அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நெய்த்த சுரிகுழல் (வயலூர்)
முருகா!
தேவரீரது திருவடிகளை எப்போதும் மறவேன்.
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா ...... தனதான
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ......இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன்
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ......வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?
பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?
நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்
நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?
சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?
நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து
எய்த்த இடை அது கொடியோ?துடியோ?
மிக்க திருஅரை அரவோ?ரதமோ?
இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,
இச்சை விரகுடன் மடவார் உடனே,
செப்ப மருளுடன் அவமே திரிவேன்,
ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே,
தெற்கு நரபதி திருநீறு இடவே,
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே,......உமையாள்தன்
புத்ரன் என இசை பகர்நூல்,மறைநூல்,
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப! கவுணியர் பெருமான் உருவாய் ......வருவோனே!
சத்தம் உடைய ஷண்முகனே! குகனே!
வெற்பில் எறிசுடர் அயிலா! மயிலா!
சத்தி கணபதி இளையாய், உளையாய்,......ஒளி கூரும்
சக்ர தர அரி மருகா! முருகா!
உக்ர இறையவர் புதல்வா! முதல்வா!
தட்பம் உள தட வயலூர் இயல்ஊர் ......பெருமாளே.
பதவுரை
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே--- (தென்னாட்டில் மிக்கு இருந்த) புத்தர்களும், சமணர்களும் மிகவும் அழிவுறவும்,
தெற்கு நரபதி திரு நீறு இடவே--- (சமணனாய் இருந்த) தென்பாண்டி நாட்டு மன்னன் திருநீறு பூசவும்,
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே--- மூட்டிய நெருப்பினிடையே இட்ட ஏடு வெற்றி பெற்று,ஊறு இல்லாது விளங்க,
உமையாள் தன் புத்ரன் என--- உமாதேவியாரின் திருமகன் என,
இசை பகர் மறை நூல் கற்ற தவமுனி--- புகழ்ந்து கூறப்பெறும் வேதநூல்களைக் கற்ற தவமுனிவரே!
பிரமாபுரம் வாழ் பொற்ப --- பிரமாபுரம் பொலிவு பெற
கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே--- கவுணியர் தலைவராகத் திருவுருக்கொண்டு வந்தவரே!
சத்தம் உடைய ஷண்முகனே--- ஆற்றல் மிக்க அறுமுகப் பரம்பொருளே!
குகனே --- அடியார்களின் இதயமாகிய குகையில் வீற்றிருப்பவரே!
வெற்பில் எறி சுடர் அயிலா --- கிரவுஞ்ச மலையின் மீது எறிந்த ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவரே!
மயிலா--- மயில்வாகனரே!
சத்தி கணபதி இளையாய் --- சத்தி கணபதியாகிய மூத்த பிள்ளையாருக்குப் பின்வந்த இளையபிள்ளையாரே!
உளையாய்--- என்றும் உள்ள பரம்பொருளே!
ஒளி கூரும் சக்ரதர அரி மருகா--- ஒளி பொருந்திய ஆழிப்படையைத் திருக்கரத்தில் தாங்கிய திருமாலின் திருமருகரே!
முருகா--- முருகப் பெருமானே!
உக்ர இறையவர் புதல்வா--- வேகவடிவம் கொள்ளுகின்ற சிவனின் திருப்புதல்வரே!
முதல்வா --- முதற்பொருளே!
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே--- குளிர்ந்த நீர்நிலைகளை உடைய வயலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ--- எண்ணெய் பூசப்பெற்று சுருண்டு உள்ள கூந்தலானது கருமணலோ? கருமேகமோ!
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ--- தாமரை போன்ற முகத்தில் விளங்கும் நெற்றியானது வில்லோ? பிறைச் சந்திரனோ?
நெட்டை இணை விழி கணையோ பிணையோ--- நீண்ட இருகண்களும் அம்போ? மானோ?
இனிது ஊறும் நெக்க அமுது இதழ் கனியோ துவரோ--- இனிமையுடன் நெகிழ்ந்து வரும் வாயூறல் கனியோ? பவளமோ?
சுத்த மிடறு அது வளையோ கமுகோ--- தூய கழுத்தானது சங்கோ? பாக்கு மரமோ?
நிற்கும் இள முலை குடமோ மலையோ--- குத்திட்டு நிற்கும் இளமுலையானது குடமோ? மலையோ?
அறவே தேய்ந்து எய்த்த இடை அது கொடியோ துடியோ--- அடியோடு தேய்ந்து போய் துவண்டுள்ள இடுப்பானது கொடியோ? உடுக்கையோ?
மிக்க திரு அரை அரவோ ரதமோ--- சிறந்த அரையில் உள்ள பெண்குறியானது பாம்புப் படமோ? தேர்த்தட்டோ?
இப் பொன் அடி இணை மலரோ தளிரோ--- இந்த அழகிய பாதங்கள் மலரோ? இளம் தளிரோ?
என மாலாய்--- என்று வியந்து, மோகம் கொண்டவனாய்,
இச்சை விரகுடன் மடவாருடனே--- காம இச்சை கொண்டு விலைமாதர்களுடன்,
செப்ப மருள் உடன் அவமே திரிவேன்--- சொல்லத்தக்க அறிவு மயக்கம் பூண்டு வீணில் உழல்கின்றேன்.
ரத்ந பரிபுர(ம்) இருகால் ஒருகால் மறவேனே--- (ஆயினும்) தேவரீரது இரத்தினச் சிலம்புகள் அணியப்பெற்ற இரண்டு திருவடிகளையும் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
தென்னாட்டில் மிக்கு இருந்த புத்தர்களும், சமணர்களும் மிகவும் அழிவுறவும்,சமணனாய் இருந்த தென்பாண்டி நாட்டு மன்னன், சைவனாக மாறிதிருநீறு பூசவும், மூட்டிய நெருப்பினிடையே இட்ட ஏடு வெற்றி பெற்று,ஊறு இல்லாது விளங்கவும், திருவிளையாடல்கள் புரிந்த உமாதேவியாரின் திருமகன் என,புகழ்ந்து கூறப்பெறும் வேதநூல்களைக் கற்ற தவமுனிவரே!பிரமாபுரம் பொலிவு பெறக்கவுணியர் தலைவராகத் திருவுருக்கொண்டு வந்தவரே!
ஆற்றல் மிக்க அறுமுகப் பரம்பொருளே!
அடியார்களின் இதயமாகிய குகையில் வீற்றிருப்பவரே!
கிரவுஞ்ச மலையின் மீது எறிந்த ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவரே!
மயில்வாகனரே!
சத்தி கணபதியாகிய மூத்த பிள்ளையாருக்குப் பின்வந்த இளையபிள்ளையாரே!
என்றும் உள்ள பரம்பொருளே!
ஒளி பொருந்திய ஆழிப்படையைத் திருக்கரத்தில் தாங்கிய திருமாலின் திருமருகரே!
முருகப் பெருமானே!
வேகவடிவம் கொள்ளுகின்ற சிவனின் திருப்புதல்வரே!
முதற்பொருளே!
குளிர்ந்த நீர்நிலைகளை உடைய வயலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
எண்ணெய் பூசப்பெற்று சுருண்டு உள்ள கூந்தலானது கருமணலோ?கருமேகமோ?தாமரை போன்ற முகத்தில் விளங்கும் நெற்றியானது வில்லோ? பிறைச் சந்திரனோ?நீண்ட இருகண்களும் அம்போ? மானோ?இனிமையுடன் நெகிழ்ந்து வரும் வாயூறல் கனியோ? பவளமோ?தூய கழுத்தானது சங்கோ? பாக்கு மரமோ? குத்திட்டு நிற்கும் இளமுலையானது குடமோ? மலையோ? அடியோடு தேய்ந்து போய் துவண்டுள்ள இடுப்பானது கொடியோ? உடுக்கையோ?சிறந்த அரையில் உள்ள பெண்குறியானது பாம்புப் படமோ? தேர்த்தட்டோ?இந்த அழகிய பாதங்கள் மலரோ? இளம் தளிரோ?என்று வியந்து, மோகம் கொண்டவனாய், காம இச்சை கொண்டு விலைமாதர்களுடன், சொல்லத்தக்க அறிவு மயக்கம் பூண்டு வீணில் உழல்கின்றேன்.ஆயினும் தேவரீரது இரத்தினச் சிலம்புகள் அணியப்பெற்ற இரண்டு திருவடிகளையும் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
விரிவுரை
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ---
சுரி --- சுருண்ட,
குழல் --- கூந்தல்,
அறல் --- கருமணல்.
"நெறிதரு குழலை அறல் என்பர்கள்" என்பது பதினோராம் திருமுறை.
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ---
பத்மம் --- பதுமம், தாமரை.
சிலை --- வில்.
நெட்டை இணை விழி கணையோ பிணையோ---
நெட்டை இணை விழி --- நீண்ட இரு கண்கள்.
பிணை --- விலங்குளின் பெண் இனம். இங்கு பெண்மானைக் குறித்தது.
இனிது ஊறும் நெக்க அமுது இதழ் கனியோ துவரோ---
நெக்கு --- தறர்தல், ஊறுதல்.
துவர் --- பவளம்.
சுத்த மிடறு அது வளையோ கமுகோ---
வளை --- சங்கு. கமுகு --- பாக்கு. பாக்கு மரத்தைக் குறித்தது.
மிக்க திரு அரை அரவோ ரதமோ---
அரை -- இடுப்பு.
செப்ப மருள் உடன் அவமே திரிவேன்,ரத்ந பரிபுர(ம்) இருகால் ஒருகால் மறவேனே---
மருள் --- மயக்கம். காம வேட்கையால் அறிவு மயக்கம் உண்டானது.
அவமே --- வீணில்.
இன்பக் கடலில் முழுகி அந்த மகிழ்ச்சியிலேயே அழுந்தி விட்டாலும், இறைவனை மறத்தல் கூடாது. அப்போதும் ஆண்டவனுடைய சிந்தனை இருத்தல் வேண்டும்.
கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன், முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டு எனக்கொட்டி ஆட,வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
என்பார் கந்தர் அலங்காரத்திலே.
காடே திரிந்துஎன்ன, காற்றே புசித்துஎன்ன, கந்தைசுற்றி
ஓடே எடுத்துஎன்ன, உள்ளன்பு இலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர்பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டுஇன்பம் மேவுவரே.
என்று மிகவும் அழகாகக் கூறுகின்றனர் பட்டினத்தடிகள்.
துயின்றாலும், அயின்றாலும், நடந்தாலும், கிடந்தாலும், எழுந்தாலும், விழுந்தாலும், மகிழ்ந்தாலும், கவன்றாலும் எப்போதும் இறைவனை மறவாது சிந்தித்து உய்தல் வேண்டும்.
எழும்போதும் வேலுமயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து,
தொழும்போதும் வேலுமயிலும் என்பேன்,
தொழுதே உருகி,
அழும்போதும் வேலுமயிலும் என்பேன்,
அடியேன் உடலம்
விழும்போதும் வேலுமயிலும் என்பேன்
செந்தில் வேலவனே.
இறைவனைப் பற்றிப் பேசுதற்கும் நினைப்பதற்கும் இறைவன் திருவருளே வேண்டி இருப்பதனால், இறைவனையே வேண்டுகின்றனர்.
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி,
ஆடல் கொண்ட மட மங்கையருடன், கலவி
தாகம் உண்டு, உழல்கினும், கழல் உறும் கழல் ...... மறந்திடேனே.
என்று திருநாகைத் திருப்புகழிலும்,
வரிபரந்து, இரண்டு நயனமும் சிவந்து,
வதன மண்டலங்கள் ...... குறு வேர்வாய்,
மணி சிலம்பு அலம்ப,அளகமும் குலைந்து,
வசம் அழிந்து, இழிந்து ...... மயல்கூர,
இருதனம் குலுங்க,இடைதுவண்டு அனுங்க,
இனியதொண்டை உண்டு,...... மடவார்தோள்
இதம் உடன் புணர்ந்து,மதி மயங்கினும், பொன்
இலகு நின் பதங்கள் ...... மறவேனே.
என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார், இக் கருத்தில் பாடி இருப்பது காண்க.
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திரு நீறு இடவே, புக்க அனல் வயம் மிக ஏடு உயவே, உமையாள் தன் புத்ரன் என இசை பகர் மறை நூல் கற்ற தவமுனி, கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே---
முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு,திருஞானசம்பந்தராக வந்தது. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகப் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவையனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்தறிக.
பிரமாபுரம் என்பது சீகாழிக்கு உரிய பன்னிரு திருப்பெயர்களுள் ஒன்று. சீகாழியில், கவுணியர் குலத்தில் உதித்தசிவபாத இருதயர்க்கும் அவர் துணைவியார் ஆகிய பகவதி அம்மையாருக்கும், வேதநெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்க, பரம்பரை பொலிய, அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்க, பேணிய நல் ஓரை எழ, திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்க,பரசமயத்தருக்கு ஒழிய,சைவமுதல்வைதிகமும் தழைத்து ஓங்க, தொண்டர் மனம் களி சிறப்ப, தூய திருநீற்று நெறிஎண்திசையும் தனி நடப்ப, ஏழ்உலகும் களி தூங்க, அண்டர் குலம் அதிசயிப்ப,அந்தணர் ஆகுதி பெருக, வண்தமிழ் செய் தவம் நிரம்ப,மாதவத்தோர் செயல் வாய்ப்ப.திசை அனைத்தின் பெருமை எல்லாம்தென்திசையே வென்று ஏற, மிசைஉலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல, அசைவு இல் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல, இசை முழுதும் மெய்யறிவும்இடங்கொள்ளும் நிலை பெருக, தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற, நாள் உடைய நிகழ்காலம்எதிர்காலம் நவை நீங்க, வாள் உடைய மணி வீதிவளர் காழிப்பதி வாழ, ஆள் உடைய திருத்தோணி அமர்ந்தபிரான் அருள் பெருக,அவம் பெருக்கும் புல் அறிவின்அமண் முதலாம் பர சமயப் பவம் பெருக்கும் புரைநெறிகள்பாழ்பட, நல் ஊழிதொறும் தவம் பெருக்கும் சண்பையிலேதா இல் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் ஆகத்திருஅவதாரம் செய்தார்.
அப்பொழுது,பொற்பு உறு திருக்கழுமலத்தோர், எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி, மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி அறியாமே, ஒப்பு இல் களி கூர்வதொர் உவப்பு உற உரைப்பார், சிவன் அருள் எனப் பெருகு சித்தம் மகிழ் தன்மைஇவண் இது நமக்கு வர எய்தியதது என் என்பார் சிலர். கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான், அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார் பலர்.
அழிந்து புவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
அம்மை தோன்றி அளித்த வள்ளச்
செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன் பிணியும்,சமண் பகையும்,
தேவி துயரும் தீர்த்து அருளி,
வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
வாரப் பாடல் சிவன் கேட்க
மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
முகனே! முத்தம் தருகவே.
முத்துக் குமரா! திருமலையின்
முருகா! முத்தம் தருகவே. --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.
அவருக்கு மூன்றாண்டு நிகழும்போது, பண்டை உணர்வு ஒவ்வொருபோது தோன்றுவது ஆயிற்று. தாம் சிவபெருமானை விட்டுப் பிரிந்த உணர்வு தம்முள் எழும்போது எல்லாம் அவர் வெருக்கொள்வது வழக்கம்.
சிவபாத இருதயர் ஒரு நாள் வழக்கம்போல் நீராடச் சென்றார். பிற்றையார் அழுதுகொண்டே அவரைத் தொடர்ந்து சென்றார். சிவபாத இருதயர் திரும்பிப் பார்த்து, முனிவார் போலப் பிள்ளையாரை விலக்கினார். பிள்ளையார் தனது கால் கொட்டித் தொடர்ந்தார். "உன்செய்கை இது ஆகில், போது" என்று சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு திருக்கோயிலினுள் உள்ள பிரமதீர்த்தக் குளக்கரையை அடைந்தார். இறைவனையே பெருங்காவலாகப் பெற்றவராய், பிள்ளையாரை குளக்கரையில் இருத்தி,நீருள் மூழ்கி அகமருட மந்திரத்தை அனுட்டித்தார்.
குளக் கரையில் இருந்த பிள்ளையார், தந்தையாரைக் காணாது நொடிப் போதும் தரியாதவரானார். அப்போது அவர் உள்ளத்தில் சிவபெருமானை வழிபட்ட முன் உணர்ச்சி தோன்றல் ஆயிற்று. பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்பியது. கைம் மலர்களைப் பிசைந்தார். மணிவாய் துடித்தது. முன்னைத் தொடர்பு உணர்ந்தோ, தனது பிள்ளைப் பருவத்தாலோ அவர் அழுகின்றார். திருத்தோணிச் சிகரம் பார்த்து, "அம்மே! அப்பா!" என்று அழுதார்.
அடியார் துயரம் தரியாதவராகிய தடங்கருணைப் பெருங்கடல் ஆகிய சிவபெருமான், அவருக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, உமாதேவியாருடன் மழவிடைமேல் எழுந்தருளினார். உமையம்மையாரைப் பார்த்து, "துணை முலைகள் பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு" என்றார். இறைவன் ஆணைப்படியே, உமையம்மையார் தமது திருமுலைகளில் ஊறிய பாலைப் பொன்கிண்ணத்தில் கறந்து, அதில் எண்ணரிய சிவஞானத்தைக் குழைத்து ஊட்டிப் பிள்ளையாரின் அழுகையைத் தீர்த்தார். பிள்ளையார் தனது தாய்தந்தையர்கள் ஆகிய பராசத்தியாலும், பரமசிவத்தாலும் ஆட்கொள்ளப்பட்டமையால், ஆளுடைய பிள்ளையார் ஆனார். சிவஞானப் பால் உண்டமையால், சிவஞானசம்பந்தர் ஆயினார். இது கொண்டு, "உமையாள் புத்ரன்" என்றார் அடிகளார்.
தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின.உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ மன்னனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து,பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.
அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்; அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து,சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள்.
சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.
“வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறும் நல்லநல்ல,அவைநல்ல, நல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார்.
எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.
“சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,
“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
மேன்மையும் பெற்றனம் என்பார்"
மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுள் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.
சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து,ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசன் ஆணையால் வந்தது என்று உணர்ந்து,
“செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”
என்று பாடியருளினார்.
“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுரநோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,
“ஞானத்தின் திருவுருவை,நான்மறையின் தனித்துணையை,
வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை,
தேன் நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”. --- பெரியபுராணம்.
கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.
ஆலமே அமுதமாகஉண்டு, வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க்கண்டர்க்காக்காய்ந்தனை,அடியேற்கு இன்று
ஞாலம்நின் புகழே ஆகவேண்டும், நான் மறைகள் ஏத்தும்
சீலமே! ஆல வாயில்சிவபெருமானே! என்றார்.
பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க,சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,கவுணியர் வேந்து,
“மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”
என்று பாடித் தேற்றினார்.
அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாம் என, அமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க,சுவாமிகள், ழுமந்திரமாவது நீறுழு என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.
பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி "போகமார்த்த மூண்முலையாள்" என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின. புல் புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, “வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தப் பெருமான், திருத்தெளிச்சேரி என்னும் திருத்தலத்தை நெருங்க வந்தபோது,அங்கிருந்த புத்தர்கள் வாதுக்கு அழைத்தனர். புத்தர்களை வாதில் வென்று, தீருநீற்று நெறியைப் பரப்பினார் திருஞானசம்பந்தப் பெருமான்.
வெற்பில் எறி சுடர் அயிலா ---
வெற்பு --- கிரவுஞ்ச மலை. உயிர்களின் வினைத் தொகுதியாகிய மலையையும் குறிக்கும்.
மாயைகள் பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும் விண்ணுலகுக்குச் சென்றது.
கிரவுஞ்ச மலை - வினைத்தொகுதி.
தாரகன் - மாயை.
சூரபதுமன் - ஆணவம்.
சிங்கமுகன் - கன்மம்.
கடல் - பிறவித் துன்பம்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி,அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
வேல் --- வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல்.
அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், போர்வேல் எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்" எனப்பட்டது.
சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்களையும் அறுத்தார்.
அண்டர் உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டல நிறைந்த ரவி,சதகோடி மதிஉதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல்,. --- வேல் விருத்தம்.
தேர் அணிஇட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில்வேல்
கூர் அணிஇட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்
நேர் அணிஇட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. --- கந்தர் அலங்காரம்.
ஓர ஒட்டார்,ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனதாள்
சேர ஒட்டார் ஐவர்,செய்வது என் யான்?சென்று தேவர்உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் கார் உடல் சோரி கக்கக்
கூரகட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே. --- கந்தர் அலங்காரம்.
உளையாய்---
"உளையே ஒத்தியால்" என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம். என்றும் உள்ள நித்தியப் பொருளாக உள்ளவன் இறைவன்.
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே---
வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி,திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன்,வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால்,அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
கருத்துரை
முருகா! தேவரீரது திருவடிகளை எப்போதும் மறவேன்.
For simple explanations on this song,
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=ovlSjMdrIMw&t=194s