திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 49 -- காலம் அறிதல்
அதாவது, தன் வலியும் துணை வலியும் மிகுதியாக உடையவனாய் இருந்தாலும், பொருந்தும் காலம் அறிந்து செயலைச் செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "காக்கையானது தன்னிலும் வலிமை உள்ள கோட்டானைப் பகல் பொழுதில் வெல்லும் (இரவில் வெல்ல முடியாது). அதுபோல, பகையை வெல்லவேண்டுமானால், அதற்குரிய காலம் அமைதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.
காக்கையை விடவும் ஆந்தையானது வலிமை உடையதாக இருக்கினும்,அதன் கண்ணொளி செல்லாத பகல் பொழுதில், அது வெளிவருமாயின், அதன் பகையாகிய காக்கை எளிதில் அதனைக் குத்திக் கொன்று விடும். அதுபோலவே, காலம் அறிந்து பகையை வெல்லவேண்டும் என்றார்.
மனுதரும சாத்திரம் ஏழாவது அத்தியாயத்தில், "சுபமான மார்கழி மாதத்தில் அரசன் சண்டைக்குப் போகவேண்டும். தனக்குப் பலக் குறைவு இல்லாது இருந்து, பலம் உள்ள காலத்திலேயே சத்துருவின் தேசத்தை எதிர்க்க வேண்டும் என்று மனம் இருந்தால், பங்குனி சித்திரை மாதங்களிலும் போகலாம். மற்ற மாதங்களிலும், தனக்கு வெற்றி நிச்சயம் உண்டாகும் என்றும், தனது சத்துரு சதுரங்க பலம் இல்லாமல் துன்பப்படுகின்றான் என்று தோன்றினாலும் போகலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
திருக்குறளைக் காண்போம்...
பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கூகையைக் காக்கை பகல் வெல்லும்--- தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லா நிற்கும்,
இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும்--- அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது.
(எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்தன் ஆகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப
ஆயிரம் காக்கைக்கோர் கல். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
மறுமனத்தன் அல்லாத --- குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும், மா நலத்த --- சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய,வேந்தன் --- அரசன், உறுமனத்தன் ஆகி ஒழுகின் --- யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின், செறும் மனத்தார் --- வெல்லும் மனதுடைய அரசர்கள், பாயிரம் கூறி படை தொக்கால் --- வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால், என் செய்ப --- அப்படைகள் என்ன செய்யும்?, ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் --- ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றிய துணையானே பறந்து செல்வர்.
அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டு மறத்தை வெல்லலாம்.
சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?
--- கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.
இதன் பொருள் ---
சீலம் அல்லன நீக்கி --- நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி; செம்பொன் துலைத் தாலம் அன்ன --- சிவந்த பொன்னை நிறுத்துகின்றதராசினது நடுநாவை ஒத்த; தனி நிலை --- ஒப்பற்ற நடுவு நிலைமையை; தாங்கிய --- உடைய; ஞால மன்னற்கு --- உலகை ஆளும் அரசனுக்கு; நல்லவர் --- அமைச்சர்கள்; நோக்கிய --- ஆராய்ந்துரைத்த; காலம் அல்லது--- பொழுது அல்லாமல்; கண்ணும் உண்டாகுமோ? ---வேறு கண்ணும்உண்டாகுமோ?’ (இல்லை).
"மல் காக்கும் மணிப் புயத்து
மன்னன் இவன். மழவிடையோன்
வில் காக்கும் வாள் அமருள்
மெலிகின்றான் என இரங்கி.
எல் காக்கும் முடி விண்ணோர்
படை ஈந்தார் என. வேந்தர்.
அல் காக்கை கூகையைக் கண்டு
அஞ்சினவாம் என. அகன்றார்". --- கம்பராமாயணம், கார்முகப் படலம்.
இதன் பொருள் ---
எ ல்காக்கும் முடி விண்ணோர் --- ஒளிவிடும் முடியணிந்த தேவர்கள்; மல் காக்கும் --- வலிமை பெற்ற; மணிப் புயத்து --- அழகிய தோள்களைக் கொண்ட; மன்னன் இவன் --- இந்தச் சனகன்; மழவிடையோன் வில் --- காளை ஊர்தியை உடைய சிவனது வில்லை; காக்கும் வாள் அமருள் --- காப்பதற்காகச் செய்யப்படும் கொடிய போரில்; மெலிகின்றான் --- வரவரத் தளர்ச்சி அடைகின்றான்; என ---என்ற காரணத்தினால்; இரங்கி --- இரக்கம் கொண்டு; படை ---நால்வகைப் படைகளை; ஈந்தார் என --- அளித்து உதவினார் என்பதால்; வேந்தர் --- பகையரசர்; அல் --- இரவில்; காக்கை --- காக்கைகள்; கூகையைக் கண்டு --- கோட்டானைப் பார்த்து; அஞ்சின என ---அஞ்சியவற்றைப் போல; அகன்றார் ---அஞ்சி ஓடினார்கள்.
பகைவர்களோடு சனகன் போர் செய்து தளரும்போது வானவர்படையைத் தந்தனர். அதனால் இனி இவ்வரசனுடன் போர் புரிய முடியாது எனப் பகைவர் அஞ்சியோடினர். இனம் பெரியதாயும் வலியவாயும் உள்ள காக்கைக் கூட்டங்கள் கூகைகளைப் பகலில் வெல்லுமாயினும், இரவில் வலியற்ற சில கூகைகளுக்கு அவை அஞ்சிப் பதுங்கும் என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment