தவம் எது?

 

 

தவம் எது?

-----

 

     திருக்குறளில் "தவம்" என்னும் ஓர் அதிகாரம். மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல், நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம், பல விரதங்களை மேற்கொண்டு, உணவைச் சுருக்கிக் கொள்ளுதலும், கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும், மழைக் காலத்தில், மழையிலும், பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும், நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய செயல்களைக் கடைப்பிடித்து, அச் செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவமாம்.

 

     சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை உள்ள வெயில் காலத்தில், வெயில்படும் இடத்தில் நின்றுகொண்டு இருத்தல். "வெயில்நிலை நிற்றல்" என்றதனால், நாற்புறமும் தீயானது சூழ, மேலே சூரியனின் கதிர்கள் படுவதான பஞ்சாக்கினி மத்தியில் இருத்தல் என்பதும் கொள்ள வேண்டும்.

 

     ஆவணி மாதம் முதல், கார்த்திகை மாதம் வரை உள்ள மழைக் காலத்திலும், மார்கழி மாதத்துப் பனியிலும், ஏரி, மடு, ஆறு போன்ற நீர்நிலைகளிலும் நின்றுகொண்டு இருத்தல்.

 

     இவை அல்லாமல், ஈரத் துணியைப் போர்த்திக் கொண்டு இருத்தல், பட்ச உபவாசம், மாத உபவாசம் இருத்தல், மரத்தின் கீழ் வசித்தல் ஆகியவை தவநிலையில் அடங்கும். இவையெல்லாம், மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவும், ஒருநிலைப் படுத்துவதற்காகவும் அமைந்தவை. "மனம் அது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டாம்". எனவே, மந்திரத்தை செபிப்பதே, மனத்தைச் செம்மைப்படுத்துவதற்குத் தான்.

 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா;

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;

மனமது செம்மையானால் மந்திரம் செம்மை மே.

 

என்பது "அகத்தியர் ஞானம்" என்னும் நூலில் வரும் பாடல்.

 

     "தவம்" என்னும் இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "உணவைச் சுருக்குதல் முதலியவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவத்திற்கு வடிவம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     மற்ற விரதங்கள் எல்லாம், உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் என்னும் இந்த இரண்டிலே அடங்குவதால், இதுவே தவத்திற்கு இலக்கணம் ஆகத் திருவள்ளுவ நாயனாரால் வைக்கப்பட்டது.

 

     ஒருவர்க்கு உடலுக்கோ உள்ளத்துக்கோ, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ, அவரவர் பிராரத்த வினைக்கு ஏற்ப துன்பங்கள் நேர்கின்றன. அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ளுதலே "உற்றநோய் நோன்றல்" ஆகும். துன்பங்கள் நம்மை வாட்டும்போதோ, பிறர் நமக்குச் செய்த தீமைகளை நினைக்கும்போதோ, தாங்க முடியாமல் பொங்கி எழுவது இயல்பு. தமக்கு வந்த துயரைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமையே, உலகில் பலப்பல துயர்களும், தனிமனிதனையும், சமூகத்தையும் சூழுவதற்குக் காரணமாக அமைந்து விடுவதை நன்கு அறியலாம். துன்பத்தைத் தாங்குதற்கு உரிய, அறிவு நுட்பமும், மனத்திண்மையும் பெற்றிருக்க வேண்டும். துன்பம் பொறுத்தல் தவத்தைச் செய்வது ஆகும்.

 

     தன்னலம் கருதித்தான் மற்ற உயிர்களுக்கு ஒருவன் துன்பம் செய்கின்றான். தன்னலம் அற்றுவிட்டால் துன்பம் செய்யும் எண்ணம் எழாது. மேலும், தமக்கு உண்டாகும் துன்பங்களைத் தாங்கிப் பழகியவர்க்கு, அதன் வேதனை புரிவதால், அத்துன்பத்தைப் பிறர்க்குச் செய்யக் கருதமாட்டார். "நோய் எல்லாம் நோய் செய்தார் மேல ஆம், நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்" என்னும் திருக்குறளால் இது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நல்லது செய்ய முடியவில்லையானாலும், துன்பத்தைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்னும் எண்ணம் தோன்றும்.

 

பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை ரங்குவிர் மாதோ?

நல்லது செய்தல் ஆற்றீர், ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின், துதான்

எல்லாரும் உவப்பது, ன்றியும்

நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

 

என்பது புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

    பலவாகிய நற்குணங்கள் அமையப் பெற்றவர்களே! பலவாகிய நற்குணங்கள் அமையப் பெற்றவர்களே! மீனின் முள்ளைப் போன்ற நரைத்த முடியையும், சுருங்கிய கன்னக் கதுப்புகளையும் உடையதும், யாருக்கும் பயன் அற்றதும் ஆகிய முதுமைப் பருவத்தை அடைந்துள்ள, நல்ல குணவான்களே! மழு என்னும் கூர்மையான படைக்கலத்தை உடைய, மிகுந்த வல்லமை கொண்டவன் ஆகிய ஒருவன் (எமன்) உங்கள் உயிரைப் பற்றி இழுத்துச் செல்லும்போது, நீங்கள் வீணாக அழுது புலம்புவீர்கள். (வாழும் காலத்திலேயே) நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறருக்குத் தீமை செய்யாது இருங்கள். அதுதான் எல்லாரும் விரும்புகின்ற தன்மை. மேலும், அதுவே நம்மை நன்னெறியில் செலுத்தும் உயர்ந்த அழகிய உன்னதமான வழியும் ஆகும்.

 

     எனவே, நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், அடுத்தவர்க்குக் கெடுதல் செய்யாமல் இருக்கலாம். தனக்கு வந்த துன்பம் பொறுத்துக் கொள்வதையும், பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தையும் ஒரு தவமாக உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். உடல்வலி, மன வலியைத் தாங்குதல் மற்றும் பிற உயிர்களை ஓம்புதல் என்னும் நல்லுணர்வை வளர்த்துக் கொள்ளுவதே தவம் என்று திருவள்ளுவர் காட்டும் நடைமுறை நோன்புகளான இவற்றை மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும். இந்நாளில் நோன்பு என வழங்கப்படுவதையே தவம் என்னும் சொல் குறிக்கின்றது. நோன்றல் என்றும் நோற்றல் என்றும் சொல்லப்படுவனவும் அதுவே. எனவே,

 

உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பின்வரும் பாடல்கள் இதனை விளக்குவதாக அமைந்துள்ளமை காணலாம்...

 

இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்

பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே,

இருந்து இந்திரனே எவரே எனினும்

திருந்தும் தம் சிந்தை சிவனவன் பாலே.  ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     தவயோகிகள் ஓரிடத்தில் நிலையாக இருந்து, உடல் வருந்தத் தவம் செய்வார்கள். அப்படிப்பட்ட தவயோகிகளின் தவத்தைக் கலைத்து, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கென்றே இந்திரன் பலவிதமான சூழ்ச்சிகளையும் செய்வான். இந்திரன் மட்டுமல்ல, யார் வந்து தவத்தைக் கலைக்க முயன்றாலும், தவயோகிகள் தம் மனம் சிவனவன் நினைவிலேயே மேலும் மேலும் பொருந்தி இருக்குமே தவிர, அவர்கள் தவம் கலையாது.

 

     சிவயோகிகள் தமக்கு வரும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு தவத்தைப் புரிவர். தமது தவத்திற்கு இடையூறு செய்பவர்களுக்கு, இடையூறு செய்யமாட்டார்கள். ஏனெனில், அவரகள் கருதி இருக்கும் பரம்பொருள், அவர்களை முன்னின்று காக்கும். அடயோகம் செய்வோர்க்கு இது பொருந்தாது. "அசட்டு யோகி ஆகாமல், சிவயோகியாக அருள்" புரியுமாறு, முருகப் பெருமானை அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.

 

உயிர்நோய் செய்யாமை, உறுநோய் மறத்தல்,

செயிர்நோய் பிறர்கண் செய்யாமை - செயிர்நோய்

விழைவு வெகுளியினை விடுவான் ஆயின்

இழிவு அன்று இனிது தவம்.    --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்யாமையும், உறு நோய் தனக்குப் பிறரால் வரும் துன்பத்தை மறந்து விடுவதோடு,  கோபத்தால் உண்டாகும் துன்பத்தைப் பிறரிடத்துச் செய்யாதிருந்து,  குற்றத்தைச் செய்யும் துன்பத்தைத் தருகின்ற ஆசையும் கோபமும் ஆகியவற்றை ஒருவன் விட்டுவிடுவான் என்றால்,  அதுவே அவனால் செய்யப்படும் இனிமையான, தாழ்வில்லாத தவமாகும்.  (தாழ்வில்லாத தவம், அழிவில்லாத இன்பத்தைத் தரும் என்று பொருள்)

 

     ஆசையும், அது நிறைவேறாத வழி உண்டாகும் கோபமுமே துன்பத்திற்கு எல்லாம் மூலகாரணம் ஆகும். எனவே, அவற்றை விட்டொழிக்கவேண்டும் என்பது புலப்படும்.

 

ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள் உடையத்

தாக்க அருந் துன்பங்கள் தாம் தலை வந்தக்கால்,

நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்

காக்கும் திருவத் தவர்.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, போக்குதற்கு அரிய துன்பங்கள் தம்மிடம் வந்து அடைந்தால், எப்படியாவது அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு, தமது நோன்புகளை நிலைநிறுத்திக் கொள்ளும் வலிமை உடையவரே, தமது துறவறம் சிறக்க வாழுகின்ற பண்பு உடையவர் ஆவர்.

 

தூய்மை உடைமை, துணிவாம் தொழில் அகற்றும்

வாய்மை உடைமை, வனப்பு ஆகும், - தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை, மூன்றும்

தவத்தில் தருக்கினார் கோள்.        --- திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     மனத் தூய்மையினை உடையவராய் இருத்தல்.  மெய்நூல்களாலே துணிந்து சொல்லப்பட்ட நற்செய்கைகளைச் செய்வதில் உண்மை உடையவராய் இருத்தல்.  மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவதனை மனத்தால் நினையாமையும் வாயால் சொல்லாமையும். ஆகிய இம் மூன்றும் தவத்தில் நிற்பவருடைய கொள்கைகள் ஆகும்.

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...