுமான அடிகளார் வேண்டினார். ஆதிமுதல் நாள் தொடங்கிஇறைவன் ஆண்டான்ஆன்மாக்கள் அவனுக்கு அடிமைகள். 

 

     இறை அடியார்கள் இறைவனைப் பாடி வழிபட்ட அருமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது மட்டுமல்ல. நாமும் பின்பற்றத் தக்கது ஆகும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...