திருக் காறாயில்
(திருக்காரவாசல்)
சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
இறைவர் : கண்ணாயிரமுடையார்
இறைவியார் : கைலாசநாயகி
தல மரம் : பலா, அகில்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்,சேஷ தீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தி.
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர் - நீரானே நீள்சடை.
எப்படிப் போவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தெற்கே இத்திருத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கோளிலி ஆகிய பாடல் பெற்ற திருத்தலங்களும் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில்
திருக்காரவாசல் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருத்தலச் சிறப்பு: கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காடசி தருகிறார். கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.
திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு இராஜகோபுரமில்லை. முதல் வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, சுந்தரர், (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தில் இறைவியாரது திருப்பெயர் கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்க மாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் காட்சி தந்த நாயனார் திருமேனி தரிசிக்கத்தக்கது. இவர் பின்னால் நந்தியுடனும், அருகில் உமையும் கூடியவாறு காட்சி தருகிறார். மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீசுவரர், கைலாசமேசுவரர், இந்திரபுரீசுவரர், விசுவநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரசுவதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள மூன்று பைரவர்கள் சந்நிதியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.
சப்த விடங்கத் தலம்:
சப்தவிடங்கத் தலங்கள் -----
1. திருவாரூர் – வீதிவிடங்கர் - அசபா நடனம்
2. திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3. நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4. திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5. திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6. திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7. திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.
முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர் திருமேனிகள் ஏழில் ஒன்றை எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் திருக்காறாயில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். திருக்காராயில் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூறி, அதன்படி பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல். தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது
இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்த கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவகுணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.
கடுக்காய் பிள்ளையார் சந்நிதி
இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு. வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும் போது இங்குள்ள சேஷ தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றே கடுக்காய் இருக்கிறது என்று பதில் கூறினான். விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இவர் சந்நிதி பிரம்ம தீர்த்தக்கரையில் உள்ளது.
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 574
நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,
திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.
குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
திருக்காறாயில் - நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.
திருத்தேவூர் - 1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். -
2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.
திருநெல்லிக்கா - அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.
திருக்கைச்சினம் - தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.
திருத்தெங்கூர் - புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.
திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.
திருக்கோட்டூர் - நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம்
2.015 திருக்காறாயில் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீரானே, நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே, தாமரை மேல்அயன் தான்தொழும்
சீரானே, சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே, என்பவர் ஊனம் இலாதாரே.
பொழிப்புரை :நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர்.
பாடல் எண் : 2
மதியானே, வரிஅர வோடுஉடன் மத்தஞ்சேர்
விதியானே, விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே, நீர்வயல் சூழ்திருக் காறாயில்
பதியானே, என்பவர் பாவம்இலாதாரே.
பொழிப்புரை :பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை அமைப்பவன். விதிமுறைகளைப் பின்பற்றும் வேதியர்கள் வணங்கும் நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில் எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர்.
பாடல் எண் : 3
விண்ணானே, விண்ணவர் ஏத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே, மண்ணிடை வாழும் உயிர்க்குஎல்லாம்
கண்ணானே, கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே, என்பவர் ஏதம் இலாதாரே.
பொழிப்புரை :வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும் போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன். நிலவுலகில் வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன். இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர்.
பாடல் எண் : 4
தாயானே, தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே, ஆயநல் அன்பர்க்கு அணியானே,
சேயானே, சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே, என்பவர் மேல்வினை மேவாவே.
பொழிப்புரை :நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர் செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில் இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா.
பாடல் எண் : 5
கலையானே, கலைமலி செம்பொன் கயிலாய
மலையானே, மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே, சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே, என்பவர் மேல்வினை நில்லாவே
பொழிப்புரை :எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.
பாடல் எண் : 6
ஆற்றானே, ஆறுஅணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே, ஏழ்உல கும்இமை யோர்களும்
போற்றானே, பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே, என்பவர் மேல்வினை மேவாவே.
பொழிப்புரை :`நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில் வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும் திருகாறாயிலில் நீறுபூசிய கோலத்தோடு விளங்குபவன்`, என்று இவ்வாறு கூறிப்போற்றுபவர்மேல் வினைகள் நில்லா.
பாடல் எண் : 7
சேர்த்தானே தீவினை தேய்ந்துஅற, தேவர்கள்
ஏத்தானே, ஏத்துநல் மாமுனி வர்க்குஇடர்
காத்தானே, கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே, என்பவர் மேல்வினை ஆடாவே.
பொழிப்புரை :தீவினைகள் தேய்ந்து அறுமாறு செய்து நம்மை அவனோடு சேர்ப்பவன். தேவர்களால் போற்றப்படுபவன். நன்மாமுனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப் போற்றுவாரை வினைகள் வெல்லா.
பாடல் எண் : 8
கடுத்தானே காலனைக் காலால், கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆகம், முனி வர்க்குஇடர்
கெடுத்தானே, கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே, என்பவர் மேல்வினை ஆடாவே.
பொழிப்புரை :காலனைக் காலால் கடிந்தவன். கயிலாயத்தைப் பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடுமாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன் என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா.
பாடல் எண் : 9
பிறையானே, பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே, மாலொடு நான்முகன் காணாத
இறையானே, எழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே, என்பவர் மேல்வினை ஓடுமே.
பொழிப்புரை :இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப் பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும்.
பாடல் எண் : 10
செடிஆரும் புன்சமண் சீவரத் தார்களும்
படிஆரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை,
கடிஆரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடிஆரும் கொள்கையி னார்க்கு இல்லை குற்றமே.
பொழிப்புரை :உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும், சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர் என்ற பாவிகளும் கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன் ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக் குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை.
பாடல் எண் : 11
ஏய்ந்தசீர் எழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரான்அடி ஏத்தி அருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவாறு ஏத்துவார் வான்உலகு ஆள்வாரே.
பொழிப்புரை :புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப் பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற, நீர் பாய்ந்து வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி ஏத்துவார் வானுலகு ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment