பயன் கருதாது அறம் செய்க

 

 

ஓவையார் அருளிய "மூதுரை"

 

பயன் கருதாது அறம் செய்க

----

 

     அறம் என்றது, நன்மையானவற்றைச் செய்தலைக் குறிக்கும்.

 

     பாவம் என்பது, தீமையானவற்றை, தீயவற்றைச் செய்தலைக் குறிக்கும்.

 

     மேலே முதல் பாடலில் ஔவையார் காட்டியபடி, இறை வழிபாட்டினை நாளும் தவறாமல் ஆற்றி வருவதன்மூலம் கல்வி நலமும், மன நலமும், செல்வ நலமும், உடல் நலமும் பெற்ற ஒருவன், தான் பெற்ற இன்பத்தை எல்லா உயிர்களும் பெறவேண்டும் என்று அறவழியில் நின்று எல்லார்க்கும் நன்மையே புரிந்து வாழ்ந்து வருதல் வேண்டும்.

 

     மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கருவிகளாலும் (திரி கரணங்களாலும்) எதை விதைக்கின்றோமோ அதுவே, நமக்கு வந்து சேரும். நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை விளையும். "விளையும்" என்று சொல்லவே, ஒன்று பலவாக மாறிப் பயன்தரும் என்பது விளங்கும். ஒரு நெல்லை விதைத்தால், பல நெல்மணிகள் விளைவதைப் போல. ஒரு தேங்காயை வைத்து வளர்த்தால், பல தேங்காய்கள் கிடைப்பது போல. ஒரு மாங்கொட்டையை விதைத்தால், பல மாங்காய்கள் கிடைப்பது போல.

 

     நன்மை தரும் நினைவுகளை மனத்தாலும், நன்மை தரும் சொற்களை வாக்காலும், நன்மை தரும் செயல்களை உடலாலும் செய்து வந்தால், அவை எப்போது எப்படிப் பலன் தரும் என்பதற்கு விடையாக, "மூதுரை" என்னும் நூலில், பின்வரும் பாடலைக் காட்டி அருளுகின்றார்.

 

நன்றி ஒருவற்குச் செய்தக்கால், ந்நன்றி

என்று தரும்கொல் எனவேண்டா, - நின்று

தளரா வளர்தெங்கு, தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

 

இதன் பொருள் ---

 

     நின்று தளரா வளர் தெங்கு --- ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை --- தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் --- தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் --- நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா --- அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை.

 

         நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.

 

     தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்த்தும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது. ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.

 

     அதுபோலவே,  ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம்.

 

     செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பது இப் பாடலின் கருத்து.

 

     ஒல்லும் வகையால் அறவினை, ஓவாதே

     செல்லும் வாய் எல்லாம் செயல்.

 

என்பது திருவள்ளுவ நாயனார் அருளியது.

 

     மேலே "நற்குணம் உடையவனுக்குச் செய்த உதவி" என்று உரை சொல்லப்பட்டுள்ளதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

     நல்லவர்க்குச் செய்த உதவி, தீயவர்க்குச் செய்த உதவி எப்படிப்பட்டது என்பதை அடுத்த பாடலில் ஔவையார் காட்டுவார்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...