ஔவையார் அருளிய "மூதுரை"
இளமையில் வறுமை இன்னாது
மேலே, முதல் பாடலில், இறைவழிபாட்டில் ஈடுபாடு உடையோர்க்கு, கல்வி நலம், செல்வ நலம், மன நலம், உடல் நலம் முதலானவை வாய்க்கும் என்று அறிவுறுத்திய ஔவைப் பிராட்டியார், இரண்டாவது பாடலில், அவ்வாறு பெற்ற நலங்களைக் கொண்டு, தக்கவர்க்கு உதவி செய்தல் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இனி, மூன்றாவது பாடலில், இறைவழிபாடும் செய்யாது, தக்கவர்க்கு உதவியும் செய்யாது வாழ்நாளை வறிதாகக் கழித்தவர்க்கு, மறுபிறப்பில் வறுமையே வாய்க்கும் என்றும், அந்த வறுமையும் இளமையிலேயே வந்து சேரும் என்றும், அது மிகவும் துன்பத்தைத் தரும் என்றும் அறிவுறுத்துகின்றார்.
இன்னா இளமை வறுமைவந்து எய்தியக்கால்,
இன்னா அளவில் இனியவும்-இன்னாத,
நாள்அல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே,
ஆளி் இல்லா மங்கைக்கு அழகு. --- மூதுரை.
இதன் பொருள் ---
இளமை --- (இன்பத்தைத் தருகின்ற) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் --- வறுமை வந்து அடைந்தால், இன்னா --- அது துன்பத்தைத் தருவதாகும், இன்னா அளவில் --- துன்பத்தைத் தருகின்ற முதுமைப் பருவத்தில், இனியவும் --- இனியனவாகிய பொருள்களும், இன்னாத --- துன்பத்தைத் தருவனவே ஆகும். (அவை) நாள் அல்லா நாள் பூத்த நல்மலரும் --- (சூடுதற்கு உரிய) காலம் அல்லாத காலத்தில் மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் --- (இளமை இன்பத்தை அனுபவித்தற்கு உரிய) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும் --- ஒக்கும்.
வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன என்றார் ஔவைப் பிராட்டியார்.
இன்மை, வறுமை, மிடி, தரித்திரம் என்பவை ஒரு பொருளையே குறித்தவை.
"இன்மை என ஒரு பாவி, மறுமையும்
இம்மையும் இன்றி வரும்"
என்றருளினார் திருவள்ளுவ நாயனார். இத் திருக்குறளில், வறுமையை ஒரு பாவி என்றார். அந்தப் பாவியானவன், இகபர நலங்களை ஒருசேர இல்லாமல் செய்வான்.
அருணகிரிநாரும், வறுமையை ஒரு பாவி என்றே அருளிச் செய்தார். தரித்திரமாகிய பாவி ஒருவனிடம் அணுகுவனேயானால், அழகு, செல்வம், நல்ல மனம், குணம், நற்குடி, குலம் முதலிய யாவும் அடியோடு குடி பெயர்ந்து போய்விடும்.
வடிவம் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா!
அடி அந்தமி் இலா அயில்வேல் அரசே!
மிடி என்று ஒருபாவி வெளிப் படினே. --- கந்தர்அநுபூதி.
கொடியது எது என்று கேட்டால், வறுமையே கொடியவற்றிலும் கொடியது; அதிலும் இளமையில் வறுமை என்றால் மிகமிகக் கொடியது என்பதைப் பின்வரும் பாடலில் காட்டினார் ஔவைப் பிராட்டியார்.
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனினும் கொடிது இளமையில் வறுமை,
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்,
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்,
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.
தாங்க முடியாத வறுமையானது ஒருவனுக்கு வந்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று "விவேக சிந்தாமணி" என்னும் நூல் கூறுவதைப் பார்ப்போம்.
தாங்க ஒணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை போல் வீரம் குன்றும்,
விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,
புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய அறிவு குன்றும்,
உலகெலாம் பழிக்கும் தானே. --- விவேக சிந்தாமணி.
ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும். விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க்கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.
திருவள்ளுவ நாயனார், இந்த வறுமை குறித்து, "நல்குரவு" என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.
நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
என்பது திருக்குறள்.
வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும், அறிவு உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். --- நல்வழி
குசேல உபாக்கியானம் சொல்வதைக் காண்போம்.....
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்
சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம் அவமானம் பொய் பேராசை
தரும் இதில் கொடியது ஒன்று இலையே.
வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். (ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்
தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்
தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்
தகையதை ஒழித்தல் நன்று ஆமே.
வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்; சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்; வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர்; வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்; தரித்திரம் கொடிய வெற்றினும் கொடியது. அத்தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.
"வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும் நீள்புழு ஆயினேற்கு இரங்கி ...... அருள்வாயே".
--- (அறிவிலாதவர்) திருப்புகழ்.
வறுமை என்னும் கொடிய நெருப்பில் விழுந்து நெறிகின்ற புழுவைப் போல வாழும் அடியேனுக்கு இரங்கி அருள் புரியவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.
வறுமையால் விளையக் கூடிய கேடுகளை விளக்குகின்றது, "குமரேச சதகம்" என்னும் நூல்...
வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;
மனையாட்டி சற்றும் எண்ணாள்;
வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
சிந்தையில் தைரியமில்லை;
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்
உயிருடன் செத்தபிணமாம்;
உலகம் பழித்திடும்; பெருமையோர் முன்புசென்று
ஒருவர் ஒரு செய்திசொன்னால்,
மறுவசன முஞ்சொலார்; துன்பினில் துன்பம்இது
வந்து அணுகிடாது அருளுவாய்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே! வறுமை தான் வந்திடில் --- (ஒருவனுக்கு) வறுமை வந்தால், தாய் பழுது சொல்வாள் --- அன்னையும் குற்றம் கூறுவாள்; மனையாட்டி சற்றும் எண்ணாள் --- இல்லாளும் சிறிதும் மதியாள்; வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் --- வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்; சிறுமையோடு தொலையா விசாரமே அல்லாது --- இழிவும் நீங்காத கவலையுமே அன்றி, சிந்தையில் தைரியம் இல்லை --- உள்ளத்தில் வீரம் இராது; செய்ய சபை தன்னிலே சென்றுவர வெட்கம் ஆம் --- நல்ல சபையிலே போய்வர நாணம் உண்டாகும்; செல்வரைக் காணில் நாணும் --- பணம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கமடையும், உறுதிபெறு வீரமும் குன்றிடும் --- நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; விருந்துவரின் உயிருடன் செத்த பிணம்ஆம் --- விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; உலகம் பழித்திடும் --- உலகத்தார் இகழ்வர்; பெருமையோர் முன்பு சென்று ஒருவரொரு செய்தி சொன்னால் மறு வசனமும் சொல்லார் --- பெருமையுடையோர் எதிரில் போய், வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் விளம்பார்; துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் --- துன்பத்திலே துன்பமான இவ்வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்செய்வாய்.
இளமையில் வறுமை மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது என்றார் ஔவைப் பிராட்டியார். அந்தத் துன்பம் தீர வழியில்லையா? என்றால், முதல் பாடலுக்குத் திரும்பச் சென்று பார்த்தால் விடை கிடைக்கும். இறைவனை நாள்தோறும் தவறாமல் வழிபட்டு வந்தால், "மாமலராள் நோக்கு உண்டாம்" என்று ஔவையார் காட்டினார். வறுமையில் வாடினாலும், இறை நம்பிக்கை வாடக் கூடாது.
No comments:
Post a Comment