ஆத்திசூடி --- 21. நன்றி மறவேல்

 

21. நன்றி மறவேல்.

 

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் --- (ஒருபோதும்) மறவாதே.

 

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறவாதே.

 

     ஒருவர் உனக்குச் செய்த தீமையை மறந்துவிடு.  ஒருவர் உனக்குச் செய்த உதவியை மறந்து, அவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்யாதே என்பது கருத்து.

 

     தந்தையையும் தாயையும் பேணவேண்டுவது, அவர் செய்த நன்மை பற்றியே என்று கொண்டால், அவ்வாறு நன்மை செய்தவர் எல்லாரையும் பேணுதல் வேண்டும் என்பது பெறப்படும். தக்க காலத்திலும், தக்க இடத்திலும், பயன் கருதாது ஒருவர் செய்த நன்மைக்குக் கைம்மாறாக ஒருவன் எதையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்க்கும் கைம்மாறாக ஓர் உதவியை அவர்க்கு வேண்டும் காலத்தில் ஒருவன் செய்யக் கடமைப்பட்டவன். ஆயினும், கைம்மாறு செய்ய இயலாத போதிலும், பெற்ற நன்மையை என்றும் மறவாமல் உள்ளத்தில் கொண்டு இருக்கவேண்டும். அந்த மறவாமையே, தக்க சமயத்தில் உதவி செய்யவேண்டும் எனத் தூண்டும்.

 

     திருவள்ளுவ நாயனாரும் இக் கருத்தை வலியுறுத்தியே  ஒருவர் செய்த நன்மையை மறவாது இருப்பதும் நல்லது; தீமையை அப்பொழுதே மறந்து விடுவதும் நல்லது என்று காட்டி

 

நன்றி மறப்பது நன்று அன்று, நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் என்பதை அறிக.

 

நன்றி மறத்தல் என்பது, நன்றி கொன்ற குற்றத்தையே சாரும். அக் குற்றமானது உய்தி இல்லாத குற்றமாகும் என்பதால், "உய்வில்லை செயந்நன்றி கொன்ற மகற்கு" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,

நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே...."

 

என்பது புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     (பசுவதை என்பது வாயினால் சொல்லவும் கூடாத பாவம் ஆகும்) பாலைப் பொழிந்து தரும் பசுவினால் உண்டாகும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; ( என்பதை ஆன்முலை அறுத்த என்றார்) மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை உடைய பெண்களின் தாய்மைப் பேற்றைச் சிதைக்கும் வண்ணம் அவரது கருப்பத்தை அழித்தோர்க்கும்; தந்தை தாயார் வருந்தும்படி அவருக்குத் துன்பம் இழைத்த கொடுந் தொழிலை உடையோர்க்கும்; அவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால், அவற்றைப் போக்கும் வழி என்னும் பரிகாரமும், பிராயச்சித்தமும் உள்ளன. ஆனால், இந்த நிலம் கீழ் மேலாகின்ற காலமே வந்தாலும், ஒருவன் செய்த நன்றியைச்  சிதைத்தோர்க்கு, அப் பாவத்தில் இருந்து நீங்குவதற்கு வழியை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

 

     எனவே, ஒருவன் செய்த நன்றியை மறவாமல் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால், என்றாவது ஒருநாள், எப்படியாவது, தனக்கு உதவியருக்கு, உதவவேண்டும் என்னும் ஊக்கம் உண்டாகும்.

 

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான்விச்சைக்கண்

தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,  

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்

எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்..  --- கலித்தொகை.

 

இதன் பொருள் ---

 

     கல்வி கற்பித்தவன் நெஞ்சம் வருந்துமாறு உணவுப் பொருள்களை ஆசிரியனுக்கு வழங்காதவன் தானே தேய்ந்து போவான். கற்ற வித்தையைச் சொல்லித்தரும் ஒருவன் தப்புத் தப்பாகக் கற்பித்துவிட்டு மாணவனிடம் பெற்ற செல்வம் தானே தேய்ந்துபோகும். வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப  உதவாதவன் தானே அழிந்துபோவான். அந்தக் குற்றமானது, அவனைத் தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.

 

உதவி செய்தோர்க்கு உதவார் ஆயினும்

மறவி இன்மை மாண்புடைத்து.         --- பெருங்கதை.

 

     தனக்கு உதவிய ஒருவருக்கு, உதவமுடியவில்லை, ஆயினும், அவர் செய்த உதவியை மறவாமல் இருப்பது பெருமைக்கு உரியது.

 

ஒன்றொரு பயனை உதவினோர் மனம்

கன்றிட ஒரு வினை கருதிச் செய்வரேல்,

புன்தொழில் அவருக்கு முன் செய்த நன்றியே

கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ... ---  கந்தபுராணம்.

 

     ஒரு உதவியை ஒரு காலத்தில் தமக்குச் செய்தவருடைய  மனம் வருந்தும்படியான ஒரு செயலை, ஒருவன் எண்ணிச் செய்வானானால், அந்தக் கேடுகெட்டவனை, அவனுக்கு ஏற்கெனவே செய்யப்பட்ட உதவியே கொன்று விடும். எமன் தேவையில்லை.

 

     எனவே, "நன்றி மறவேல்" என்று சுருக்கமாக, ஔவைப் பிராட்டியார் அறிவுறுத்தியதன் பொருள் இனிது விளங்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...