அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மேகலை நெகிழ்த்து (வயலூர்)
முருகா!
விலைமாதர் மயலில் அழியாமல் காத்து அருள்.
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி ...... அழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடகம் நடித்துக் காட்டி
வீடுகள் அழைத்துக் காட்டி ...... மதராசன்
ஆகமம் உரைத்துக் காட்டி வார்அணி தனத்தைக் காட்டி
யாரொடும் நகைத்துக் காட்டி ...... விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை அவர்க்குக் காட்டி ...... அழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா
மூவுலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டும்
மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டும் ...... இளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மேகலை நெகிழ்த்துக் காட்டி,வார்குழல் விரித்துக் காட்டி,
வேல்விழி புரட்டிக் காட்டி,...... அழகாக
மேனியை மினுக்கிக் காட்டி,நாடகம் நடித்துக் காட்டி,
வீடுகள் அழைத்துக் காட்டி,...... மதராசன்
ஆகமம் உரைத்துக் காட்டி,வார்அணி தனத்தைக் காட்டி,
யாரொடும் நகைத்துக் காட்டி,...... விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி,வேசைகள் மயக்கைக் காட்ட,
ஆசையை அவர்க்குக் காட்டி ...... அழிவேனோ?
மோகன விருப்பைக் காட்டி,ஞானமும் எடுத்துக் காட்டி,
மூ தமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா!
மூவுலகு அளித்துக் காட்டி,சேவலை உயர்த்திக் காட்டும்,
மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா!
வாகையை முடித்துக் காட்டி,கானவர் சமர்த்தைக் காட்டி,
வாழ்மயில் நடத்திக் காட்டும் ...... இளையோனே!
மாமலை வெதுப்பிக் காட்டி,தானவர் திறத்தைக் காட்டி,
வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
பதவுரை
மோகன விருப்பைக் காட்டி--- இறையருளில் ஆசை மேலிடும்படி திருவருள் செய்து, (அதில் நாட்டம் உள்ளதை அறிந்து, அதற்கேற்ப)
ஞானமும் எடுத்துக் காட்டி--- ஞான சாத்திரங்களின் பொருளை விரிவாக உணரும்படிக்கு,
மூ தமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா--- பழந்தமிழ் முனிவரான அகத்தியருக்கு உபதேசத்தைக் கூட்டுவித்த குருநாதரே!
மூ உலகு அளித்துக் காட்டி--- மூவுலகங்களையும் காத்து அருளும்படியாக
சேவலை உயர்த்திக் காட்டு--- சேவற்கொடியை உயர்த்திக் காட்டி அருளி,
மூரி வில் மதற்குக் காட்டு வயலூரா--- வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானே!
வாகையை முடித்துக் காட்டி--- (வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்த (ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்த வள்ளிப் பிராட்டியாகிய பக்குவ ஆன்மாவை) வெற்றியைக் காட்டி,
கானவர் சமர்த்தைக் காட்டி--- வேடர்களின் வல்லமை எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி (புலன் இன்பங்கள் புன்மையானவை என்பதை),
வாழ் மயில் நடத்திக் காட்டும் இளையோனே ---(நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமாளே!
மா மலை வெதுப்பிக் காட்டி--- மாயத்தில் வல்ல பெரிய கிரவுஞ்ச மலையானது வெந்து போகும்படி (ஞானசத்தியாகிய) வேலாயுதத்தை விடுத்து அருளி,
தானவர் திறத்தைக் காட்டி--- அசுரர்களுடைய வலிமை என்பது இவ்வளவு தான் என்பதைக் காட்டி,
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே--- தேவர்களின் தலையைக் காத்த பெருமையில் மிக்கவரே!
மேகலை நெகிழ்த்துக் காட்டி--- மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி,
வார் குழல் விரித்துக் காட்டி--- நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி,
வேல் விழி புரட்டிக் காட்டி--- வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி,
அழகாக மேனியை மினுக்கிக் காட்டி--- அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி,
நாடகம் நடித்துக் காட்டி--- அன்புள்ளவர் போல் நடித்துக் காட்டி,
வீடுகள் அழைத்துக் காட்டி--- தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்று,
மத ராசன் ஆகமம் உரைத்துக் காட்டி--- மதவேளினுடைய காமசாத்திரமாகிய நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, (அதன்படி நடந்து)
வார் அணி தனத்தைக் காட்டி--- கச்சு அணிந்த மார்பகத்தைக் காட்டி,
யாரொடு(ம்) நகைத்துக் காட்டி--- எல்லாருடனும் சிரித்துக் காட்டி,
விரகாலே ஆதர மனத்தைக் காட்டி--- தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி,
வேசைகள் மயக்கைக் காட்ட--- (இவ்வாறு) பரத்தைககள் காம இச்சையை ஊட்ட
ஆசையை அவர்க்குக் காட்டி அழிவேனோ --- எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ?
பொழிப்புரை
இறையருளில் ஆசை மேலிடும்படித் திருவருள் செய்து, அதில் நாட்டம் உள்ளதை அறிந்து, அதற்கேற்பஞான சாத்திரங்களின் பொருளை விரிவாக உணரும்படிக்கு, பழந்தமிழ் முனிவரான அகத்தியருக்கு உபதேசத்தைக் கூட்டுவித்த குருநாதரே!
மூவுலகங்களையும் காத்து அருளும்படியாகசேவற்கொடியை உயர்த்திக் காட்டி அருளி,வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானே!
(ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்த வள்ளிப் பிராட்டியாகிய பக்குவ ஆன்மாவை, ஐம்புலன்கள் ஆகியவேடர்கள் அறியாமல் கவர்ந்த வெற்றியைக் காட்டி, புலன் இன்பங்கள் புன்மையானவை என்பதை, வேடர்களின் வல்லமை எவ்வளவு சிறிது என்பதன் மூலம் எடுத்துக் காட்டி, நல் வாழ்வு பெற்ற சூரனாகிய மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமாளே!
மாயையில் வல்ல பெரிய கிரவுஞ்ச மலையானது வெந்து போகும்படி ஞானசத்தியாகிய வேலாயுதத்தை விடுத்து அருளி, அசுரர்களுடைய வலிமை என்பது இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமையில் மிக்கவரே!
மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி, அன்புள்ளவர் போல் நடித்துக் காட்டி, தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்று, மதவேளினுடைய காமசாத்திரமாகிய நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, அதன்படி நடந்து,கச்சு அணிந்த மார்பகத்தைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி, இவ்வாறு பரத்தைககள் காம இச்சையை ஊட்ட, எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ?
விரிவுரை
மேகலை நெகிழ்த்துக் காட்டி---
மேகலை --- மகளிர் தமது இடையில் அணியும் ஒருவகை அணிகலன். ஆடை அல்லது புடவையையும் குறிக்கும்.
நாடகம் நடித்துக் காட்டி, வீடுகள் அழைத்துக் காட்டி---
விலைமாதர்கள், நடு வீதியில் நின்று அவ்வீதி வழியே செல்லும் இளைஞர்களைத் தமது சாகசங்களால் வலிந்து அழைத்து,பல இனிய வார்த்தைகளைக் கூறி,கண்வலை வீசித் தமது நடை உடைகளால் மயக்குவார்கள். பொருளில் தமக்குப் பற்று இல்லாத்து போலச் சாகசமாகப் பேசுவார்கள். ஆனாலும் பொருளைப் பறித்த பின்னரே கலவிக்கு உடன்படுவார்கள். மனமுடனே பொருளையும் ஆவியையும் பறிமுதல் புரியும் விலைமகளிரது சாகசங்களை எடுத்துக் கூறி, அவர்களிடத்து மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார் அடிகளார். சிவஞானம் தலைப்படுமாறு பக்திநெறி சென்று முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி மாதர் ஆசையை நீக்குவதே ஆகும். முதலில் விலைமகளிரை வெறுத்து, இல்லறத்தில் இருந்து, பின்னர் அதனையும் வெறுத்து, நிராசையை மேற்கொள்ள வேண்டும்.
பிற திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளது காண்க.
எங்கேனும் ஒருவர்வர, அங்கேகண் இனிதுகொடு,
"இங்குஏவர் உனதுமயல் தரியார்"என்று
"இந்தாஎன் இனியஇதழ் தந்தேனை உறமருவ"
என்றுஆசை குழைய,விழி இணையாடி
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள்
சந்தேகம் அறவெ பறி கொளுமானார்
சங்கீத கலவிநலம் என்று ஓது முத்திவிட
தண்பாரும் உனது அருளை அருள்வாயே. ---திருப்புகழ்.
அங்கை மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கொண்டிட,நீரோ போறீர்?...... அறியீரோ?
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதோ போகா,......துயில்வாரா,
எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்?......இதுபோதாது?
இங்கு நின்றது என்?வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே. --- திருப்புகழ்.
அம்கை நீட்டி அழைத்து,பாரிய
கொங்கை காட்டி மறைத்து,சீரிய
அன்பு போல் பொய் நடித்து,காசுஅளவு ...... உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு,தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்து,கோகிலம்
அன்றில் போல் குரல் இட்டு,கூரிய ...... நகரேகை
பங்கம் ஆக்கி அலைத்து,தாடனை
கொண்டு வேட்கை எழுப்பி,காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
தங்கள் மேல் ப்ரமை விட்டு,பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே.. --- திருப்புகழ்.
மதராசன் ஆகமம் உரைத்துக் காட்டி---
மதராசன் --- மன்மத ராசன்.
ஆகமம் --- காட்சியினாலும், அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளை அறிவிக்கும் சாத்திரம்.
இறைவன் அருளிய ஆகமங்கள், பேரின்பப் பொருளாகிய இறைவனை அறிவிக்கும் சாத்திரம்.
மதவேளின் ஆகமம், சிற்றின்பத்தை அறிவிக்கும் சாத்திரம்.
மோகன விருப்பைக் காட்டி,ஞானமும் எடுத்துக் காட்டி, மூ தமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா---
மோகனம் --- ஆசைமிகுதி.
மூதமிழ் முனி --- அகத்தியர்.
இறையருளில் நாட்டம் மிகுந்து இருந்தால், இறைவனே அது ஈடேற, குருநாதனாகத் திருமேனி தாங்கி வந்து உபதேசம் புரிந்து அருள்வார்.
மலையரசனாகிய இமவானுக்கு,அவன் செய்த தவம் காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச் சிவபெருமான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, இமயமலையில் எழுந்தருளிய போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, எப்புவனத்திலும் உள்ள யாவரும் வந்து கூடினமையால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள் முதல் அனைவரும் ஏங்கி, சிவனை நோக்கி ஓலமிட்டார்கள். சிவபெருமான் அது கண்டு,திருமுறுவல் செய்து, அவர்களது குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை நோக்கி “முனிவனே! இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது. இதனால், உயிர்கள் மிகவும் வருந்துகின்றன. ஆதலால்,நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டில் சென்று பொதியை மலையின்மேல் இருக்கக் கடவாய்; உன்னைத் தவிர இதனைச் செய்ய வல்லவர் வேறு யார் உளர்! நீ ஒருவன் பொதியை மலையைச் சென்று சேர்ந்தால் பூமி சமனாகும்!” என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, “பரம கருணாநிதியாகிய பரமபதியே! அடியேன் யாது குற்றம் செய்தேன்? தேவரீரது திருமணக் கோலத்தைக் காணவொட்டாமல் கொடியேனை விலக்குகின்றீர்; எந்தையே! திருமால் இருக்க, திசைமுகன் முதலிய தேவர்கள் இருக்க, எளியேனை விலக்குவது யாது காரணம்? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள் உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் திருமாலும் உனக்கு நிகராகார்; ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லவன். இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும் முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்திய முனிவர், “எமது பரம பிதாவே! தங்களுடைய திருமணக் கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலை கொள்ளாமல்,பொதியமலைக்குச் செல்வாய். நாம் அங்கு வந்து நமது திருமணக் கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து தரிசிக்கலாம். நீ நம்மைத் தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில் வருவாயாக” என்று அருளிச் செய்தார்.
அகத்திய முனிவர் அதற்கு இயைந்து, அரனாரை வணங்கி விடைபெற்று, பெருமூச்செறிந்து அரிதில் நீங்கி, தென்திசையை நோக்கிச் சென்று பொதிய மலையை அடைந்து, சிவமூர்த்தியைத் தியானித்துக் கொண்டு அப்பொதிய மலையில் எழுந்தருளி இருந்தார். பூமியும் சமமாயிற்று. ஆன்மாக்கள் துன்பம் நீங்கி இன்பமுற்றன. மாலயனாதி வானவராலும் முனிவர்களாலும் செய்தற்கரிய அரிய செயலைச் செய்ததனால் நம் அருணகிரியார் “சிவனை நிகர் பொதியவரை முனிவன்” என்று அகத்தியரைக் குறிப்பிட்டார். வடபாகத்தில் திருக்கயிலாயமலையில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதுபோல் தென்பாகத்தில் அகத்திய முனிவர்எழுந்தருளியிருப்பதால் “பொதியவரை முனிவன்” என்ற குறிப்பும் உணர்தற்கு இடமாய் அமைத்துள்ளனர்.
இத்தகு பெருமை வாய்ந்த அகத்திய முனிவருக்கு முருகப்பெருமான் இனிய தமிழ் மொழியையும், அதன் இலக்கணத்தையும் உபதேசித்தருளினார். இதனால் தமிழ்மொழி ஏனைய மொழிகளினும் உயர்ந்த மொழி என்பதும், அதன் ஆசிரியர் முருகப்பெருமானே என்பதும், அதனை உலகிற்கு உபகரித்த சந்தனாசாரியார் அகத்தியர் என்பதும் நன்கு புலனாகும்.
என்றுசூர் உயிரைக் குடிக்கும்வேல் இறைவன்
இயம்பிய ஞானம் முற்றும் உணர்ந்து,
நன்றுவீறு அன்பில் பன்முறை தாழ்ந்து,
நளினம் ஒத்து அலர்ந்ததாள் நீழல்
ஒன்றியாங்கு அடித்தொண்டு உஞற்றினன்,பன்னாள்
உறைந்து, பின் ஆரியன் அருளால்
மன்றல்சூழ் பொதியம் அடுத்துமுத் தமிழை
வளர்த்துவாழ்ந்து இருந்தனன் முனிவன். --- தணிகைப் புராணம்.
அகத்திய முனிவருக்கு, முருகப்பெருமான் அருள் பிரிந்த வரலாற்றை, தணிகைப் புராணத்தில் காணலாம்.
வாகையை முடித்துக் காட்டி, கானவர் சமர்த்தைக் காட்டி---
வேடர்கள் இடையே வளர்ந்திருந்த வள்ளிநாயகியை முருகப் பெருமான் கவர்ந்து, வேடர்களை வெற்றிகொண்டார்.
சமர்த்து -- வல்லமை. வேடர்களின் வல்லமை இதுதான் என்று காட்டினார் முருகப் பெருமான். ஐம்புலன்களின் வல்லமை ஞானத்தின் முன்னர் எடுபடாது போகும். வேடர்களின் வீரம், முருகப் பெருமான் முன்னர் எடுபடவில்லை.
வேடர்கள் என்பது,இங்கே ஐம்புலன்களைக் குறிக்கும். "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து" எனச் சிவஞானபோதம் கூறும்.
பார்த்துநிற் கின்றாய் யாவையும், எளியேன்
பரதவித்து, உறுகணால் நெஞ்சம்
வேர்த்து நிற்கின்றேன்,கண்டிலை கொல்லோ?
விடம்உண்ட கண்டன்நீ அன்றோ?
ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர்,
அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன்?
ஓர்த்து நிற்கின்றார் பரவுநல் ஒற்றி
யூரில்வாழ் என் உறவினனே!. --- திருவருட்பா.
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓடக்
கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர.... --- திருவிடைமருதூர் மும்மணிக் கோவை.
"வேடர் என நின்ற ஐம்புலன்" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
வாழ் மயில் நடத்திக் காட்டும் இளையோனே---
சூர சம்மார காலத்தில், கடலில் மாமரமாக நின்ற சூரபதுமனைத் தமது ஞானசத்தியாகிய வேலால் இருகூறாக்கினார் முருகப் பெருமான். ஒரு கூறு மயிலாக ஆனது. அதைத் தனது வாகனமாக்க் கொண்டார். மற்றொரு கூறு சேலவாக ஆனது. அதைத் தனது கொடியாக உயர்த்தினார்.
சூரன் நல்வாழ்வு பெற்று மயில் ஆனான் என்பதை, அடிகளார் "வாழ்மயில்" என்று காட்டினார்.
"தீயவை புரிந்தாரேனும்,
குமரவேள் திருமுன் உற்றால்,
தூயவர் ஆகி, மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
அடுசமர் அந்நாள்செய்த
மாயையின் மகனும் ஆன்றோ
வரம்பு இலா அருள் பெற்று உய்ந்தான்"
என்று நமது சொந்தப் புராணம் ஆகிய "கந்த புராணம்" கூறுமாறும் அறிக.
வயலூரா ---
வயலூர் என்னும் திருத்தலம் திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி,திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன்,வணங்கிய தலம். இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால்,அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயலில் அழியாமல் காத்து அருள்.
No comments:
Post a Comment