அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விடம்என அயில்என (பொது)
முருகா!
இயமன் வருமளவிலாவது அடியேனுக்கு நல்லுணர்வு அருள்க.
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும்
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
விடம்என, அயில்என, அடுவன, நடுவன, மிளிர்வன, சுழல்விழி
வித்தைத்குப் பகர் ஒப்புச் சற்றுஇலை ...... என்றுபேசும்,
விரகு உடை வனிதையர் அணைமிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டு,உயிர் தட்டுப் பட்டு, ...... உழன்றுவாடும்
நடலையில், வழிமிக அழிபடு தமியனை, நமன்விடு திரள்அது,
கட்டிச் சிக்கென ஒத்தி, கைக்கொடு ...... கொண்டுபோயே,
நரகு அதில் விடும் எனும் அளவினில், இலகிய நறைகமழ் திருவடி
முத்திக்கு உட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ?
இடிஎன அதிர்குரல் நிசிசரர் குலபதி இருபது திரள்புயம்
அற்று, பொன்தலை தத்தத,கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரிஎழ முடுகிய சிலையினர், அழகு ஒழுகு இயல்சிறு வினைமகள்,
பச்சைப் பட்சி தனைக் கைப் பற்றிடும் ...... இந்த்ரலோகா!
வடவரை இடிபட, அலைகடல் சுவறிட, மகவரை பொடிபட,
மைக்கண் பெற்றிடும் உக்ரக் கடச்செவி ...... அஞ்ச,சூரன்
மணிமுடி சிதறிட, அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட,
முட்டிப் பொட்டுஎழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
பதவுரை
இடி என அதிர் குரல் நிசிசரர் குலபதி--- இடிபோல அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடைய அரக்கர்கள் குலத் தலைவன் ஆகிய இராவணனின்,
இருபது திரள்புயம் அற்று--- இருபது திரண்ட தோள்களும் அற்று விழுமாறும்,
பொன்தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி எரிஎழ முடுகிய சிலையினர்--- அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகச் சிதறி விழுமாறும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம் என்னும்) வில்லை உடைய இராமனாகிய திருமாலின்
அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்--- அழகு நிறைந்த தன்மையள் ஆன இளையவளும்,
பச்சைப் பட்சி தனைக் கைப்பற்றிடும் இந்த்ரலோகா---
பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளிநாயகியை மணந்த விண்ணுலக சேனைக்கு அதிபரே!
வடவரை இடிபட--- வடக்கே இருந்த கிரவுஞ்ச மலை இடிபட்டுப் பொடியாகவும்,
அலைகடல் சுவறிட--- அலைகளை உடைய கடல் வற்றிப் போகவும்,
மகவரை பொடி பட--- மகாமேரு மலையும் பொடிபடவும்,
மைக் கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச--- கருமையான கண்களை உடையதும், உக்கிரமான ஆதிசேடன் என்னும் பாம்பு அஞ்சவும்,
சூரன்மணி முடி சிதறிட--- சூரபதுமனுடைய மணிமுடிகள் சிதறி விழவும்,
அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட--- பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) வயிரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இடவும்,
முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே--- (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தனிப்பெருந்தலைவரே!.
விடம் என--- விடத்தைப் போலக் கொடியதும்,
அயில் என அடுவன--- அம்பினைப் போலக் கொல்லும் தன்மை வாய்ந்ததும்,
நடுவன மிளிர்வன--- இயமனுக்கு ஒப்பாக விளங்குவனவும் ஆகிய தன்மைகளை உடைய
சுழல் விழி --- (விலைமாதர்களின்) சுழலுகின்ற கண்களின்
வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும்--- மாய வித்தைக்கு சொல்லக் கூடிய உவமையாகச் சொல்லக்கூடியவை ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க
விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய--- தந்திரத்தை உடைய பெண்களின் படுக்கையில் மன் உருகி இருந்து,
வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு--- பலவிதமான காம லீலைகளில் விருப்பம் கொண்டு,
உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும்--- உயிரானத் அலைச்சல் உற்றுக் கலங்கி வாடுகின்ற,
நடலையின் வழி--- துன்பத்தைத் தருகின்ற வழியில் சென்று,
மிக அழிபடு தமியனை--- மிகவும் அழிகின்ற தனியன் ஆன என்னை,
நமன் விடு திரள் அது கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு போயே --- இயமன் அனுப்புகின்ற தூதர் கூட்டமானது கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய்,
நரகு அதில் விடும் எனும் அளவினில்--- இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்று சொல்லுகின்ற காலம் வருமளவில்,
இலகிய நறை கமழ் திருவடி முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ---விளங்கும் நறுமணம் வீசும் தேவரீரது திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு உண்டாகாதோ?
பொழிப்புரை
இடிபோல அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடைய அரக்கர்கள் குலத் தலைவன் ஆகிய இராவணனின், இருபது திரண்ட தோள்களும் அற்று விழுமாறும், அவனது அழகிய பத்து தலைகளும் கொத்தாகச் சிதறி விழுமாறும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய கோதண்டம் என்னும் வில்லை உடைய இராமனாகிய திருமாலின் அழகு நிறைந்த தன்மையள் ஆன இளையவளும், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளிநாயகியை மணந்த விண்ணுலக சேனைக்கு அதிபரே!
வடக்கே இருந்த கிரவுஞ்ச மலை இடிபட்டுப் பொடியாகவும், அலைகளை உடைய கடல் வற்றிப் போகவும், மகாமேரு மலையும் பொடிபடவும், கருமையான கண்களை உடையதும், உக்கிரமான ஆதிசேடன் என்னும் பாம்பு அஞ்சவும்,சூரபதுமனுடைய மணிமுடிகள் சிதறி விழவும், பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் சிவகணங்களான வயிரவர்கள் போர்க்களத்தில் நடனம் இடவும், பகைவர்களைத் தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தனிப்பெருந்தலைவரே!.
விடத்தைப் போலக் கொடியதும், அம்பினைப் போலக் கொல்லும் தன்மை வாய்ந்ததும், இயமனுக்கு ஒப்பாக விளங்குவனவும் ஆகிய தன்மைகளை உடையவிலைமாதர்களின் சுழலுகின்ற கண்களின் மாய வித்தைக்கு உவமையாகச் சொல்லக் கூடியவை ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தை உடைய பெண்களின் படுக்கையில் மன் உருகி இருந்து, பலவிதமான காம லீலைகளில் விருப்பம் கொண்டு, உயிரானத் அலைச்சல் உற்றுக் கலங்கி வாடுகின்ற, துன்பத்தைத் தருகின்ற வழியில் சென்று, மிகவும் அழிகின்ற தனியன் ஆன என்னை, இயமன் அனுப்புகின்ற தூதர் கூட்டமானது கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்று சொல்லுகின்ற காலம் வருமளவில்,விளங்கும் நறுமணம் வீசும் தேவரீரது திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு உண்டாகாதோ?
விரிவுரை
விடம் என---
விடமானது உண்டாரைக் கொல்லும்.
விலைமாதரின் கண்கள் கண்டாரைக் கொல்லும்.
அயில் என அடுவன---
அயில் --- கூர்மை. அறிவு கூர்மையாக உள்ளதோ இல்லையோ, கண்கள் மட்டும் கூர்மையாக இருக்கும்.
நடலையின் வழி---
நடலை --- துன்பம்.
அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்---
சிறுமகள் --- இளைய மகள் ஆகிய வள்ளிநாயகியார்.
வடவரை இடிபட---
வடவரை என்பது கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.
கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். வினைகள் அளப்பில. பெருத்தே இருக்கும்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி,அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
அலைகடல் சுவறிட---
சுவறுதல் --- வற்றிப் போதல்.
அலைகள் எழுவதால் கடலானது சதாகாலமும் இரைந்து கொண்டே இருக்கும். கடலால் சூழப்பட்டது இந்த உலகம்.
"அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு.
காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார்.
செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.
(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
(2) கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.
(3) கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.
(4) கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.
(5) கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.
(6) கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.
உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.
(1) ஒரு நாளைக்கு 50ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.
(நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?)
(2) இந்த மருந்து 250வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000இனாம்.
(3) நோயில்லாத பொழுது டாக்டர் சர்டிபிகேட் தந்து லீவு எடுத்தல்; இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.
உயிர்களின் வினைப் பயனுக்கு ஏற்ப பிறவியானது தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நமது முன்னோர். பிறவிப் பெருங்கடலை வற்றிப் போகச் செய்வது ஞானம். எனவே,தனது ஞானசத்தியாகிய வடிவேலை விடுத்து, கடல் வற்றிப் பொகுமாறு செய்தார் இளம்பூரணர் ஆகிய முருகப் பெருமான்.
மகவரை பொடி பட---
மகவரை --- மேரு மலை.
மைக் கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச---
மைக்கண் --- கருவிழி உடைய கண். பசுமையான கண் என்றும் பொருள்படும்.
கண்செவி --- கண்ணையே செவியாக உடையது பாம்பு.
"பசுங்கண் வாளரவு" என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளது காண்க.
பைங்கண்வாள் அரவுஅணை அவனொடு பனிமல ரோனும் காணாது
அங்கணா அருள்என அவரவர் முறைமுறை இறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே. --- மூன்றாம் திருமுறை.
கருத்துரை
முருகா! இயமன் வருமளவிலாவது அடியேனுக்கு நல்லுணர்வு அருள்க.
No comments:
Post a Comment