அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முலை மறைக்கவும் (வயலூர்)
முருகா!
விலைமாதர் மேல் வைத்த மனத்தை மாற்றத் திருவருள் புரிவீர்.
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன ...... தனதான
முலைம றைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென
முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற
முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே
கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறொடு
கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முலை மறைக்கவும்,வாசலிலே தலை
மறைய நிற்கவும்,ஆசை உளோர் என,
முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும்,......முகமோடே
முகம் அழுத்தவும்,ஆசைகள் கூறவும்,
நகம் அழுத்தவும்,லீலையிலே உற,
முறை மசக்கவும்,வாசம் உலா மலர் ...... அணைமீதே
கலை நெகிழ்க்கவும்,வாலிபர் ஆனவர்
உடல் சளப்பட,நாள்வழி நாள்வழி
கறை அழிக்கவும்,நான் எனவே அணி ......விலைஈதே
கடிய சத்தியம் ஆம் எனவே சொலி
அவர் கொடு அப்பணம் மாறிட,வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது ...... அமையாதோ?
மலையை மத்து என, வாசுகியே கடை
கயிறு என, திருமால் ஒரு பாதியும்
மருவும் மற்று அது வாலியும் மேலிட,......அலைஆழி
வலயம் முட்ட ஒர் ஓசை அதாய், ஒலி
திமி திமித்திம் எனா எழவே, அலை
மறுகிடக் கடையா எழ,மேல்எழும் ...... அமுதோடே,
துலை வருத் திரு மாமயில் வாழ்வுள,
வயலை அற்புதனே! வினை ஆனவை
தொடர் அறுத்திடும் ஆரிய! கேவலி ...... மணவாளா!
துவள் கடிச் சிலை வேள் பகைவா! திரு
மறு ஒர் எட்டு உடன் ஆயிர மேல், ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா!சுரர் ...... பெருமாளே.
பதவுரை
மலையை மத்து என ---மேரு மலையை மத்தாக வைத்து,
வாசுகியே கடை கயிறு என--- வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகக் கொண்டு,
திருமால் ஒரு பாதியும்--- திருமால் ஒரு பாதிப் புறத்திலும்,
மருவும் மற்றது வாலியும் மேல் இட--- பொருந்திய மற்றொரு புறத்தை வாலியுமாக நின்று,
அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே--- அலைகள் வீசுகின்ற கடலில் இருந்து, அது சூழ்ந்துள்ள உலகம்முழுமைக்கும் கேட்கும்படியாக ஒரே பேரொலி திமி திமித்திம் என்று கிளம்பவும்,
அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே--- அலைகளை உடைய கடல் கலங்குமாறு கடையவும் மேல் எழுந்த அமுதத்துடன்
துலை வருத் திரு மாமயில்--- அதற்கு ஒப்பாக வந்த மயில் போலும் சாயலை உடைய திருமகள்,
வாழ்வுள வயலை அற்புதனே--- சிறப்போடு விளங்கும் வயலூரில் வீற்றிருக்கும் பெருமானே!
வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய--- உயிர்களின் வினைத் தொகுதியை அறுத்து அருள் புரியும் ஞானாசிரியரே!
கேவலி மணவாளா --- முத்திமாதாகிய தேவயானையின் மணவாளரே!
துவள் கடிச் சிலை வேள் பகைவா--- வளைந்துள்ளதும் புதுமையானதும் ஆகிய கரும்பு வில்லை உடைய மதவேளின் பகைவரே!
திரு மறு ஒர் எட்டுடன் ஆயிரம் மேல்--- அழகிய மச்சரேகை ஆயிரத்தெட்டுக்கும் மேல் உள்ளவரே!
ஒரு துகள் அறுத்து அணி ஆர் அழகா--- உயிர்க்கு உள்ள குற்றங்களை அறுத்து அருள் புரியும் அழகரே!
சுரர் பெருமாளே--- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
முலை மறைக்கவும்--- முலைகளை ஆடையால் மறைக்கவும்,
வாசலிலே தலை மறைய நிற்கவும்--- வாயில்படியின் அருகில் தலை மறையும் நிற்கவும்,
ஆசை உ(ள்)ளோர் என--- ஆசை கொண்டுள்ளவர் என்பதை வெளிப்படுத்துமாறு,
முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும்--- அரும்பு போலும் பற்களைக் காட்டிப் புன்னகையை ஒரு சிறிய தூதாக அனுப்பவும்,
முகம் ஓடே முகம் அழுத்தவும்--- முகத்தோடு முகம் வைத்து அழுத்தவும்,
ஆசைகள் கூறவு(ம்)--- ஆசை வார்த்தைகளைக் கூறவும்,
நகம் அழுத்தவும் --- நகக் குறிகளைப் பதிக்கவும்,
லீலையிலே உற முறை மசக்கவும்--- காம லீலைகளைப் புரியும்போது மாமா, அத்தான் என்று உறவுமுறை கூறி மயக்கவும்,
வாசம் உலா மலர் அணை மீதே கலை நெகிழ்க்கவும்--- வாசனை பொருந்திய மலர்ப்படுக்கையில் இருந்து, ஆடையை நெகிழுமாறு செய்யவும்,
வாலிபர் ஆனவர் உடல் சளப்பட--- இளைஞர்களின் உடல் துன்பப்படுமாறு செய்தும்,
நாள் வழி நாள் வழி கறை அழிக்கவும்--- நாளாக நாளாக அவர்களது உடலில் உள்ள குருதியானது வற்றுமாறு செய்யவும்,
நான் எனவே அ(ண்)ணி--- நான் உள்ளேன் என்று நெருங்கி வந்து,
விலை ஈதே --- (எனக்கு நீங்கள் தரவேண்டிய) பொருள் இதுவாகும்,
கடிய சத்தியமாம் எனவே சொ(ல்)லி--- (நான் கூறுவது) கடுமையான உண்மை என்று சொல்லி,
அவர் கொடு அப்பணம் மாறிட --- அவர்கள் கொடுத்து வரும் பணமானது வருவது மாறிய போது,
வீறொடு கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ--- சினத்துடன் கடுகடுத்துப் பேசுகின்ற விலைமாதரோடு கூடி அடியேன் மகிழ்ந்தது முடியாதோ?
பொழிப்புரை
மேரு மலையை மத்தாக வைத்து,வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறத்திலும், பொருந்திய மற்றொரு புறத்தில் வாலியுமாக நின்று, அலைகள் வீசுகின்ற கடலில் இருந்து, அது சூழ்ந்துள்ள உலகம்முழுமைக்கும் கேட்கும்படியாக ஒரே பேரொலி திமி திமித்திம் என்று கிளம்பவும், அலைகளை உடைய கடல் கலங்குமாறு கடையவும் மேல் எழுந்த அமுதத்துடன், அதற்கு ஒப்பாக வந்த மயில் போலும் சாயலை உடைய திருமகள்சிறப்போடு விளங்கும் வயலூரில் வீற்றிருக்கும் பெருமானே!
உயிர்களின் வினைத் தொகுதியை அறுத்து அருள் புரியும் ஞானாசிரியரே!
முத்திமாதாகிய தேவயானையின் மணவாளரே!
வளைந்துள்ளதும் புதுமையானதும் ஆகிய கரும்பு வில்லை உடைய மதவேளின் பகைவரே!
அழகிய மச்சரேகை ஆயிரத்தெட்டுக்கும் மேல் உள்ளவரே!
உயிர்க்கு உள்ள குற்றங்களை அறுத்து அருள் புரியும் அழகரே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
முலைகளை ஆடையால் மறைத்துக் கொண்டு, வாயில்படியின் அருகில் தலை மறையும் நின்று, ஆடவரைக் கண்டால்ஆசை கொண்டுள்ளவர் என்பதை வெளிப்படுத்துமாறு, அரும்பு போலும் பற்களைக் காட்டிப் புன்னகையை ஒரு சிறிய தூதாக அவரிடத்தில் அனுப்பவும், தன்னை நாடி வந்தவரின் முகத்தோடு தனது முகத்தை வைத்து அழுத்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி, நகக் குறிகளைப் பதித்துக்காம லீலைகளைப் புரியும்போது மாமா, அத்தான் என்று உறவுமுறை கூறி மயக்கி,வாசனை பொருந்திய மலர்ப்படுக்கையில் இருந்து, ஆடையை நெகிழுமாறு செய்து,இளைஞர்களின் உடல் துன்பப்படுமாறு கலவியில் ஈடுபடச் செய்து, யாளும் இவ்வாறு காம லீலையில் ஈடுபடுவதால், நாளாக நாளாக அவர்களது உடலில் உள்ள குருதியானது வற்றுமாறு செய்து, நான் உள்ளேன் என்று நெருங்கி இருந்து, எனக்கு நீங்கள் தரவேண்டிய பொருள் இதுவாகும், நான் எங்களோடு இருப்பேன் என்று கூறுவது கடுமையான உண்மை என்று சொல்லி, அவர்கள் கொடுத்து வரும் பணமானது வருவது மாறிய போது, சினத்துடன் கடுகடுத்துப் பேசுகின்ற விலைமாதரோடு கூடி அடியேன் மகிழ்ந்தது முடியாதோ?
விரிவுரை
இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில் விலைமாதர் புரியும் சாகசங்களையும்,அவர்கள் இளைஞரை மயக்கிப் பொருள் பறிக்கும் விதத்தையும் கூறி, அவர்களால் உண்டாகும் துன்பத்தில் இருந்து விடுபடத் திருவருள் புரியுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
வாலிபர் ஆனவர் உடல் சளப்பட---
சளம் --- துன்பம், மூர்க்கம், வஞ்சனை.
சளப்படுதல் --- துன்பப் படுதல்.
நாள் வழி நாள் வழி கறை அழிக்கவும்---
கறை -- குருதி, இரத்தம்.
காமத்தீ மிகுவதால்,உடல் வலிமை குன்றும்.
நான் எனவே அ(ண்)ணி---
அண்ணி --- நெருங்கி இருந்து.
கடிய சத்தியமாம் எனவே சொ(ல்)லி---
கடிய சத்தியம் --- கடுமையான உண்மை. கண்டிப்பான உண்மை.
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமால் ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட, அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே, அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே, துலை வருத் திரு மாமயில் ---
நரை, திரை, மூப்பு, மரணம் என்றவற்றைத் தவிர்க்கும் பொருட்டுத் தேவர்கள் அமிர்தம் கடைந்தார்கள். பன்னாள் கடைந்து அயர்ந்த பொழுது வாலி என்ற வானர வேந்தன் துணை செய்து பாற்கடலை மிக்க மிடுக்குடன் கடைந்தான்.
அப்போது எதிர்பார்த்த அமிர்தத்திற்கு எதிரிடையாக, ஆலகால நஞ்சு அதிக பயங்கரமாகத் தோன்றியது. திருமால் சிவபெருமானை வேண்டி, எங்களுக்குத் தேவரீர்தானே தலைவர், அடிமைகளாகிய நாங்கள் செய்த முயற்சியில் முதலில் விளைந்த இதனை முதன்மையான தேவரீர் பெறவேண்டும் என்று கூறி அவரிடம் ஈந்தனர். பின்னர் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்கட்குப் பங்கிட்டு உதவினார். அந்த அமுதுக்கு ஒப்பாகதிருமகளும் தோன்றினாள். திருமகளைத் திருமால் திருமணம் புணர்ந்தார்.
வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய---
ஆரியன் என்பது ஞானாசிரியரைக் குறிக்கும்.
"பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்பது திருவாசகம்.
கேவலி மணவாளா ---
"வினை ஆனவைதொடர் அறுத்திடும் ஆரிய! கேவலி மணவாளா!" என்று அருளிய அடிகளார், தெய்வயானை அம்மையாரை, "கேவலி" என்றும்,"முத்தி மாது" என்றும் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியது. முத்தியைத் தரவல்ல முதல்வி தெய்வயானை அம்மையார் எனத் தெரிகின்றது.
கேவலம், கைவல்யம், வீடுபேறு. வீடுபேற்றினை அருளும் கேவல ஞானத்தை அருள்பவள் ஆகிய தெய்வயானை அம்மையாரை, அடிகளார் "கேவலி" என்ற அருமை சிந்தனைக்கு உரியது.
துவள் கடிச் சிலை வேள் பகைவா---
வளைந்து உள்ள, புதுமையான கரும்பு வில்லை உடையவன் மதவேள் என்னும் மன்மதன். திருமாலின் மகன் ஆகையால், அவருக்கு உரிய கரிய நிறத்தோடு பிறந்தவன், எனவே, கருவேள் எனப்படுகின்றான். உயிர்களைக் காமவலையில் வீழ்த்துபவன் மதவேள் ஆகிய கருவேள்.
கருமை என்பது இருள் விசைத்ததைக் குறிக்கும். உயிர்களை இருளாகிய துன்பத்தில் வீழ்த்துவது மதவேள்.
முருகப் பெருமான் செவ்வேள் ஆவார். செம்மையான வீடுபேற்றை உயிர்களுக்கு அருள்புரிபவர் ஆதலின், முருகப் பெருமான் "செவ்வேள்" எனப்படுகின்றார்.
வயலை அற்புதனே---
வயலை என்பது வயலூர் என்னும் திருத்தலத்தைக் குறிக்கும். இத்திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி,திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன்,வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால்,அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மேல் வைத்த மனத்தை மாற்றத் திருவருள் புரிவீர்.
No comments:
Post a Comment