நெஞ்சில் கள்ளத்தனம் தோன்றாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

 


நெஞ்சில் கள்ளத்தனம் தோன்றாமல்  காக்க.

-----

 

            "கோடிய மனத்தால்வாக்கினால்செயலால்கொடிய ஐம்புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ளாஎன்பார் பட்டினத்து அடிகளார்மனம் கோடுவதால்அதனடிப்படையாக நல்ல வாக்கு உண்டாகாதுஇவ்விரண்டின் விளைவாக தீச்செயல்கள் விளையும்மனம் வாக்கு செயல் என்னும் மூன்றின் வழியே பாவங்கள் நிகழும்எனவேமனஅடக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றும், நாவடக்கத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்றும் அருளிய நாயனார்,  "சொல்லப்படுகின்ற அறங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால்உயிருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக வருவது ஒழுக்கமேஆதலால்ஒழுக்கத்தை எவ்விதத்திலும் குறைவுபடாமல் வருந்திப் பாதுகாக்கவேண்டும்என்றதோடுஉள்ளத்தைக் கள்ளத்தனத்தில் செல்லவிடாமல் காத்து ஒழுகவேண்டும் என்கின்றார்.

 

     "கள்ளாமை" என்னும் அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "பிறரால் இகழப் படாமையை விரும்புகின்ற ஒருவன்எவ்வளவு சிறிய பொருளானாலும் அதை வஞ்சிக் கவர நினைக்காதபடி தனது உள்ளத்தைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்" என்கின்றார்.

 

எள்ளாமை வேண்டுவான் என்பான்எனைத்து ஒன்றும்

கள்ளாமை காக்க தன் நெஞ்சு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     எண்ணமே செயலில் முடியும். எனவேபிறர் பொருளைக் களவினால் கொள்ளவேண்டும் என்று உள்ளத்தில் எழும் எண்ணத்தைத் தவிர்த்துவிட வேண்டும். களவு செய்வதற்கான காரணம் எதுவாக இருந்தாலும்தனக்கு உரிமையில்லாத எந்த ஒரு பொருளையும், --- அது சிறிதோபெரிதோமதிப்பு மிக்கதோமதிப்புக் குறைவு உடையதோ --- கவர்ந்து கொள்ள விரும்பாமல் தன் மனதைக் காத்துக் கொள்ள வேண்டும். மனத்தை அடக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை மிக இனிதாய் அமைந்துவிடும். களவு செய்யும் பண்பு ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் அவனை எல்லோரும் எள்ளி நகையாடுவர். தண்டனைக்கும் அவன் உள்ளாவான்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஈசனுக்கும் பெண்டு என்று இருந்தாரும் நெய்திருடி

ஆயர்மனைப் பட்டபாடு ஆர்படுவார் --- சீசீ என்று

எள்ளாமை வேண்டுவான் என்பான்எனைத்து ஒன்றும்

கள்ளாமை காக்க தன் நெஞ்சு.              

 

பெண்டு என்று இருந்தார் --- திருமால். பாடு --- துன்பம். 

பட்டபாடு கிருஷ்ணாவதாரத்தில்.

 

     திருமால்சிவபரம்பொருளுக்கு புருஷ சக்தியாக உள்ளவர். "மாலும் ஓர் பாகம் கொண்டார்" என்னும் அப்பர் வாக்கினை எண்ணுக. அப்படிப்பட்ட திருமால்கிருஷ்ணனாக ஆயர்குலத்தில் அவதரித்துவெண்ணெய் திருடி பட்டபாடுகளை இங்குக் குறிப்பிடுகின்றார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

நாய்வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான்

தூயனாம் காதிமகன்,சோமேசா! - ஆயதனால்

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

 

இதன் பொருள்---

 

            சோமேசா! தூயன் ஆம் காதி மகன் --- பரிசுத்தனாகிய விசுவாமித்திர முனிவன்நாய் வால் களவினால் --- நாயினது நீரில் ஊறிய வாலைக் களவு செய்தமையால்ஞாலம் இகழப்பட்டான் --- உலகத்தாரால் இழித்து உரைக்கப்பட்டான்.. ஆயதனால் --- அந்தக் காரணம் பற்றி,


            எள்ளாமை வேண்டுவான் என்பான் --- வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க --- யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க என்றவாறு.

 

     இந்த வரலாறுமணிமேகலை என்னும் காப்பியத்திலும் குறிக்கப் பெற்றது காணலாம்...

 

            "புன்மரம் புகையப் புகை அழல் பொங்கி

            மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்,

            அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்

            இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்

            அரும்பசி களைய ஆற்றுவது காணான்

            திருந்த நாய் ஊன் தின்னுதல் உறுவோன்."

                                                ---மணிமேகலை - பாத்திரம்பெற்ற காதை.

 

            விசுவாமித்திர முனிவர் பசியின் கொடுமையால் நாய் ஊன் தின்பதற்கு முயன்றார் என்பதைமனுஸ்மிருதி, 10-ஆம் அத்தியாயம், 108-ஆம் சுலோகத்தில் காண்க.

 

            விசுவாமித்திர முனிவர் நீண்ட காலம் நிஷ்டை கூடி இருந்து கண் விழித்தபோது எங்கும் வற்கடம் (பஞ்சம்) சென்றமையால்தமது பசித் தீயைத் தணித்தற்கு ஒன்றும் பெறாதுஒரு வேடன் மனையில் நாய் இறைச்சி இருக்கக் கண்டு களவாடி வாலை உண்ணப் புகுமளவில் வேடன் வர,நடந்தது கூறிப் பொறுத்துக் கொள்ளவேண்டிப் பின் மழை பெய்வித்தார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்,

தள்ளாமை வேண்டுந் தகுதி உடையன,

நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு,யார்மாட்டும்

கொள்ளாமை வேண்டும் பகை   .     ---  நான்மணிக் கடிகை.

 

இதன் பதவுரை ---

 

     கடிய வருதலால் கள்ளாமை வேண்டும் --- அஞ்சத் தகுந்த துன்பங்கள்பின்பு வருதலால்பிறர்பொருளைத் திருடாமை வேண்டும்தகுதியுடையன தள்ளாமை வேண்டும் --- தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்சிறியாரோடு நள்ளாமை வேண்டும் --- சிற்றினத்தாரோடு நட்புக் கொள்ளாமை வேண்டும்யார் மாட்டும் பகை கொள்ளாமை வேண்டும் --- யாரிடத்திலும்பகையைப் பாராட்டாமை வேண்டும்.

 

களவு செய்குதல்,மனத்தினில் நினைக்குதல்,கவர்என்று

உளம் மகிழ்ந்து உபதேசித்தல்,உதவிசெய்து ஒழுகல்,

வளம் இலாப்பொருள் மாறுதல்,மிகுவிலை வாங்கல்,

அளவி னும்நிறை தனினும்வஞ் சித்தப கரித்தல். --- நீதிநூல்.

 

      களவு செய்தல்செய்ய நினைத்தல்செய் என்று வழி சொல்லிக் கொடுத்தல்துணைபோதல்பழுதான பொருளை விற்றல்கூடின விலை வாங்குதல்அளத்தல் நிறுத்தல் முதலியவற்றில் ஏமாற்றிக் கொள்ளையிடல் இவையெல்லாம் களவின்பால் படுவன.

            

கண்டு எடுத்தஓர் பொருள் அனுபவித்தலும்,களவின்

பண்டம் வாங்கலும்,வாங்கிய கடன்கொடாப் பழியும்,

மண்டும் வண்பொருள் ஆசையால் பொய்வழக்கு இடலும்

தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும்.   ---  நீதிநூல்.

 

      கண்டெடுத்த பிறன்பொருளைக் கொண்டு அனுபவித்தலும்திருட்டுத் தனமாகநுகர்பொருளை வாங்கலும்பெற்ற கடனைத் திரும்பக் கொடுக்காமல் இருத்தலும்,பேராசையால் இல்லாத வழக்கைத் தொடர்தலும்உழைப்பவர்க்குத் தரும் கூலியைக் குறைத்துக் கொடுத்தலும் களவாம்.

 

நட்டமே பிறர்க்கு எய்திடச் செய்தலும்,நம்பி

இட்டர் வைத்த நற்பொருள் அபகரித்தலும்,இறப்ப

வட்டம் வட்டிகள் வாங்கலும்,சூதிற்பொன் பெறலும்

இட்ட வேலை செய்யாது கைக் கூலிகொள் இயல்பும்.    ---  நீதிநூல்.

 

    பிறருக்குப் பொருள் இழப்பு உண்டாக்கலும்நண்பர்கள் நம்பித் தந்த பொருளைத் தனதாக்கிக் கொள்ளலும்,அளவு மீறி வட்டம் வட்டி வாங்குதலும்,சூதாடிப் பொருள் சேர்த்தலும்வேலை செய்யாது கூலி பெறுதலும் களவாம்.

 

கன்னம் வைத்தல்செல்லாப் பணம் வழங்குதல்,கள்ளம்

மன்னு சீட்டை உண்டாக்குதல்,கைலஞ்சம் வாங்கல்,

என்னும் யாவுமே களவதாம்,இத்தொழிற்கு இயை ஓர்

மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால்.     ---  நீதிநூல்.

 

      கன்னம் வைத்தலும்செல்லாக் காசை வழங்கலும்கள்ளச் சீட்டுப் பிறப்பித்தலும்கைக்கூலி வாங்கலும் முதலிய எல்லாமும் களவாகும். களவு செய்வோர் வேந்தரால் தண்டிக்கப்படுவர். பழியும் நரகும் எய்துவர்.

 

கள்ளான்சூது என்றும் கழுமான்,கரியாரை

நள்ளான்யிர் இரங்க நாவாடான்,நள்ளானாய்

ஊன்மறுத்துக் கொள்ளானேல் உடம்பு எஞ்ஞான்றும்

தான் மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பதவுரை ---

 

     கள்ளான் --- (பிறர் பொருளைக்) களவு செய்யாதவனாய்சூது என்றும் கழுமான் --- சூதாட்டத்தில்எக்காலத்தும்கலவாதவனாய்கரியாரை நள்ளான் --- கீழ்மக்களை நட்புக் கொள்ளாதவனாய்உயிர் இரங்க நா ஆடான் --- பிறவுயிர்கள் இரங்கும்படி சொல்லாடாதவனாய்ஊன் நள்ளான் ஆய் --- ஊன் உணவைப் பொருந்தாதவனாய்மறுத்து --- தடுத்துகொள்ளானேல் --- அவ்வூன் உணவை ஒருவன் கொள்ளாதிருப்பானாயின்தான் --- அவன் தான்மறுத்து --- மீட்டும்ஊன் உடம்பு --- தசையோடு கூடிய உடம்பைஎஞ்ஞான்றும் --- எந்நாளும்தளர்ந்து --- ஒழுக்கம் தளரந்துகொள்ளான் --- எடுக்கமாட்டான்.

 

     பிறர் பொருளைக் கள்ளாமலும்,சூதாடாமலும்,கயவருடன் நட்புக் கொள்ளாமலும்பிறர் வருந்த வன்சொல் கூறாமலும்ஊன் உண்ணாமலும் ஒருவன் இருப்பானாயின் அவன் மீட்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...