அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகமும் மினுக்கி (பொது)
முருகா!
விலைமாதர் மயலால் சிந்தை மயங்காத வண்ணம் அருள்வாய்.
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக
முலையைய சைத்துத் திருந்த முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ......முன்றிலூடே
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ......லங்கலாமோ
பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர
பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு
பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக்
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ......வென்றவேளே
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ......தம்பிரானே.
பதம் பிரித்தல்
முகமும் மினுக்கி,பெரும் கருங்குழல்
முகிலை அவிழ்த்து,செருந்தி சண்பக
முடிய நிறைத்து,ததும்பி வந்து, அடி ...... முன்பினாக
முலையை அசைத்து,திருந்த முன் தரி
கலையை நெகிழ்த்துப் புனைந்து,வஞ்சக
முறுவல் விளைத்து,துணிந்து தம் தெரு ......முன்றில் ஊடே,
மகளிர் வர,பின் சிறந்த பந்தியின்
மதனனும் நிற்க,கொளுந்து வெண்பிறை
வடவை எறிக்கத் திரண்டு பண்தனை ......வண்டுபாட,
மலய நிலத்துப் பிறந்த தென்றலும்,
நிலை குலையத் தொட்டு உடம்பு புண்செய,
மயலை அளிக்கக் குழைந்து,சிந்தை ......மலங்கல்ஆமோ?
பகலவன் மட்கப் புகுந்து,கந்தர
ககன முகட்டைப் பிளந்து,மந்தர
பருவரை ஒக்கச் சுழன்று,பின்பு ...... பறந்துபோக,
பணமணி பட்சத் துரங்கமும் தனி
முடுகி நடத்திக் கிழிந்து,விந்து எழு
பரவை அரற்ற,ப்ரபஞ்ச நின்று ...... பயந்து வாட,
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய
மிக, அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு
உற, அமர் குத்திப் பொரும் கொடும் படை ......வென்ற வேளே!
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி,
கவுரி, எடுத்துப் பரிந்து கொங்கையில்
குண அமுது உய்க்கத் தெளிந்து கொண்டருள் .....தம்பிரானே.
பதவுரை
பகலவன் மட்கப் புகுந்து--- சூரியனும் ஒளி குன்றுமாறு சென்று,
கந்தர(ம்) ககன முகட்டைப் பிளந்து--- வான உச்சியில் உள்ள மேகங்களைக் கிழித்து,
மந்தர பருவரை ஒக்கச் சுழன்று--- பெருத்த மலைகள் எல்லாம் ஒன்றோடொன்று சுழலுமாறு,
பின்பு பறந்து போக--- (செல்லும் வேகத்தில்) அவை எல்லாம், தன் பின்னால் பறந்து போகுமாறு செய்தும்,
பணம் அணி பட்சத் துரங்கமும்--- படத்தை உடைய பாம்பினைக் கொத்தித் தின்னும் மயிலாகிய குதிரையை
தனி முடுகி நடத்தி--- மிக வேகமாகச் செலுத்தி,
விந்து எழு பரவை கிழிந்து அரற்ற--- நீர்த்துளிகள் எழுகின்ற கடல் கிழிபட்டு அலற,
ப்ரபஞ்ச(ம்) நின்று பயந்து வாட--- ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் அஞ்சி வாடவும், (அந்த அற்புதமான காட்சியைக் கண்டு)
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரியம் மிக--- குகப் பெருமாளை என்று முக்கண்களை உடைய தான்தோன்றி அப்பராகிய சிவபரம்பொருளும் அன்பு கொள்ள,
அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு உற--- அரக்கர்களுக்கு அவர்களது வாழ்நாள் எல்லை வந்து குறுக,
அமர் குத்திப் பொரும் கொடும் படை வென்ற வேளே--- அமர்க் களத்தில் வேலாயுத்ததால் குத்தி, அரக்கர்களின் கொடிய படைகளை எல்லாம் வென்ற குமரவேளே!
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி--- குண்டலங்களை அணிந்துள்ள ஒப்பற்ற பார்வதி தேவியாகிய,
கவுரி எடுத்துப் பரிந்து--- கௌரி அம்மை தனது திருக்கைகளால் அன்பு கூர்ந்து,
கொங்கையில் குண அமுது உய்க்க--- கொங்கைகளில் சுரந்த பாலை ஊட்ட,
தெளிந்து கொண்டு அருள் தம்பிரானே--- தெளிவுடன் அதனை உண்டு, உயிர்களுக்கு அருள் சுரக்கும் தனிப்பெருந்தலைவரே!
முகமு(ம்) மினுக்கி--- முகத்தை மினுமினுப்பாக அலங்கரித்து,
பெரும் கரும்குழல் முகிலை அவிழ்த்து--- நீண்ட கரிய மேகம் போன்ற கூந்தலை அவிழ்த்து,
செருந்தி சண்பக(ம்) முடிய நிறைத்து--- செருந்தி, செண்பகம் முதலிய மலர்களை நிரம்ப வைத்து முடிந்து,
ததும்பி வந்து--- களிப்புடன் வந்து,
அடி முன் பி(ன்)னாக--- முன்னும் பின்னுமாக அடியிட்டு
முலையை அசைத்து--- முலைகளை அசைத்து நடந்து,
திருந்த முன் தரி கலையை நெகிழ்த்துப் புனைந்து--- முன்னர் தரித்து இருந்த ஆடையைச் சரி செய்வது போல நெகிழ்த்தும் அணிந்தும்,
வஞ்சக முறுவல் விளைத்து--- வஞ்சகம் நிறைந்த புன்னகையைப் புரிந்துகொண்டு,
துணிந்து தம் தெரு முன்றில் ஊடே--- (நாணமில்லாமல்) துணிந்து தாம் வசிக்கின்ற தெருவின் முன்புறத்தில்,
மகளிர் வரப்பில்--- பெண்களின் கூட்டத்தில்,
சிறந்த பந்தியின் மதனனும் நிற்க--- சிறப்பாகத் தனக்கு உரிய ஒழுங்கில் மன்மதன் இடையில் நிற்க,
கொளுந்து வெண் பிறை வடவை எறிக்கக் திரண்டு--- (அதனால் உண்டான காம வேட்கையால்) காய்கின்ற வெண்ணிலவும், வடவைத் தீயைப் போல ஒன்று சேர்ந்து வருத்த,
பண் தனை வண்டு பாட--- வண்டுகள் பண்ணிசைத்து ரீங்காரம் இட,
மலய நிலத்துப் பிறந்த தென்றலும்--- பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும்,
நிலை குலையத் தொட்டு --- மனநிலை குலையுமாறு வந்து தவழ்ந்து,
உடம்பு புண் செய--- அதனால், உடம்பு வாட்டம் அடைந்து,
மயலை அளிக்கக் குழைந்து --- காம இச்சையை விளைவிக்க,மனம் உருகி,
சிந்தை மலங்கலாமோ--- அடியேனது சிந்தை கலக்கம் அடையலாமோ?
பொழிப்புரை
சூரியனும் ஒளி குன்றுமாறு சென்று,வான முகட்டில் உள்ள மேகங்களைக் கிழித்து,பெருத்த மலைகள் எல்லாம் ஒன்றோடொன்று சுழலுமாறு,தான் செல்லும் வேகத்தில் அவை எல்லாம், தன் பின்னால் பறந்து போகுமாறு செய்கின்றதும்,படத்தை உடைய பாம்பினைக் கொத்தித் தின்னும் மயிலாகிய குதிரையைமிக வேகமாகச் செலுத்தி,நீர்த்துளிகள் எழுகின்ற கடல் கிழிபட்டு அலற,
ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் அஞ்சி வாடவும், அந்த அற்புதத் திருக்காட்சியைக் கண்டு, இது குகப் பெருமாளின் அருட்செயலே என்று முக்கண்களை உடைய தான்தோன்றி அப்பராகிய சிவபரம்பொருளும் அன்பு கொள்ள, அரக்கர்களுக்கு அவர்களது வாழ்நாள் எல்லை வந்து குறுக, அமர்க் களத்தில் வேலாயுத்ததால் குத்தி, அரக்கர்களின் கொடிய படைகளை எல்லாம் வென்ற குமரவேளே!
குண்டலங்களை அணிந்துள்ள ஒப்பற்ற பார்வதி தேவியாகிய, கௌரி அம்மை தனது திருக்கைகளால் அன்பு கூர்ந்து எடுத்து அணைத்து, கொங்கைகளில் சுரந்த பாலை ஊட்ட, தெளிவுடன் அதனை உண்டு, உயிர்களுக்கு அருள் சுரக்கும் தனிப்பெருந்தலைவரே!
முகத்தை மினுமினுப்பாக அலங்கரித்து,நீண்ட கரிய மேகம் போன்ற கூந்தலை அவிழ்த்து, செருந்தி, செண்பகம் முதலிய மலர்களை நிரம்ப வைத்து முடிந்து, களிப்புடன் வந்து,முன்னும் பின்னுமாக அடியிட்டு, முலைகளை அசைய நடந்து,முன்னர் தரித்து இருந்த ஆடையைச் சரி செய்வது போல நெகிழ்த்தும் அணிந்தும்,வஞ்சகம் நிறைந்த புன்னகையைப் புரிந்துகொண்டு, நாணமில்லாமல் துணிந்து தாம் வசிக்கின்ற தெருவின் முன்புறத்தில் வந்து கூடும் பெண்களின் கூட்டத்தில்,சிறப்பாகத் தனக்கு உரிய ஒழுங்கில் மன்மதன் இடையில் நிற்க, அதனால் உண்டான காம வேட்கையால் காய்கின்ற வெண்ணிலவும், வடவைத் தீயைப் போல ஒன்று சேர்ந்து வருத்த, வண்டுகள் பண்ணிசைத்து ரீங்காரம் இட, பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும்மனநிலை குலையுமாறு வந்து தவழ, அதனால், உடம்பு வாட்டம் அடைந்து,காம இச்சையை விளைவிக்க,மனம் உருகி,அடியேனது சிந்தை கலக்கம் அடையலாமோ?
விரிவுரை
இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்கள் புரியும் சாகசங்களை எடுத்து உரைத்து, நம்மை நல்வழிப்படுத்துகின்றார்.
முகமு(ம்) மினுக்கி---
அழகு என்பது உள்ளத்தில் இருக்கவேண்டியது. அதுவே நலம் புரிவது. ஆனால் புற அழகில் மயக்கம் கொள்ளுகின்ற காமுகருக்கு, முக அழகே அழகாகத் தோன்றும். எனவே, விலைமாதர் தமது முகத்தை மினுக்கிக் கொள்ளுகின்றார்கள்.
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியின் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை வடவை எறிக்க---
நம்பியாரூரர் பெருமான் பரவைநாச்சியாரைக் கண்ணுற்ற போது, அவர்களுக்கு இடையில் மன்மதன் நின்றான் என்பைதக் காட்ட, "நடு நின்றார் படைமதனார்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
காம உணர்வால் தூண்டப்பட்ட சுந்தரருக்கு,குளிர்ந்த நிலவொளியும்,நெருப்பாகச் சுடுகின்றது என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
"ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்பதே, எனைத் தொண்டுகொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி" --- பெரியபுராணம்.
இதன் பொருள் ---
குளிர்ந்த சந்திரனே! நான் பரவையாரால் படும் துன்பத்தைக் கண்டபின்னும், என்னிடத்து நெருப்பை வீசும் ஒளிக் கதிர்களைத் தூவுவதோ? என்னை அடிமை கொண்டு ஆண்ட சிவபெருமானின் வெள்ளப் பெருக்கையுடைய அலைவீசுகின்ற கங்கைப் பேராற்றையுடைய நீண்ட சடைமுடியில் அணிந்திருக்கின்ற வெண் மதியைப்போல் அமைந்தாய் அல்லையோ! என்பார்.
உண்டாரை மட்டும் மயக்கும் கள்.
கண்டாரையும் மயக்கும் காமம்.
உண்டாரை மட்டும் கொல்லும் நஞ்சு.
கண்டாரையும் கொல்லும் காமம்.
அருகில் சென்றால் கொல்லும் நெருப்பு.
நீங்கினாலும் கொல்லும் காமம்.
நீருள் குளித்தும், குன்றேறி ஒளித்தும், நெருப்பின் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத்தினால் வரும் துன்பத்தை அவ்வாறு போக்கிக் கொள்ள முடியாது. ஆதலினால், கள்ளினும், நெருப்பினும், நஞ்சினும் காமம் கொடியது என உணர்க. அதனின்றும் பிழைத்து உய்யவேண்டும்.
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். --- நாலடியார்.
விலைமகளிர் தன்னிடம் வருவோர், சிறிது நேரம் பிரிந்து வருவாராயின், உண்மைக் காதல்போல் நடித்து, கண்ணீர் பெருக்கி, விரக தாபத்தினால் உயிர் பிரிவதுபோல் துடித்து, உள்ள மயக்கத்தை வெள்ளம்போல் மிகுதிப்படுத்துவர். அவர் வலைப்பட்டோர் கதிகாணாது அலைவர். அவர் தம்மிடம் வருபவர் மேலும் மேலும் மயங்குதல் பொருட்டு புரியும் மாயலீலைகள் எண்ணில.
நாவார வேண்டும் இதம் சொல்லுவார், உனைநான் பிரிந்தால்
சாவேன் என்றேஇருந்து, ஒக்க உண்பார்கள், கைதான் வறண்டால்
போய்வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார், தலைவிதியோ, இறைவா, கச்சியேகம்பனே.--- பட்டினத்தார்.
வெம்புவாள் விழுவாள் பொய்யே
மேல்விழுந்து அழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே
சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள்
ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
நாயினும் கடையா வாரே. --- விவேகசிந்தாமணி.
பண்டனை வண்டு பாட---
பண் + தனை -- வண்டுகள் பண்ணிசைத்து ரீங்காரம் இட,
மலய நிலத்துப் பிறந்த தென்றலும் நிலை குலையத் தொட்டு உடம்பு புண் செய, மயலை அளிக்கக் குழைந்துசிந்தை மலங்கலாமோ---
மலயம் --- பொதியமலை.
பொதியமலையில் இருந்து பிறத்தலால், தென்றலுக்கு "மலயமாருதம்" என்று பெயர் உண்டாயிற்று.
எல்லோருக்கும் இதம் புரிகின்ற தென்றல் காற்று,காம வயப்பட்டோருக்குத் துன்பத்தைத் தரும்.
பரவைநாச்சியாரைக் கண்ட பின்னர் காதல் வயப்பட்ட சுந்தரமூர்த்தி நாயானாருக்குத் தென்றலும் சுடுகின்றது. இக் காட்சியைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு காட்டுகின்றார்.
"ஏ, தென்றல் மாருதமே! நீ பிறந்தது எங்கள் சிவபெருமானுடாய சந்தனக் காடுகளை உடைய பொதியமலையில். நீ சதா பழகுவது தெய்வ நீராகிய காவிரி பாயும் தமிழ்நாட்டில். உயர்ந்த இடத்தில் பிறந்தும், குளிர்ந்தநீர் நாட்டில் பழகியும், எவ்வாறு இந்தக் கொடுமையை நீ பெற்றிருக்கின்றாய்?” என்று காதல் நோய் கொண்ட சுந்தரர் கூறுகின்றார்.
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை,
சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில்,
புறம்பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ?தமிழ்மாருதம். --- பெரியபுராணம்.
சிவபெருமானுடைய நெற்றிக்கண் மன்மதனை எரித்த ஞானக்கண். அந்த ஞானக்கண்ணினின்றும் மெய்ஞ்ஞான சோதியாக வெளிப்பட்ட ஞானபண்டிதன் திருவருளைப் பெற்ற அடியார்கள் நோக்கும் திசையிலும் பெண் மயக்கம் வாராது என்று தெளிக.
அங்ஙனமாக, அருணகிரிநாதர் முருகவேளின் முழுமுதற் கருணை பெற்ற ஜீவன் முத்தர். இறைவன் அருள்பெற்ற பின்னரும் பெண்மயக்கம் வந்து சூழுமோ? நிச்சயமாகச் சூழாது. அவருடைய கந்தர் அலங்காரத் திருப்பாடலைக் காண்க.
"கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்
திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்
படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்
தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே".
இவ்வாறு காமக்கடலைக் கடந்தேன் என்று கூறிய அடிகளார், எனக்குப் பெண் மயல் தீரவில்லை எனக் கூறுவாரோ? அப்படிக் கூற என்ன நியாயம்? அருள் மயமான அவரைக் காமம் வாட்டவல்லதோ? அப்படி வாட்டுமாயின் திருவருளின் திறம்தான் யாது?
திருவருள் பெறுமுன் பெண் மயலால் வாடுவது பொருந்தும். அருள் பெற்றார்க்கு அது பொருந்தாது. அப்படியாயின், மேலே கண்ட பாடலின் உட்கிடை யாது?
ஆன்றோர்களது பாடலில் உள்ள கருத்துக்களை அதன் நுட்பம் தெரியாது, அகச்சான்று எனக் கொண்டு, அல்லல் படக்கூடாது. அப்படிக் கூறுவது பெரும் பாவமாகும்.
"பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன்"....
"பொய்எல்லாம் மெய்என்று புணர்முலையார் போகத்தே
மையல் உறக் கடவேனை".....
"வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாய்இதழ்ப் பெருவெள்ளத்து அழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனை"....
என்று நமது சமயகுரவராம் மணிவாசகனார் கூறுவாரெனின், அத்துணையும் அவர்மேல் ஏற்றிக் கூறுதல் பொருந்துமோ?
"குலம்பொல்லேன், குணம்பொல்லேன்,
குறியும் பொல்லேன்,
குற்றமே பெரிது உடையேன்".....
என்று எங்கள் மற்றொரு சமய குரவராம் அப்பரடிகள் கூறுவாரெனின், அப்பரடிகள் இழிகுலத்திலே பிறந்தவர் தாமோ? குணம் பொல்லாதவரோ? அப்படி எண்ணினாலும் எய்தும் நிரயம் அன்றோ
மற்று, இதற்கு வழிதான் யாது? எனில் காண்போம்......
நமது மணிவாசகர், அப்பர், அருணகிரிநாதர் முதலிய ஆன்றோர்கள் தாம் கூறிய தீமைகள் அனைத்தும் அப்பிறப்பிலேயே செய்தவை என்று கொள்ளக் கூடாது. ஆன்மா பல பிறவிகளை எடுத்து வருகின்றது அல்லவா? முன்னைப் பிறப்புக்களின் நினைவு அவர்கள் தீர்க்கதரிசிகளாதலின், அவர்கட்கு எய்தும். எனவே, பல்லாயிரம் பிறப்புக்களில் செய்தவைகளைப் பற்றி, இப்பிறப்பில் கூறுகின்றனர் என்று அறிதல் வேண்டும். இதுதான் இதற்கு விடை எனத் தெளிதல் வேண்டும்.
இவ்வாறு உணராதார் ஆன்றோர் மீது நலம் அல்லாதனவற்றை நவின்று நலம் அழிவர். "விடக்கு அன்பாய் நுகர் பாழனை" என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதனால், அவர் புலால் உண்டார் என்றும், "வெறிதரும் புனல் உணும்" என்றதனால், அவர் மதுபானம் அருந்தினார் என்றும் எழுதியும் இயம்பியும் சிலர் இடர்ப்படுகின்றனர்.
எனவே, இவ்வாறு ஆன்றோர்களது அருள்வாக்கை நுனித்து உணராது, மனம் போனவாறு எல்லாம் உரை செய்து உலகிற்குத் தீங்கு செய்யக் கூடாது.
முருகனருள் பெறாத முற்பிறப்புக்களிலே அருணகிரிநாதர், ஓதி உணர்ந்தும், துறவு பெற்றும், யோகம் புரிந்தும், மாதர் மயல் அறப் பெறாது தவித்திருப்பர். அறுமுகன் அருள் பெறாதார்க்கு அங்ஙனம் நேருதல் உண்டு.
பல்லாயிரம் ஆண்டுகள் மனமடக்கி மாதவம் புரிந்த விசுவாமித்திரர் மேனகையைக் கண்டவுடன் தடுமாறியதும், பராசரர் நதியின் இக்கரையில் இருந்து அக்கரை போவதற்குள் மச்சகந்தியைக் கண்டு மயங்கியதும், காசிபர் மாயையைக் கண்டு மனம் கலங்கியதும், இன்னும் பல இருடியர் இடர்ப்பட்டதும் நாம் நூல்கள் மூலம் காண்கின்றோம்.
ஆனால், பரமபதியின் அருள்பெற்ற அப்பரிடம் வந்த அரம்பையர்கள் நாணிச் சென்றனர்.ஆதலின், அருள் வசப்பட்ட அடியார்கட்குப் பெண்மயல் பிடியாது என்பது உறுதி.
பகலவன் மட்கப் புகுந்து---
மட்குதல் --- மக்கிப் போதல்.
கந்தரம் ககன முகட்டைப் பிளந்து---
கந்தரம் --- மேகம். முகடு --- உச்சி.
பணம் அணி பட்சத் துரங்கம்---
துரங்கம் --- குதிரை.
பணம் அணி --- மடத்தை உடைய பாம்பினைக் கொத்துகின்ற அலகினை உடையதும், வேகமாகச் செல்வதும் ஆகிய மயிலை இவ்வாறு குறித்தார்.
அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு உற---
குரம்பை --- வாழ்நாள்.
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்துப் பரிந்து கொங்கையில் குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் தம்பிரானே---
இது முருகப் பெருமானையும் குறிக்கும். திருஞானசம்பந்தப் பெருமானையும் குறிக்கும்.
உமையம்மை முருகப் பெருமானுக்குப் பாலூட்டிய செய்தியை, குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க....
அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்
கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு
கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, - செய்ய
முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே! --- கந்தர் கலிவெண்பா.
சீகாழியில் பிரம தீர்த்தக் குளக்கரையில் "அம்மே அப்பா" என்று அழுத பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தருக்கும், சிவபெருமான், "துணை முலைகள் பொழிகின்ற பால் அடியில் பொன் வள்ளத்து ஊட்டு" என்று உமையம்மையைப் பணித்தார். தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளுமாறு காண்க.
ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி,அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு,சிவபெருமான்
அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்து அருளி.
பொழிப்புரை : மேற்சொன்னவாறு பெருமான் கூறியருளவும், மறைகளையும் ஏழுலகங்களையும் பெற்றருளி எப்பொருளுக்கும் மூலகாரணமாய் நிற்பவரும், வளம் பெருகும் கருணையே தம் வடிவமாய்க் கொண்டவருமான சிறப்புடைய திருநிலை நாயகி அம்மையார், பிள்ளையார் அருகில் சென்று, கச்சணிந்த தம் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளி,
எண்ணரிய சிவஞானத்து
இன்னமுதம் குழைத்தருளி
"உண் அடிசில்" என ஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்து அருளிக்
கையிற்பொற் கிண்ணம் அளித்து
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து
அங்கணனார் அருள்புரிந்தார்.
பொழிப்புரை : திருநிலை நாயகி அம்மையார், நினைத்தற்கு அரிய சிவஞானமாய இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளி, தம்மை நோக்கி நிற்கும் பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளி, `பாலமுதத்தை உண்பாயாக!' என்று உண்ணச் செய்ய, பெருமை யுடைய பிள்ளையாரை அங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயலால் சிந்தை மயங்காத வண்ணம் அருள்வாய்.
No comments:
Post a Comment