049. காலம் அறிதல் --- 06. ஊக்கம் உடையான்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "மன எழுச்சி மிக்க ஒருவன் அடங்கி இருப்பதுபோர் செய்கின்ற ஆட்டுக்கடா தனது பகையைத் தாக்குவதற்குப் பின்னே கால் வாங்கும் தன்மையை ஒத்தது" என்கின்றார் நாயனார்.

 

     இரண்டு ஆடுகள் சண்டை இடும் காலத்தில்எந்த ஆடு அதிகமாகப் பின் சென்றுபிறகு முன்வந்து மோதுகின்றதோ,அந்த ஆட்டிற்கு வெற்றி உண்டாவது திண்ணம் என்பதைக் காட்சி அளவில் காண்பதால்அதையே இங்கு எடுத்துகாட்டிஒருவன் எவ்வளவு தூரம் காத்திருந்து காலம் கனிந்து வந்த போது செயலைச் செய்வானானல் அவனுக்கு வெற்றி உறுதி எனப்பட்டது. பின்வாங்கிக் காத்திருப்பது தோல்வி போல் தோன்றும். ஆனால் அதுவே வெற்றிக்கு முதற்படி. வலி மிகுந்து இருந்தாலும்காத்திருந்து காலம் வந்தபோது செயலைத் தொடங்குதல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

ஊக்கம் உடையான் ஒடுக்கம்பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.                     

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      ஊக்கம் உடையான் ஒடுக்கம்--- வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு

 

     பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து--- பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.

 

      (உவமைக்கண் 'தாக்கற்குஎன்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

வீமன்அவை முன்மனையை வேட்டானைக் கண்டும்,ஒரு

தூமொழியேனும் புகலான்,சோமேசா! --- ஆம்என்றே

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.

 

இதன் பொருள்---

 

            சோமேசா! ஊக்கம் உடையான் ஒடுக்கம் --- வலி மிகுதியுடைய அசரன் பகைமேல் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு,   பொரு தகர் தாக்கற்கு --- போர் செய்கின்ற ஆட்டுக் கிடாய் தன் பகை கெடத் தாக்கற் பொருட்டுபேரும் தகைத்து --- பின்னே கால் வாங்கும் தன்மைத்து,

 

            வீமன் --- பாண்டவர் ஐவருள் ஒருவனாகிய வீமசேனன்அவை முன் --- அரசவைக்கு எதிரில்மனையை வேட்டானை கண்டும் --- தமது மனைவியாகிய திரௌபதியை விரும்பினவனாகிய கீசகனை நேரே கண்டு வைத்தும்ஆம் என்று --- அக் கீசகனைக் கொல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்கும் என்றுஒரு தூ மொழியேனும் புகலான் --- வன்சொல் ஒன்றையேனும் உரைத்திலன் ஆகலான் என்றவாறு.

 

            பாண்டவர்கள் சூதாடி நாடிழந்துகாடுறைந்துகரந்துறைதல் வேண்டி மாறுவேடமும் வேறு பெயரும் கொண்டுவிராடராசனைச் சார்ந்துஒவ்வொரு தொழிலில் அமர்ந்து வாழ்கையில்,திரௌபதி விராடராசனுடைய மனைவியாகிய சுதேஷணைக்குப் பணிப்பெண் ஆனாள். ஒருநாள்அச் சுதேஷணையின் உடன் பிறந்தானாகிய கீசகன்அவளிடம் வந்தபோதுதிரௌபதியைக் கண்டு மோகம் கொண்டுசுதேஷணை என்ன சொல்லியும் கேளாது அவளை அணுகினான். அவள் ஓடிப்போய் விராடராசனது சபையின் முன் விழுந்தாள். அங்கும் அவளை விடாது தொடர்ந்து வந்த கீசகன் கைப்பற்றும் முன்சூரியனால் ஏவப்பட்ட ஓர் ஏவலாளன் அவனை எடுத்து அப்பால் எறிந்தான். அதுகண்டு பலாயனன் என்னும் பெயரோடு மடைத்தொழில் தலைவனாய் இருந்த வீமன் அவனைக் கொல்லுதற்கு ஒரு மரத்தைப் பெயர்த்தெடுக்கச் சென்றபோதுகங்கபட்டர் என்னும் பெயரோடு சந்நியாசியாய்ச் சபையில் விராடன் அருகில் இருந்த தருமபுத்திரர்,  'இம் மரம் எரியாதுஎன்ற குறிப்புணர்ந்து அப்போது ஒன்றும் சொல்லாது வாளா இருந்தான். மறுநாள் நள்ளிரவில் திரௌபதியைக் கொண்டு ஆசைகாட்டிக் கீசகனை ஒரு சோலைக்கு வருவித்துக் கொன்றான்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக"விவேக சிந்தாமணி" என்கின்ற பழம்பெரும் நூலில் ஒரும் ஒரு பாடலைப் பார்ப்போம்....

 

 "வில்லது வளைந்தது என்றும்

     வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும் 

     வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப் 

     பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா 

     நஞ்சு எனக் கருதலாமே.     

 

இதன் பதவுரை ---

 

     (உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து) வில்லது வளைவுற்றது என்றும் --- இந்த வில்லானது வளைந்து போனது (அது தீங்கு செய்யாது) என்றும்; (காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து) வேழம் அது உறங்கிற்று என்றும் --- இந்த யானையானது உறங்கிவிட்டது (அதனால்,அது தீங்கு செய்யாது) என்றும், (ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து) வல்லியம் பதுங்கிற்று என்றும் --- இந்த புலியானது பதுங்கி விட்டது (அதனால் இது தீங்கு செய்யாது) என்றும், (தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்துவளர் கடா பிந்திற்று என்றும் --- இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து,பின்னே சென்று விட்டது (அதனால் இது பினும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது) என்றும், (தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்துகீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும்) பெரியோர்கள் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் என்றும் --- இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள் (எனவேஇவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்) என்றும்எண்ணிக் கொண்டுநல்லது என்று இருக்க வேண்டா --- (இச் செய்கைகளால் வருவது) நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம்நஞ்சு எனக் கருதலாம் --- (இவற்றால் வருவது) நிச்சயம் நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.


     Do not remain complacent by thinking that a curved bow, a slepping elephant, a hiding - tiger, a back-stepping ram, forbearing elders who endure the taunts of the foul-mouthed are innocuous. They may prove to be destructive. The tolerant elders, especially, shall not be reckoned as disposed to forgiveness of insults under the mistaken notion that their patience is due to the dread of the scoffers. They should know that those who scold the elders will, definitely and automatically, come to grief in due course.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...