வயலூர் --- 0918. கோவை வாயிதழுக்கும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கோவை வாயிதழுக்கும் (வயலூர்)

 

முருகா!

விலைமாதர் மயலில் தளராமல்படிக்கு,

அடியேனுக்குத் திருவடியைத் தந்து அருள்.

 

 

தான தான தனத்தந் தான தான தனத்தந்

     தான தான தனத்தந் ...... தனதான

 

 

கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்

     கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும்

 

கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்

     கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும்

 

ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்

     டாசை யாயி னுநித்தந் ...... தளராதே

 

ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்

     றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே

 

சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்

     த்யாக சீல குணத்தன் ...... திருமாலும்

 

தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்

     தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே

 

காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்

     காவி சூழ்வ யலிக்கும் ...... ப்ரியமானாய்

 

காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்

     கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

கோவை வாய் இதழுக்கும், தாக போகம் அளிக்கும்

     கோதை மாதர் முலைக்கும், ...... குறியாலும்

 

கோல மாலை வளைக்கும் தோளினாலும், மணத் தங்கு

     ஓதி வாரி முடிக்கும் ...... குழலாலும்,

 

ஆவி கோடி அவிக்கும் சேலினாலும், மயக்கு உண்டு,

     ஆசை ஆய் இ(ன்)னும் நித்தம் ...... தளராதே,

 

ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத, ஒருவர்க்கு ஒன்று

     ஆடல் தாள்கள் எனக்கு இன்று ...... அருள்வாயே.

 

சேவில் ஏறு நிருத்தன், தோகை பாகன், அளிக்கும்

     த்யாக சீல குணத்தன், ...... திருமாலும்

 

தேட ஒணாத பதத்தன், தீது இலாத மனத்தன்,

     தேயு ஆன நிறத்தன் ...... புதல்வோனே!

 

கா விடாத திருச்செங் கோடு நாடு தனக்கும்,

     காவி சூழ் வயலிக்கும் ...... ப்ரியம் ஆனாய்!

 

காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும்,

     காலன் ஆடல் தவிர்க்கும் ...... பெருமாளே.

 

பதவுரை

 

      சேவில் ஏறு நிருத்தன் --- இடப வாகனத்தில் ஏறித் திருநடனம் புரிகின்றவரும்,

 

     தோகை பாகன் --- மயில் போலும் சாயலை உடைய உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டவரும்,

 

     அளிக்கும் த்யாக சீல குணத்தன் --- உயிர்களைக் காத்து அளிக்கின்ற கொடைப் பண்பினை உடையவரும்,

 

     திருமாலும் தேட ஒணாத பதத்தன் --- திருமாலும் தேடி அறிய முடியாத திருவடியை உடையவரும்,

 

     தீது இலாத மனத்தன் --- தீது இல்லாத மனத்தினை உடையவரும்,

 

     தேயு ஆன நிறத்தன் புதல்வோனே --- நெருப்பு வண்ணத்தரும் ஆகிய சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

 

      கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் --- சோலைகள் நிறைந்து விளங்கும் திருச்செங்கோட்டுப் பகுதிக்கும்,

 

     காவி சூழ் வயலிக்கும் ப்ரியம் ஆனாய் --- கருங்குவளை மலர்கள் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய வயலூர் என்னும் திருத்தலத்துக்கும் விருப்பம் மிகுந்தவரே!

 

      காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே --- போரில் எதிர்த்து நின்று மோதிக் கொல்லும் சூரர்களும், தீரர்களும் வியக்க, இயமனுடைய தொழிலை அவனுக்கு இல்லாமல் செய்த பெருமையில் மிக்கவரே!

 

      கோவை வாய் இதழுக்கும் --- (விலைமாதர்களின்) கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும்,

 

     தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் --- காம தாகத்தை உண்டாக்கி, அது தணிக்கும் இன்பத்தையும் கொடுக்கின்ற மாலைகளை அணிந்தவர்களின் முலைகளுக்கும் ஆசைப்பட்டு,

 

      குறியாலும் --- அவர்கள் காட்டும் நோக்கத்தாலும்

 

     கோல மாலை வளைக்கும் தோளினாலும் --- அழகிய மாலையை அணிந்துள்ள தோள்களின் வனப்பினாலும்,

 

     மணத்தங்(கு) கோதி வாரி முடிக்கும் குழலாலும் --- நறமணம் மிக்கதும், வாரி முடித்துள்ளதும் ஆகிய கூந்தலின் அழகினாலும்,

 

     ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு --- காம வசப்பட்டோரின் உயிரை வளைத்து அழிக்கின்ற மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டிருந்து,

 

      ஆசையாய் இ(ன்)னும் நித்தம் தளராதே --- ஆசை பூண்டு இன்னும் தினந்தோறும் உள்ளத் தளர்ச்சியை அடியேன் அடையாமல்படிக்கு,

 

     ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத ஒருவர்க்கு ஒன்று  ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே --- குற்றமற்ற வேதங்களாலும் தேடி அறிய முடியாத ஒப்பற்றவர் ஆகிய சிவபரம்பொருளின் உள்ளத்தில் ஒன்றி இருக்கும், தேவரீரது வெற்றித் திருவடிகளை அடியேனுக்கு இன்று தந்து அருளவேண்டும்.

 

பொழிப்புரை

 

     இடப வாகனத்தில் ஏறித் திருநடனம் புரிகின்றவரும், மயில் போலும் சாயலை உடைய உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டவரும், உயிர்களைக் காத்து அளிக்கின்ற கொடைப் பண்பினை உடையவரும், திருமாலும் தேடி அறிய முடியாத திருவடியை உடையவரும், தீது இல்லாத மனத்தினை உடையவரும், நெருப்பு மேனியரும் ஆகிய சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

 

     சோலைகள் நிறைந்து விளங்கும் திருச்செங்கோட்டுப் பகுதிக்கும், கருங்குவளை மலர்கள் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய வயலூர் என்னும் திருத்தலத்துக்கும் விருப்பம் மிகுந்தவரே!

 

         போரில் எதிர்த்து நின்று மோதிக் கொல்லும் சூரர்களும், தீரர்களும் வியக்க, யமனுடைய தொழிலை அவனுக்கு இல்லாமல் செய்த பெருமையில் மிக்கவரே!

 

         விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும், காம தாகத்தை உண்டாக்கி, அது தணிக்கும் இன்பத்தையும் கொடுக்கின்ற மாலைகளை அணிந்தவர்களின் முலைகளுக்கும் ஆசைப்பட்டு, அவர்கள் காட்டும் நோக்கத்தாலும் அழகிய மாலையை அணிந்துள்ள தோள்களின் வனப்பினாலும், நறுமணம் மிக்கதும், வாரி முடித்துள்ளதும் ஆகிய கூந்தலின் அழகினாலும், காம வசப்பட்டோரின் உயிரை வளைத்து அழிக்கின்ற மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டிருந்து, ஆசை பூண்டு இன்னும் தினந்தோறும் உள்ளத் தளர்ச்சியை அடியேன் அடையாமல்படிக்கு, குற்றமற்ற வேதங்களாலும் தேடி அறிய முடியாத ஒப்பற்றவர் ஆகிய சிவபரம்பொருளின் உள்ளத்தில் ஒன்றி இருக்கும், தேவரீரது வெற்றித் திருவடிகளை அடியேனுக்கு இன்று தந்து அருளவேண்டும்.

 

 

விரிவுரை

 

கோவை வாய் இதழுக்கும் ---

 

பெண்களின் வாயிதழ் கோவைக் கனியைப் போன்று சிவந்து இருக்கும். விலைமாதர்கள், தாம்பூலம் தரித்துக் கொள்வதன் மூலம் தமது வாயிதழைச் சிவக்க வைத்துக் கொள்வார்கள். அந்த அழகில் காமுகர் மயங்குவர்.

 

தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் ---

 

காம விடாயை மிகுக்கச் செய்வதும், அந்த விடாயைத் தணிக்கின்ற போகத்தைத் தருவதும், விலைமாதர்களின் அழகிய முலைகள்.

 

குறியாலும் ---

 

விலைமாதர்கள் தமது கண்களாலும், கைகளாலும், உடல் அசைவாலும் தமது குறிப்பை வெளிப்படுத்துவார்கள்.

 

கோல மாலை வளைக்கும் தோளினாலும் ---

 

கோல மாலை --- அழகிய மாலை.

 

மணத்தங்(கு) கோதி வாரி முடிக்கும் குழலாலும் ---

 

விலைமாதர் தமது கூந்தலுக்கு நறுமணம் உள்ள தைலம் ஆதிகளைப் பூசிக் கொள்வர். எனவே, அவரது கூந்தல் செயற்கை மணம் உள்ளதாக இருக்கும். கூந்தலை நன்கு கோதி வாரி அழகுற முடித்து வைத்து இருப்பார்கள்.

 

ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ---

 

கோடி, கோடித்தல் --- வளைத்தல்.

 

அவித்தல் --- அழித்தல்.

 

சேல் என்பது ஒருவகை மீன். அந்த மீன் போன்றது என்று பெண்களின் கண்களைக் கூறுவர். சிவந்த கயல் மீனைப் போன்ற கண்கள். அவை ஆடவரை மயக்கித் தமது வலையில் படுத்தும். மீனானது வலையில் விழுந்து துன்புறும்.  மீன் போன்ற கண்களால் விலைமாதர் விரிக்கும் வலையில் காமுகர் விழுந்து துன்றுபுவர்.

 

அம்பு போன்ற கண்களால் துறவியர் மனத்தையும் சிதைக்கும் வல்லமை உடையவர்கள் விலைமாதர்கள்.

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

     வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், .....முநிவோரும்

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?   --- திருப்புகழ்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்து, ...... சுருளோடே

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ......அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு, .....இளைஞோர்மார்,

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.   ---  திருப்புகழ்.

 

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய

வெட்டிப் பிளந்து, உ(ள்)ளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....                                                                                              ---  திருப்புகழ்.

 

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்து, பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.

                                                                                 ---  கந்தர் அலங்காரம்.

 

"காய்சின வேல் அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

வீசின போது, உள்ள மீன் இழந்தார்"     --- திருக்கோவையார்.

 

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பலகாலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார்.

 

ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

 

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

 

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

 

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

 

ஆசையாய் இ(ன்)னும் நித்தம் தளராதே ---

 

விலைமாதர் மீது வைத்த ஆசை காரணமாக இதுவரை தளர்ச்சி அடைந்திருந்ததோடு அல்லாமல், இன்னமும் தளர்ச்சி அடையாமல் காத்துக் கொள்ளவேண்டும். "இன்னும்" என்று அடிகளார் காட்டியது சிந்தனைக்கு உரியது.

 

ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத ஒருவர்க்கு ஒன்று  ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே ---

 

ஆசு --- குற்றம். இங்கு உயிர்க் குற்றத்தைக் குறித்து நின்றது.

 

ஆசு சேர்ந்த சிந்தையை ஆசு இல்லாத சிந்தையாக்கி, நல்லறிவைப் புகட்டுவன குற்றமற்ற வேதங்கள். வேதங்கள் அறிவு நூல்கள். அறிவினால் இறைவனை அடைய முடியாது, அருளால் மட்டுமே அடைய முடியும் என்பதை உணர்த்த அடிகள் இவ்வாறு அருளினார். "வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே" என்றருளினார் மணிவாசகப் பெருமான்.

 

அளிக்கும் த்யாக சீல குணத்தன் ---

 

"யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் போற்றி" என்று அருணகிரிநாதப் பெருமான் பிறிதொரு திருப்புகழில் இறைவனது அருட்பண்பைப் போற்றிப் பாடியுள்ளமை காண்க. அளவற்ற கருணையை உடையவன் இறைவன். கருணையே வடிவானவன். "கருணையே உருவம் ஆகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

தீது இலாத மனத்தன் ---

 

"நன்று உடையானை, தீயது இல்லானை" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளியது காண்க.

 

தேயு ஆன நிறத்தன் புதல்வோனே ---

 

கடிஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்

     போது, தாது அணிந்த கண்ணி போலும்;

நெடியானும் சதுமுகனும் நேட நின்ற, நீல நல்

     கண்டத்து, இறையார் போலும்;

படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி

     மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;

அடியார் புகல் இடம் அது ஆனார்

     போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

 

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தால், இறைவன் அழல் வண்ணத் திருமேனியன் என்பது விளங்கும்.

 

காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே ---

 

போரில் எதிர்த்து நின்று மோதிக் கொல்லும் சூரர்களும், தீரர்களும் வியக்க, இயமனுடைய தொழிலை அவனுக்கு இல்லாமல் செய்த பெருமையில் மிக்கவர் என்பதன் மூலம் முருகப் பெருமானுடைய அளவில்லாத ஆற்றலைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனைப் பார் அறிய

வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன், வெய்ய சூரனைப்போய்

முட்டிப் பொருத செவ்வேள் பெருமாள் திருமுன்பு நின்றேன்,

கட்டிப் புறப்படு, அடா! சத்திவாள் என்தன் கையதுவே"

 

என்னும் கந்தர் அலங்காரப் பாடல் கருத்தின்படிக்கு இயமனை வதைக்க முருகப் பெருமான் அடியார்களால் முடியும், முருகப் பெருமானாலும் முடியும் என்க.

 

கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியம் ஆனாய் ---

 

கா --- சோலை.

 

காவி --- கருங்குவளை மலர்.

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம். இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியசுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும். முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயலில் தளராமல்படிக்கு, அடியேனுக்குத் திருவடியைத் தந்து அருள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...