வயலூர் --- 0915. கமையற்ற சீர்கேடர்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கமைஅற்ற சீர்கேடர் (வயலூர்)

 

முருகா!

சலனப்படாத ஞானத்தை அடியேனுக்கு அருள்வாய்.

 

 

தனத்தத தானான தனதத்த தானான

     தனதத்த தானனா ...... தந்ததான

 

 

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்

     களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்

 

கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்

     கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்

 

சமயத்த ராசார நியமத்தின் மாயாது

     சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்

 

சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது

     சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்

 

அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக

     மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல்

 

அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்

     அருணச்சி காநீல ...... கண்டபார

 

மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி

     மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம்

 

வரசத்தி மேலான பரவத்து வேமேலை

     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

கமை அற்ற சீர்கேடர்,  வெகு தர்க்க கோலாலர்,

     களை உற்று மாயாது, ...... மந்த்ரவாதக்

 

கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர்,

     கருமத்தின் மாயாது, ...... கொண்டு பூணும்

 

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது,

     சகளத்து உளே நாளும் ...... நண்பு உளோர்செய்,

 

சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது,

     சலனப் படா ஞானம் ...... வந்து தாராய்.

 

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம்

     அது துக்கமே ஆக, ...... மிஞ்சிடாமல்,

 

அடம் இட்ட வேல்வீர! திருவொற்றியூர் நாதர்

     அருணச் சிகா நீல ...... கண்ட பார,

 

மம பட்ச மாதேவர் அருமைச் சுவாமீ!

     நிமல நிட்களா மாயை, ...... விந்துநாதம்

 

வர சத்தி மேலான பர வத்துவே! மேலை

     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.

    

பதவுரை

 

         அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் --- போர்க்களத்தில், கள் உண்டு மயக்கம் கொள்ளுகின்றவர்களான, திதியின் மக்கள் ஆகிய அரக்கர்களின் அறிவு மயக்கமானது மிகாமல்படிக்கு,

 

     அடம் இட்ட வேல் வீர --- சஞ்சாரம் செய்யக் கூடிய வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே!

 

      திருவொற்றியூர் நாதர் --- திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரும்,

 

     அருணச் சிகா --- சிவந்த சடைமுடியினை உடையவரும்,

 

     நீலகண்ட --- கறுத்த கண்டத்தினை உடையவரும்,

 

     பார --- பெருமை மிக்கவரும்,

 

     மம பட்ச மாதேவர் அருமைச் சுவாமீ --- நம் மீது அன்பு கொண்டவரும் ஆன சிரபரம்பொருளுக்கு அருமையாக வாய்த்தருளிய சுவாமிநாதரே!

 

      நிமல --- மலம் அற்றதும்,

 

     நிட்களா --- உருவம் அற்றதும்,

 

     மாயை விந்து நாதம் --- மாயை, விந்து, நாதம் ஆகியவற்றின் வடிவமாக உள்ளவரும்,

 

     வர சத்தி மேலான பர வத்துவே --- வரங்களைத் தருகின்ற ஆற்றல் மிக்க மேலான பரம்பொருளே!

 

      மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே --- வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள தேவர்களின் தனிப்பெருந்தலைவரே!

 

      கமை அற்ற சீர்கேடர் ---  பொறுமை என்பது இல்லாத ஒழுக்கக் கேடர்களை,

 

     வெகு தர்க்க கோலாலர் --- வெகுவாகத் தர்க்கம் புரிகின்ற ஆரவாரிப்பு உள்ளவர்கள்,

 

     களை உற்று மாயாது --- இவர்களது சொற்களால் உள்ளச் சோர்வு அடைந்து மடியாமலும்,

 

      மந்த்ர வாத --- மந்திர வாதம் புரிகின்,

 

     கடைகெட்ட --- இழிவா,

 

     ஆபாதம் உறு --- தீக்குணம் பொருந்திய

 

     சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது --- அழகிய கோமாளிகள் புரிகின்ற செய்கைகளால் மடியாமலும்,

 

      கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது --- சமய நெறியை மேற்கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோர் கொண்டுள்ள ஆசார நியமங்களால் மடியாமலும்,

 

       சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் --- நாள்தோறும் உருவ வழிபாட்டினை மேற்கொண்டு அன்பு செய்கின்ற,

 

     சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது --- சரியை, கிரியை, யோகம் என்னும் நியங்களால் மடியாமலும்,

 

      சலனப் படா ஞானம் வந்து தாராய் --- அசைவில்லாத ஞானத்தை அடியனுக்குத் தந்து அருளுவாயாக.

 

பொழிப்புரை

 

     போர்க்களத்தில், கள் உண்டு மயக்கம் கொள்ளுகின்றவர்களான, திதியின் மக்கள் ஆகிய அரக்கர்களின் அறிவு மயக்கமானது மிகாமல்படிக்கு, சஞ்சாரம் செய்யக் கூடிய வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே!

 

         திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரும், சிவந்த சடைமுடியினை உடையவரும், கறுத்த கண்டத்தினை உடையவரும், பெருமை மிக்கவரும், நம் மீது அன்பு கொண்டவரும் ஆன சிரபரம்பொருளுக்கு அருமையாக வாய்த்தருளிய சுவாமிநாதரே!

 

         மலம் அற்றதும், உருவம் அற்றதும் ஆக விளங்கி,  மாயை, விந்து, நாதம் ஆகியவற்றின் வடிவமாக உள்ளவரும், வரங்களைத் தருகின்ற ஆற்றல் மிக்க மேலான பரம்பொருளே!

 

         வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள தேவர்களின் தனிப்பெருந்தலைவரே!

 

         பொறுமை என்பது இல்லாத ஒழுக்கக் கேடர்களை, வெகுவாகத் தர்க்கம் புரிகின்ற ஆரவாரிப்பு உள்ளவர்கள், இவர்களது சொற்களால் உள்ளச் சோர்வு அடைந்து மடியாமலும், மந்திர வாதம் புரிகின், இழிவா, தீக்குணம் பொருந்திய அழகிய கோமாளிகள் புரிகின்ற செய்கைகளால் மடியாமலும், சமய நெறியை மேற்கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோர் கொண்டுள்ள ஆசார நியமங்களால் மடியாமலும், நாள்தோறும் உருவ வழிபாட்டினை மேற்கொண்டு அன்பு செய்கின்ற, சரியை, கிரியை, யோகம் என்னும் நியங்களால் மடியாமலும், அசைவில்லாத ஞானத்தை அடியைனுக்குத் தந்து அருளுவாயாக.

 

 

விரிவுரை

 

கமை அற்ற சீர்கேடர் --- 

 

கமை --- பொறுமை, நிறைவு.

 

சீர்கேடு --- ஒழுக்கக் கேடு. நிலைகுலைவு, அழகின்மை.

 

ஆகமம் என்னும் சொல்லுக்கு, ஆன்ம நிறைவைத் தருவது என்று பொருள். "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்றார் மணிவாசகப் பெருமான். ஆகமநூல் என்பது இம்மை மறுமைக்கு உரிய முடிந்த பொருள்களை அறிவுறுத்தும் ஆறிவுநூல் ஆகும்.

 

வேதம் என்பது வாழ்வியல் நூல்.

ஆகமம் என்பது வழிபாட்டு நூல்.

 

வழிபாட்டில் சிறந்து நிற்க, உள்ளத்தில் பொறுமை நிலைபெறும். பொறுமை நிலைத்து நிற்க, ஆன்ம நிறைவு உண்டாகும். எனவே, "கொள்கையினால் உயர்ந்த நிறை" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். நிறைவு இல்லாதபோது, ஒழுக்கக் கேடு நிறைந்து இருக்கும். "நிறை காக்கும் காப்பே தலை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

வெகு தர்க்க கோலாலர் ---

 

கோலாகலம் என்னும் சொல், கோலாலம் என வந்தது. இதற்கு, பகட்டு, பேரொலி, கூக்குரல் என்று பொருள்.

 

தர்க்கம் --- வாக்குவாதம், நியாவாதம்.

 

"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பது திருவாசகம். 

"தர்க்கம் இடும் தொல்நூல் பரசமயம் தோறும், அதுஅதுவே நல்நூல் எனத் தெரிந்து நாட்டுவித்து"

 

என்றார் குமரகுருபர அடிகள்.

 

சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று தர்க்கம் இட்டு, அவ் அச்சமய நூலின் ஒழுக்கத்தில் படிந்து கிடப்பர்.

 

களை உற்று மாயாது ---

 

களை --- குற்றம், அயர்வு, சோர்வு.

 

உள்ள நிறைவு பெறாத சமயவாதிகள் இடுகின்ற தர்க்கத்தைக் கேட்டுக் கேட்டு, உள்ளம் தெளிவு பெறாது.

 

மந்த்ர வாத கடைகெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது ---

 

கடைகெட்ட ஆபாதம் --- இழிந்த தீக்குணம்.

 

கோமாளம் --- குதித்து ஆடுகின்ற ஓர் அநாகரிகக் கூத்து.

 

கோமாளி --- தனது சொல்லாலும், செயலாலும் மற்றவரை சிரிக்கச் செய்பவன். சிந்திக்கச் செய்பவன் அல்ல.

 

கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது ---

 

ஆசாரம் --- ஒழுக்கம். ஒழுகுவது ஒழுக்கம் என்று ஆனது.

 

நியமம் --- செய்கடன், விதி, வரையறுக்கப்பட்டது.

 

ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு ஆசார நியமத்தை உடையது. ஒன்றோடு ஒன்று ஒவ்வாதது. சமய சாத்திரங்களில் ஆசாரங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. "உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடல்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

 

என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

 

எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு, மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.

 

அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

 

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"

 

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

 

சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ, அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

 

கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

 

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது, சலனப் படா ஞானம் வந்து தாராய் ---

 

அகளம் --- களம் அற்றது. வடிவும் குறியும் அற்ற பரம்பொருள். இது சொரூப நிலை.

 

சகளம் --- உருவத் திருமேனி. தடத்த நிலை.

 

புறத்திலே செய்யும் உருவ வழிபாடு, அகவழிபாடாக மாறவேண்டும். அந்தப் பக்குவத்தை உயிரில் உண்டாக்க, பரமொபொருளாகிய இறைவன் தனது சொரூப நிலையில் இருந்து, சகளத் திருமேனி தாங்கி வந்து அருள் புரிகின்றது.

 

அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்,

சகளமாய் வந்தது என்று உந்தீபற,

தானாகத் தந்த்து என்று உந்தீபற. --- திருவுந்தியார்.

 

எல்லையற்ற பரம் பொருள் தன் பெருங்கருணையால் திரு உருத் தாங்கி ஞான ஆசிரியனாய் எழுந்தருளி வந்து ஆணவமாகிய மூலமலத்தினை அகற்றி, உயிர்களை ஆட்கொள்ள வந்தது.

 

அகளம், உருவற்று எல்லையற்று விளங்கும் தன்மை. சகளம், உருவம் கொண்டதனால் எல்லைக்கு உட்பட்ட திருமேனி. சகளம் என்பது, நம் போலும் மாயையின் காரியங்களால் ஆன உடம்பு அன்று, என்று உணர்த்துவதற்குச் சகளமயம் போல உலகில் தங்கித் திருவருள் புரியும்.

 

இறைவனை அடைவதற்கு உரிய முத்தி நெறிகள் நான்கு ---

 

சரியை - தாசமார்க்கம்.

கிரியை - சற்புத்திர மார்க்கம்

யோகம் - சகமார்க்கம்

ஞானம் - சன்மார்க்கம்.

 

இம்முறைகளையே திருமந்திரம் தெளிவு படுத்துகின்றது. இம் மார்க்கங்களின் இலக்கணம்...

 

தாசமார்க்கம் ---

         எளியநல் தீபம் இடல்மலர் கொய்தல்

         அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்

         பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி

         தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

 

சற்புத்திர மார்க்கம்---

         பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

         ஆசுஅற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை

         நேசித்திட்டு அன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்று

         ஆசுஅற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

 

சகமார்க்கம் ---

         ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்

         மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி

         போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி

         சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.

 

சன்மார்க்கம் ---

         பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்

         கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து,

         ஒசியாத உண்மைச் சொரூபோ தயத்துஉற்று,

         அசைவானது இல்லாமை ஆனசன் மார்க்கமே.

 

     இதை அரும்பு, மலர், காய், கனி ஆகியவற்றிற்கு ஒப்பிடுகின்றார் தாயுமானார்.

 

விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.

 

காய் முற்றிக் கனியாவது போல், யோக சாதனையில் சித்தி பெற்றோர்க்கே ஞானத்தில் இச்சை உண்டாகும். விட்ட குறையால், சில பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தின்கண் இச்சை எழுமாயின், அவர்கள் முற்பிறப்பில் யோக அனுட்டிப்பில் சித்தி பெற்றவர்களே ஆம். 

 

யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பேர் அன்பான

தாகியரும் யோகமுன்னே சார்ந்தோர் பராபரமே. ---  தாயுமானார்.

 

இந் நான்கு நிலையில் நின்றோர் முறையே பெறுமுத்திகள் நான்கு. அவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்.  சாரூபம் பெற்றார் அங்கிருந்தே மேலும் தவம் செய்து சாயுச்சியம் பெறுவர்.

 

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்

         தாதமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்

நன்மார்க்கம் நால் அவைதாம் ஞானம் யோகம்

         நல்கிரியா சரியைஎன நவிற்றுவதும் செய்வர்

சன்மார்க்க முத்திகள்சா லோக்கிய சா மீப்பிய

         சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம்

முன்மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி

         முடிவு என்பர்; மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்

 

தாதமார்க் கம் சாற்றில், சங்கரன்தன் கோயில்

         தலம் அலகுஇட்டு, இலகுதிரு மெழுக்கும் சாத்தி

போதுகளும் கொய்து பூந் தார்மாலை கண்ணி

         புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி

தீதுஇல் திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்

         செய்து திருவேடங்கண்டால் அடியேன் செய்வது

யாது? பணியீர்! என்று பணிந்து, அவர்தம் பணியும்

         இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்.

 

புத்திரமார்க் கம்புகலின், புதியவிரைப் போது

         புகைஒளிமஞ் சனம் அமுது முதல்கொண்டு ஐந்து

சுத்திசெய்துஆ சனம், மூர்த்தி மூர்த்தி மானாம்

         சோதியையும் பாவித்துஆ வாகித்து சுத்த

பத்தியினால் அருச்சித்து பரவிப் போற்றிப்

         பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி

நித்தலும் இக் கிரியையினை இயற்று வோர்கள்

         நின்மலன்தன் அருகிருப்பர், நினையுங் காலே.

 

சகமார்க்கம் புலன் ஒடுக்கித் தடுத்துவளி இரண்டும்

         சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்

அகமார்க்கம்அறிந்து அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அங்கு

         அணைந்துபோய் மேல்ஏறி அலர்மதிமண் டலத்தின்

முகமார்க்க அமுதுஉடலம் முட்டத் தேக்கி

         முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்

உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்

         உழத்தல், உழந் தவர்சிவன் தன் உருவத்தைப் பெறுவர்.

 

சன்மார்க்கம் சகலகலை புராணம் வேதம்

         சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து

பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம்

         பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்

நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான

         ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்

பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்

         பெருமைஉடையோர் சிவனைப் பெறுவர் காணே. ---  சிவஞானசித்தியார்.

 

     இப்படிச் சொல்லப்பட்ட சரியை, கிரியை, யோகம் என்பவை எல்லாம் ஞானத்தைப் பெற்று, அறைவன் திருவடியைச் சார்வதற்குத் துணை புரிபவை. ஒன்று முற்றினால், ஒன்று ஆகும். அரும்பு முற்றினால், மலர் ஆகும். மலர் முதிர்ந்தால் காய் ஆகும். காய் முதிர்ந்தால் கனி ஆகும். இந்தப் பக்குவ நிலையை எய்துவற்குச் சில நியமங்கள் ஒவ்வொரு சமயத்திலும் வகுக்கப்பட்டு இருக்கும். இந்த நியமங்களில் சொல்லப்பட்டுள்ள ஆசார, சங்கற்ப, விகற்பங்கள் எல்லாம் நாளடைவில் இல்லாமல் போகவேண்டும்.

 

எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி, எக்காலத்துக்கும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்தில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்" என்று வள்ளல்பெருமான் அருளியதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இதுவே சலனப் படாத ஞானம் ஆகும்.

அந்த ஞானத்தை, இறைவனை அருட்குருவாக வந்து, அருளுபதேசம் புரிந்து ஆட்கொண்டு அருள் புரிய வேண்டும்.

 

அருணச் சிகா ---

 

அருணம் --- சிவப்பு. சிவந்த சடைமுடியினை உடையவர் சிவபெருமான்.

 

பார ---

 

பாரம் --- கனம். பெருமையைக் குறிக்கும். கனம் பொருந்திய என்றால், பெருமை பொருந்திய என்று பொருள்.

 

மம பட்ச மாதேவர் அருமைச் சுவாமீ ---

மம --- என்னுடைய.

 

பட்சம் --- அன்பு

 

உயிர்கள் மீது அன்பு கொண்டவரான சிவபெருமானுடைய அருமைப் புதல்வர் முருகப் பெருமான். அவரே சுவாமி.

 

நிமல ---

 

இயல்பாகவே மலம் அற்றவன் இறைவன்.

 

நிட்களா ---

 

உருவம் அற்ற நிலையை உடையவன் இறைவன்.

 

மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே ---

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும். முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

கருத்துரை

 

முருகா! சலனப்படாத ஞானத்தை அடியேனுக்கு அருள்வாய்.

 

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...