அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குயிலோமொழி (வயலூர்)
முருகா!
பதிபசுபாசம் என்னும் முப்பொருள் உண்மையை
அடியேன் தெளியத் திருவருள் புரிவாய்.
தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன ...... தந்ததான
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக்
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற்
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற ...... நண்புகூரும்
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன்
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா
அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும்
அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
குயிலோமொழி, அயிலோவிழி, கொடியோஇடை, பிடியோநடை,
குறியீர், தனி செறியீர் இனி ...... என்றுபாடி,
குனகா, அடிபிடியா, இதழ் கடியா, நகம் வகிரா, உடை
குலையா, அல்குல் அளையா, இரு ...... கொங்கைமீதில்
பயிலா, மனமகிழ் மோகித சுக சாகர மடமாதர்கள்
பகையே என நினையாது, உற ...... நண்புகூரும்
பசுபாசமும், அகில அதிக பரிபூரண புரண ஆகர
பதி நேரும் நின் அருளால் மெய் ...... உணர்ந்திடேனோ?
வெயில் வீசிய கதிர் ஆயிர அருணோதய, இருள் நாசன,
விசை ஏழ்பரி ரவி சேய் எனும் ...... அங்கராசன்
விசிக ஆகவம் அயல் பேடி கை படுபோது சன்னிதி ஆனவன்
விதி தேடிய திருவாளி, ...... அரன்குமாரா!
அயல்ஊர் உறை மயிலா! பல கலைமான் உழை புலிதோல்களை
அகில் ஆரம் அது எறி காவிரி ...... வண்டல்மேவும்
அதிமோகர வயலூர் மிசை திரிசேவக! முருகேசுர!
அமராபதி அதில் வாழ்பவர் ...... தம்பிரானே.
பதவுரை
வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள் நாசன --- ஆயிரம் ஒளிக் கிரணங்களை உடைய கதிரவன் உதித்து, உலக இருளை நாசம் செய்வதைப் போல, உயிர்களின் துன்பங்களைப் போக்குபவரே!
விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்கராசன் --- வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளை உடைய சூரியனின் மகனும், அங்கநாட்டு அதிபனும் ஆகிய கர்ணன்,
விசிக ஆகவம் அயல் பேடி கை படு போது --- போர்க்களத்தில் தனக்குப் பகையாய் இருந்த பேடியாகிய அருச்சுனன் விடுத்த அம்புகளால் வீழ்ந்து இறக்கும் தருவாயில் இருந்த போது,
சன்னிதி ஆனவன் --- அவனுக்குத் தரிசனம் தந்த திருமாலும்,
விதி --- பிரமதேவனும்,
தேடிய திருவாளி அரன் குமாரா --- தனது திருவடியையும், திருமுடியையும் தேடிய அருளாளனும், உயிர்களின் பாவங்களை அரிப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!
அயலூர் உறை மயிலா --- பக்கங்களில் உள்ள ஊர்களில் எழுந்தருளி அருள் புரியும் மயில்வாகனரே!
பல கலைமான் உழை புலி தோல்களை --- பலவகையான மான்கள், யானைகளோடு,
அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் --- அகில் மரங்களையும், சந்தன மரங்களையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரியின் வண்டல் மண் படிந்துள்ளதும்,
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக --- மிக இனிமையானதும் ஆகிய வயலூர் என்னும் திருத்தலத்தில் உலாவும் வீரரே!
முருக --- முருகப் பெருமானே!
ஈசுர --- எப்பொருட்கும் இறைவரே!
அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே --- அமராவதி என்னும் பொன்னுலகில் வாழும் தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!
குயிலோ மொழி --- பேசுவது குயிலின் குரலோ?
அயிலோ விழி --- கண்கள் அம்பு தானோ?
கொடியோ இடை --- இடுப்பு கொடி போன்றதோ?
பிடியோ நடை --- நடை பெண்யானையினை ஒத்ததோ?
குறியீர் --- இவற்றை எல்லாம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்,
தனி செறியீர் இனி என்று பாடி --- தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி,
குனகா --- (அவர்களோடு) கொஞ்சிப் பேசி
அடி பிடியா --- (அவர்களின்) கால்களை வருடி
இதழ் கடியா --- (அவர்களின்) வாயிதழைக் கடித்துக் (குடித்து),
நகம் வகிரா --- நகத்தால் குறி பதித்து,
உடை குலையா --- ஆடைகள் குலைய,
அல்குல் அளையா --- அல்குலைத் துழவி இருந்து,
இரு கொங்கை மீதில் பயிலா --- இரு கொங்கைகள் மீது பழகி இருந்து,
மனம் மகிழ் மோகிதசுக சாகர மடமாதர்கள் --- மனமானது மகிழ்ந்து இருப்பதற்கு இடமாக இருக்கும், காமசுகம் தருகின்ற கடல் போன்று உள்ளவர்கள் ஆகிய விலைமாதர்கள்,
பகையே என நினையாது உற நண்பு கூரும் --- பகையைப் போன்று கேடு விளைப்பவர்கள் என்பதை நினைந்து பாராமல், அவர்களோடு நட்போடு (அடியேன் இருக்கின்றேன்)
பசுபாசமும் --- பசு என்னும் உயிரின் உண்மையையும், பாசம் என்னும் (ஆணவம், மாயை, கன்மம் ஆகிய) மலக்கட்டின் உண்மைகளையும்,
அகில அதிக பரிபூரண புரண ஆகர பதி --- எல்லாவற்றுக்கும் மேலாக நிறைந்து நின்ற பரம்பொருளும், எல்லாவற்றுக்கும் உறைவிடமாக உள்ளதும் ஆகிய பதியின் உண்மையையும்,
நேரு(ம்) நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ --- எதிர்ப்படுகின்ற உனது திருவருளால் உண்மையாகவே நான் அறிந்திட மாட்டேனா?
பொழிப்புரை
ஆயிரம் ஒளிக் கிரணங்களை உடைய கதிரவன் உதித்து, உலக இருளை நாசம் செய்வதைப் போல, உயிர்களின் துன்பங்களைப் போக்குபவரே!
வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளை உடைய சூரியனின் மகனும், அங்கநாட்டு அதிபனும் ஆகிய கர்ணன், போர்க்களத்தில் தனக்குப் பகையாய் இருந்த பேடியாகிய அருச்சுனன் விடுத்த அம்புகளால் வீழ்ந்து இறக்கும் தருவாயில் இருந்த போது, அவனுக்குத் தரிசனம் தந்த திருமாலும், பிரமதேவனும், தனது திருவடியையும், திருமுடியையும் தேடிய அருளாளனும், உயிர்களின் பாவங்களை அரிப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!
பக்கங்களில் உள்ள ஊர்களில் எழுந்தருளி அருள் புரியும் மயில்வாகனரே!
பலவகையான மான்கள், யானைகளோடு, அகில் மரங்களையும், சந்தன மரங்களையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரியின் வண்டல் மண் படிந்துள்ளதும், மிக இனிமையானதும் ஆகிய வயலூர் என்னும் திருத்தலத்தில் உலாவும் வீரரே!
முருகப் பெருமானே!
எப்பொருட்கும் இறைவரே!
அமராவதி என்னும் பொன்னுலகில் வாழும் தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!
பேசுவது குயிலின் குரலோ? கண்கள் அம்பு தானோ? இடுப்பு கொடி போன்றதோ? நடை பெண்யானையினை ஒத்ததோ? இவற்றை எல்லாம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் விலைமாதர்களைப் புகழ்ந்து பாடி, அவர்களோடு கொஞ்சிப் பேசி, அவர்களின் கால்களை வருடி, அவர்களின் வாயிதழைக் கடித்து, எச்சிலைக் குடித்து, நகத்தால் குறி பதித்து, ஆடைகள் குலைய, அல்குலைத் துழவி இருந்து, இரு கொங்கைகள் மீது பழகி இருந்து, மனமானது மகிழ்ந்து இருப்பதற்கு இடமாக இருக்கும், காமசுகம் தருகின்ற கடல் போன்று உள்ளவர்கள் ஆகிய விலைமாதர்கள், பகையைப் போன்று கேடு விளைப்பவர்கள் என்பதை நினைந்து பாராமல், அவர்களோடு நட்போடு அடியேன் இருக்கின்றேன். பசு என்னும் உயிரின் உண்மையையும், பாசம் என்னும் (ஆணவம், மாயை, கன்மம் ஆகிய) மலக்கட்டின் உண்மைகளையும்,எல்லாவற்றுக்கும் மேலாக நிறைந்து நின்ற பரம்பொருளும், எல்லாவற்றுக்கும் உறைவிடமாக உள்ளதும் ஆகிய பதியின் உண்மையையும், எதிர்ப்படுகின்ற உனது திருவருளால் உண்மையாகவே நான் அறிந்திட மாட்டேனா?
விரிவுரை
இத் திருப்புகழின் முதற்பகுதியில் விலைமாதர்களின் அழகை எடுத்து இயம்பி, அவர்கள் தரும் இன்பத்தையே நாடி இருப்பது துன்பைத்தையே தரும் என்று அறிவுறுத்தினார் அடிகளார்.
பசுபாசமும், அகில அதிக பரிபூரண புரண ஆகர பதி நேரு(ம்) நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ ---
பதி, பசு, பாசம் என்பன முப்பொருள்கள். முப்பொருள் உபதேசத்தை, முருகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளி அருள் புரியவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.
பதி --- இறைவன், பசு --- உயிர். பாசம் --- உயிர்களைப் பற்றி உள்ள அறியாமை.
பதியாகிய இறைவன் உள்பொருள் என்பதற்குப் பிரமாணம், பதியின் இலக்கணம். பசு என்னும் உயிர்க்குப் பிரமாணம், அதன் இலக்கணம். பாசம் என்பதற்குப் பிரமாணம், அதன் இலக்கணம். இவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும். பதி - தானே அறிகின்ற பொருள். பசு - அறிவிக்க அறிகின்ற பொருள். பாசம் - அறிவித்தாலும் அறியாத பொருள்.
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி, திருமந்திரம் சுருக்கமாக,
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்,
பதியினைப் போல்பசு பாசம் அனாதி,
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்,
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
என்று அறிவிக்கும்.
இதன் பொருள் ---
(பதி ஒன்றுதனே என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறுவோரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்கள். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமே அல்லாமல், அவை பதியாகிய இறைவனிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும். அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றி நில்லாது விட்டு நீங்கும். என்று அருளிச்செய்தார்.
இறைவனைப் பாசஞானத்தாலும், பசுஞானத்தாலும் அறிய முடியாது. பதிஞானம் ஒன்றாலேயே அறிந்து அணுகமுடியும். இதை, குருமுகமாக அறிந்து உய்தல் வேண்டும்.
உடல், கருவி, உலகம், நுகர் பொருள்கள் ஆகியவை மாயையாகிய பாசப் பொருள்கள். பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகப் பொருள்களை அறியும் அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும்.
கண்களுக்கு விளக்குப் போலக் கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்குத் துணை செய்கின்றன. அக்கருவிகளே அறிவதில்லை. கருவிகளுக்கு வேறாக அறியும் தன்மையுடைய உயிர் உள்ளது. அவ்வுயிரால் அறியும் அறிவு உயிர் அறிவு அல்லது பசுஞானம் எனப்படும்.
பதியைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்பெறும் திருவருள் ஞானமே பதிஞானம் அல்லது சிவஞானம் எனப்படும்.
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று
அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும்
ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.
என்பது சிவஞானசித்தியார்.
சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.
பதியினைப் போல் பசுபாசம் அநாதி என்ற திருமந்திரத்தின் திருவாக்கின்படி, பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் என்றைக்கும் உள்ளவை. அவைகள் அநாதி நித்தியம் என்று கூறப்படும்.
சற்காரியவாதம் கொண்டு, காட்சி, கருதல், ஆகமம் என்னும் மூவித அளவைகளால், கடவுள் ஒருவர் அநாதியே உண்டு. அக்கடவுள் சிவபரம் பொருள். அக் கடவுளுக்கு வேறாய், எண்ணில்லாத உயிர்கள் அநாதியே உண்டு. இவ் உயிர்களை அநாதியே கட்டுப்படுத்திய ஆணவமலம் ஒன்று உண்டு. அது மூலமலம் அல்லது சகசமலம் எனப்படும். அம் மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்ம மலம் உண்டு. மலசம்பந்தம் உடைய உயிர்களுக்கு உறைவிடமாக மாயாமலம் ஒன்றுண்டு. மலம் சடமாதலின், அதனைச் செலுத்துகின்ற ஆதி சத்தியாகிய திரோதான மலமும், அதனால் ஆன மாயாகாரியங்களாகிய மாயேய மலமும் உண்டு. கன்ம மலமானது, ஆகாமியம், பிராரத்தம், சஞ்சிதம் என மூவகைப்படும். கன்ம மல போகங்களைத் துய்க்கும் இடங்களாகிய சுவர்க்க நரக உலகங்கள் உண்டு. அங்ஙனம் துய்க்கும்கால், அடையத் தக்க சுரர், நரகர், அலகை முதலிய யோனி பேதங்களும் உண்டு. இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால், மறுபிறப்புக்கள் உண்டு. சங்காரம் இளைப்பு ஒழித்தல் ஆகும். பிறவிப் பிணியை அகற்றும் வழிகளை அறிவிக்கும் விதி நூல்கள் வேத சிவாகமங்கள் ஆகும். அவைகளில் விதிக்கப்பட்ட வருணாச்சிரம பேதங்களுக்கு ஈடாக ஒழுகுங்கால் செய்யப்படும் கன்மங்கள் நல்வினை தீவினை என இருதிறப்படும். இவைகளும் திருஷ்டகன்ம போக்கியம், திருஷ்டாதிருஷ்ட கன்ம போக்கியம், அதிருஷ்டகன்ம போக்கியம் என மூவகைப்படும். அக் கன்ம பேதங்களால், போக பேதங்கள் உண்டு. கன்ம பலன்கள் அநுபவமாவது நிச்சயம். அப் பலன்களை இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பான். வினைக்கு, மற்றொரு வினையால் அழிவு உண்டு. அறங்களைச் செய்ய வேண்டும். அதுவும் பாத்திரம் அறிந்து செய்யவேண்டும். அறங்களுக்குள்ளே வேள்வி சிறந்தது. அதனினும் உயிர்க்கருணை மிகச் சிறந்தது. அதுவும் அருள் இல்லாத வழி அமையாது. ஆதலின் அருளே இன்றியமையாதது. அருள் இல்லாதவர் எத்தகையாராயினும் பரகதி அடையார். வினைகளும் ஒருவன் செய்தது, அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும்.
முத்தி உலகம் தேவர் உலகங்களுக்கு மேல் உள்ளது. அதனை அடைவதற்கு நித்தியாநித்திய வஸ்துவிவேகம் முதல் சாதனம். வேறு சிறந்த சாதனங்களும் உண்டு. அவைகளைக் கடைப்பிடித்து மனமொழி மெய்களால் முதல்வனை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டோர்க்கு இருவினையொப்பு உண்டாகி மலபரிபாகம் உண்டாகும். அதனால், சத்திநிபாதம் நிகழும். தீவிர முதலிய சத்திநிபாதம் உடையோர்க்கு இறைவன் குருவுமாய் வந்து தீக்கை செய்து, மலவன்மையை அகற்றி, சிவானந்தத்தை அளிப்பான். அக் குருவின் உபதேசப்படி நின்று சிவானந்தாநுபவத்தில் திகழ்கின்ற சீவன் முத்தர்கள், வாசனா மல நீக்கத்திற்காக திருவைந்தெழுத்தை ஓதி, குருலிங்க சங்கம வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு சீவன் முத்தராய்த் திகழ்ந்து, பிராரத்த கன்ம அனுபவமுடிவில், சிவத்துடன் இரண்டறக் கலந்து சிவாநுபவம் ஒன்றையே துய்த்துக் கொண்டு இருப்பர். முத்தியிலும் உயிர்களுக்கு முப்பொருள்களும், இறைவன் உபகாரமும் உண்டு. முதல்வனின் அருள் சேர் முத்தியாகிய அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி எனப்படும்.
இந்த முப்பொருள் உண்மைகளை இனிது தெளிவாக உரைப்பது சைவசித்தாந்தம் ஒன்றே ஆம். ஏனைய சமயங்கள் யாவும் இதற்கு அங்கங்களாகவே அமைந்துள்ளன. முருகவேள் தமது தந்தையாருடைய செவியில் பிரணவ மந்திரத்திற்கு உட்பொருளாக இந்த அரிய சித்தாந்த சைவத் திறத்தை உபதேசித்து அருளினார். அதனையே தமக்குக் குருவாக எழுந்தருளி அறிவுறுத்த வேண்டுகின்றார் அடிகளார்.
சிவபெருமான் கேட்க, முருகவேள் உபதேசித்தது சித்தாந்த சைவம் எனில், அதன் அருமையையும் பெருமையையும் அளவிட வல்லார் யாவர்? முடிந்த முடிபாக விளங்குவது "சித்தாந்தம்" என்று அறிக. இதுவே சமயாதீதப் பழம்பொருளாய், வேதசிவாகமங்களின் உட்பொருளாய், பிறவிப்பிணியை அகற்ற வல்லதாய், அறிவின் மணிமுடியாய் விளங்குவது என்று அறிஞர்கள் அனைவர்களும் முடிவு செய்து உள்ளார்கள் என உணர்க. இச் சித்தாந்த சைவம் ஏனைய சமயங்களைப் போல், அறிவுடைய சில மனிதர்களால் செய்யப்பட்டது அன்று. செம்பொருளாம் சிவமே இதனை ஆன்மாக்களின் மல நீக்கத்தின் பொருட்டு அருளியது ஆகும்.
வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள் நாசன ---
மிக்க ஒளிக் கிரணங்களை உடைய சூரியன் உதயமாகும் காலத்தில், உலகை மூடியிருந்த செறிந்த இருளானது, சிறிது சிறிதாக ஒழிந்து, உலகமெங்கும் ஒளி விளங்குகின்றது. அதுபோலவே, அஞ்ஞானம் என்னும் இருள்தரு துன்பத்தில் மூழ்கி இருந்து அல்லல்படும் உயிர்களுக்கு, இறைவன் திருவருள் ஒளி வெளிப்பட வெளிப்பட்ட, உண்மை ஞானம் தலைப்பட்டு, அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.
இதனைத் திருவாசகத்தில், திருப்பளி எழுச்சி என்னும் பகுதியில், மணிவாகப் பெருமான் அழகுறக் காட்டும்பாறு காண்க.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
இதன் பொருள் ---
அண்ணலே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபரம்பொருளே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியனது தேர்ப்பாகன் ஆகிய அருணன், இந்திரன் திசையாகிய கீழ்த்திசைசை அடைந்தான். உலகை மூடியிருந்த இருள் முழுதும் நீங்கிவிட்டது. தாமரை மலர் போலும் உனது திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும், உனது திருக்கண் போன்ற வாசனை பொருந்திய தாமரையானது விரிந்து மலர, மலர, அவ்விடத்தில் கூட்டமாகவும் வரிசையாகவும்வந்து பொருந்தி விளங்குகின்ற வண்டுகள், இசை பாடுகின்றன, இவற்றைத் திருவுள்ளம் பற்றிப் பள்ளியெழுந்தருள்வாயாக.
திருப்பள்ளியெழுச்சி என்பதன் பொருளை, தெய்வச் சேக்கிழார் பெருமான் அருமையாக விளக்கி அருளி உள்ளார். திலகவதியார் அளித்த திருநீற்றை அணிந்திருந்த மருள்நீக்கியாருடைய திருவுள்ளத்தில் இருந்த இருளாகிய அறியாமையும், கரிய நிறம் நிறைந்த இரவு வேளையில் வெளியில் உள்ள இருட்டும் மாறுமாறு வரும் திருப்பள்ளி எழுச்சியில் பெரிய தவத்ததைப் புரிந்த சிறிய திருவடிகளை உடைய திலகவதியார் அழகிய துடைப்பத்தையும், அழகிய மெழுவதற்குரிய சாணத்தையும், ஒரு தோண்டியையும் எடுத்துக் கொண்டு கங்கையாற்றைத் ம்முடைய திருமுடியில் அணிந்தவராகிய விரட்டானேசுவரர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்குள் புகுந்தார்கள். புற இருள் நீங்கி, ஒளி நிரம்புவதைப் போல, ஆன்மாக்களின் அகவிருள் நீங்கி, ஞானம் ஒளிருவது, திருப்பள்ளி எழுச்சி ஆகும்.
நீறு அணிந்தார் அகத்து இருளும்,
நிறைகங்குல் புறத்து இருளும்
மாறவரும் திருப்பள்ளி
எழுச்சியினில் மாதவம்செய்
சீறடியார் திருவலகும்
திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறுஅணிந்தார் கோயிலினுள்
அடைந்தவரைக் கொடுபுக்கார். --- பெரியபுராணம்.
விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்கராசன் விசிக ஆகவம் அயல் பேடி கை படு போது சன்னிதி ஆனவன் ---
விசை --- வேகமாக,
ஏழ்பரி ரவி சேய் --- ஏழு குதிரைகளை உடைய தேரில் ஆராகணித்துச் செல்லுலை உடைய சூரியனின் மகனான கர்ணன். அவன் அங்க தேசத்துக்கு அரசன்.
விசிகம் --- அம்பு. ஆகவம் -- போர்க்களம்.
பேடி --- விராட நாட்டில் இருந்த காலத்தில், பேடி வடிவத்தில், பிருகன்னளை என்ற பெயருடன் இருந்தவன் அருச்சுனன்.
பாண்டவர்களின் வனவாசத்தின் போது, ஒருமுறை தனது அம்சமாகப் பிறந்த அருச்சுனனை, இந்திரன் தேவலோகத்திற்குச் அழைத்துச் சென்றான். அங்கு அரம்பையான தேவலோக நடனமாது ஊர்வசி அருச்சுனன் மீது மையல் கொண்டு, தன் காமப் பசியைத் தணிக்க வேண்டினாள். தன் பிறந்த குலத்தின் முன்னோரான புரூரவனின் மனைவியாக ஊர்வசி வாழ்ந்த காரணத்தினால், ஊர்வசி தனது தாய்க்குச் சமம் என எடுத்துரைத்து, ஊர்வசியின் காம ஆசையை நிறைவேற்ற அருச்சுனன் மறுத்தான். இதனால் கோபம் கொண்ட ஊர்வசி, அருச்சுனனை திருநங்கையாக மாறச் சாபமிட்டாள். பின்னர் இந்திரனின் வேண்டுகோளின் படி, அருச்சுனன் எப்போது நினைக்கின்றானோ, அப்போது ஒராண்டு திருநங்கையாக வாழ்வான் என ஊர்வசி சாபத்தை மாற்றி அமைத்தாள். விராடனுடைய நாட்டில், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையில், அருச்சுனன் பேடியாக மாறி, பிருகன்னளை என்னும் பெயருடன், விராடன் மகள் உத்தரையின் நடன ஆசிரியராகப் பொறுப்பேற்றான்.
மகாபாரதத்தின் பதினேழாம் நாள் போரில், கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தனது தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான். ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.
போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் மடிய நேருகின்றது. இறக்கும் தருவாயில், போரை நிறுத்தி விட்டு, கண்ணன் ஒரு அந்தண வடிவம் தாங்கி, கர்ணனிடம் சென்று தானம் கேட்கின்றான். உனக்கு வேண்டியது எது? என்று கர்ணன் கேட்க, "உனது புண்ணியம் அனைத்தும் உதவுக" என்கின்றான் கண்ணன். கர்ணன் அவ்வாறே தந்தான். தனது தெய்வீக உருவைக் காணுமாறு கண்ணன் கர்ணனுக்குக் காட்டுகின்றான்.
பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க....
'தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்;
மேருவினிடைத் தவம் பூண்டேன்;
ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்;
இயைந்தது ஒன்று இக்கணத்து அளிப்பாய்!-
தூண்டிய கவனத் துரகதத் தடந்தேர்ச்
சுடர் தரத் தோன்றிய தோன்றால்!'
என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப,
இருசெவிக்கு அமுது எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங்கணையால்
மெய் தளர்ந்து இரதமேல் விழுவோன்,
'நன்று!' என நகைத்து, 'தரத்தகு பொருள் நீ
நவில்க!' என, நான் மறையவனும்,
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும்
உதவுக!' என்றலும், உளம் மகிழ்ந்தான்.
'ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை
அகத்ததோ? புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்;
ஓவுஇலாது யான்செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன்; கொள்க நீ! உனக்குப்
பூவில்வாழ் அயனும் நிகர் அலன் என்றால்,
புண்ணியம் இதனினும் பெரிதோ?'
என்னமுன் மொழிந்து, கரம் குவித்து இறைஞ்ச,
இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான்,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி,
'கைப் புனலுடன் தருக' என்ன,
அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால்
அளித்தலும், அங்கையால் ஏற்றான்-
முன்னம் ஓர் அவுணன் செங்கை நீர் ஏற்று
மூஉலகமும் உடன் கவர்ந்தோன்.
"என்ன வரம் வேண்டும்? கேள்" என்று முனிவனாக வந்த கண்ணன், கேட்கின்றான். "'எப்பிறப்பினும் இல்லை என்போர்க்கு மறுத்து உரையா இதயம் அளி" என்கின்றார் கர்ணன்.
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன்
மகிழ்ந்து, 'நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!' என்று உரைப்ப,
சூரன்மா மதலையும் சொல்வான்:
'அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம்
உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும்,
"இல்லை" என்று இரப்போர்க்கு "இல்லை" என்று உரையா
இதயம் நீ அளித்தருள்!' என்றான்.
கர்ணன் வேண்டிய வரத்த அளித்து, "நீ முத்தியும் பெறுவாய்" என்கின்றான் முனிவனாக வந்த கண்ணன்.
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன்,
மனமலர் உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி,
கண்மலர்க் கருணை நீர் ஆட்டி,
'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள்
ஈகையும் செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்,
மூவரும் ஒருவனாம் மூர்த்தி.
கண்ணன் தனது, வேதிய வடிவத்தை மாற்றி, உண்மை உருவைக் காட்டக் கண்டு, கர்ணன் உள்ளம் மகிழ்ந்து துதித்துப் போற்றுகின்றான்.
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப,
புணரி மொண்டு எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும், பஞ்ச ஆயுதமும்
வயங்கு கைத்தலங்களும், ஆகி,
கூற்று உறழ் கராவின் வாயின்நின்று அழைத்த
குஞ்சர ராசன் முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான்-முடிவும்
தோற்றமும் இலாத பைந் துளவோன்.
அமரரானவரும், அமர யோனிகளும்,
அமரருக்கு அதிபனானவனும்,
கமல நான்முகனும், முனிவரும், கண்டு,
கனக நாள்மலர் கொடு பணிந்தார்;
'சமரமா முனையில் தனஞ்சயன் கணையால்
சாய்ந்து உயிர் வீடவும், செங் கண்
அமல நாரணனைக் காணவும், பெற்றேன்!'
என்று, தன் அகம் மிக மகிழ்ந்தான்.
'அருந்தழல் மாமகம் புரிந்தும், கடவுள்-கங்கை
ஆதியாம் புனல் படிந்தும், அனில யோகத்து
இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும்,
எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி,
அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணாப்
பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப்
பெரும்பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.
'நீல நெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு
நீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக்
கோலமும், வெங் கதை, வாளம், சங்கு, நேமி,
கோதண்டம், எனும் படையும், குழையும் காதும்,
மாலை நறுந் துழாய் மார்பும், திரண்ட தோளும்,
மணிக் கழுத்தும் செவ் இதழும், வாரிசாதக்
காலை மலர் என மலர்ந்த முகமும், சோதிக்
கதிர் முடியும், இம்மையிலே கண்ணுற்றேனே!.
'தருமன் மகன் முதலான அரிய காதல்
தம்பியரோடு எதிர் மலைந்து, தறுகண் ஆண்மைச்
செருவில், எனது உயிர் அனைய தோழற்காகச்
செஞ்சோற்றுக் கடன் கழித்தேன்; தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன்;
உற்ற பெரு நல்வினைப் பேறு உனக்கே தந்தேன்;
மருது இடை முன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே!
மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே!
'வான்பெற்ற நதிகமழ் தாள் வணங்கப்பெற்றேன்;
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்;
தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்,
திருப் புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன்;
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்,
உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன்;
யான் பெற்ற பெருந் தவப் பேறு, என்னை அன்றி,
இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே!'
விதி ---
பிரமதேவன்
தேடிய திருவாளி அரன் குமாரா ---
திருமால் சோதி வடிவாக நின்ற சிவபரம்பொருளின் திருவடியையும், பிரமதேவன் திருமுடியையும் தேடி, நிலம் உறக் கீண்டும், மேல் உறப் பரந்தும் சென்றனர். அந்த வரலாறு வருமாறு.....
ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று வாதுப் போர் புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள் இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ" --- திருவாசகம்.
திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
பிரமனோ, கல்வியில் மிகுந்தவன் அல்லவா? அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.
"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே" --- திருமந்திரம்.
அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம், அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார்.
திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு....
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) இறைவன் திருவடி - தாமரை. திருமுடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய கலைவாணிக்கு நாயகன். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணமுடியும். "பத்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே" என்றார் அருணகிரிநாதர்.
(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தில் தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து". "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணகிரிநாதர்.
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் --- வாக்கு. திருமால் --- மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான்.
(8) பிரமன் --- நினைப்பு. திருமால் --- மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே” என்றார் அருணகிரிநாதர்.
இறுதியாக ஒரு கருத்து ---- திருமால் அளவுக்கு செல்வத்தில் மிகுந்தவர் நம்மில் யாரும் இல்லை. பிரமன் அளவுக்கு வேதத்தில் வல்லவரும் நம்மில் யாரும் இல்லை. அப்படி இருக்க, நம்மால் எப்படி இறைவனைக் காணமுடியும்? செல்வம்,கல்வி, அதிகாரம் ஆகிய இன்ன பிறவற்றால் உண்டாகும் செருக்கை விட்டுப் பணிவுடன், கடமையைச் செவ்வனே செய்து வந்தால் காணலாம்.
பல கலைமான் உழை புலி தோல்களை ---
உழை --- புலி. தோல் --- யானை.
அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் அதி மோகர வயலூர் மிசை திரி சேவக ---
ஆரம் --- சந்தன மரம்.
நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன் தரக்கூடிய மரங்களை விழும்படி மோதி, அலைகளால் அடித்து வரும் காவிரி என்பது பின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலால் அறியப்படும்.
மந்தமாய் இழிமதக் களிற்றுஇள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம்ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
எந்தையார் இணைஅடி இமையவர் தொழுதுஎழும் இயல்பினாரே.
வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும். முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.
கருத்துரை
முருகா! பதிபசுபாசம் என்னும் முப்பொருள் உண்மையை அடியேன் தெளியத் திருவருள் புரிவாய்.
No comments:
Post a Comment