அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
திருஉரூப நேராக (வயலூர்)
முருகா!
அடியேனை கருப் புகுதா வண்ணம் கனவிடை தோன்றி ஆட்கொண்ட தேவரீரை
ஒருபோதும் மறவேன்.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார ...... வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு ...... மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி ...... புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ ...... யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
திரு உரூப நேராக,அழகதான மாமாய,
திமிர மோக மானார்கள்,...... கலைமூடும்
சிகரி ஊடு,தேமாலை அடவி ஊடு போய்,ஆவி
செருகு மால் அனாசார ...... வினையேனை,
கரு விழாது,சீர் ஓதி அடிமை பூணலாமாறு
கனவில் ஆள் சுவாமீ! நின் ...... மயில்வாழ்வும்,
கருணை வாரி கூர் ஏக முகமும்,வீர மாறாத
கழலும்,நீப,வேல்வாகும் ...... மறவேனே,
சருவ தேவ தேவாதி,நமசி வாய நாமாதி,
சயில நாரி பாகாதி ...... புதல்வோனே!
சதமகீ, வல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகசம் ஆன சாரீ செய் ...... இளையோனே!
மருவு லோகம் ஈரேழும் அளவிடா ஒணா ஆன
வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே!
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை
வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
பதவுரை
சருவ தேவ தேவாதி --- எல்லாத் தேவர்களுக்கும் தேவரான முதல்வரும்,
நமசிவாய நாமாதி --- நமசிவாய என்ற திருநாமத்தை உடைய ஆதிப்பிரானும்,
சயில நாரி பாக ஆதி புதல்வோனே--- இமயமலைப் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பங்கில் கொண்ட முதல்வரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!
சத மகீ--- நூறு யாகங்களை முடித்தவனும்,
வல் போர் மேவு--- வலிமை மிக்க போர் புரிய ஏற்றதாகிய
குலிச பாணி மால் யானை --- வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெருமை மிக்க ஐராவதம் என்னும் யானை மீது
சகசமான சாரீ செய் இளையோனே--- இயற்கையாக எழுந்தருளி உலாவுதலைச் செய்யும் இளம்பூரணரே!
மருவு லோகம் ஈரேழும்--- பொருந்திய பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்கள்
அளவிட ஒணாவான வரையில்--- அளவிட முடியாத வரையில்
தாள் வீசு மாயன் மருகோனே--- தனது திருவடியை வீசி அளந்த திருமாலின் மருகரே!
மநு நியாய சோணாடு தலைமையாகவே--- மநுதர்மம் நிறைந்த சோழ நாடானது முதன்மை பெற்று விளங்க,
மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே--- மேலை வயலூரில் எழுந்தருளி உள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
திரு உரூப நேராக அழகதான--- இலக்குமியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும்,
மா மாய--- பெரிய மாயத்தைச் செய்பவரும்,
திமிர மோக மானார்கள்--- இருள்போன்ற காம இச்சையை ஊட்டுபவரும் ஆகிய மான் போன்ற விலைமாதர்களது,
கலை மூடும் சிகரி ஊடு--- ஆடையால் மறைக்கப்பட்டுள்ள மார்பகங்களாகிய மலையினிடத்தும்,
தே மாலை அடவி ஊடு போய்--- இனிய பூமாலைகளை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும், தொடர்ந்து சென்று
ஆவி செருகும் மால்--- ஆவி செருகும் மயக்கத்தைக் கொண்டு திரியும்
அனாசார வினையேனை --- ஆசாரம் இல்லாத வினைகளைப் புரியும் அடியேனை,
கரு விழாது சீர் ஓதி--- கருக்குழியில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி,
அடிமை பூணலாமாறு --- உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி,
கனவில் ஆள் சுவாமீ--- எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே,
நின் மயில் வாழ்வும்--- மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும்,
கருணை வாரி கூர் ஏக முகமும்--- கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது ஒரு திருமுகத்தையும்,
வீரம் மாறாத கழலும்--- வீரத்தன்மை நீங்காத கழல் அணிந்த திருவடியையும்,
நீப--- கடப்ப மலர் மாலையையும்,
வேல் வாகும் மறவேனே --- வேல் ஏந்திய திருப்புயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
பொழிப்புரை
எல்லாத் தேவர்களுக்கும் தேவரான முதல்வரும், நமசிவாய என்ற திருநாமத்தை உடைய ஆதிப்பிரானும், இமயமலைப் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பங்கில் கொண்ட முதல்வரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!
நூறு யாகங்களை முடித்தவனும், வலிமை மிக்க போர் புரிய ஏற்றதாகிய வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெருமை மிக்க ஐராவதம் என்னும் யானை மீது இயற்கையாக எழுந்தருளி உலாவுதலைச் செய்யும் இளம்பூரணரே!
பொருந்திய பதினான்கு உலகங்களும் உள்ளவர்கள் அளவிட முடியாத வரையில் தனது திருவடியை வீசி அளந்த திருமாலின் மருகரே!
மநுதர்மம் நிறைந்த சோழ நாடானது முதன்மை பெற்று விளங்க, மேலை வயலூரில் எழுந்தருளி உள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
இலக்குமியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும், பெரிய மாயத்தைச் செய்பவரும், இருள்போன்ற காம இச்சையை ஊட்டுபவரும் ஆகிய மான் போன்ற விலைமாதர்களது, ஆடையால் மறைக்கப்பட்டுள்ள மார்பகங்களாகிய மலையினிடத்தும், இனிய பூமாலைகளை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும், தொடர்ந்து சென்று ஆவி செருகும் மயக்கத்தைக் கொண்டு திரியும் ஆசாரம் இல்லாத வினைகளைப் புரியும் அடியேனை, கருக்குழியில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே!
மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது ஒரு திருமுகத்தையும், வீரத்தன்மை நீங்காத கழல் அணிந்த திருவடியையும், கடப்ப மலர் மாலையையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
விரிவுரை
திருவுரூப நேராக ---
திரு --- இலக்குமி. மாதர் ஆசை மிக்கவர் தாம் விரும்பிய விலைமகளிரை இலக்குமிக்கு நிகர் என்று கருதி அலைந்து திரிந்து அழிகுவர்.
கமல மாதுடன் இந்திரையும் சரி
சொல ஒணாத மடந்தையர்.... --- திருப்புகழ்.
இந்திரை --- இலக்குமிதேவி.
மாமாய திமிர மோக மானார்கள் ---
மாமாயம் --- பெரிய மாயம். திமிரம் --- இருள். பெரிய மாயத்தைச் செய்து இருளிலே சேர்க்கும் மோகத்தை மூட்டும் மாதர்கள். மாமாய மானார்கள். திமிர மானார்கள். மோக மானார்கள் என்று மூன்று இடத்திலும் கொண்டு கூட்டலாம்.
கலை மூடும் சிகரி---
ஆடையினால் மறைத்து வைத்துள்ள மலை. உவமையாகு பெயராக தனத்தைத் தெரிவிக்கின்றது. மலை கடத்தற்கு அரியது. மலையினின்றும் இடறி வீழ்ந்தவர் மாள்வர். அதுபோல் மாதர் தனத்தின் மீது அவாவுற்றவர் அதனின்றும் கடக்க வழி அறியாது திகைப்பர். திகைத்துத் துன்புறுவர்.
"கொழுமணி ஏர் நகையார் கொங்கைக் குன்று" என்பார் மணிவாசகப் பெருமான்.
தேமாலை அடவி---
தேம் --- இனிமை. இனிய மாலையைச் சூடிய காடு. இங்கே உவமையாகு பெயராக கூந்தலை அறிவிக்கின்றது. காடு பல துன்பத்தைத் தரும். அதுபோல், மாதர் கூந்தலும் பற்று வைத்தவரைப் பரதவிக்கச் செய்வது.
திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல்காட்டில்
கண்ணி வைப்போர் மாயம் கடக்குநாள் எந்நாளோ.. --- தாயுமானார்.
குழல் அழகில் ஆடவர் கட்டுண்பர். விலைமகளிர் கூந்தலைப் பலவகையாக முடித்து அழகு செய்து ஆடவர் உள்ளத்தை ஈர்ப்பர். வழி நடப்பாருக்கு அரவம் குறுக்கிடுதல் சகுனத் தடை. அதிலும் கரும்பாம்பு குறுக்கிடல் மிகவும் சகுனத் தடை. பரகதி விரும்பி அருள் நெறியில் நடப்பார்க்கு மாதர்களது கூந்தலின் பின்னலாகிய கரும்பாம்பு சகுனத் தடையாகும். இல்லறமாகிய நல்லறத்தில் தருமபத்தினியுடன் வாழ்வார்க்கு இந்த ஆபத்து எய்தாது.
வேறு ஒரு திருப்புகழில், "இறைவனே! கண் என்னும் கடலிலும், தனம் என்னும் மலையிலும், குழல் என்னும் காட்டிலும் அலைகின்ற அடியேனை ஆட்கொள்வாய்" என்று முறையிடுகின்றார்.
கொம்பனை யார்காது மோதுஇரு கண்களில் ஆமோத சீதள
குங்கும பாடீர பூஷண நகமேவும்
கொங்கையின் நீர்ஆவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையில் ஆதார சோபையில் மருளாதே....
--- திருப்புகழ்.
ஆவி செருகு மால் அநாசார வினையேனை ---
மோகமாகிய படுபள்ளத்திலே ஆழ அழுந்தி விழுவதனால், மயக்கமுற்று அநாசாரம் எய்தி அல்லல் படுகின்றது. "உந்தி என்கின்ற மடு விழுவேனை" என்பார் "மன்றலங் கொந்துமிசை" எனத் தொடங்கும் திருப்புகழில்.
கரு விழாது---
மீண்டும் கருக்குழியில் விழாவண்ணம் முருகன் அருணகிரிநாதரை ஆட்கொண்டனர். பிறவியின் நோக்கம் பிறவாமையைப் பெறுவதே. அதனையே எல்லாப் பெரியவர்களும் பெரிதும் வேண்டுகின்றனர். "பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்”, "பிறவாதிருக்க வரம் தரல் வேண்டும்”, "பிறவாமை வேண்டும்”, "வேண்டுங்கால் வேண்டு பிறவாமை", "இனிப் பிறவாது நீ அருள் புரிவாயே”, "ஆதலால் பிறவி வேண்டேன்" என்பன போன்ற இன்ன பிற அருள் வாக்குகளை எல்லாம் உன்னுக.
மாதா உடல்சலித்தாள், வல்வினையேன் கால்சலித்தேன்,
வேதாவும் கைசலித்து விட்டானே, - நாதா!
இருப்பையூர் வாழ்சிவனே! இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா. --- பட்டினத்தடிகள்.
மனிதன் அடைய வேண்டிய கவலை,மீண்டும் தாய் வயிற்றை அடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும். அந்தக் கவலை அநேகருக்கு இல்லை.
இருளிலே சிறிது நேரம் இருத்தற்கு நாம் அஞ்சுகின்றோம். தாய் உதரம் ஓரே இருள்மயம் ஆனது. "நிசிக்கரு" என்பார் அடிகள். சிறிது நேரம் நாற்றமடிக்கும் இடத்தில் இருக்க அருவருக்கின்றோம். தாய் உதரத்தில் மலசலத்தின் நாற்றம் பொறுக்க முடியாதது.
வெப்பமான காலத்தில் தவித்து தத்தளித்து குளிர்ந்த இடத்தை நாடி ஓடுகின்றோம். தாய் உதரத்தில் மூலாக்கினி மிகவும் வெப்பத்தை உண்டு பண்ணும்.
மிகவும் நெருக்கமான இடம். அன்பர்கள் சற்று உற்று நோக்குக. தாய் உதரம் எத்துணைத் துன்பமானது. இருள், நாற்றம், வெப்பம், நெருக்கம் முதலிய பல துன்பங்களுடன் கூடியது. ஆதலின் மீண்டும் கருவிடை சேரா வகையை கணந்தோறும் சிந்தித்துத் தேட வேண்டும். முற்றத் துறந்த முழுமுனிவர் பட்டினத்தடிகள் எவ்வளவு கவலையுடன் பாடுகின்றார் என்பதை நோக்குங்கள்.
நெருப்பான மேனியர், செங்காட்டில் ஆத்தி நிழலருகே
இருப்பார், திருவுளம் எப்படியோ? இன்னம் என்னைஅன்னைக்
கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ?கண்ணன் காண்பரிய
திருப்பாத மேதருமோ?தெரியாது சிவன் செயலே.
சீர் ஓதி அடிமை பூணல்---
சீர் --- புகழ். முருகனுடைய திருப்புகழை ஓதி உணர்வார் காலன் கை புகுதார். தாய் உதரப் பை புகுதார். வேலன் பதம் புகுவார்.
அருணகிரிநாதர் திருப்புகழ் ஓதி ஒருவரும் பெற ஒண்ணாத பெரும் பேறு பெற்றனர்...
அநுபவ சித்த பவக்கடலில் புகாதெனை
வினவி எடுத்தருள் வைத்த கழற்கிருபாகரன்....--- பூதவேதாள வகுப்பு.
இறைவனுடைய தேவார, திருவாசக, திருப்புகழாதி திருமுறைகளை உணர்ச்சியுடன் ஓதுதல் வேண்டும். வெறும் நாவினால் மட்டும் படிக்கக் கூடாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓத வேண்டும்.
பாதபங்கய முற்றிட உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் என்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே”
--- (கோலகுங்கும) திருப்புகழ்
எம் அருணகிரிநாதர் ஓது பதினாறாயிரம்
திருப்புகழ் முழுதுமே.... --- வரகவி மார்க்கசகாயர்.
முருகப் பெருமானுக்கு எப்போதுமே அடிமையாக இருத்தல் வேண்டும். என்றைக்கும் நாம் எம்பிரானுக்கு மீளா அடிமைகளே. "என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ" என்பார் தாயுமானார். "அருளது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வரவேணும்" என்பார் "திமிரஉததி" எனத் தொடங்கும் திருப்புகழில்.
கனவில் ஆள் சுவாமீ---
வயலூரிலே அருணகிரிநாதர் தங்கியிருந்த போது, ஒரு நாள் கந்தவேள் ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் வேலும் மயிலும் கொண்டு கனவில் தோனஅறி காட்சியளித்தனர். அருணகிரியார் கனவிலும் நனவிலும் முருகவேளைக் கண்டனர். கனவிலாவது கந்தவேளை நாம் காண விரும்புதல் வேண்டும். தணியாக் காதல் இறைபால் உண்டாகுமாயின் இறைவர் கனவிலே தோன்றுவர். தாயுமானார் தான் கண்ட அருட்கனவுகளைக் கூறுமாறு காண்க..
மைகாட்டு மாயை மயக்கம் அற நீ குருவாய்
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே
மால்வைத்த சிந்தை மயக்கு அற, என் சென்னிமிசைக்
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே
மண்ணான மாயை எல்லாம் மாண்டுவெளியாக, இரு
கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே.
சுவாமி என்ற சொல்லுக்கு உலகங்களையும் உயிர்களையும் சொத்தாக உடையவர் என்பது பொருள். சுவாமி என்ற நாமம் முருகப் பிரானுக்கே உரியது. அவருடைய மலை சுவாமிமலை என வழங்குவதையும் காண்க. சுவாமியின் மலை எனப் பொருள்படும். சுவாமிநாதன் என்பதனையும் காண்க. சுவாமியாகிய நாதன் எனப் பொருள்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
மயில் வாழ்வும்---
எம்பெருமான் மயில் மீது வரும் காட்சி மிகச்சிறந்த காட்சி. அதனைக் காண்பதே சிறந்த வாழ்வு.
நீலங் கொள் மேகத்தின் மயில்மீது
நீவந்த வாழ்வைக் கண்டு அதனாலே
மால்கொண்ட பேதைக்குஉன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்து அருள்வாயே.
கருணை வாரி கூர் ஏக முகமும் ---
முருகப் பெருமானுடைய ஆறுமுகங்களும் கருணை மயமானவை. "கருணைகூர் முகங்கள் ஆறும்", "கருணைபொழி கமலமுகம் ஆறும்”, "உனதுமுக கருணைமலர் ஓராறும்", "முகம்பொழி கருணை போற்றி" என்பனவாதி அமுதவாக்குகளை எல்லாம் உற்று நோக்குக.
மறவேனே ---
பிறவாது இருக்கைக்கு வழி, இறைவனைமறவாது இருத்தலே. இதனையே எல்லாப் பெரியவர்களும் வேண்டுகின்றனர். "மறவாது இரு மனமே இதுகாண் மருந்து உனக்கே", "வைவைத்த வேல்படை வானவனே மறவேன் உனை நான்", "இணையடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே" என்பனவாதி அமுதவாக்குகளை எல்லாம் உன்னுக. இறைவனைத் தவிர்த்து, பிற எல்லாவற்றையும் மறவாது இருத்தல் உலகர் வழக்கு. அது கூடாது.
மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒணாவான வரையில்தாள் வீசு மாயன் மருகோனே---
பிரகலாதருடைய பேரனான மாவலியின் செருக்கை அடக்கும் பொருட்டு, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் வாமனராக அவதரித்தார்.திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.
திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது?ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது.
ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.
மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.
தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.
வாமனாவதார வரலாறு
பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.
மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.
அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.
மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.
எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.
"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்து உவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.
உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும் மாவலி பெற்றனன்.
வடிவு குறளாகி மாபலியை வலிய சிறை
இட வெளியின் முகடு கிழிபட முடிய
வளரும் முகில்.... --- சீர்பாத வகுப்பு.
மநுநியாய சோணாடு---
சோழநாடு சிறந்த நாடு. மநுநீதிச் சோழன் அரசாண்ட புண்ணிய நாடு. பசுவின் கன்றுக்காக தன் அருமந்த ஒரு மகனை வீதியில் கிடத்தி, தேர் ஊர்ந்த அம் மன்னன் ஆட்சி புரிந்த நாடு அதுவாயின்,அதன் பெருமையை யாரே அளக்கவல்லார்?
சுரபி மகவினை எழுபொருள் வினவிட,
மனுவின் நெறி மணி அசைவு உற,விசைமிகு
துயரில் செவியினில் அடிபட வினவுமின் ......அதிதீது
துணிவில் இது பிழை பெரிது என வரு மநு,
உருகி அரகர சிவசிவ பெறும் அதொர்
சுரபி அலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி அதனது துயர்கொடு நடவிய,
பழுதில் மதலையை உடல்இரு பிளவொடு
படிய ,ரதம் அதை நடவிட மொழிபவன்.......அருள்ஆரூர்ப்
படியில் அறுமுக! சிவசுத! கணபதி
இளைய குமர! நிருப பதி! சரவண!
பரவை முறையிட அயில்கொடு நடவிய ......பெருமாளே.
என்பார் திருவாரூர்த் திருப்புகழில்.
ஈதலும்பல கோலால பூசையும்
ஓதலும்குண ஆசார நீதியும்
ஈரமும்குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கெம்பீர நாடாளு நாயக வயலூரா
என்பார் திருவாவினன்குடித் திருப்புகழில்.
சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா யிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில் வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.
அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி,சேனைகளும், மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற,வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம்,அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி,அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.
வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.
தன்உயிர்க் கன்று வீயத்
தளர்ந்தஆத் தரியாது ஆகி
முன்நெருப்பு உயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்உயிர் காக்கும் செங்கோல்
மனுவின்பொன் கோயில் வாயில்
பொன்அணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்தது அன்றே. --- பெரியபுராணம்.
அம் மணி ஓசை மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து,வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான்.
கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.
அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆஉறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக்கொண் டால்போல்
வேதனை அகத்து மிக்குஇங்கு
இவ்வினை விளைந்த வாறுஎன்று
இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதுஎன் செங்கோல் என்னும்
தெருமரும் தெளியும் தேறான். --- பெரியபுராணம்.
மன்உயிர் புரந்து வையம்
பொதுக்கடிந்து அறத்தில் நீடும்
என்நெறி நன்றால் என்னும்
என்செய்தால் தீரும் என்னும்
தன்இளம் கன்று காணாத்
தாய்முகம் கண்டு சோரும்
அந்நிலை அரசன் உற்ற
துயரம்ஓர் அளவிற்று அன்றால். --- பெரியபுராணம்.
இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள்.
மந்திரிகள் அதுகண்டு
மன்னவனை அடிவணங்கிச்
சிந்தை தளர்ந்து அருளுவது
மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்
கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்
கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை
வழிநிறுத்தல் அறம்என்றார். --- பெரியபுராணம்.
அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது'என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார்.
வழக்குஎன்று நீர்மொழிந்தால்
மற்றுஅதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்துஅலறுங்
கோஉறுநோய் மருந்துஆமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்று
எல்லீரும் சொல்லியஇச்
சழக்குஇன்று நான்இயைந்தால்
தருமம் தான் சலியாதோ. --- பெரியபுராணம்.
மாநிலம்கா வலன்ஆவான்
மன்உயிர்காக் கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ. --- பெரியபுராணம்.
என்மகன்செய் பாதகத்துக்கு
இருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியன்ஓர் உயிர்கொன்றால்
அவனைக்கொல் வேன்ஆனால்
தொன்மனுநூல் தொடைமனுவால்
துடைப்புஉண்டது எனும்வார்த்தை
மன்உலகில் பெறமொழிந்தீர்
மந்திரிகள் வழக்கு என்றான். --- பெரியபுராணம்.
மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள்,அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே,எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி,அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.
அவ்வுரையில் வருநெறிகள்
அவைநிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் நீர்
சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம்
இப்பெற்றித்து ஆம் இடரால்
வெவ் வுயிர்த்துக் கதறிமணி
எறிந்து விழுந்தது விளம்பீர். --- பெரியபுராணம்.
போற்றி இசைத்துப் புரந்தரன்மால்
அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச
வீற்றுஇருந்த பெருமானார்
மேவிஉறை திருவாரூர்த்
தோற்றம்உடை உயிர்கொன்றான்
ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவும் மற்று அவற்கொல்லும்
அதுவே ஆம் எனநினைமின். --- பெரியபுராணம்.
அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான்,தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று,தாம் எண்ணியவாறு முடித்தார்.
ஒருமைந்தன் தன்குலத்துக்கு
உள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
கடன்என்று தன்மைந்தன்
மருமம் தன் தேர்ஆழி
உற ஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
அரிதோ மற்று எளிதோதான். --- பெரியபுராணம்.
கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.
தண்அளிவெண் குடைவேந்தன்
செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணல்அவன் கண்எதிரே
அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
வீதிவிடங் கப்பெருமான். --- பெரியபுராணம்.
சடைமருங்கில் இளம்பிறையும்
தனிவிழிக்கும் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும்
எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
கண்டுஅரசன் போற்றிஇசைப்ப
விடைமருவும் பெருமானும்
விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான். --- பெரியபுராணம்.
அந்நிலையே உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்அரசன்
மன்உரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடன்எழலும்
இன்னபரிசு ஆனான் என்று
அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்
முன்னவனே முன்நின்றால்
முடியாத பொருள்உளதோ. --- பெரியபுராணம்.
மேலை வயலூர்---
வயலூர் என்பது மிகப் புனிதமான திருத்தலம். அருணகிரியாருக்கு இரண்டாவது அநுக்கிரகம் செய்த திருத்தலம். "கைத்தலம் நிறைகனி" என்ற திருப்புகழைப் பாடத் தொடங்கியது இத் தலத்திலே தான். இயற்கை வளம் செறிந்தது. அருணகிரிநாதருக்கு இத் திருத்தலத்தின் மீது அளவிறந்த காதல் உண்டு. எங்கு சென்றாலும் "வயலூரா", "வயலூரா" என்று மறவாமல் கூறுவார்.
இத் திருத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது.
கருத்துரை
முருகா! அடியேனை கருப் புகுதா வண்ணம் கனவிடை தோன்றி ஆட்கொண்ட தேவரீரை ஒருபோதும் மறவேன்.
No comments:
Post a Comment